உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கும் இங்கும்/ஈர உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து
17. ஈர உள்ளம்

யிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தோராம் ஆண்டு, ஒரு நாள் காலை, நானும் என் மனைவியும் தொடக்க நிலைப் பள்ளியொன்றைப் பார்த்தோம் ; நம் நாட்டில் அல்ல. பிரிட்டனில். அப் பள்ளியில் படித்தோர் சாதாரண குடும்பத் தினர். தலைமை ஆசிரியை எங்களைப் பல பகுதிகளுக்கும் அழைத்துக்கொண்டு போனார். மூன்றாம் வகுப்பில், கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம். நடவடிக்கைகளைக் கவனித்தோம் என்ன கூட்டம் தெரியுமா ? இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் அது, கூட்ட நடவடிக்கைகளில் புதுமை ஒன்றுமில்லை. நம் நாட்டில், நல்ல பள்ளிகளில் நடக்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் போலவே இருந்தது : வழக்கமான நிகழ்ச்சிகளுக்குப் பின் மாணவிகள் சார்பில் வேண்டுகோள் வந்தது. யாருக்கு வேண்டுகோள் ? என்ன வேண்டுகோள் ?

எங்களுக்கு வேண்டுகோள். இந்தியாவைப் பற்றிப் பேச வேண்டுமென்று வேண்டுகோள். அதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ‘நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தை’ வளர்ப்பதும், இளைஞச் செஞ்சிலுவைச் சங்கத்தின் குறிக் கோள்களில் ஒன்று. எனவே, வேண்டுகோள் பொருத்தமானதே.

அந்த வேண்டுகோளை என் மனைவியைக் கைகாட்டி விட்டேன். “இந்தியாவைப்பற்றி நீங்கள் வினாக்களைக் கேளுங்கள். என் மனேவி பதில் சொல்லுவார்” என்று பொறுப்பை வேறு பக்கம் திருப்பி விட்டேன்.

மாணவிகள் பலர், ஒருவர் பின் ஒருவராகப் பல வினாக்களை எழுப்பினர். அத்தனைக்கும் பதில் கிடைத்தது. வினாக்களில் ஒன்றுகூட நம் நாட்டுப் பெரியவர்களைப் பற்றி இல்லை கேட்டது அனைத்தும் குழந்தைகளைப் பற்றியும் பள்ளிக்கூடம் பற்றியும் சிறுவர் சிறுமியர் வாழ்க்கையைச் சுற்றியுமே இருந்தன. இதோ சில எடுத்துக்கட்டு :

குழந்தைகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவீர்களா ? அப்போது என்னென்ன செய்வீர்கள் ?”

“நர்சரி பள்ளி நிறைய உண்டா ?"

“எந்த வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ப்பீர்கள் ? ”

“வாரத்திற்கு எத்தனை நாள் பள்ளிக்கூடம் ?”

“நாளைக்கு எத்தனை மணி நேரம் பள்ளிக்கூடம் ?”

இவ்வகையில் சிறுவர் சிறுமியரைப் பற்றியே கேள்விகள் ஓடின.

“உங்கள் மாணவ மாணவிகள் எதில் எழுதுவார்கள் ?” இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தாள், ஒரு மாணவி.

“தொடகத்தில் சில ஆண்டுகள் பலகையிலும் பின்னர் நோட்டிலும் எழுதுவார்கள்” - இது பதில்,

“ஏன் முதலிலேயே நோட்டில் எழுதி படிக்கக் கூடாது?” இக் கேள்வியை வேறு ஒருத்தி வீசினாள்.

“பலகையென்றால், ஒரு முறை எழுதி முடித்ததும், அதை அழித்துவிட்டு வேறொரு பாடத்தை எழுதிப் பழக லாம். ஒரே பலகை இரண்டொரு ஆண்டுக்கு வரலாம் நோட்டில் எழுதுவதென்றால் ஆண்டுக்குப் பல நோட்டுகள் வாங்கவேண்டியிருக்கும். அதற்கு நிறைய செலவல்லவா?" இப்படிப் பதில் கூறினார் என் மனைவி. உண்மையான பதில், ஆனாலும் நம் ஏழ்மையை இப்படி வெளிப்படுத்தலாமா என்று என் நெஞ்சம் வாடிற்று. சுதந்திரம் பெற்ற அண்மை காலமல்லவா அது.

மேற்கொண்டு சில வினாக்கள் பதில்களோடு நிகழ்ச்சி முடிந்தது. மாணவியொருத்தி நன்றி கூறி முடித்தாள். நாங்கள் எழுத்து, வெளியே செல்ல, ஓரடி எடுத்து வைத் தோம். அவ்வமயம் ஒரு மாணவி தலைதெறிக்க ஓடி வந்தாள். எங்களைத் தாண்டி முன்னேயிருந்த தலைமை ஆசிரியையிடஞ் சென்று நின்றாள்.

“விருத்தினர்களுக்கு ஒரேவொரு வேண்டுகோள் விடட்டுமா?” என்று அந்த அம்மாளின் அணுமதியைக் கோரினாள்.

“இவ்வளவு நேரம் கேட்டிருக்கக்கூடாதா” என்றார் அந்த அம்மாள்.

“பரவாயில்லை. கேட்கட்டும்” என்று சமாதானப்படுத்தி அனுமதி பெற்றேன். மாணவிக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி.

“அம்மா, நான் ‘பேப்பர்’ கொடுக்கிறேன். கொண்டு போகிறீர்களா ?” என்று என் மனைவியைப் பார்த்து வேண்டினாள். என் மனைவி திகைத்தார். பளிச்சென்று நான் குறுக்கிட்டேன்.

“எங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு மன்னியுங்கள்” என்று தலைமை ஆசிரியையிடம் கூறிவிட்டு, என் மனைவி யிடம் தமிழில் பேசினேன். சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு பேசினேன்.

“இது உன்னால் வந்த வம்பு, ‘நோட்’ வாங்க நிறையப் பணம் வேண்டுமே என்றதால் நமக்குப் பிச்சை கொடுக்க வந்திருக்கிறது, இப்பெண். நீ சும்மா இரு. நான் சமாளித்துக் கொள்கிறேன்,” இப்படிச் சொல்லிவிட்டு அந்த மாணவியோடு பேசினேன்.

“பலகையில் எழுதுவதா ; நோட்டில் எழுதுவதா ? என்பது பணத்தை மட்டும் பொருத்தது அல்ல, பழக்கத்தையும் சேர்ந்தது. எங்கள் நாட்டுப் பழக்கம், சில ஆண்டுகள் பலகையில் எழுதிய பிறகே, காகிதத்தில் எழுதுவது. இப் பழக்கத்தை மாற்ற எங்கள் நாட்டில், ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதுனால் பேப்பர் வேண்டா. உன் நல்லெண்ணத்தித்து நன்றி என்று சமாளிக்க முயன்றேன்.

அக் குழந்தை என் பேச்சை நம்பினதாகத் தெரியவில்லை.

நான் நிறைய ‘பேப்பர்’ கொடுந்தனுப்புகிறேன், கொண்டு போய்க் கொடுங்கள்” என்று கெஞ்சிற்று. என்ன சொல் வதென்று தெரியாமல் இரண்டொரு வினாடி திகைத்தேன். இதற்கிடையில் மற்றொரு மாணவி என் உதவிக்கு வந்தாள்.

‘எலிசபெத், நீ மாலை வீடு திரும்பும்போது, என் வீட்டிற்குள் வந்து போ, என் தாத்தா வைத்திருந்து, எழுதிய பலகை எங்கள் விட்டில் பத்திரமாக இருக்கிறது. அதை உனக்குக் காட்டுகிறேன். நம் நாட்டிலும் முற்காலத்தில் பலகையில்தான் எழுதுவார்கள்’ என்றாள் அம்மாணவி. இன்னும் இரண்டொரு மாணவிகளும் தங்கள் வீட்டில் அத்தகைய பலகைகள் காட்சியில் இருப்பதாகக் கூறினார்கள். அதற்கப்புறமே விட்டாள், நன்கொடை கொடுக்க முனைந்த மாணவி.

பல ஆண்டுகளுக்குப் பின், கோவை நகரிற்குச் சென்றேன். தனியாகவே சென்றேன். கல்வி இயக்குநராகச் சென்றேன்.

நகரத் தொடக்க நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பும் விளையாட்டு விழாவும் சிதம்பரம் பூங்காவில் நடந்தன, அவற்றைக் காணச் சென்றேன். ஒவ்வொரு பள்ளிக் குழுவும் ஒவ்வொரு வகையில் வரவேற்றது. நகர சபைப் பள்ளி ஒன்று புதுமுறையில் வரவேற்றது. மற்றவர்கள் போல் மாலையிட்டு வரவேற்கவில்லை. முடிப்புக் கொடுத்து வரவேற்றது. என்ன முடிப்பு ? பண முடிப்பு ! எனக்கா ? இல்லை. என் கையில் கொடுத்தது, அவ்வளவே. எதற்கு அம் முடிப்பு ? தஞ்சை புயல் நிவாரண நிதிக்கு அது. அந்நிகழ்ச்சிக்கு முன், புயல், தஞ்சை மாவட்டத்தில், கோர விளையாட்டு விளையாடியது.

அந் நகரசபைப் பள்ளியில் படிக்கும் அனைவரும் ஏழைகள் பாட்டாளிகளின் மக்கள். ஆயினும், தஞ்சையில், புயலால் சேதப்பட்டு வாடுவோருக்கு உதவி செய்யத் துடித்தனர். அத்தனை பேரும்-ஒருவர் தவறாது - குறிப்பிட்ட தொகையைக் கொண்டுவந்து கொடுத்தனர். அதைப் பண முடிப்பாக்கி, என் கையில் கொடுத்துப் புயல் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரும் எதற்காகவும் என்னிடம் அதுவரை வரவில்லை. பின்னரும் வரவில்லை.

எலிசபெத், எதையும் எதிர்பார்த்து, என் மனைவியிடம் பேப்பர் கொடுத்தனுப்ப முன் வரவில்லை. இந்தியக், குழந்தைகளின் குறையைக் கேட்டதும் குறைபோக்க முன் வந்தது அவள் உள்ளம். முன்பின் அறியாதவர்களுக்குச் செய்யும் உதவியன்றோ மெய்யான அறம்,

கோவை நகரப் பாட்டாளிகளின் குழந்தைகள், தஞ்சை மாவட்டத்தில் வாடுவோருக்காகத் தியாகஞ் செய்ததும் பெயருக்கல்ல; புகழுக்கல்ல. ஒன்று போட்டு பின்னர் ஒன்பது எடுக்கும் அகவிலை வாணிகமல்ல, அவர்கள் செய்தது. அரசியல் சூதாட்டத்தின் பயிற்சியுமல்ல அது.

பிறர் துன்பம் கண்டு துடித்தல் இயற்கை. அம்மானிட இயல்பின் மலர்கள். மேற்கண்ட இரு செயல்களும். இம்மலர்களை வாடாமல் வதங்காமல் காக்க வேண்டாவா ? மானிட இனத்திற்கு எங்கே அல்லல் வந்தாலும் மற்றவர் விரைந்து சென்று துயர்துடைக்க வேண்டாவா ? இயற்கையுணர்ச்சி களெல்லாம் - நல்லுணர்ச்சிகளெல்லாம்- வறண்டே போயினவா ? மானுடம், சொத்து காக்கும், வெறும் இரும்புப் பெட்டியாக மாறி விட்டதா ?

இல்லையென்றால், பஞ்சைகள் பக்கம் பார்வை திரும் பட்டும். கை நீளட்டும், நன்கொடை பெருகட்டும், பட்டினி ஒடட்டும், வாழ்வு தழைக்கட்டும் என்று உங்கள் உள்ளம் உரைக்கிறதா ? நல்லது, பகுத்துண்டு வாழ்வோம் வாரீர்.