முல்லைக்கலி

விக்கிமூலம் இலிருந்து

நான்காவது : முல்லைக் கலி[தொகு]

ஆசிரியர்: சோழன் நல்லுத்திரன்

பாடல்: 101 (தளிபெறு)[தொகு]

தளி பெறு தண் புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று,

முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்; களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று, ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்; மணி புரை உருவின காயாவும்; பிறவும்; அணி கொள மலைந்த கண்ணியர்- தொகுபு உடன், மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார், சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ, ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு.

அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப- வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி- நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத், துறையும், ஆலமும், தொல் வலி மராஅமும், முறை உளி பராஅய்ப், பாய்ந்தனர் தொழூஉ.

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக், கோட்டு இடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்- அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்!

சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி, விடர் இயம் கண்ணிப் பொதுவனைச் சாடிக், குடர் சொரியக் குத்திக், குலைப்பதன் தோற்றம் காண்- படர் அணி அந்திப், பசும் கண் கடவுள் இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டுக் குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்!

செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக் கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி, நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்- ஆர் இருள் என்னான், அரும் கங்குல் வந்து, தன் தாளின் கடந்து அட்டுத், தந்தையைக் கொன்றானைத் தோளின் திருகுவான் போன்ம்! என ஆங்கு; அணி மாலைக் கேள்வன் தரூஉமார், ஆயர் மணி மாலை ஊதும் குழல். கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடாஅது நீ கொள்குவை ஆயின், படாஅகை ஈன்றன ஆய மகள் தோள்.

பகலிடக் கண்ணியன், பைதல் குழலன், சுவல் மிசைக் கோல் அசைத்த கையன், அயலது, கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இரும் கூந்தல் அணை கொடுப்பேம் யாம்.

'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆன் உள், தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒரு நாள், கேளாளன் ஆகாமை இல்லை; அவன் கண்டு வேளாண்மை செய்தன கண்.

ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்; நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் முல்லை அம் தண் பொழில் புக்கார், பொதுவரொடு, எல்லாம் புணர் குறி கொண்டு.

102 கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற, தண் நறு பிடவமும், தவழ் கொடித் தளவமும், வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும், அன்னவை பிறவும், பல் மலர் துதையத் தழையும் கோதையும் இழையும் என்று இவை தைஇயினர், மகிழ்ந்து திளைஇ விளையாடும் மட மொழி ஆயத்தவருள் இவள் யார்- உடம்போடு என் உயிர் புக்கவள், இன்று?

ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால், திரு மா மெய் தீண்டலர்' என்று கருமமா, எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவள்.

'சொல்லுக, பாணியேம்' என்றார்; 'அறைக' என்றார்; பாரித்தார். மாண் இழை ஆறு ஆகச் சாறு. சாற்றுள், பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய் எல்லாம் மிடை பெறின், நேராத் தகைத்து.

தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து, உடன் எதிர் எதிர் சென்றார் பலர். கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து, உருத்து எழுந்து ஓடின்று மேல். எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்.

அவருள், மலர்மலி புகல்எழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ எருத்தோடு இமில் இடைத் தோன்றினன், தோன்றி, வருத்தினான் மன்ற, அவ் ஏறு. ஏறு எவ்வம் காணா எழுந்தார்- எவன் கொலோ- ஏறு உடை நல்லார்; பகை?

மடவரே நல் ஆயர் மக்கள்- நெருநை, அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும், உடல் ஏறு கோள் சாற்றுவார்! ஆங்கு இனித்; தண்ணுமைப் பாணி தளராது எழூஉக- பண் அமை இன் சீர் குரவையுள், தெள் கண்ணித் திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி, அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த முறுவலாள் மென் தோள் பாராட்டிச், சிறுகுடி மன்றம் பரந்தது, உரை!

103 மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும், புல் இலை வெட்சியும் பிடவும், தளவும், குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்- கல்லவும், கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர், பல ஆன் பொதுவர்; கதழ் விடை கோள் காண்மார்- முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த சொல்லர், சுடரும் கனம் குழைக் காதினர், நல்லவர்- கொண்டார், மிடை;

அவர் மிடை கொள- மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும், மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும், கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் வளையுபு மலிந்த கோடு அணி சேயும், பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து- அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும், பெரு மலை விடர் அகத்து, ஒருங்கு உடன் குழீஇ, படு மழை ஆடும் வரை அகம் போலும்- கொடி நறை சூழ்ந்த தொழூஉ.

தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின, ஏறு. ஏற்றின், அரி பரிபு அறுப்பன, சுற்றி, எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக் கண் உருவ மாலை போலக் குருதிக் கோட்டொடு குடர் வலந்தன;

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன் ஆடி நின்று, அக்குடர் வாங்குவான் பீடு காண்- செந் நூல் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை முந் நூலாக் கொள்வானும் போன்ம்!

இகுளை! இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே- மீட்டு ஒரான்- போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு, தார் போல் தழீஇயவன்!

இகுளை! இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; கோ இனத்து ஆயர் மகன் அன்றே- ஓவான்- மறை ஏற்றின் மேல் இருந்து ஆடித் துறை அம்பி ஊர்வான் போல் தோன்றும் அவன்!

தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை ஊற்று களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன் மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை- ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டுச் சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன் கொல் கூற்று என, உட்கிற்று, என் நெஞ்சு!

இகுளை! இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; புல் இனத்து ஆயர் மகன் அன்றே- புள்ளி வெறுத்த வய வெள் ஏற்று அம்புடைத் திங்கள் மறுப் போல் பொருந்தியவன்!

ஓவா வேகமோடு உருத்துத் தன் மேல் சென்ற சேஎச் செவி முதல் கொண்டு, பெயர்த்து ஒற்றும் காயாம் பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை- மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல் மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு!

ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெரும் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப், பொதுவரும் ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர்- விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழப்- பயில் இதழ் மலர் உண் கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ.

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள். அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய- உயிர் துறந்து- நைவாரா ஆய மகள் தோள். வளியா அறியா உயிர், காவல் கொண்டு, நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு எளியவோ, ஆய மகள் தோள்? விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்- கொலை ஏற்றுக் கோட்டு இடைத் தாம் வீழ்வார் மார்பின் முலை இடைப் போலப், புகின். ஆங்கு; குரவை தழீஇ யாம், மரபுளி பாடி, தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்- மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம் ஆளும் கிழமையொடு புணர்ந்த எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே!

104 மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின், மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப், புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர் கெண்டை, வலியினான் வணக்கிய, வாடாச் சீர் தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்- வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக் கொடிப் பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும், பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித் திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும், மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும், மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர் வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப் பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும் உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போலப், புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ.

அவ் வழி, முள் எயிற்று ஏஎர் இவளை பெறும், இது ஓர் வெள் ஏற்று எருத்து அடங்குவான். ஒள் இழை, வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின் காரி கதன் அந்ஜ்சான் கொள்பவன்,- ஈர் அரி வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம், இக் குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான்,- வரிக் குழை வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந்துப்பின் சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்,- என்று ஆங்கு அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால் நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடை மிசைப் பேணி நிறுத்தார் அணி.

அவ் வழி பறை எழுந்து இசைப்பப், பல்லவர் ஆர்ப்பக், குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த- நறை வலம் செய விடா இறுத்தன ஏறு. அவ் ஏற்றின், மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேல் சென்று, வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான், பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை நோனாது குத்தும் இளம் காரித் தோற்றம் காண்- பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் நீல் நிற வண்ணனும் போன்ம்.

இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க, அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தித் தன் கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும் வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை- இ·து ஒன்று- வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு திரிதரும் கொல் களிறும் போன்ம்.

தாள் எழு துணி பிணி, இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று, தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது, மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண்- மண்டு அமருள் வாள் அகப்பட்டானை 'ஒவ்வான்' எனப் பெயரும் மீளி மறவனும் போன்ம்.

ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப, மறுத்து மறுத்து மைந்தர் சாரத், தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப- இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்பப்- பாடு ஏற்றுக் கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர், கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு- புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க, வரி புனை வல் வில் ஐவர் அட்ட பொரு களம் போலும், தொழூஉ.

தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புகத் தண்டாச் சீர் வாங்கு எழில் நல்லாரும், மைந்தரும், மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர், தழூஉ.

பாடுகம் வம்மின்- பொதுவன் கொலை ஏற்றுக் கோடு குறி செய்த மார்பு. நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில், செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன், பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது உற்றீயாள், ஆயர் மகள்.

தொழீஈ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல், 'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும் தருக்கு அன்றோ- ஆயர் மகன்?

நேர் இழாய்! கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே, ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார்- அலர் எடுத்த ஊராரை உச்சி மிதித்து. ஆங்கு; தொல் கதிர் திகிரியான் பரவுதும்- ஒல்கா உரும் உறழ் முரசின் தென்னவற்கு ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன், எனவே.

105 அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்குச்- சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப் பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடித், 'தீது இன்று பொலிக!' என தெய்வக் கடி அயர்மார், வீவு இல் குடிப் பின் இரும் குடி ஆயரும், தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன், வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத் தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றக் காரியும், ஒரு குழையவன் மார்பில் ஒள் தார் போல் ஒளி மிகப் பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும், பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் கணம் கொள் பல் பொறிக் கடும் சினப் புகரும் வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப வாலிது கிளர்ந்த வெண் கால் சேயுஉம் கால முன்பின் பிறவும், சால மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும், தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய, உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ. அவ் வழி; கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க, ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க, நேர் இதழ் நிரை நிரை நெறி வெறக் கோதையர் அணி நிற்பச், சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர் தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த, ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து.

மருப்பில் கொண்டும், மார்பு உற தழீஇயும், எருத்து இடை அடங்கியும், இமில் இறப் புல்லியும் தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும், நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக், கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு.

கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டு வாய் சாக் குத்திக், கொள்வார் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா- செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி, உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!

பாடு ஏற்றவரைப் படக் குத்திச் செங் காரிக் கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா- நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின் முகை சூழும் தும்பியும் போன்ம்!

இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி, மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா- வாள் பொரு வானத்து, அரவின் வாய் கோட்பட்டுப் போதரும் பால் மதியும் போன்ம்!

ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற பொரு களம் போலும், தொழூஉ; வெல் புகழ் உயர்நிலைத் தொல் இயல் துதை புதை துளங்கு இமில் நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கிப், பாடு இல, ஆய மகள் கண்.

நறு நுதால்!- என் கொல்- ஐங்கூந்தல் உளரச் சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி, ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட கொல் ஏறு போலும் கதம்?

நெட்டிரும் கூந்தலாய்! கண்டை, இ·து ஓர் சொல்; கோட்டு இனத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார் தம் கண் பொடிவது எவன்?

ஒள் நுதால் இன்ன உவகை பிறிது யாது-யாய் என்னைக் கண் உடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி, அலர் செய்துவிட்டது இவ் ஊர்?

ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு- ஒள் இழாய்!- இன்று எவன், என்னை எமர் கொடுப்பது- அன்று, அவன் மிக்குத் தன் மேல் சென்ற செங் காரிக் கோட்டு இடைப் புக்கக் கால் புக்கது, என் நெஞ்சு! என; பாடு இமிழ் பரப்பு அகத்து அரவணை அசைஇய ஆடு கொள் நேமியான் பரவுதும்-'நாடு கொண்டு இன் இசை முரசின் பொருப்பன், மன்னி அமை வரல் அருவி ஆர்க்கும் இமையத்து உம்பர் உம் விளங்குக!' எனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=முல்லைக்கலி&oldid=1332356" இலிருந்து மீள்விக்கப்பட்டது