உள்ளடக்கத்துக்குச் செல்

அசோகனுடைய சாஸனங்கள்/ஸார்நாத் சாஸனங்கள்

விக்கிமூலம் இலிருந்து

VI ஸார்நாத் சாஸனம்

காசியின் அருகாமையிலுள்ள ஸார்நாத் முன் ஒரு பெரிய பௌத்தக்ஷேத்திரமாயிருந்தது. புத்தரின் தர்மப் பிரசாரம் ஆரம்பித்தது இவ்விடத்திலேயே. 1905-06ம் வருஷத்தில் இவ்விடத்திலுள்ள புராதன வஸ்துக்களைத் தேட ஆரம்பித்தபோது இங்கு பற்பல அபூர்வ வஸ்துக்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் மிகவும் அற்புதமானது ஸார்நாத் ஸ்தம்பம். இதன் மேல்புறம் இன்னும் இரத்தினம் இழைத்தாற்போல பளபளப்பாயிருக்கிறது, ஸ்தம்பம் முதலில் அசோகனுடைய தீர்த்த யாத்திரையின்போது ஸ்தாபிக்கப்பட்டதாயிருக்கலாம். இதன் சிகரத்தைப்பற்றி அவதாரிகையில் கூறியிருக்கிறோம். இந்த லிகிதம் மற்ற அசோக லிகிதங்களின் கருத்தை விளக்க நிரம்ப உபகாரமாயிருந்தது, ஸார்நாத் சாஸனத்தின் சில வாக்கியங்கள் 1904 க்கு முன்னேயே சாஸன பரிசோதனைக்காரர்களுக்குத் தெரியும். ஏனென்றால், ஸார்நாத் சாஸனத்தின் முதற்பாகம் மட்டும் பிரயாகை ஸ்தம்பத்தின் ஒர் மூலையிலும் ஸாஞ்சி ஸ்தம்பத்திலும் எழுதப்பட்டிருந்தன. ஆயினும், இந்த லிகிதங்களில் பல சிதைவுகளிருந்தமையினாலும் வேறு சிறு வித்தியாசங்கள் இருந்தமையினாலும், இவற்றின் கருத்து சரியாய் விளங்கவில்லை. ஸார்நாத் சாஸனம் கிடைத்தபின் மற்ற இரு லிகிதங்களும் இச்சாஸனத்தின் கட்டளையை விளம்பரஞ் செய்யவே என்பது விளங்கிற்று.

பாப்ரு சாஸனத்தைப்போல இந்த ஸார்நாத் சாஸனமும் அசோகன் சார்வபௌமனாக இருந்ததோடுகூட, பௌத்த ஸங்கத்தின் தலைவனாகவும் விளங்கினானென்று தெரிவிக்கின்றது, இந்தத் தலைமை ஸ்தானம் சட்டத் திட்டங்களின்றி ஆசரணையையும் வழக்கத்தையும் மட்டுமே அனுஸரித்ததாயிருந்திருக்கலாம். சாஸனத்தின் ஆரம்பத்தில் ஓர் வரி அழிந்திருக்கிறது, நஷ்டமான வரியை மற்றப் பாகத்தின் நோக்கத்திலிருந்து அனுமானித்து பூர்த்திசெய்திருக்கிறது.

ஸார்நாத் லிகிதம் ஒருவேளை அசோகன் கூட்டிய 'மூன்றாவது பௌத்தமத சபையை யொட்டிய தாயிருக்கலாமென்று நாம் ஊகிக்கிறோம். இச்சாஸனம் அந்த சபையின் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவருவதற்குள்ள கட்டளைபோலும். இச்சாஸனம் அரசனின் கடைசி வருஷங்கள் ஒன்றில், அதாவது சுமார் கி.மு. 240-ல் எழுதப்பட்டிருக்கலாம். மகாசபையும் அதே வருஷத்திலேயே நடந்திருக்கவேண்டும்.

சாஸனத்தில் உபோஸ தம் என்று கூறப்பட்டிருப்பது சுக்லபக்ஷத்துச் சதுர்த்தசியன்று அல்லது பௌர்ணமியன்று இரவு நடைபெற்று வந்த சடங்கு ஒன்றும். இந்த நாட்களில் பௌத்த பிக்ஷுக்கள் பகல் முழுதும் உபவாஸமாயிருந்து இரவில் தங்கள் விஹாரத்தில் அல்லது மற்றோரிடத்தில் ஒன்றுகூடி தந்தம் சரியையில் நேர்ந்த குற்றங் குறைவுகளைச் சொல்லிப் பிராயச்சித்தம் செய்து கொள்ளுவது வழக்கம். நாம் முன் கூறியுள்ள பாடி மோஹம் என்பது இச்சடங்கில் உபயோகிக்கப்படும் வாக்கியங்களே. - இச்சடங்கு மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டதென்று பௌத்தப் பிரபந்தத் திரட்டிலிருந்து நாம் அறிகிறோம். இல்லறத்தில் ஒழுகும் உபாஸகரும் இச்சடங்கின்போது வந்திருக்கவேண்டுமென்பது அசோகனுடைய விருப்பம் போலும்.

தேவர் பிரியன் (இங்ஙனம் கூறுகிறான். ......) பாட (லிபுரத்திலுள்ள மகாமாத்திரரும் மற்ற மாகாணங்களிலுள்ள மகாமாத்திரரும் இவ்விதம் ஆக்ஞாபிக்கப்படுகின்றனர்.)

ஒன்றாயுள்ள ஸங்கத்தில் பிளவுகளைச் செய்தல் கூடாது. ஏதாவது பிக்ஷு அல்லது பிக்ஷணி சங்கத்தைப் பிளவு செய்வாராயின் அவரை வெள்ளை வஸ்திரம் அணியச் செய்து மற்றவரோடு சேராமல் தனியாக வசிக்கச் செய்வோம். இக்கட்டளை பிக்ஷு சங்கங்களுக்கும் பிக்ஷணி சங்கங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்கிறேன்.

தேவர் பிரியன் இவ்விதம் கூறுகிறான். இந்த லிகிதத்தின் ஒரு நகல் நமது உபயோகத் துக்காக உம்முடைய கார்யாலயத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு நகல் உபாஸகருக்கு உபயோகமாகும் பொருட்டு அவர் (வீடுகளுக்கு) அருகில் எழுதவேண்டும். உபோஸத தினந்தோறும் (நோன்பு நாட்கள்தோறும்) எல்லா மகாமாத்திரரும் இந்நோன்பு நாட்களில் நடைபெறும் உபோலதச் சடங்கின்போது வந்திருந்து இவ்வாணையைக் கேட்டு உணர்ந்து, இதை மற்றோருக்கும் ஆக்ஞாபிக்க வேண்டும். உமது எல்லைக்குட்பட்ட எல்லா ஊர்களுக்கும் பிரதேசங்களுக்கும் நீர் இவ்வுத்தரவின்படி (ஆசாரவேறுபாடுடையோரை) நீக்குதல் வேண் டும். கோட்டை நகரங்களிலும் நாடுகளிலும் எங்கும் இதுபோலவே நீக்குதல் நடைபெற வேண்டும்.

முதலிரண்டு வாக்கியங்கள் மாய்ந்திருக்கின்றன. அவை . போக மீதியுள்ளவை 9. (1) ஸம்ஸலன கார்யாலயம். (2) விவாஸ், குற்றமுள்ள துறவிகளை நீக்குதல்.