உள்ளடக்கத்துக்குச் செல்

அசோகனுடைய சாஸனங்கள்/இந்தியாவின் பூர்வசரித்திர

விக்கிமூலம் இலிருந்து

அசோகனுடைய சாஸனங்கள்


அவதாரிகை

1. இந்தியாவின் பூர்வ சரித்திர ஆராய்ச்சி

ந்தியாவின் பூர்வ சரித்திரமானது மானிட ஜாதியின் முன்னேற்றத்தை விளக்குவதற்கு மிக அரிய சாதனமாம். இந்திய சரித்திரத்திலுள்ள அரச பரம்பரையில் அசோகன் ஓர் நடுநாயகமாக விளங்குகின்றான். இவனுடைய வினோதமான சாஸனங்களைப் படித்துணர இவ்வரசனைப்பற்றிய எல்லா விஷயங்களையும் முன்னுரையாகக் கூறுவது அவசியமெனக் கருதுகிறோம்.

நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்வரையும் மேனாடுகளில் இந்தியாவின் பூர்விக சரித்திரத்தைப்பற்றி மிகக் குறைவான அறிவுதான் இருந்தது. அப்போது முகம்மதியர் வருகைக்கு முன்னுள்ள காலத்தின் சரித்திரத்தை யாரும் தெரிந்து கொள்ளவில்லை, கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில், மேல் நாட்டார் ஸம்ஸ்கிருத இலக்கியம் என்ற மகாசமுத்திரத்தின் ஆழத்தையும் விரிவையும் உணர ஆரம்பித்தனர். ஆயினும், உலகத்தின் சரித்திரத்தில் இந்திய சரித்திரமானது மிகவும் முக்கியமான பாகமென்பது ஒருவருக்கும் புலப்படவில்லை. நம் நாட்டு வித்துவான்களோ, சரித்திரம் என்ற விஷயத்தை ஆழ்ந்த படிப்பும் ஆராய்ச்சியும் அவசியமான ஒரு சாஸ் திரமாகக் கருதவில்லை. மேனாட்டாரோ, தமது பிரகிருதி சாஸ்திரத் தேர்ச்சியிலும் நாகரிகத்தின் மேன்மையிலும் தாமே மயங்கித் தங்களுக்குப் புவியில் எவரும் நிகரில்லை யென்றும் மற்ற ஜாதியாரின் சரித்திரம் உலகத்தின் முற்போக்குக்கு அவசியமில்லையென்றும் நினைத்து இறு மாப்படைந்திருந்தனர். ஓர் புது தினம் உண்டாவது போல மெள்ள மெள்ள இருள் அகன்று இப்போது ஒரு புது உணர்ச்சி பரவிவருகிறது, இந்த நூறு வருஷங்களுக்குக் கிடையில் இந்தியாவின் சரித்திரம் உலகத்தின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு அவசியமானது என்பதை அறிஞர் உணர்ந்து வருகின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் 
சரித்திர அறிவின்
வளர்ச்சி

நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கிற்று. அதன் பிறகும் பல வருஷங்களுக்கு நம் தேசத்தின் பூர்வசரித்திரம் உள்ளே பிரவேசிக்க வழியில்லாத பெருங் காடாயிருந்தது. விரிவான புராணக் கதைகளும் தர்ம சாஸ்திரங்களும் தத்துவ வேதாந்தக் கிரந்தங்களும் ஐதிஹ்யங்களு மல்லாமல், காலநிர்ணயமுள்ள விவரங்கள் இச் சரித்திரத்தில் காணப்படவில்லை. தொடக்கம், முடிவு, எல்லை முதலிய யாதொரு அளவுமில்லாமலும் கால வரையறை யில்லாமலும் தொகுக்கப்பட்ட புஸ்தகங்கள் இந்தியாவின் சரித்திரமாய் விளங்கின. இப்படிப்பட்ட காட்டினூடே நுழைந்து செல்ல நமது "புராதனவஸ்து சாஸ்திரிகள்” ஓர் வழியை அமைத்திருக்கிறார்கள்.

புராதன வஸ்து சாஸ்திரம் என்றால் என்ன? பண்டைக்கால நிலைமையின் அறிகுறியாக இத்தேசம் முழுமையிலும் பரந்து கிடக்கும் இடிந்த கோயில்கள், பாழான நகரங்கள், இன்னும் சிதையாத மற்ற சாதனங்கள், புதையலாய் நமக்கு அகப்படும் பற்பலவித நாணயங்கள், செப்புப்பட்டயங்கள், கல்வெட்டுகள், ஸ்தம்பங்கள், பிரதிமைகள் முதலிய வஸ்துக்களை “புராதன வஸ்து”[1] என்று நாம் இங்கு கூறுவோம். இவற்றிலிருந்து நம் ஆராய்ச்சியின் பயனாக நமக்குக் கிடைத்திருக்கும் அறிவே புராதன வஸ்து சாஸ்திரம்[2].

பூர்வ இந்திய
சரித்திரத்தின்
ஆதாரங்கள்
பூர்விக இந்திய சரித்திரத்தின் ஆதாரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது, ஐதிஹ்யம். அதாவது இந்தியாவிலுள்ள எல்லாவித கிரந்தங்களிலும் அடங்கிய விவரங்கள். சுருதி, ஸ்மிருதி, வேதாங்கங்கள், இதிகாஸம், புராணம், என்ற பலவகை கிரந்தங்களையும் இப்பிரிவில் நாம் அடக்குகிறோம். இந்தக் கிரந்தங்களைப்போலவே இவற்றில் அடங்கிய சமாசாரங்களும் அளவற்றவை.

இரண்டாவது, அந்நிய நாட்டார் இந்தியாவைப்பற்றித் தம் தம் பாஷைகளில் எழுதி வைத்துள்ள விவரங்கள் அலக்ஸாந்தருடனும் அதற்குப் பின்னும் வந்த யவன தூதர்களும் யவன தேசாந்தரிகளும் பாஹியன், யுவன்சுவங், இத்ஸிங் முதலிய சீன தேசாந்தரிகளும், தாங்கள் இத் தேசத்தில் கண்டதும் கேட்டதுமான செய்திகளை எழுதிவைத்திருக்கிறார்கள். அவை யாவும் அகப்படவில்லையாயினும் கிடைத்தவரையிலும் இவ் வாதாரங்கள் கால நிர்ணயத்துக்கு மிக முக்கியமானவை. மூன்றாவது, புராதன வஸ்துசாஸ்திரம். இதில் மூன்று முக்கியமான உட்பிரிவுகள் உண்டு. (i) பழைய கட்டடங்களைச் சோதனை செய்வதிலிருந்தும் சிற்பங்களில் காலத்துக்குத் தக்கபடி ஏற்படும் வித்தியாசங்களைக் கவனிப்பதிலிருந்தும் உண்டாகும் அறிவு. (Architecture and Sculpture). (ii) பாறையிலும் கோயில்களின் கற்சுவரிலும் செப்புப் பட்டயங்களிலும் வரைந்து காணப்படும் விகிதங்களைப் படிப்பதனால் கிடைக்கும் அறிவு. (Epigraphy). (iii) பழையகாலத்து நாணயங்களைப் பரிசோதனை செய்வதன் பயனாக உண்டாகும் அறிவு (Numismatics). முதலாவது பிரிவைச் சேர்ந்த ஐதிஹ்யம் என்ற ஆதாரத்திலிருந்து நமக்குக் கிடைத்துள்ள விவரங்கள் அளவற்றவையானாலும் அவற்றை ஒழுங்கு பண்ணிக் காலத்தின்படி வரிசைப்படுத்தியது, புராதன வஸ்து ஆராய்ச்சியின் உதவியும் அந்நிய நாட்டார் எழுதி வைத்துள்ள விவரணங்களின் உதவியுமே. இதன்றி இக்காரியம் அசாத்தியமாயிருந்திருக்கும். புராதன வஸ்து சாஸ்திரத்தின் உதவி பூர்விக இந்தியாவின் சரித்திரத்துக்கு எவ்வளவு முக்கிய ஆதாரமாகுமென்று உணர அசோகனது சாஸனங்கள் தக்க சான்றாகும்.

அசோகன் என்ற பெயருடைய ஓர் அரசன் இந்தியாவில் 
அசோகனது
சாஸனங்களின்
கருத்தை விளக்கிய
ஆராய்ச்சிகள்

ஆண்டதாக இந்துக்களுக்கு நூறு வருஷங்களுக்குமுன் வரையும் கொஞ்சமும் தெரியாமலிருந்தது. ஏறக்குறைய ஆயிர வருஷங்களாக அவன் பெயரே இந்தியரின் ஞாபகத்திலிருந்து மாய்ந்து போயிருந்தது. வட இந்தியாவின் பல பாகங்களில் நின்றிருந்த அசோக ஸ்தம்பங்களை முன் காலத்திலிருந்த ராக்ஷசரின் வேலையென்று நம் ஜனங்கள் கூறிவந்தனர். ஸ்தம்பங்களிலும் பாறைகளிலும் எழுதப்பட்டிருந்த லிகிதங்களுக்கு ஒருவருக்கும் பொருள் தெரியவில்லை. இப்படி இருக்கையில் 1834ஆம் ௵ல் ஈஸ்டு இந்தியாக் 'கம்பனியாரின் நாணயப் பரிசோதனை அதிகாரியாகிய ஜேம்ஸ் ப்ரின்ஸெப் என்பவருக்கு அபூர்வமான பழைய நாணயங்கள் பல கிடைத்தன. இந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் க்ரீக் லிபியிலும் மற்றப் பக்கத்தில் அப்போது இந்தியாவில் வழங்கிவந்த இருவகை லிபி ஒன்றிலும் வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட நாணயங்களை த்விபாஷை நாணயங்கள்[3] என்று நாம் சொல்லலாம். இந்த நாணயங்கள் இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில் கி. மு. 200 முதல் கி. பி. 100 வரையும் ஆண்டுவந்த க்ரீக் அல்லது யவன அரசர்களால் அடிக்கப்பட்டவை. க்ரீக் பாஷையிலும் க்ரீக் லிபியிலும் இந்த நாணயங்களைச் செய்த அரசர்களின் பெயரும் விருதுகளும் இவற்றின் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தன. ஐரோப்பிய வித்துவான்' ஆனதினால் ஜேம்ஸ் ப்ரின்ஸெப்புக்கு க்ரீக்கில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களை வாசித்து அறிந்துகொள்வது எளிதாயிருந்தது. நாணயங்களின் மறுபக்கத்தில் எழுதியிருப்பது க்ரீக்கில் எழுதப்பட்ட விவரங்களேயென்று அவர் ஊகித்தார். அறியப்படாத இருவகை லிபிகளின் ஒவ்வொரு எழுத்தையும் மறுபக்கத்திலுள்ள க்ரீக் லிபியோடு ஒத்துப்பார்த்து அவ்வெழுத்துக்கள் இன்னின்ன ஒலிகளைக் குறிக்கின்றன வென்று எடுத்துக் காட்டும் பட்டிகை ஒன்றை ப்ரின்ஸெப் தயார்செய்தார். ஸ்தம்பங்களிலும் பாறைகளிலும் வெட்டப்பட்டிருந்த லிகிதங்களில் த்விபாஷை நாணயங்களில் காணப்படும் இந்திய லிபிகளே உபயோகப் படுத்தப்பட்டிருப்பது பின்பு தெரியவந்தது. பழைய கல்வெட்டுக்களை வாசித்து அறிந்துகொள்ளப் பிரின்செப்பின் பட்டிகை மிகுந்த பிரயோஜனமாயிற்று. ஆயினும் லிகிதங்களின் கருத்து விளங்குவது அதிகக் கஷ்டமாயிருந்தது.

அசோகனது சாஸனங்களைப்படிக்க முயன்றவரில் முதல்வரும் இந்த ப்ரின்ஸெப் தான். ஆங்கிலமொழியில் பிரசித்திபெற்ற “ராஜபுத்திர சரித்திரம்” எழுதிய கர்னல் டாட் (Colonel Tod) இவரைப் பின்பற்றி கிர்நார் என்ற இடத்திலுள்ள லிகிதங்களைப்படிக்க முயன்றார். முதலில் இந்த லிகிதங்களின் கருத்து ஒருவருக்கும் தென்படவில்லை. பியதஸி என்ற ஓர் அரசனால் எழுதப்பட்ட லிகிதங்கள் இவை என்று மட்டும் தெரியவந்தது. ஆனால் பல சமுசயங்கள் உண்டாயின. சில லிகிதங்களில், தேவானாம் - ப்ரியன் (= தேவர்களுக்குப் பிரியமானவன்) என்று அரசனின் விருது பெயராக உபயோகிக்கப்பட்டிருந்தது. மற்ற லிகிதங்களில் பியதஸி என்ற பெயர்மட்டுந்தான் காணப்பட்டது. வேறு லிகிதங்களில் பியதஸி என்ற பெயருக்கு ‘தேவானாம்பிரியன்’ என்ற பதம் விருதாக உபயோகப்பட்டிருந்தது. இவ் விவரங்களிலிருந்து பல கேள்விகள் பிறந்தன: இந்தப் பியதஸி எவர்? பியதஸி ஒருவரா பலரா? பியதஸி என்ற பெயர் சிறப்புப்பெயரா? அல்லது பொதுப்பெயரா? பியதஸியும் தேவானாம்பிரியம்னும் வெவ்வேறு மனிதர்களா, அல்லது இரண்டும் ஒரே மனிதனின் பெயரா? இப்படிப்பட்ட கேள்விகளுக்குக் சில வருஷங்களாக விடை கிடைக்கவில்லை.

பிறகு புராதனவஸ்து சாஸ்திரிகளும் மற்றுள்ள வான்களும் பல துறைகளில் ஆராய்ச்சிவேலையை தொடங்கினார்கள். ஐரோப்பியருள் ஸ்ரீ. கன்னிங்ஹாம் (Cunningham) பர்ஜெஸ், (Bargess) பூலர் (Bihler) ஸெனார்ட், (Senart) பொர்னாப் (Burnouf) என்போரும், நம்மவருள் ஸ்ரீ. ராமகிருஷ்ண பந்தர்க்கர், பகவன்லால் இந்திராஜீ, ராஜேந்திரலால் மித்திரர், என்ற வித்வான்களும் அசோக சாஸனங்களின் கருத்தை விளக்குவதற்குப் பிரயாசப்பட்டார்கள். பழைய லிபிகள் எல்லாம் வாசிக்கப்பட்டன ; புராதன வஸ்துக்கள் சோதனை செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டன; லிகிதங்கள் சரியான நகல்களுடனும் மொழிபெயர்ப்புகளுடனும் வியாக்கியானங்களுடனும் பிரசுரஞ் செய்யப்பட்டன ; ஹிந்து, ஜெயின பௌத்த மதங்களைச்சார்ந்த கிரந்தங்கள் விவேசன புத்தியுடன் படிக்கப்பட்டமையால் அவற்றிலிருந்து பூர்விக சரித்திரத்துக்குப் பல ஆதாரங்கள் ஏற்பட்டன ; அசோகன் என்ற பெயருடைய அரசன் ஒரு காலத்தில் இந்தியா முழுவதையும் ஆண்டு வந்தவனென்றும் அவனுக்குப் பியதஸி என்ற விருது இருந்ததென்றும் பௌத்தக் கிரந்தங்களிலிருந்து தெரியவந்தது. பௌத்தர்களது தெய்வ பாஷையாகிய பாலிக்கும் அசோக சாஸனங்களின் பாஷைக்குமுள்ள நெருங்கிய சம்பந்தம் வெளியாயிற்று. லிகிதங்களில் கூறப்பட்டிருக்கும் பியதஸி, தேவானாம் பிரியன், தேவானாம்பிரியனான பியதஸி, எல்லாம் ஒரே மனிதனைக் குறிக்கின்றன வென்றும், பெயரில் என்ன மாறுபா டிருந்தபோதிலும் இந்த லிகிதங்கள் வாசகரீதியில் ஒரே மனிதனின் வாக்கியங்களென்று நிச்சயமாய்ச் சொல்லக்கூடிய ஒற்றுமையையுடையன வென்றும், எல்லோரும் அறியலாயினர். கடைசியாக, கி. பி. 1915ம் ௵ல் ரெய்ச்சூருக்கு அருகிலுள்ள மாஸ்கி என்ற ஊரில் கிடைத்த அசோகக் கல்வெட்டில் அசோகன் என்ற பெயரே வரைந்திருப்பது தெரியவந்ததும் இந்த லிகிதங்களை எழுதியவன் எவன் என்ற சங்கை முற்றிலும் நீங்கி விட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. † Antiquities புராதன வஸ்துக்கள்.
  2. ★ Archaeology
  3. Bi-lingual coins