அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெய்வ நீதம்

விக்கிமூலம் இலிருந்து
தெய்வ நீதம்
வாரமது இல்லாமல் மன்னன் அதிசோழன்
நீதமாய்ப் பூமி நிறுத்தி அரசு ஆளுகையில்
கண்டு வேதாவும் கமலத் திருமாலும்
நன்று தெய்வாரும் நாராயணரும் மெச்சி
அன்று அந்த மாமுனிவர் எல்லோரும் தாம்கூடிச்
சென்று சிவனார் திருப்பாதம் தெண்டனிட்டு
சாகாது இருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகாபரனே இங்கும் நிறைந்தோனே
மூலப்பொருளே முதற்பொருளே காரணரே
சாலப்பொருளே தவத்தோர் அரும்பொருளே
நாரணரும் வேதாவும் நாடிப்பெரும் போரில்
காரணரே நீரும் கனல்கம்பம் ஆனோரே
ஆலமது அருந்தி அரவையும் மிகஉரித்துக்
கோலத் திருக்கழுத்தில் கோவையாய் இட்டோரே
ஆனைதனை உரித்து அங்கமதிலே புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோவேங்கிரியில் குடியிருக்கும் கோவே
தானே இருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அரிய திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளும் அய்யா
வாடிவந்த பட்சினுக்கு வாளால் அவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் தொடை அரிந்து ஈந்தவன்காண்
ஆறில் ஒருகடமை அவன் வேண்டிற்றான் எனவே
மாறி அவன் புவியோர் மனதில் கௌவைகள் இல்லை
கோவில் சிவாலயங்கள் குளம் கூபம் வாவிகளும்
சேவித்து அனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளும் சீமையிலே
நீதமாய்த் தெய்வநிலை நிறுத்த வேணும் அய்யா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கண்டிருந்த ஈசர் கரியமாலோடு உரைப்பார்
நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமாதேவிதனை வருத்தி
வருணந்தனை அழை நீ மாதம் மும்மாரி பெய்ய
கருணைக்குடை விரிக்க கங்குல்தனை அழையும்
வாசியது பூவாய் வழங்க வரவழையும்
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடு நீ
குருபூசை செய்யும் கூட்டமதி சிவமாய்த்
திருவீற்று இருக்கச் செய்திடுநீ கோலமது
நித்திராதேவி நித்தம் அந்தப் பூமியிலே
மத்திபமாய்க் காக்க வை என்றார் ஈசுரரும்
நினத்தொருக்கு உறுதி நினைவில் அறிவு தோன்றி
என்னைத் தோத்திரங்கள் இளகாமல் வை என்றார்
பன்றியோடே கடுவாய் பாவித்து இருந்திடவும்
அன்றிலோடே குயிலும் அன்புற்று இருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரிகுளம் போல்வரம்பில் நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற்று இருந்திடவும்
பசுவும் புலியும் ஒரு பக்கம் நீர் உண்டிடவும்
கசுவும் கரைபுரளக் கரும்பு முத்து ஈன்றிடவும்
சாத்திர வேதம் சமயம் வழுவாமல்
சூத்திரமாகத் துல்யப்படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்கள் ஒருகோடி பெற்று
இனிதாக நாளும் இறவாது இருக்க என்றும்
சந்திர சூரியர்கள் தட்டு மிகமாறாமல்
இந்திரரும் தேவர்களும் ரிஷிநிலை மாறாமல்
தானதவங்கள் தப்பி மிகப் போகாமல்
ஈனம் இல்லாமல் இதுவும் தெய்வநீதம் எல்லாம்
மானம் நிறுத்தி வையும் என்றார் ஈசுரரும்
இப்படித் தெய்வ நீதம் ஈசுரம் இதுவே கூற
செப்படி மறவா வண்ணம் திருமருகோனும் செய்தார்
அப்படித் தவறா நீதம் அம்புவிதனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே