உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா

விக்கிமூலம் இலிருந்து

எழுதியவர்: ஈழத்துக் கவிஞர் க. சச்சிதானந்தன்


கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா


கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்


செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா


கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிடவேண்டும்.


தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.