சுபத்திரையின் சகோதரன்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

ஆண்டவன் திருவருளினால், இப்போது எங்கள் வாழ்க்கையில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இன்பம் நிலவுகிறது. நானும் என் மனைவியும் அளவிறந்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறோம். வேறெது எப்படியானாலென்ன?

பாவம் சுபத்திரை அனாதை. எனக்கும் தற்போது அவளைத் தவிர யாருமில்லை. அவளைக் கல்யாணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனது உற்றார் உறவினர் எல்லாரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். என் தந்தைக்கு என்னிடமுள்ள அன்பு மாறவில்லையென்பது உண்மையே. அடிக்கடி கடிதங்களும் எழுதி வருகிறார். ஆனால் நானும் சுபத்திரையும் அவர் வீட்டுக்கு வருவது மட்டும் கூடாதாம். ஒரு காலத்தில் ஆசார சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து உபந்யாசங்களும் செய்து வந்த அவர் இம்மாதிரி நடந்து கொள்வது, முதலில் எனக்கு வினோதமாகவேயிருந்தது. ஆனால், இப்போது அவர் மீது நான் குறை கூறவில்லை, அவரென்ன செய்வார்? விவாகமாகாத தங்கைகள் இருவர் எனக்கிருக்கின்றனர். மேலும் வீட்டில் இப்போது எஜமாட்டி அவரது இரண்டாவது மனைவி. என் தாயார் காலஞ் சென்று பல வருஷங்களாகின்றன.

நானும் சுபத்திரையும் அன்பு மயமான வாழ்க்கை நடத்துகிறோம். இப்புவியில் யார் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை. உலகமெல்லாம் எங்களைப் பகைத்தாலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் இப்போது வசிப்பது ஆந்திர நாட்டின் நடுவிலுள்ள ஒரு பட்டணம். இங்கே தமிழர்கள் மிகச் சிலரே வசிக்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் வரலாறு தெரியாது. என் மனைவியைச் சுட்டிக்காட்டிப் பேசுவோர் யாரும் இங்கில்லை. எனவே எங்கள் வாழ்க்கையின் இன்பத்துக்கு இடையூறு எதுவுமில்லையல்லவா?

ஆனால், நீங்கள் பொறாமைப்படவேண்டாம். எத்துணை கொடிய துன்பங்களுக்குப் பின்னர், நாங்கள் இந்த இன்ப வாழ்வை எய்தியிருக்கிறோமென்பதை அறிந்தால் நீங்கள் நடுநடுங்கிப் போவீர்கள். பெரும் புயலினால் பயங்கரமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலானது புயல் நின்றதும் அமைதியடைந்திருக்கும் நிலையை உங்கள் மனோபாவத்தினால் உருவகப் படுத்த முடியுமா? ஆம் எங்கள் வாழ்வில் இப்போது அத்தகைய அமைதியே ஏற்பட்டிருக்கிறது. எங்கள் வாழ்க்கை இன்பமயமாயிருக்கிறது என்று மேலே சொன்னேனல்லவா? அது முற்றிலும் சரியன்று. இடையிடையே பழைய நினைவுகள் தோன்றும் போது - அப்பப்பா! எங்கள் உணர்ச்சிகளை விவரித்தல் இயலாத காரியம். அத்தகைய சமயங்களில் நாங்கள் அலமாரியில் வைத்துப் பூசை செய்யும் இராஜகோபாலன் படத்துக்கருகில் சென்று மௌனமாய்க் கண்ணீர் விடுகிறோம். இராஜகோபாலன் மனித உடலில் தங்கியிருந்தபோது, சுபத்திரையின் சகோதரனாயும், என் அரிய நண்பனாயும் இருந்தான். இப்போது எங்கள் குலதெய்வமாய் விளங்குகிறான்.

என் மனைவிக்கீடான பெண் இவ்வுலகில் ஒருத்தியுமில்லை என்பது என் எண்ணம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் பற்றி அப்படித்தான் சொல்வான் எனக் கூறுவீர்கள். உண்மையே. ஆனால், அவளைப் போல் இவ் இளம் வயதில் இவ்வளவு துக்கங்களுக்கு ஆளானவர்கள் யாருமிரார் என்பது திண்ணம். அவள் குணத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இவ்வரலாற்றை எழுதி முடித்ததும் அவளிடம் கொடுத்து ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால் செய்வதற்கு உரிமையளித்தேன். அவள் என்ன திருத்தங்கள் செய்தாள் என்று நினைக்கிறீர்கள்? அவளுடைய அழகைப் பற்றியோ குணாதிசயங்களைப் பற்றியோ கூறியிருந்த அந்தப் பகுதிகளையெல்லாம் அடித்து விட்டாள். பின்னர் கதைக்கு இன்றியமையாத சில இடங்களிலேனும் அவற்றை விட்டு வைக்கும்படி நான் அவளைக் கெஞ்ச வேண்டியதாயிற்று.

ஆனால் சுபத்திரையைப் பற்றியாவது, என்னைப் பற்றியாவது, எங்கள் இல்வாழ்க்கையைப் பற்றியாவது நான் இங்கு விவரிக்கப் புகுந்தேனில்லை. வீர புருஷனும் என் ஆருயிர்த் தோழனுமான சுபத்திரையின் சகோதரனுடைய சரித்திரத்தைக் கூறவே வந்தேன். ஸ்ரீராம சரிதம் பாண்டவ சரிதம் அரிச்சந்திரன் கதை முதலியவற்றைப் போல் இராஜ கோபாலனின் சரித்திரமும் போற்றப்பட வேண்டுமென்பது என் எண்ணம். இதென்ன அநீதி? ஒரு கொலைஞனுடைய வரலாற்றை இராம சரித்திரத்துடனும் அரிச்சந்திரன் கதையுடனும் ஒப்பிடுவதா என்று நீங்கள் திடுக்கிட்டு வினவலாம். நியாயந்தான். ஆனால் என் நண்பன் செய்த கொலையினால் அவனைப் பாவம் ஏதேனும் சார்ந்ததாயின் அதற்கு தகுந்த பிராயச் சித்தம் அவன் செய்து கொண்டுவிட்டான் என்பதே என் கருத்து. இவ்விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் மாறுபடலாம்; ஆனால் அவனுடைய வரலாற்றைப் படிக்கும் உங்களில் எவரும் மனம் உருகாமலிருக்க மாட்டீர்கள் என்பதில் எள்ளலவும் எனக்கு ஐயமில்லை.

கதையின் ஆரம்பமே நன்றாயில்லையே? முடிவு முன்னுரையிலேயே வந்துவிடுகிறது. "இதற்குள் முன்னுக்குப் பின் முரண் வேறு" என்று நீங்கள் எண்ணலாம். ஆம், வினை கதைக்கு உண்மை வரலாற்றுக்கும் உள்ள வேற்றுமை அதுதான். கதையென்றால் அமைப்பு ஒழுங்காகவே இருக்கும் நிகழ்ச்சிகள் முன்னுக்குப் பின் முரண் இன்றி ஒன்றன்பின் ஒன்றாய் வரும், ஆனால் வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை அவ்வளவு பொருத்தமாகக் கூற முடியுமா? மேலும் இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கப் புகுந்தாலே என் மனம் குழம்பி விடுகிறது. எனவே இச் சரித்திரத்திலுள்ள குறைகளுக்காக என்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். பல குறைகள் நிகழ்வதாயினும் சரியே. இவ்வரலாற்றை எழுதி வெளியிடுவது என் ஆருயிர் நண்பனுக்கும் இவ்வுலகுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை என்னும் உறுதியினாலேயே இதை எழுதலானேன்.