அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நீடிய யுகம்

விக்கிமூலம் இலிருந்து
அவ்வுகத்தை ஈசனார்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக்கரை இருத்துவோம்மென்றுசொல்லி
எல்லோருங்கூடி யிதமித்தாரம்மானை
தில்லையாரீசன் திருவேள்விதான் வளர்க்க
நல்லையாவேள்வி நன்றாய்வளர்ந்திடவே
பிறந்தான்குறோணி பெரியமலைபோலே
அறந்தானறியா அநியாயக்கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்டமமைய அவன் பிறந்தானம்மானை
முகங்கண்களெல்லாம் முதுகு புறமேலாட
நகக்கரங்கள்கோடி கால்களொருகோடி
தவங்களறியாச் சண்டித்தடிமோடன்
குறோணியவனுயரங்கோடி நாலுமுழமாய்
கயிலைகிடுகிடென்னும் கால்மாறி வைக்கயிலே
அகிலங்கிடிகிடென்னும் அவனெழுந்தாலம்மானை
இப்படியேகுறோணி என்றவொரு அசுரன்
முப்படியேநீடிய யுகத்திலிருந்தான்காண்
இருந்துசிலநாள் இவன்றூங்கித்தான்விழித்து
அருந்தும்பசியால் வனுயர்ந்து பார்ப்பளவில்
பாருகங்காணான் பலபேருடல்காணான்
வாருதீரைநீரை வாரிவிழுங்கினான்காண்
கடல்நீரத்தனையுங் கடைவாய் நனையாமல்
குடலெல்லாமெத்தக் கொதிக்குதெனவெகுண்டு
அகிலமுழுங்க ஆர்ப்பரித்து நிர்ப்பளவில்
கயிலைதனைக்கண்டு கண்கள்மிகக்கொண்டாடி
ஆவியெடுத்து அவன்விழுங்குமப்போது
தாவிக்குதித்துத் தப்பினார் மாயவரும்
மாயவரும்வோடி மண்ணுலோகம்புகுந்து
தூயவனார் இங்கே சிவனை மிக நினைத்துத்
தவசியிருந்தார்காண் தாமோதரனாரும்
தவசுதனிலீசன் சன்னியாசி போலேவந்து
ஆருநீயிந்த ஆழவனந்தனிலே
ஏதுநீதவசு யெனைநினைந்தவாறேது
என்றுசன்னாசி இதுவுரைக்க மாயமவும்
பண்டுபட்டபட்டை பகர்ந்தாரவரோடே
கைலையெமலோகங் கரைகண்டார் சத்திவரை
அகிலமதைக்குறோணி யசுரனென்றமாபாவி
விழுங்கினான்நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன்
பளிங்குமலைநாதன் பாரத்தேவாதிமுதல்
பண்டுபோல்நாளும் பதியிலிருந்திடவே
என்றுங்கைலை இலங்கியிருந்திடவே
மன்றுசெய்தபாவி முகமுமவனுடம்பும்
துண்டாறதாக தொல்புவியிலிட்டிடவும்
கண்டகண்டமாய்ப்போடக் கடியவரமெனக்கு
தண்டமிழீர்நீரும் தரவேதவசிருந்தேன்
என்றுதிருமா லெடுத்துரைக்கவேயீசர்
மன்றுதனையழந்த மாலோடுரைக்கலுற்றார்
கேளாய்நீவிஷ்ணுவே கேடன்குறோணிதனை
தூளாக்கியாறு துண்டமதுவாக்கி
விட்டெறிந்தால் அவனுதிரம் மேலுமொருயுகத்தில்
கெட்டுக்கிழையாய்க் கொடியசூரக்குலமாய்
பிறக்குமவனுதிரம் பொல்லாதான்றன்னுடம்பு
துண்டமொன்றுதானும் தொல்புவியிலேகடிய
குண்டோமச்சலியனாய்க் குவலயத்திலேபிறப்பான்
அப்படியேகுறோணி அவனுதிரமானதுவும்
இப்படியேயாறு யுகத்துக்கவனுடம்பு
வந்துபிறப்பான்காண் மாத்தானாயுந்தனுக்கு
யுகத்துக்குகமே உத்தமனாய் நீபிறந்து
அகத்துக்கவன்பிறப்பாறு யுகமதிலும்
உண்டுமவன் சீவனுயிரழிவு வந்துஅன்னாள்
பண்டுநடுக்கேடுப் பாவியவனுயிரை
கொன்றுபோட்டே நரகக்குழிதூக்க நாள்வருங்காண்
என்றுவிடைகொடுத்தார் ஈசுரர்காணம்மானை
அன்றுவிடைவேண்டி அதிகதிருமாலும்
குன்றுபோல்வந்த கொடியபடுபாவி
குறோணிதனைச்செயிக்க கோபம்வெகுண்டெழுந்து
சுறோணிதவேதன் துடியாய் நடந்தனராம்
நாகத்தணைக்கடந்த நாராயணமூர்த்தி
வேகத்தால் குறோணிதனை வெட்டிப்பிளக்கலுற்றார்
வெட்டினாராறு மிகுதுண்டம்மானை
துண்டமதாறுந் தொல்புவியிலேபோட்டு
பிண்டமதைச்சுமந்து போட்டனர்காணம்மானை
அந்தக்குறோணி அவனுதிரமானதையும்
கொந்துகொந்தாக குளம்போலே குண்டுவெட்டி
உதிரமதைவிட்டு உயர்ந்தபீடம்போட்டு