அகத்தியர் ஞானப் பாடல்கள்
நூல் 17
நூல் பக்கம் 293
அகத்தியர் ஞானப் பாடல்கள்
ஆசிரியர் : சித்தர் அகஸ்தியர் / அகத்தியர்
ஞானம் – 1
[தொகு]1-5
[தொகு]1
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
- சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
- பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார்
- பாழிலே மனத்தை விடார் பரமஞானி :
சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
- சுழியிலே நிலையறிந்தால் மோடசம் தானே
2
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் சொன்னேன்
- மோகமுடன் பொய்களவு கொலை செய்யாதே
காயச்சலுடன் கோபத்தைத் தள்ளிப்போடு
- காசினியில் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே
- பலவேத சாஸ்திரமும் பாரு பாரு
ஏச்சல் இல்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
- என் மக்காள் எண்ணி எண்ணிப் பாரீர் நீரே
3
பாரப்பா நாலுவேதம் நாலும் பாரு
- பற்று ஆசை வைப்பதற்கோ பிணையோ கோடி
வீரப்பா ஒன்று ஒன்றுக்கு ஒன்றை மாறி
- வீணிலே அவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்
- தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்
ஆரப்பா நிலை நிற்கப் போறார் ஐயோ
- ஆச்சரியம் கோடியிலே ஒருவன் தானே
4
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்
- உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்
- பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
- தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி
- வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே
5
தானென்ற தானே தான் ஒன்றே தெய்வம்
- தகப்பனும் தாயும் அங்கே புணரும் போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
- நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு
கோன் என்ற திருடனுக்கும் தெரியும் அப்பா
- கோடான கோடியிலே ஒருவன் உண்டு
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும்
- என் மாக்கள் நிலை நிற்க மோட்சம் தானே
6-9
[தொகு]6
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் கேளு
- முன் செய்த பேர்களுடன் குறியைக் கேளு
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு
- எல்லாரும் கூடழிந்தது எங்கே கேளு
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை
- பிதற்றுவார் அவர் அவரும் நிலையும் காணார்
கூச்சலது பாளையந்தான் போகும் போது
- கூட்டோடே போச்சுது அப்பா மூச்சுத் தானே
7
மூச்சொடுங்கிப் போன இடம் ஆரும் காணார்
- மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்
வாச்சென்றே வந்தவழி ஏற்றம் காணார்
- வளிமாறி நிற்கின்றார் மணிவழியும் காணார்
வீச்சப்பா வெட்ட வெளி நன்றாய்ப் பாரு
- வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தால் போலாம்
- அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய்ப் பாரே
8
பாரப்பா உலகுதனில் பிறவி கோடி
- படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி
- வெளியிலே ஆடுதப்பா உற்றுப் பாரு
ஆரப்பா அணுவெளியில் உள்ள நீதான்
- ஆச்சரியம் புழுக்கூடு அலை மோதப்பா
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும்
- குணவியவான் ஆனக்கால் சத்தியமாமே
9
சத்தியமே வேணுமடா மனிதன் ஆனால்
- சண்டாளம் செய்யாதே தவறிடாதே
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு
- நிட்டையுடன் சமாதி விட்டு நிலை பேராதே
புத்தி கெட்டுத் திரியாதே பொய் சொல்லாதே
- புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கியாதே
- கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே
ஞானம் 2
[தொகு]1-5
[தொகு]1
- மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
- மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
- மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
- மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
உயர் ஞானம்
2
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி
- உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும்
பெண்ணின்பால் இந்திரியம் விடும்போது எல்லாம்
- பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே யாகும்
- தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார் பாரு
- மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே
3
ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
- உமையாளும் கணபதியும் முந்தியாகி
விண்ணொளியாம் அம்மரம் ஓம் அவ்வும் உவ்வும்
- விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாது அப்பா
பண்ணான உன்னுயிர் தான் சிவம் அதாச்சு
- பாற்கடலில் பள்ளி கொண்டோன் விண்டுவாச்சு
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
- கலந்து உருகி ஆடுமடா ஞானம் உற்றே
4
விந்துநிலை தனியறிந்து விந்தைக் கண்டால்
- விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
- ஆதியந்த மானகுரு நீயே ஆவாய்
சந்தேகம் இல்லையடா புலத்தி அன்னே
- சகலகலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
- மூலமதை அறிவாக்கி மூலம் பாரே
5
மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு
- முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
- சாத்திரத்தைச் கண்டரிதால் அவனே சித்தன்
சீலமுள்ள புலத்தியனே பரமயோகி
- செப்பு மொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி தன்னை
- நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே
ஞானம் – 3
[தொகு]1-6
[தொகு]1
பாரப்பா சீவன் விட்டுப் போகும் போது
- பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார்
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை
- ஆகாய சிவத்துடனே சேரும் என்பார்
காரப்பா தீயுடல் தீச் சேரும் என்பார்
- கருவறியா மானிடர்கள் கூட்டம் அப்பா
சீரப்பா காமிகள் தாம் ஒன்றாய்ச் சேர்ந்து
- தீய வழிதனைத் தேடி போவார் மாடே
2
மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு
- மனிதனுக்கோ அவ்வளவுத் தெரியாது அப்பா
நாடுமெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார்
- நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்
ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு
- அரியதந்தை இனம் சேரும் என்றுந் தோணார்
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணித்
- தளமான தீயில் விழத் தயங்கினாரே
3
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம்
- சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
- மாட்டினார் கதை காவ்யம் புராணம் என்றும்
இயலான ரசந்தனில் ஈப்புகுந்தாற் போலும்
- இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறென்றே தான்
வயலான பயன்பெறவே வியாசர் தாமும்
- மாட்டினார் சிவனார் உத்தரவினாலே
4
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி
- உலகத்தில் பாரதம் போல் கதை உண்டாக்கி
கர்த்தாவைத் தானென்று தோண ஒட்டாக்
- கபட நாடகம் மாகம் ஏதம் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க்கு எல்லாம்
- சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடிப்
பத்தாகச் சைவர்க்கு ஒப்பனையும் செய்து
- பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே
5 பாடினதோர் வகையேது சொல்லக் கேளு
- பாரத புராணம் என்ற சோதியப்பா
நீடியதோர் ராவணன் தான் பிறக்க என்றும்
- நிலையான தசரதன்கை வெல்ல என்றும்
நீடியவோ ராசன் என்றும் முனிவர் என்றும்
- நிறையருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும்
ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும்
- பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே
6
கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும்
- கட்டியதால் நல்வேதம் அறு சாத்திரங்கள்
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்று இல்லை
- அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி
ஒழிந்திடுவார் என்று சொல்லிப் பிறப்பு உண்டு என்றும்
- உத்தமனாய்ப் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும்
- சீவனத்துக்கு அங்கல்லோ தெளிந்து தாணே
ஞானம் - 4
[தொகு]1-5
[தொகு]1
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா
- பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளு
- கலையான பதினாறும் பூரணமே ஆகும்
மாரணமா மூலகத்தில் மதி மயங்கி மதிகெட்டுப்
- பூரணத்தை இகழ்ந்தார் ஐயா
வாரணத்தை மனம் வைத்துப் பூரணத்தைக் காத்தால்
- வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே
2
ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
- அயன்மாலும் அரனோடும் தேவர் எல்லாம்
மூச்சப்பா தெய்வம் என்றே அறியச் சொன்னார்
- முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
- பேரான பூரணத்தை நினைவாக் காரு
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
- வாசி நடுமைத்துள் வாழ்வார் தானே
3
தானென்ற பெரியோர்கள் உலகத்து உள்ளே
- தாயான பூரணத்தை அறிந்த பின்பு
தேனென்ற பானமதைப் பானம் செய்து
- தெவிட்டாத மௌன சிவயோகம் செய்தார்
ஊனென்ற உடலை நம்பி இருந்த பேர்க்கே
- ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறென்றும்
நானென்றும் நீயென்றும் சாதி என்றும்
- நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே
4
பிழைப்பதற்கு நால் பலவும் சொல்லா விட்டால்
- பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும்
உழைப்பதற்கு நூல் கட்டிப் போடா விட்டால்
- உலகத்தில் புத்தி கெட்டே அலைவார் என்றும்
தழைப்பதற்குச் சாதி என்றும் விந்து என்றும்
- தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும்
உழைப்பதற்குச் சொன்னது அல்லால் கதி வேறில்லை
- உத்தமனே அறிந்தோர்கள் பாடினார்கள்
5
பாடினார் இப்படியே சொல்லா விட்டால்
- பரிபாடை அறியார்கள் உலக மூடர்
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்துத்
- தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும்
- வையகத்தில் கல்செம்பைத் தெய்வம் என்றும்
நாடுவார் பூரணத்தை அறியார் மூடர்
- நாய்போலே குரைத்தல்லோ ஒழிவார் தானே
6-10
[தொகு]6
காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
- காரணத்தை அறிந்தோர்கள் கோடா கோடி
வீணாகப் புலம்பினதால் அறியப் போமோ
- விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்கு ஆகும்
கோணாமல் சுழுமுனியில் மனத்தை வைத்துக்
- குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாமல் ஒருநினைவாய்க் காக்கும் போது
- நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டிக் கொள்ளே
7
ஊதியதோர் ஊரறிந்தால் அவனே சித்தன்
- உத்தமனே பதினாறும் பதியே ஆகும்
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம்
- வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு
சோதிபரி பூரணமும் இலை மூன்றும் தான்
- தூங்காமல் தூங்கி அங்கே காக்கும் போது
ஆதியென்ற பராபரையும் அரனும் ஒன்றாய்
- அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே
8
பாரப்பா உதயத்தில் எழுந்து இருந்து
- பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி இரண்டு மாறிக்
- கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
- தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
- சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே
9
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு
- உதித்தகலை தானென்றும் இதுவே ஆச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி
- நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்
- பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும்
திண்டாடும் மனத்தோர்க்குக் காணப் போகா
- தெளிந்தவர்க்குத் தெரிவித்த உகமை தானே
10
உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே
- உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே
பகைமை பண்ணிக் கொள்ளாதே வீண் பேசாதே
- பரப்பிலே திரியாதே மலை ஏறாதே
நகையாதே சினங்காதே உறங்கிடாதே
- நழுகாதே சுழுமுனையில் பின் வாங்காதே
செகமுழுதும் பரிபூரணம் அறிந்து வென்று
- தெளிந்துபின் உலகத்தோடு ஒத்து வாழே
11-16
[தொகு]11
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு
- வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
- தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே
- பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக்
- கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே
12
உடலுயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே
- உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பர்
உடலுயிரும் பூரணமும் ஏது என்றக்கால்
- உத்தமனே பதினாறும் ஒருநான்கு எட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன் மால் ஈசன்
- உலகத்தோர் அறியாமல் மயங்கிப் போனார்
உடலுயிரும் பூரணடி முடியும் ஆச்சே
- உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே
13
பதியின்ன இடம் என்ற குருவைச் சொல்லும்
- பரப்பிலே விள்ளாதே தலை இரண்டாகும்
விதியின்ன இனம் என்று சொல்லக் கெளு
- விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கு அப்பா
மதி ரவியும் பூரணமும் கண்வாய் மூக்கும்
- மகத்தான செவியோடு பரிசம் எட்டும்
பதியவிடம் சுழுமுனை என்றதற்குப் பேராம்
- பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே
14
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம்
- காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும்
மயிலாடு மேகம் என்றும் நாகம் என்றும்
- மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும்
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும்
- சொல்லற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும்
- தாயான வத்து என்றும் பதியின் பேரே
15
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன்
- பின்கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன்
பாருலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன்
- பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்
சீருலகம் இன்னது என்று தெருட்டிச் சொன்னேன்
- சித்தான சித்து எல்லாம் சுருக்கிச் சொன்னேன்
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன்
- நின்னுடம்பை இன்னது என்று பிரித்துச் சொன்னேன்
16
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக் குள்ளே
- பித்தர்களே நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன்
- விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று
கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே
- காரியத்தை நினைவாலே கருத்தில் கொள்ளு
சுருதிசொன்ன செய்தி எல்லாம் சுருக்கிச் சொன்னேன்
- சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே
ஞானம் 5
[தொகு]1-5
[தொகு]1
கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா
- கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில் நின்று
- சாகாத கால்கண்டு முனையில் ஏறி
நிற்பமென்று மனம் உறுத்து மனத்தில் நின்று
- நிசமான கருநெல்லி சாற்றைக் காணு
சாற்பமென்று விட்டு விட்டால் அலைந்து போவாய்
- துரியமென்ற பராபரத்தில் சென்று கூடே
2
கூடப்பா துரியம் என்ற வாலை வீடு
- கூறரிய நாதர் மகேச்சுரியே என்பார்
நாடப்பா அவன் தனையே பூசை பண்ணு
- நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
- ஊமையென்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இதுதேடு காரியம் ஆகும்
3
ஆமென்ற பூரணம் சுழுமுனையில் பாராய்
- அழகான விந்துநிலை சந்திரனில் பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்
- உத்தமனே வில்லென்ற வீட்டில் காணும்
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு
- மற்றொன்றும் பூசையல்ல மகனே சொன்னேன்
நாமென்ற பரமனல்லோ முதல் எழுத்தாம்
- பாடினேன் வேதாந்தம் பாடினேனே
4
பாடுகின்ற பொருல் எல்லாம் பதியே ஆகும்
- பதியில் நிற்கும் அட்சரந்தான் அகாரம் ஆகும்
நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும்
- நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும்
நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும்
- நின்றதோர் இடைகலையே நாத விந்தாம்
ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும்
- ஒளியான அரியெழுத்தை ஊணிப் பாரே
5
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே
- உத்தமனே சீருண்டே ஊணிப் பாரே
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்
- ஆச்சரிய எழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே
- ஏகாந்தம் ஆகிய அவ்வெழுத்தைப் பாரு
தோணிபோல் காணுமடா அந்த வீடு
- சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே
6-10
[தொகு]6
துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார்
- துயரமாய் நடு நிலையை ஊணிப் பாராய்
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநாடிப் பார்
- அப்பவல்லோ வரை தாக்கும் தாரை காணும்
உறைந்திட்ட ஐவரும் தான் நடனம் காணும்
- ஒளிவெளியும் சிலம்பொலியும் ஒன்றாய்க் காணும்
நிறைந்திட்ட பூரணமும் இது தானப்பா
- நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே
7
சும்மா நீ பார்க்கையிலே மனத்தை அப்பா
- சுழுமுனையில் ஓட்டி அங்கே காலைப் பாராய்
அம்மா நீ தேவியென்று அடங்கிப் பாராய்
- அப்பவல்லோ காயசித்தி யோக சித்தி
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்
- ஒரு மனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று
நம்மாலே ஆனதெல்லாம் சொன்னோம் அப்பா
- நாதர்களில் இதை யாரும் பாடார் தானே
8
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக்
- கனலெழுப்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்
பூணுகின்ற இடைகலையில் பரம் போலாடும்
- பொல்லாத தேகம் என்றால் உருகிப் போகும்
ஆணவங்கள் ஆனவெல்லாம் அழிந்து போகும்
- அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும்
ஊணியதோர் எழுத்தெல்லாம் தேவியாகும்
- ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே
9
உணர்வென்றால் சந்திரனில் ஏறிப் பாவி
- ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே
அணுவென்றால் மனையாகும்சிவனே உச்சி
- அகாரமென்ன பதியுமென்ன சூட்சமாகும்
கணுவென்ன விற்புருவம் அகண்ட வீதி
- கயிலாயம் என்றதென்ன பரத்தின் வீடு
துணுவென்ற சூரியன்தன் நெருப்பைக் கண்டு
- தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே
10
மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகிநின்ற
- மூலமதை அறிந்து உரைப்போன் குருவுமாகும்
ஊவெழுத்துக் குள்ளேதான் இருக்குது அப்பா
- உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்
யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே
- அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர்
தேவலோடு மால் அயனும் தேடிக் காணார்
- திருநடனம் காண முத்தி சித்தியாமே
11-13
[தொகு]11
ஈரெழுத்து ஓரெழுத்தும் ஆகியாங்கே
- இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு
- வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை ஊணி நல்ல வாசியேறித்
- தெரு வீதி கடந்த மணி மண்டபத்துச்
சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கிச்
- சார்ந்தவர்க்குச் சித்தி முத்தி தருமே தானே
12
ஏகமெனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே
- எடுத்துரைக்க இவ்வுலகில் எவரும் இல்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே
- அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்
- விடுத்ததனை உரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஓரெழுத்தைக் காண்போன் ஞானி
- திருநடனம் காண முத்தி சித்தியாமே
13
குருவாக உமையாக எனக்குத் தந்த
- கூறரிய ஞானமது பத்தில் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
- பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்திக் காணே
அருளாக இந்நூலைப் பழித்த பேர்கள்
- அருநரகில் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
- ஆகாயம் நின்றநிலை அறியலாமே
- முற்றும்