அஞ்சியத்தை மகள் நாகையார்

விக்கிமூலம் இலிருந்து

அஞ்சியத்தை மகள் நாகையார்[தொகு]

அகநானூறு-352[தொகு]

குறிஞ்சித்திணை[தொகு]

(வரைந்தெய்திய பின்றை மணமனைக்கட் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
வரைவுமலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்).
முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடிமி ழருவிப் பாறை மருங்கின்
ஆடுமயில் முன்ன தாகக் கோடியர்
விழவுகொண் மூதூர் விறலி பின்றை (5)
முழவன் போல வகப்படத் தழீஇ
இன்றுணைப் பயிருங் குன்ற நாடன்
குடிநன் குடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியல னன்பின னெனநீ
வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் (10)
நல்லை காணிற் காதலந் தோழீ
கடும்பரிப் புரவி நெடுந்தே ரஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவற்
றொல்லிசை நிறீஇய வுரைசால் பாண்மகள்
எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் (15)
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினு மினியனா லெமக்கே.
பொருளுரை

1-7. முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரு பழம்-வளைதல்மிக்க பலாமரத்தின் குடம்போன்ற பெரிய பழத்தினை,

பல் கிளைத்தலைவன கல்லாக் கடுவன் - பல சுற்றத்திற்குத் தலைவனாகிய கல்லாத ஆண்குரங்கு,

பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்-மிக ஒலிக்கும் அருவியையுடைய கற்பாறையிடத்தே,

ஆடும் மயில் முன்னது ஆக-ஆடுகின்ற மயில் ஒன்று தனக்குமுன்னே நிற்க,

கோடியர் விழவுகொள் மூதூர் விறலி பின்றை- கூத்தர் விழாவினைக் கொண்டாடும் முதிய ஊரில் விறலியன் பின்பு நிற்கும்,

முழவன்போல அகப்படத் தழீஇ - முழவு இயம்புவோன் போலத் தன்னகத்தே பொருந்தத் தழுவிக்கொண்டு,

இன் துணை பயிரும் குன்ற நாடன்-இனிய துணையாய பெண் குரங்கினை அழைக்கும் மலைநாட்டையுடைய நம் தலைவன்,

8-10. குடி நன்கு உடையன்-உயர் குடிப்பிறப்பு உடையவன்,

கூடுநர் பிரியலன்-தன்னுடன் கூடுகின்றவர்களைப் பிரியான்,

நா கெடு மொழியலன்-நாவால் கெடுமொழிகளைக் கூறுவானல்லன்,

அன்பினன்-அன்பு உடையவன்,

என நீ வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் - என்று நீ அவன் சிறப்புகளைக் கூறிப் பொருத்தமுறக் கூட்டிவைத்தனை, அங்ஙனமே,

12-7. கடும்பரி புரவி நெடு தேர் அஞ்சி - கடிய வேகத்தினையுடைய குதிரைகள் பூண்ட நீண்ட தேரினையுடைய அதியமானஞ்சியின்,

தொல் இசை நிறீ இய உரைசால் பாண்மகன்-பழைய புகழை நிலைபெறச் செய்த புகழ்சான்ற பாண் மகனானவன்,

நல் இசை நிறுத்த நயவருபனுவல்-நல்ல இசைகளை வரையறை செய்த இனிமை மிக்க நூலின்,

எண்ணுமுறை நிறுத்த-எண்ணின் முறைப்படி இயற்றிய,

பண்ணினுள்ளும்-பண்ணைக் காட்டினும்,

புதுவது புனைந்த திறத்தினும் - அவன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும்,

வதுவை நாளினும் - வதுவைசெய்த நாளினும்,

எமக்கு இனியன்-நமக்கு இனியனாகவுள்ளான்.

(முடிபு) காதல் அம் தோழி! குன்றநாடன் குடிநன்கு உடையன், கூடுநர்ப் பிரியலன், கெடுநா மொழியலன், அன்பினன், என நீ வல்ல கூறிப் புணர்த்தோய், ஆகலின், நல்லை. அஞ்சியின் பாண்மகன் பண்ணினுள்ளும் திறத்தினும் வதுவை நாளினும் எமக்கு இனியன்.

(வி - ரை.) கடுவன் பலவின் பெரும் பழத்தை முழவன போலத் தழுவிக்கொண்டு துணையை அழைக்கும் குன்றம் என்க. ஆடுகின்ற


பார்க்க[தொகு]

சங்க இலக்கியம்ஆசிரியர் அகரவரிசை அடிப்படையில்.