அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/கயிலை வளமை

விக்கிமூலம் இலிருந்து
கயிலை வளமை
முத்தான சீமை மூன்று நீத்தோடு
புத்தாசையாகப் பண்பாய்த் தழைத்திடவே
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி இருந்திடவே
தேவர் உறையும் திருக்கயிலைதன் வளமை
பாவலர்கள் முன்னே பாடினார் அம்மானை
ஈசர் உறையும் இரத்தின கிரிதனிலே
வாசவனும் தேவர் மறையோரும் வீற்றிருக்க
பொன்னம்பல நாதர் பொருந்தி இருக்கும் மண்டபமும்
கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும்
வேதப் புரோகிதர் விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்து இலங்கும் மண்டபமும்
நீதத் திருமால் நிறைந்து இலங்கும் மண்டபமும்
சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும்
ஆதவனும் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
ஆரும் மிகஅறிந்து அளவிடக்கூடாது
பாரு படைத்த பரமேசுரனாரை
விசுவாச மேலோர் விமலன் அடிவணங்க
வசுவாச தேவன் வந்து மிகவணங்க
மறைவேத சாத்திரங்கள் மலரோன் அடிவணங்க
இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்க
எமதர்ம ராசன் எப்போதும் வந்து நிற்க
பூமகளும் வேதப் புரோகிதர் வந்து தெண்டனிட
கமலதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
நாம நெடியோன் பதத்தை நாள்தோறும் போற்றி நிற்க
தலைவன் இருக்கும் தங்கத் திருக்கயிலை
நிலைமை எடுத்துரைக்க நிலையாது அம்மானை
ஆறுசெஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழும் கயிலை வளமதை
கூறக்கூறக் குறைவில்லை காணுமே கொன்றை சூடும் அண்டர் திருப்பதம்
வாறுவாறு வகுக்க முடிந்திடாது மகிழுங் குண்டவளம் சொல்லி அப்புறம்
வேறுவேறு விளம்பவே கேளுங்கோ மெய்யுள்ளோராகிய வேத அன்போரே