இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. மணமகன் தேவை!
தயவு செய்து யாரும் சத்தம் போடாதீர்கள்!...
உள்ளே:
டாக்டர் ரேவதி இருக்கிறார்கள்!...
“ரேவதி நர்ஸிங் ஹோம்” கழிந்த ஏழு ஆண்டுகளாக நித்தநித்தம் சட்டம் படித்துக் கொண்டிருக்கும் புது விதி, இது. அந்த விதியையும் மீறி-
“ஹாய் பிருந்தா! உனக்கு ஒரு நல்ல சமாசாரம் தெரியுமா? நம்ம டாக்டரம்மாவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கப் போகுதாம்!”
“மகிழ்ச்சியான சங்கதிதான்; மாப்பிள்ளை யாராம்?”
“மாப்பிள்ளை யார்னு ரேவதி அம்மாளுக்கே இன்னம் தெரியாதாக்கும்!”
“என்ன சொல்றீங்க, மஞ்சு அக்கா?”
“மாப்பிள்ளை தேடிப் பிடிக்கத்தான் ‘மணமகன் தேவை’ அப்படின்னு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருக்காங்க, ரேவதி டாக்டர்!”
“அப்படியாவது அவங்க திருமணம் நடக்கட்டும். டாக்டர் ரேவதின்னா எனக்கு வெகுவாகப் பிடிக்கும். அவங்களோட மனப்போக்கு தனி; தனித்தன்மை ஆனது.