அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தரும நீதம்
Appearance
←←தெச்சணத்தின் இயல்பு | தரும நீதம் | தெய்வ நீதம்→→ |
- ஆதிப்பொருளை அனுதினமும் தானோதிச்
- சோதியுட நீதம் சொல்லுவேன் அம்மானை
- தெய்வ மனுநீதம் தேச ராசநீதம்
- மெய்யறிந்த நீதம் விளம்புவேன் அம்மானை
- ஆயிரத்தெட்டு ஆன திருப்பதிக்கும்
- வாயிதமாய்ப் பூசை வகுப்பும் முடங்காது
- கோயில் கிணறு குளங்கரைகள் ஆனதையும்
- தேய்வு வராதே சேரும் மதில் கட்டிடுவார்
- எளியோர் வலியோர் என்று எண்ணி மிகப்பாராமல்
- களிகூர நன்றாய்க் கண்ட வழக்கே உரைப்பார்
- அன்னமடம் வைத்து அகம் களிகூர
- எந்நேரம் பிச்சை இடுவார் எளியோர்க்கும்
- பந்தல் இட்டுத் தண்ணீர் பக்தர்க்கு அளிப்பாரும்
- எந்த இரவும் இருந்து பிச்சை ஈவாரும்
- ஆறில் ஒருகடமை அசையாமல்தான் வேண்டித்
- தேறியே சோழன் சீமை அரசாண்டிருந்தான்
- சிவாயநம என்னும் சிவவேதம் அல்லாது
- கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
- ஆறில் ஒரு கடமையது தரவே மாட்டோம் என்று
- மாறி ஒருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்
- பன்னிரண்டு ஆண்டு பரிவாய் இறை இறுத்தால்
- பின்னிரண்டு ஆண்டு பொறுத்து இறைதாரும் என்பான்
- இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை ஆண்டிருந்தான்
- அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
- மெய்யறிவு கொண்ட மேலாம் பதத்தெளிவோன்
- தெய்வத் திருநிலைமை செப்புவேன் அம்மானை
- இவ்வகையாகச் சோழன் இருந்து இராச்சியத்தை ஆள
- கவ்வைகள் இல்லாவண்ணம் கலியுகம்வாழும் நாளில்
- செல்வகைத் திருவேயான திருவுளக்க் கிருபை கூர்ந்து
- தெய்வ மெய்ந்நீதம் வந்த செய்தியைச் செலுத்துவாரே