உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/19. சக்திக் கூத்து

விக்கிமூலம் இலிருந்து

19.சக்திக் கூத்து

ராகம்-பியாக்

பல்லவி

தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)

சரணங்கள்

அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)

புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே (தகத்)

மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று மைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென (தகத்)

இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித் (தகத்)