பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அது மிகுந்த வேடிக்கையாகப் பட்டது வள்ளிக்கு. கண்களில் நீர் பொங்கும் வரை விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்.

"அம்மா, நாளைக்கு ஊரு கூடிச் சிரிக்கப் போறாகளாம். அப்ப நீயும் சேர்ந்து சிரிக்கணும். பாக்கி வச்சிரு. இப்பவே பூராவையும் சிரிச்சுக் கொட்டிப்பிடாதே" என்றான் கண்டக்டர்.

பசு ஒரு தினுசாக விலகிக் கொண்டது.

பெரிய ஊர் நடுவே பஸ் ஓடியது. 'ரயில்வே கேட் அடைத்துக் கிடந்ததால், காத்து நின்றது. ரயில் வண்டி ஓடியது. பிறகு பஸ் புறப்பட்டு, பரபரப்பு மிகுந்த ஜங்ஷனை அடைந்தது. நடமாட்டமும் நாகரிகமும் முட்டி மோதிய கடை வீதி வழியாக, பெரிய ஹைரோடு வழியாக, ஒடியது. டவுணுக்குள் பிர வேசித்தது. பெரிய வீதிகளில் சென்றது.

வியப்பால் விரிந்த கண்களோடு வள்ளி அம்மை எல்லாவற்றையும் விழுங்கினாள். ஏயம்மா, எவ்வளவு கடைகள்; என்னென்ன சாமான்கள்! என்ன பகட்டு! எத்தனை ரகப் பட்டாடைகள். அவள் பிரமித்து விட்டாள்.

“என்னம்மா, இறங்கலியா? நீ கொடுத்த முப்பது காசு செரிச்சுப் போச்சு” என்றான் கண்டக்டர்.

"நான் இறங்கலே. இதே பஸ்ஸில் திரும்பப் போறேன். இந்தா காசு"

அவன் அந்தச் சிறுமியை அதிசயமாகப் பார்த்தான். "ஏன், என்ன விஷயம்?" என்றான்.

“ஒண்ணுமில்லே. பஸ்ஸில் வரணும்னு நினைச்சேன். அதுதான்."

“கீழே இறங்கி, ஊரைப் பார்க்கணும்கிற ஆசை இல்லையா?” என்று அவன் கேட்டான்.

24