அசோகனுடைய சாஸனங்கள்/கலிங்க சாஸனங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

IV. கலிங்க சாஸனங்கள்

இச்சாஸனங்கள் இரண்டும் தவுளி ஜவுகட என்ற இடங்களில் பதினான்கு சாஸனங்களின் பின் 11, 12, 13வது சாஸனங்களுக்குப் பதிலாக வரையப்பட்டிருக்கின்றன. இவை எழுதப்பட்ட காலமும் பதினான்கு சாஸனங்களின் காலமே எனலாம். தவுளி என்ற ஊர் பூரிக்கும் புவனேசுவர் என்ற பெரிய க்ஷேத்திரத்துக்கும் அருகிலுள்ளது. இங்குள்ள அசோக சாஸனங்கள் அச்வத்தாம மலை என்னும் பெயருடைய பாறையின் வடபாகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை காப்பாற்றவோவென்று தோன்றும்படி ஒரு யானையின் பிரதிமை அப்பாறையின் மேல்புறத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. ஜவுகட என்ற ஊர் நமது மாகாணத்தைச் சேர்ந்த கஞ்ஜம் ஜில்லாவில் உள்ளது. இங்கு லிகிதங்கள் உயரமான ஒரு மலையின் மேல் காணப்படுகிறது. இவ்விரு ஊர்களும் அசோகனின் காலத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரதேசங்களின் அதிகாரிகள் வசித்துவந்த நகரங்களாயிருந்தன. சாஸனங்களில் இவ்வூர்களுக்குத் தொஸாலி என்றும் ஸமாபா என்றும் முறையே பெயர் கொடுக்கப்படுகிறது.

கலிங்க சாஸனங்கள் புதிதாக ஜயித்த ஜனங்களுக்கும் அவர்களின் பக்கத்திலுள்ள காட்டு ஜாதியாருக்கும் ‘பயப்படாதேயுங்கள்’ என்று அபய தானஞ்செய்யும் கட்டளைகளாம். நோக்கம் ஒன்றானதால் இரண்டு சாஸனங்களுக்கும் பொதுவாக சில வாசகங்கள் காணப்படுகின்றன. இரண்டு வாசகங்கள், (16உம் 17உம்) பதின்மூன்றாம் சாஸனத்திலும் சிறிது மாறி வந்திருக்கின்றன.

முதல் கலிங்க சாஸனத்தின் முடிவில் வேறு சாஸனம் என்று சொல்லும்படியான கட்டளையொன்று அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது, இதன் கருத்து இரண்டாம் சாஸனத்திலுள்ளதுபோல அதிகாரிகள் ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று வருஷங்களுக்கு ஒரு முறை அனுஸம்யானம் செய்யவேண்டுமென்பதை வற்புறுத்தலே. அனுஸம்யானம் என்பது என்னவென்று நமக்குத் தெரிந்ததை அவதாரிகையில் கூறியிருக்கிறோம்.

1. புதிதாக அடக்கிய ஜனங்களிடம் நடப்பதைப்
பற்றி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை,

தேவர் பிரியன் சொற்படி தொஸாலி நகரத்தின் வியோஹாலகரான (நியாயாதிபதிகளான) மகாமாத்திரர் இங்ஙனம் கூறப்படுகின்றனர். எனது நோக்கம் எதுவாயினும் நீங்கள் அதை மனமார ஒப்புக்கொண்டு அதன்படி உடனே அனுஷ்டிக்க வேண்டுமென்பது என் விருப்பம். உங்களுக்கு அனுப்பப்படும் கட்டளைகளே அதற்கு முக்கியமான வழி. நீங்கள் பல்ஆயிரம் ஜனங்களைப் பரிபாலித்து நல்ல மனிதருடைய அன்பையும் சம்பாதிக்கக் கடவீர். எல்லா மனிதரும் எனது மக்கள்; என் குழந்தை குட்டிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித நன்மைகளும் சுகமும் உண்டாகவேண்டு மென்று பிரார்த்திப்பதுபோலவே எல்லா மனிதருக்கும் நான் (அனுக்கிரகங்களை) விரும்புகிறேன். நீங்கள் இதன் கருத்தை முற்றிலும் உணரவில்லை. சிலர் ஒருவேளை இதைக் கவனித் திருக்கலாம் ; ஆயினும் இதன் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளவில்லை. உங்களால் இஃது உணரத்தக்கது ; இந்த நீதி மிக அழகாக அமைந்திருக்கிறது.

சில மனிதர் அகாரணமான் சிறைக்கு அல்லது வேறு துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவ்விதம் காரணமின்றிய சிறைப்பாடால் மற்ற ஜனங்களும் வியசனமடைகின்றனர். இப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் விரும்ப வேண்டியது என்னவெனின் நான் நடுவுநிலைமையைக் கைவிடாமல் காப்பாற்றக் கடவேன் என்றே. ஆனால் சில பிறவிகளுக்கு நியாயத்தில் ஜயம் என்பது அசாத்தியம் ; அவர் (எவரெனின்) பொறாமையுடையோர், சோம்பலுற்றோர், அவசரமுடையோர், இரக்கமிலிகள், மனத்தளர்ச்சியுற்றோர், சோர்வுடையோர், கவனமற்றோர் போன்றவரே. நீங்கள் பிரார்த்திக்கவேண்டியது என்னவெனின், 'இக்குணங்கள் என்னை அணுகாமலிருக்கட்டும்' என்பதே. இந் நீதியைக் கைப்பற்றுவதிற் பொறுமையும் விடாமுயற்சியுமே எல்லாவற்றிற்கும் மூலகாரணமாகும். சோம்பறுற்றோர் தம்மைத் திருத்திக்கொள்ளப் பிரயாசப்பட மாட்டார். ஆனால் எல்லாரும் ஊக்கத்துடன் முயன்று முன்னேற்றமடைய வேண்டும்.

இதுபோலவே நீங்கள் (கடமையை) உணர்ந்து பின்வரும் வாக்கியங்களை சிந்திக்கவேண்டும். 'தேவர் பிரியன் இன்னின்ன விதம் கட்டளையிட்டிருக்கிறான். அவை நிறைவேற்ற வேண்டுவனவாம்.' நீர் இவ்வாணையை நிறை வேற்றுவீரேல் மிகுந்த பயனுண்டு ; புறக்கணித்தால் பெரிய அபாயமாம். தம் கடமையில் தவறுகிறவர்கள் சுவர்க்கத்தையும் இழந்து அரசனுடைய நன்மதிப்பையும் இழக்கின்றனர். எனது கட்டளைகளைச் சரியாகச் செய்கிறவன் சுவர்க்கத்தை அடைந்து எனக்கு செலுத்தக் கடவதான கடனையும் தீர்க்கின்றான். இந்தச் சாஸனம் கேட்போன் ஒருவனாயிருந்தபோதிலும், ஒவ்வொரு பூச நக்ஷத்திரத்தன்றும் வேறு புண்ணிய தினங்களிலும் உரக்கப் படிக்கவேண்டும். இவ்விதம் பிரவிர்த்தித்து நீங்கள் என் நோக்கங்களை நிறைவேற்ற முயலுங்கள். நகரத்தின் வியோஹாலகர்3 அகாரணமாய் நகர ஜனங்களைச் சிறைசெய்தல், காரணமின்றி வருத்துதல் போன்ற வழக்கங்களைத் தவிர்ப்பதற்காக இந்தச் சாவனம் வரையப்பட்டிருக்கிறது.

இதற்காகவே தர்மத்தை அனுசரித்து நான் ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை அனுஸம் யானம் என்ற ஏற்பாடு செய்திருக்கிறேன் ; அதற்காகத் தெரிந்தெடுக்கப்படும் மகாமாத்திரர் கொடுமையில்லாதவராயும் அன்புடையோராயும் கொல்லா விரதத்தை அனுஷ்டிக்கின்றவராயும் இருத்தல் வேண்டும். அவர்கள், என் நோக்கத்தையறிந்து அதன்படி வேலைபார்ப்பவராயிருத்தல் வேண்டும். உஜ்ஜயினியிலுள்ள இளவரசனும் இவ்விதமே மூன்று வருஷத்துக்கு ஒரு முறை அதிகாரிகளை அனுப்பவேண்டும். இதுபோலவே தக்கசிலாவி லுள்ளவர்களும் மகாமாத்திரரைக் கொண்டு. அனுஸம்யானம் செய்யச் சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் தமக்கு எப்பொழுதும் சொந்தமாகவுள்ள அலுவல்களை கைவிடாது, அரசன் கட்டளைப் படி இவ்வேலையையும் செய்து வரவேண்டும்.

31 வாக்கியங்கள், இங்கு அதிகமாக தன்மையும் படர்க்கையும் முன்னிலையும் மாறி மாறி வந்து கருத்தை மறைக்கின்றன.

1. இந்த நீதி மிக அழகாக அமைந்திருக்கிறது. 'எல்லோரும் எனது மக்கள், நான் என் குடிகளை என் குழந்தைகளைப் போலவே கருதுகிறேன்' என்ற நீதி.

2. பரிக்லேசம். குற்றவாளியைச் சோதனை செய்வதற்காக ஏற்படும் தண்டனைகள் என்ற கருத்தில் இச்சொல் அர்த்த சாஸ்திரத்தில் வருகின்றது. இங்கு 'துன்பம்' என்று பொதுவாக மொழிபெயர்த்திருக்கிறோம்.

3 வியோஹாலகர். வியவகாரங்கள் அல்லது வழக்குகளை விசாரணை செய்யும் அதிகாரிகள்.

கடைசிப் பாராவிலுள்ள வாக்கியங்கள் பிரத்தியேகமான ஒரு சாஸனம் போல் தோற்றுகின்றன. அவற்றின் உத்தேசம் அனுஸம்யானம் எங்கும் நடைபெற வேண்டுமென்பது. இச்சொல்லின் கருத்தைப்பற்றி அவதாரிகையில் குறிப்பிட்டிருக்கிறோம்.

2. ' அந்தமனிதர்' பால் அதிகாரிகளுடைய கடமைகள்

தேவர் பிரியன் இவ்விதம் சொல்லுகிறான் : ஸமாபா நகரத்திலுள்ள மகாமாத்திரருக்குப் பின்வரும் அரசனுடைய நிருப வசனங்களைக் கூறுவோம். எனது நோக்கம் எதுவாயினும் அதை மனமார ஒப்புக்கொண்டு அதன்படி உடனே அனுஷ்டிக்க வேண்டுமென்பது என் விருப்பம். உங்களுக்கு அனுப்பப்படும் கட்டளைகளே அதற்கு முக்கியமான வழி. எல்லா மனிதரும் எனது மக்கள் ; என் குழந்தை குட்டிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித நன்மைகளும் சுகமும் உண்டாகவேண்டுமென்று நான் பிரார்த்திப்பது போலவே எல்லா மனிதருக்கும் அவ்விதம் விரும்புகிறேன்.'

அடக்கப்படாத 'அந்தமனிதர். (எல்லைப் பிரதேசங்களில் வசித்துவரும் ஜாதியார்) விஷய மாய் அரசன் கட்டளை என்ன? அரசன் விருப்பம் இதுவே. எல்லைஜனங்களுக்கு என்னைப்பற்றிக் கொஞ்சமும் அச்சம் வேண்டாம்; அவர்கள் என்னை நம்ப வேண்டும்; நிச்சய மாய் அவர்களுக்கு என்னால் வியசன முண்டாகாது, சுகமே உண்டாகும். மேலும் அரசன் எதையும் கூடுமானவரையில் பொறுத்துக் கொள்ளும் சுபாவமுடையவன். என்பொருட்டாவது அவர்கள் தர்மத்தைப் பின்பற்றி இம்மையும் மறுமையும் அடைய வேண்டும்.

இதற்காகவே நான் உங்களுக்கு இக் கட்டளையிடுகிறேன். என் விருப்பத்தை உங்களுக்கு அறிவித்து எனது ஸ்திரமான தீர்மானத்தையும் மாறாத நிச்சயத்தையும் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் உங்கள் கடமைகளை நிறைவேற்றி 'அந்தமனிதர்' என்னை நம்பவும், 'அரசன் ஜனங்களுக்குத் தந்தை போன்றவன், தந்தை தம் மக்களுக்கு இரங்குவதுபோலவே அரசன் நமக்காக இரங்குபவன்,' என்ற உண்மையை உணரவுஞ் செய்ய வேண்டும். நான் உங்களுக்கு எனது ஸ்திரமான தீர்மானத்தையும் மாறாத நிச்சயத்தையும் அறிவித்து ஆயுக்தர் தமது வேலையில் விழிப்பாயிருக்கச் செய்கிறேன். இவ்விஷயத்தில் நீங்களே இம்மனிதர் என்னை நேசிக்கவும் அவருடைய இகபர க்ஷேமத்தை உறுதிசெய்யவும் கூடிய நிலைமையில் இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதால் நீங்களும் சுவர்க்கத்தை அடைவதோடுகூட எனக்குச் செலுத்தக் கடவ தான கடனையும் செலுத்துகின்றீர்கள். மகா மாத்திரர் இடைவிடாமல் எல்லைமனிதருடைய நன்மதிப்பை அடைய முயலவேண்டுமென்றும் அவர் தர்மத்தை வழிபடவேண்டுமென்றுமே இந்த லிகிதம் வரைந்திருக்கிறது. இச்சாஸனம் சாதுர்மாஸிய புண்ணிய காலங்களிற் படிக்கப் படவேண்டும்; பூச நக்ஷத்திரத்தன்றும் படிக்கப் படவேண்டும். இந்நாட்களுக்கிடையிலும், தகுந்த அவசரங்களிற் கேட்பவன் ஒருவனே யெனினும் இதைப் படிக்கவேண்டும். இவ்விதம் பிரவிர்த்தித்து எனது கட்டளையை நிறை வேற்றுங்கள்.

20 வாக்கியங்கள். தவுளிப் பிரதியில் முதல் வாக்கியம் தொஸாலியிலுள்ள ராஜகுமாரனைக் குறிப்பிடுகின்றது. இச்சாஸனத்திலும் தன்மையும் முன்னிலையும் படர்க்கையும் வாக்கியங்களில் மாறிமாறி வருகின்றமையால் பலவிடங்களில் பொருள் தெளிவாயில்லை.

1. சாதுர்மாஸியம் என்பது நான்கு மாதங்கள் கொண்ட ஒரு பருவகாலம். முற்காலங்களில் ஒரு வருஷம், குளிர், வேனில், மழை என மூன்று பருவகாலங்கள் அடங்கியதாகக் கருதப்பட்டு வந்தன. தை, வைகாசி, புரட்டாசி மாதங்களின் ஆரம்ப நாட்களே சாதுர்மாஸிய புண்ணிய காலங்கள். வருஷங்களின் கணக்கு சாந்திரமானமாயிருந்ததனால் மாதங்கள் அமாவாசையின் பின்னுள்ள பிரதமையிலிருந்து கணக்கிடப்பட்டன. ஒரு அமாவாசையிலிருந்து அடுத்த அமாவாசைவரையிலும் ஒரு மாதமாயிற்று. ஐந்தாம் ஸ்தம்ப சாஸனத்திலும் அசோகன் காலத்கில் சாதாரணமாய் எந்நாட்கள் புண்ணிய நாட்களென்று மதிக்கப்பட்டனவென்பதும் எவை நோன்பு நாட்களென்பதும் விளக்கப்பட்டிருக்கின்றன.