அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நூல் சுருக்கம்
Appearance
←←காப்பு | நூல் சுருக்கம் | அவையடக்கம்→→ |
- சிவமே சிவமே சிவமே சிவமணியே
- தவமே தவமே தவமே தவப்பொருளே
- சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
- பாரான தெச்சணமே பரமன் உறுதலத்தில்
- போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
- ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
- நன்னியாய் நானூறு நாலுபத்து எட்டதினோய்
- தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
- செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
- வயது முகிந்தகலி மாளவந்த ஆறுகளும்
- முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து
- பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி
- ஈரன்ஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து
- வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏது வராது
- தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்தே பணியும்
- தீசாதியான துரியோதனன் முதலாய்
- அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து
- எவ்வுகமும் காணாது ஏககுண்டம் ஏகிப்
- பொல்லாத நீசன் புருள் அறியா மாபாவி
- கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்
- வம்பால் அநியாயம் மாதேவர் கொண்டேகி
- அம்பாரி மக்களுக்காக இரக்கமதாய்
- அறுகரத்தோன் வாழும் ஆழிக்கரை ஆண்டி
- நறுகரத்தோன் ஆன நாராயண மூர்த்தி
- உருவெடுத்து நாளும் உலகம் ஏழும் தழைக்கத்
- திருவெடுத்த கோலம் சிவனார் அருள்புரிய
- ஈசன் அருள்புரிய இறையோன் அருள்புரிய
- மாயன் அருள்புரிய மாதும் அருள்புரிய
- பூமாது நாமாது புவிமாது போர்மாது
- நாமாது இலட்சுமியும் நன்றாய் அருள்புரிய
- சரசுபதி மாதே தண்டரள மாமணியே
- அரசுக்கு இனிது இருத்துமாத்தாளே அம்பிகையே
- ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியே
- பாரேழும் அளந்த பரமேசுவரி தாயே
- பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
- மற்று நிகர் ஒவ்வா வாய்த்த தசரதற்குச்
- சேயாய் உதிக்கச் செடம் எடுத்தது போலே
- மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
- பிறந்து ஆறு மேல் பெரிய தவம்புரிந்து
- சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல்
- இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
- மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
- தர்ம வைத்தியமாய்த் தாரணியில் உள்ளோர்க்குக்
- கர்மமது தீரக் கணக்கு எடுத்துப் பார்த்ததுவும்
- ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
- மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
- கண்டு தொழுததுவும் கைகட்டிச் சேவிப்பதுவும்
- தொண்டராகச் சான்றோர் சூழ்ந்து நின்றவாறதுவும்
- பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
- கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
- கண்டு மாபாவி கலைத்து அடித்ததுவும்
- சாணார் இனத்தில் சுவாமி வந்தார் என்றவரை
- வீணாட்டமாக வீறு செய்த ஞாயமதும்
- மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
- தனு அறியாப் பாவி தடி இரும்பில் இட்டதுவும்
- அன்பு பார்த்து எடுத்து ஆளடிமை கொண்டதுவும்
- வம்பை அழித்து யுகம் வைகுண்டம்தான் ஆகி
- எல்லா இடும்பும் இறையும் மிகத்தவிர்த்து
- சொல் ஒன்றால் நாதன் தொல்புவியை ஆண்டதுவும்
- நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும்
- மேல் எதிரி இல்லாமல் வினை அறுத்து ஆண்டதுவும்
- இந்நாள் விவரம் எல்லாம் எடுத்து வியாகரரும்
- முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
- நாரணரும் வந்து நடத்தும் வளமைதனைக்
- காரணமாய் எழுதி கதையாய் படித்தோர்க்கு
- ஒய்யாரமாக ஊள்வினைநோய் தீருமென்று
- அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே
- பேயை எரித்துப் புதுமை மிகச்செய்ததுவும்
- ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
- சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
- நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும்
- பத்தும் பெரிய பாலருக்காக வேண்டிச்
- சத்தழியும் பாவி தடிஇரும்பிலும் இருந்து
- படுத்தின பாடெல்லாம் பாலருக்காகப் பொறுத்து
- உடுத்த துணி களைந்து ஒரு துகிலைத்தான் வருத்தி
- தேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப்
- பாவக் கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டு
- நாலு பிறவி நானிலத்திலே பிறந்து
- பாலு குடித்தாண்டி பறுபதத்தின் மேல்தாண்டி
- மனுக்கண் காணாமல் மறைந்து ஒரு மூன்று நாளாய்த்
- தானும் தவம் அதுவாய்ச் சாயுச்சமே புரிந்து
- நல்லோரை எழுப்பி நாலு வரமும் கொடுத்து
- பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
- வானம் இடியால் மலைகள் இளகிடவும்
- கானமது நாடாய்க் கண்டதுவும் சூரியனும்
- தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
- ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே