அங்கும் இங்கும்/இலண்டனில்

விக்கிமூலம் இலிருந்து
10 இலண்டனில்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐமபத்தோரோவது ஆண்டு, ஜூலைத் திங்களில் ஒரு நாள், நான் இலண்டனில், முதியோர் கல்விக்கூடமொன்றைக் கண்டேன்.

குறிப்பிட்ட தெருவை அடைந்ததும், வழிப்போக்கச் ஒருவரிடம் முதியோ கல்விக்கூட முகவரியைக் காட்டி, அடையாளம் காட்ட வேண்டினேன்.

அவர், நான்கு கட்டிடங்களுக்கு அப்பால் இருந்த பெரிய கட்டிடம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அங்குச் சென்றேன். கல்விக்கூட முதல்வரைக் கண்டேன். அவர் அன்போடு வரவேற்றார். கனிவோடு பதில் உரைத்தார். எங்கள் உரையாடலின் சாரம் இதோ :

இக்கல்விக் கூடத்தில் அறுபத்து நான்கு வகைப் பாடங்கள், பயிற்சிகள் நடக்கின்றன. இங்கு நடக்கும் முதியோர் கல்வி, முதற்படிப்பு அல்ல; தொடர் படிப்பு ஆகும். எந்த வகுப்பிலும் ஒரு குறிப்பிட்ட பொதுப் பரீட்சைக்கு ஆயத்தஞ் செய்வதில்லை.

ஏற்கெனவே, உயர்நிலை வரையிலோ தொடக்க நிலை வரையிலோ படித்தவர்களுக்கு இக்கல்வி நிலையம். அவர் கஞக்கும் சாதாரண கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் நடக்கும் பாடத்திட்டத்தை ஒட்டி, பாட முறைகளை அமைப்பதில்லை.

முதியவர்களான பிறகு, புதுப்புதுக் கல்வி ஆசை எழுவதுண்டு. தமது தொழில் முன்னேற்றத்திற்கோ ஏதாவது ஒரு துறையில், படிக்கவோ பயிற்சி பெறவோ ஒருவர் விரும்பலாம். இக்கல்விக் கூடத்தில் சேர்ந்து, விரும்பிய படிப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடலாம்.

இங்குச் சேர்த்துக்கொள்ள, நுழைவுச் சோதனை ஏதும் இல்லை. பாடங்களில், ஒரே நிலை வகுப்பும் இல்லை. குறிப்பிட்ட பாடத்திலேயே இரண்டு மூன்று நிலை வகுப்புகள் நடக்கும்.

அப்படியானால், எந்த அடிப்படையில் எந்த வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில்வது?

மாணவர், தான் எந்த நிலைக்குத் தகுதி என்று நினைக்கிறாரோ, அந்நிலை வகுப்பாசிரியரோடு கலந்து பேசி, அவ்வகுப்பிலேயே சேரலாம்.

இக்கல்விக்கூட சேர்க்கையிலோ, வகுப்பு மாற்றத்திலோ,பாட முறையிலோ கெடுபிடி கிடையாது குறிப்பிட்ட பொதுப் பரிட்சையில் தேற வைப்பதன் மூலமே நற்பெயர் எடுக்க வேண்டிய நெருக்கடியும் இல்லை ! ஆகவே பாடப் போக்கிலே, நெளிவு சுளுவைக் காணலாம். ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஒரு பகுதியை வேகமாகக் கடப்பதையும் மற்றொரு பகுதியை மெல்லக் கடப்பதையும் காணலாம்.

கெடுபிடிகள் இன்றி, நம்பி விட்டிருப்பது இக்கல்விக் கூடத்தை. மட்டுமா ? இல்லை. எல்லா முதியோர் கல்விக் கூடங்களும் இத்தகைய சுதந்திரத்தோடு இயங்குகின்றன.

முதியோர் கல்விக்கூடங்கள் அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டல்ல ; புலப் பல நாடு முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன, இந்நிலை முதியோர் கல்வி நிலையங்கள்.

இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம் ஏராளமானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதனால்தான், அம் மாடிக்கட்டிடத்தின் ஆறு மாடிகளும் நூற்றுக்கணக்கான அறைகளும் இக்கல்வி நிலையத்திற்கே சரியாகிவிட்டன. ஆண்களைப் போலவே பெண்களும் முதியோர் கல்விநிலையங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.

எங்கள் உரையாடல் முடியவில்லை. நடுவில் ஒரு அம்மையார், முதல்வர் அறைக்குள் நுழைந்தார். என் பக்கம் திரும்பினார். " இரண்டு நிமிடம் குறுக்கிடலாமா?" என்று கேட்டார். "சரி" என்றேன். முதல்வரிடம் பேசினார். நாற்காலியில் அமர்ந்து பேசினார்.

" நான் இடைநிலை தத்துவ வகுப்பு மாணவி. இரண்டு மூன்று வாரங்களாக அவ்வகுப்பில் இருக்கிறேன் ஏற்கெனவே, மூன்று, நான்கு, தத்துவ நூல்களைப் படித்திருந்த தைரியத்தில், நேரே இடைநிலை வகுப்பில் சேர்ந்து விட்டேன். இப்போது அது, அதிகப்படி என்று தெரிகிறது அவ்வகுப்புப் பாடங்களை என்னால் சமாளிக்க முடியாது. கீழ்நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்தால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன். இப்போது மாற்றிக்கொள்ள முடியுமா? இல்லையென்றால் நின்று விடுகின்றேன் ; அடுத்த பருவத்தில் வந்து, கீழ் நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்து கொள்கிறேன், சரிதானா ? " இது அம்மையாரின் விண்ணப்பம்.

" தயவு செய்து கவலைப்படாதீர்கள். அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டா, இப்போதே வகுப்பு மாற்றம் செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து படியுங்கள். இதோ, மாற்றச் சீட்டு ;எடுத்துக்கொண்டு போய், வகுப்பு மாறிப் படியுங்கள், மேலும் சிக்கல் வந்தால் என்னிடம் வந்து சொல்லத் தயங்காதீர்கள். இனிமையோடும், உறுதியோடும், ஆர்வத்தோடும் வந்த பதில் இது.

முதல்வர், வகுப்பு மாற்றச் சீட்டை எழுதிக் கொடுத்தார், அந்த அம்மையாரிடம். அவரும் மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டு சென்றார். நன்றி கூறி விட்டுச் சென்றார். என் பக்கம் திரும்பி, உரையாடலில் குறுக்கிட்டதற்காக, மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியேறினார்.

அவர் கண்களில் நம்பிக்கையொளி வீசிற்று. ஐம்பது வயதிற்குமேல் மதிப்பிடக்கூடிய அந்த அம்மாளின் கண்களிலே நம்பிக்கையொளி. புதுத் துறைக்கல்வி யொன்றைக் கற்றுத் தேறப் போகிறோம் என்கிற நம்பிக்கையொளி.

இங்கோ, இளைஞர்களுக்குக்கூட, நம்பிக்கை இழந்த, வெறுப்பு நிறைந்த கண்கள். எனவே, அழிவு வேலை ஈடுபாடுகள் ! யாரை நோக ?

அந்த அம்மானின், முந்திய, தவறான முடிவைப் பற்றிக் குட்டி உபதேசமொன்று செய்வார். முதல்வர் என்று எதிர்பார்த்தேன். அவரோ அறவுரை நிகழ்த்தவில்லை; அம்மாளின் தவறைக் காட்டுவதன்மூலம், தான் உயர முயலவில்லை. விரைந்து உதவி, உயர்ந்து விட்டார் மாணவியின் ஊக்கத் தளர்வையும் போக்கி விட்டார் ; நம்பிக்கையை வளர்த்துவிட்டார். இவரன்றோ, ஆசிரியர் என்று பாராட்டிற்று என் நெஞ்சம்.

"எவ்வளவு இனிமையாக மாணவிக்கு உதவினீர்கள். அச்சத்தோடும் குழப்பத்தோடும் வந்தவர் ஆண்மையோடும் தெளிவோடும் விடை பெற்றுக் கொண்டாரே" என்று முதியோர் கல்வி நிலைய முதல்வரைப் பாராட்டினேன்.

“முதியவர் பொறுப்புடையவர். தவறு செய்வது மானிட இயல்பு. தவறை மிகைப்படுத்தி, மாணவர்களைக் குட்டுவது, இளைஞர்கள் விஷயத்திலேயே ஆகாது. முதியவர்கள் விஷயத்தில், அம்முறையைக் கொண்டால், சொல்லாமல் நின்று விடுவார்கள் ஒவ்வொருவராக.

" தன்னிச்சையாக, நினைத்த வகுப்பிலே சேரவிட்டால் என்ன கேடு ? அவர்களே, தங்கள் திறமையை அறிந்து, கொள்ள உதவியது, அது. மேல்நிலை முடியாதென்று உணர்ந்தபோது, தானே, கசப்பு ஏதும் இல்லாமல், கீழ் நிலைக்குச் செல்ல விரும்பினார்.

'சோதனை' என்ற பெயரால், தொடக்கத்திலேயே தாங்கள் தரம் பிரித்தால். பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கல்வி நிலையத்தில் சேர்ந்திருக்க மாட்டார்கள். முதியவர்களை 'விட்டுப் பிடிப்பதே' சிறந்தது. யாரும் மனம் நோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். தவறு நேர்ந்தால், சிறுமைப் படுத்தக்கூடாது திருத்த மட்டுமே விரையலாம். இதுவே கல்வியை வளர்க்கும் முறை" இது கல்வி நிலைய முதல்வரின் கருத்துரை. பொருள் செறிந்த உரையல்லவா ?

கல்வி, காட்டு முள் அல்ல. தானே வளரும் தாவரமும் அல்ல. அது வளர்க்கப்படும் பயிர், நுட்பப் பயிர். முதியோர் கல்வியோ மிக நுட்பப் பயிர்.

கல்வியாளருக்குப் புலமை மட்டும். போதாது ? பயிற்சி மட்டும் போதாது ; திறமை மட்டும் போதாது ; மனித்த் தன்மையும் வேண்டும்; தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற உணர்வு ஊடுருவியிருக்க வேண்டும். நசுக்காமல், குத்தி மகிழாமல், ஊக்கி உதவுபவரே, வளர உரமிடுவோரே, கல்வியாளர்.