அங்கும் இங்கும்/முதிய இளைஞர் இருவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
12. முதிய இளைஞர் இருவர்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் ஆண்டு, ஸ்காட்லாந்தின் தலைநகரமாகிய எடின்பரோவில் இருந்தேன்.

ஒரிரவு ஏழு மணிக்கு, முதியோர் கல்விக் கூடமொன்றைக் காண ஏற்பாடாகி இருந்தது. அப்போது, மழை துாறிக் கொண்டிருந்தது. குளிர் காற்று சீறிக் கொண்டிருந்தது.

ஒட்டல் அறையிலே தங்கிவிட ஆசை. ஆனாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற உண்ர்ச்சியால் உந்தப்பட்டு இரவுக் கல்விக்கூடம் போய்ச் சேர்ந்தேன்.

கல்லூரி முதல்வரைக் கண்டேன். அவர் அறையில் மேசையின் மேல் அழகிய விரிப்பொன்று இருந்தது. அது என் கண்ணைக் கவர்ந்தது; கருத்தையும் கவர்ந்தது.

அதிலே, மயிலொன்று பின்னப்பட்டிருந்தது. மயிலின் இயற்கைத் தோற்றம் என்னைத் தொட்டது. அதைப்பாராட்டினேன். முதல்வர் மகிழ்ந்தார். பலரும் பாராட்டினதாகக் கூறினார்.

கல்லூரியின் நடைமுறையைப் பற்றி விளக்கினார், அன்றைய குளிரிலும் மழையிலும்கூட, வழக்கமான வருகை இருப்பதாகக் கூறினார். 

கல்லூரி மாணவ மாணவியார்-முதியோர்-கல்வியின் மீதே கண்ணாயினார் என்பதை அறிந்தேன், மகிழ்ந்தேன்.

இதோ உங்களிடம் உரைத்து விட்டேன். நம் தம்பிகள், தங்கைகள் - மாணவ, மாணவியர்-காதுகளிலும் போட்டு வையுங்கள்.

பின்னர் கல்லூரியின் பல பகுதிகளையும் காட்டிக் கொண்டு வந்தார். சிற்சில வகுப்புகளுக்குள்ளும் நுழைந்தோம். ஒரு வகுப்பில் அம்மையார் ஒருவர் பெயரைச் சொன்னார். பின் வரிசையில் இருந்த ஓர் அம்மாள் கையை உயர்த்தினார்.

"வேலு. நீங்கள் பார்த்துப் பாராட்டிய மயில் விரிப்பை நெய்தவர் இவரே" என்றார் முதல்வர்.

“ஆகா ! உங்கள் வேலைப்பாடு மிக நன்றாயிருக்கிறது. எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீர்கள். இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறீர்களே !” என்றேன் நான்.

“ஒராண்டு காலம் : இக்கல்லூரியில் கற்றுக் கொண்டேன். பலன், அந்த விரிப்பு” என்று அடக்கமாகக் கூறினார் அந்த அம்மாள்.

“அப்படியா ? முந்தைய பழக்கமின்றி, இந்த வயதில், புதிய கலையைக் கற்றுக்கொண்டு, இவ்வளவு பெரும் வெற்றி பெற்றுள்ள உங்களுக்குப் பரிசு கொடுக்கலாம்” என்றேன்.

"கொடுக்கலாமென்ன ! ஏற்கனவே இதற்குப் பரிசு பெற்று விட்டார்கள். சென்ற ஆண்டு. ஸ்காட்லாண்ட் முழுமைக்கும், கற்றுக்குட்டி நெசவாளர்களுக்கென்று போட்டி நடந்தது. அப்போட்டியில், இவ்விரிப்பிற்காக, இந்த அம்மாளுக்கு முதற் பரிசு கிடைத்தது" என்று பூரிப்போடு உரைத்தார் முதல்வர். 

"ஆர்வங் கலந்த பாராட்டு ! மேலும் பல வெற்றிகள் கிட்டுவதாக" என்று கூறினேன். வாழ்த்துவதற்கு எனக்கு வயது போதாது. என்னைக் காட்டிலும் பல ஆண்டு மூத்தவர், அந்தப் பாட்டி.

சில நிமிடங்களுக்குப் பின், வேறொரு வகுப்பறையில் இருந்தோம். வகுப்பறைச் சுவர் ஒன்றில் அழகிய ஓவியம் ஒன்று காட்சியளித்தது. மலையும் காடும், அருவியும் ஆறும் அழகாகத் திட்டப்பட்டிருந்தன. அப்படத்தைக் கண்டு சொக்கினேன்.

"ஆகா ! எவ்வளவு திறமையாகத் தீட்டப்பட்டிருக்கிறது இவ்வோவியம் !" என்று வியந்தேன்.

"இதைத் திட்டியவரும் இங்கேயே இருக்கிறார்" என்றார் முதல்வர். அதே மூச்சிலே, ஒரு பெயரைச் சொன்னார். பெரியவர் ஒருவர் ஒரு பக்கத்திலிருந்து கையைத் தூக்கினார்.

"இவர்தான், இதன் கர்த்தா. இதுவும் பரிக பெற்ற வேலைப்பாடு. சென்ற ஆண்டு, ஸ்காட்லாண்டு முழுமைக்கும் கற்றுக்குட்டி ஒவியர்களுக்கென்று போட்டி யொன்று வைத்தார்கள். அதற்காகத் தீட்டிய படம் இது. இதற்கு முதற் பரிசு கிடைத்தது" என்று இதன் வரலாற்றை விளக்கிக் கூறினார் முதல்வர்.

"பலே, உங்கள் கல்லூரியில், பல, முதல்தரமான கற்றுக் குட்டிகள் உள்ளனரே ! இவர் எப்போது ஓவியம் வரைவதில் ஈடுபட்டார் ?" இது பக்க உரையாடல்.

"இக் கல்லூரியில் சேர்ந்த பிறகே, ஒவியம் வரையும் பயிற்சி பெற்றேன். ஒராண்டுப் பயிற்சிக்குப் பின் போட்டியிட்டேன்" என்றார் ஓவியக்காரர். 

"அப்ப்டியா? நீறுபூத்த நெருப்புப் போன்றிருந்த உங்கள் திறமையைப் போற்றுவதா ? தள்ளாத வயதிலும் புதுப்புதுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் உங்கள் ஊக்கத்தைப் போற்றுவதா? முழு மூச்சு ஈடுபாட்டைப் போற்றுவதா? என்று தெரியாது திகைக்கிறேன். தொடர்ந்து வெல்க நீவிர், மன்னிக்க வேண்டும். உங்கள் வயதை அறிந்து கொள்ளலாமே?" என்று இழுத்தேன்.

"அதற்கென்ன? என் வயது எழுபத்தாறு " என்று கணீரென்று உரைத்தார். ஓவியக்காரத் தாத்தா.

"நீவிர் நூறாண்டு வாழ்க" என்றேன், போகலாமென்று சாடை காட்டினேன் முதல்வருக்கு.

"இரண்டே விநாடி ; சிறு-செய்தி. ஒவியப் போட்டியில் முதற் பரிசு பெற்ற இவரும் நெசவுப் போட்டிலில் முதற் பரிச பெற்ற அந்த அம்மாளும் கணவன் மனைவி' இதை, முதல்வர் கூறி முடிப்பதற்குள், வகுப்பிலிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். முதல்வர் தொடர்ந்தார் பேச்சை. இருவரு இளைய மாணவர்கள். இவர்கள் சேர்ந்து ஈராண்டு ஆகவில்லை. இருவரும், பரிசு பெற்ற இரு பொருட்களையும் தங்களுக்ககன்று வைத்துக் கொள்ளாமல், இக் கலைகளை: கற்றுக் கொடுத்த கல்லூரிக்கே அன்பளிப்பாக்கிவிட்டனர்! இக்கொடையே இவர்கள் சிறப்புக்கெல்லாம் சிகரம்"- இதை முதல்வர், சொல்லி முடித்தது தான் தாமதம், நீண்ட பலமான கைதட்டல் வகுப்பிலே. சில விநாடிகளுக்கு முன் நிகழ்ந்ததைவிட பலமான கைதட்டல்.

மாணவத் தம்பதிகளின் ஆர்வமும் முயற்சியும் ஒரு பக்கம் பரவசப்படுத்தின சிறப்பைப் போற்றும் சக மாணவர்களின் சிறப்பு ஒரு பக்கம் பரவசப்படுத்திற்று. அரும்பொருளையும் பொதுப் பொருளாக்கும் நல்லியல்பு மற்றொரு பக்கமிருந் பரவசப்படுத்திற்று. மேலும் இருந்தால், பரவசத்தில் மூழ்கிப் போவோமென்று அஞ்சி, மெல்ல வெளியேறினோம்.

"நெசவுப் போட்டியில் வெற்றி பெற்ற அம்மாளின் வயது எழுபத்திரண்டு. ஆறு பதிலும் எழுபதிலும் முதியோர் கல்விக் கூடங்களில் சேர்ந்து , புதியன பல கற்போர், ஆணும் பெண்ணும், எண்ணிறந்தோர்!" என்ற கல்லூரி முதல்வர். காதோடு காது சென்னது ஒலித்துக் கொண்டிருக்கிறது. என் காதிலே ஒலித்துப் பயன்?

இந்தியா திரும்பிய பின், பல நண்பர்களிடம் இதைக் கூறி, என் மகிழ்ச்சியைப் பகிர்த்து கொண்டேன். கேட்டவர்கள், பயபக்தியோடு கேட்டார்கள். "ஆமாங்க அவங்க மாதிரி நாம் எப்ப வரப்போகிறோம்" என்று முடித்து விட்டார்கள்.

ஒருவர் மட்டும் ஈடு கொடுத்தார். அந்தக் கிழவனும் கிழவியும் கல்லூரிக்குப் போவதில் போட்டியிட்டார்கள். ஆளுக்கொரு புதுக் கலை கற்று, பரிசு பெறுவதில் போட்டியிட்டார்கள். இருக்கட்டுமே, நாம் மட்டும் என்ன குறைந்து போய்விட்டோம்? சென்ற ஆண்டுதான் என் மனைவிக்கும் எனக்கும் போட்டி. இருவரும் போட்டியை ஏற்றுக்கொண்டோம்.

" சம்பளம் கட்டு படியாகவில்லை. கொஞ்சம் பவுடர் வாங்குவதை......" என்று நீட்டினேன்.

"பளிச்சென்து பதில் சொன்னாள் : 'நீங்கள் மட்டும் காசைப் புகையாக ஊதலாம். நான் அச்செலவிற்கு மேக்கப் பூச்சிற்குச் செலவு செய்தால் கேளுங்கள். இந்த வீட்டில் எனக்கு இதற்குக்கூட வக்கு இல்லையா ?’ என்று கண்ணிர் வடித்தாள், என் இல்லத் தரசி. 

“இது சகவாழ்வுக் காலம், சகவிரயக் காலமும் கூட. இதற்கு ஏன் வருந்துகிறாய்” என்று சமாதானப்படுத்தினேன்.

“அன்று முதல் எங்கள் வீட்டில் சிகரெட் செலவுக்கும் பவுடர் செலவுக்கும் போட்டி. ஆனால் இக்கால விளையாட்டுப் போட்டி போல் அடிதடி கிடையாது” என்று திசை திருப்பி விட்டார், நகைச்சுவை நிபுணர்.

நாற்பதானால், நாளைக கணக்குப் பார்க்கும் நாமெங்கே! எழுபதானாலும் ஏங்கி, முடங்கிக் கிடக்காமல், புதுப் புதுக் கலைகளைக் கற்கும் பிறர் எங்கே ? யாரிடத்தில் கேட்க இதை ?

தாம் வளர்ந்து, நாட்டையும் வளர்க்க வேண்டிய காளையரோ, வழியிலே நின்று விடுகின்றனர். அறிவாற்றலைவிட, பிற திறமைகளை வளர்ப்பதிலே மூழ்கி விடுகின்றனர்.

தொன்மையையும் பண்பாட்டையும் பற்றிப் பன்னிப் பன்னிப் பேசும் பெரியவர்களோ, கமக்கு எங்கே ஐயா வரும்’ என்று சபித்து விடுகிறார்கள்.

நாகரிகவாதியோ, ‘காமிக்’கோடு நழுவி விடுகிறார்.

பொதுமக்களே, உங்களுக்கு யார் சொல்வார்? பார் கற்றுக் கொடுப்பார் ?