உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெச்சணத்தின் பெருமை

விக்கிமூலம் இலிருந்து
தெச்சணத்தின் பெருமை
நாராயணரும் நல்ல திருச்செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளி கொண்டு அங்கிருந்து
ஆண்டு ஆயிரத்து அ என்னும் இலக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்திருக்கும் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமைகேள் அம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்கும் தெச்சணமே
தேவாதி தேவர் திருக்கூட்டம் தெச்சணமே
வேதப் புரோகிதர் விளங்கி இருக்கும் தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீசுவரரும் அமர்ந்திருக்கும் தெச்சணமே
மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
தாணுமால் வேதன் தாமசிக்கும் தெச்சணமே
ஆணுவம் சேர் காளி அமர்ந்திருக்கும் தெச்சணமே
தோசம் மிகுகர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீசவினை தீர நீராடும் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்கும் தெச்சணமே
பாறு படவு பரிந்து நிற்கும் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்கும் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே
ஆகமக் கூத்து ஆடுகின்ற தெட்சணமே
பார்வதியாள் வந்து பதிந்திருக்கும் தெச்சணமே
சீர்பதியை ஈசன் செய்திருக்கும் தெச்சணமே
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
தெட்சணத்தின் புதுமை செப்ப முடியாது
அச்சமில்லாப் பூமி அடைவு கேள் அம்மானை
கச்சணி தனத்தாளோடு கறைமிடற்று அண்ணல் ஈசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத்தேவி
நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான
தெச்சணா புதுமை சொல்லிச் சீமையின் இயல்பும் சொல்வோம்