அட்லாண்டிக் பெருங்கடல்/அமைப்பு
இருப்பிடம்
அட்லாண்டிக் பெருங்கடல், ஒரு பக்கம் ஐரோப்பா ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையேயும்; மற்றொரு பக்கம் அமெரிக்காவிற்கு இடையேயும் அமைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் இருந்து அண்டார்க்டிக் கடல்வரை பரவியுள்ளது.
பரப்பு
இது பசிபிக் பெருங்கடலில் பாதியளவு உள்ளது. இதன் பரப்பு 3½ கோடி சதுர மைல். இது Ѕ போன்ற வடிவமுள்ளது. இதன் ஆழம் 3 மைல்.
இதற்கு நீண்ட கடற்கரை உண்டு. இதன் நீளம் 55,000 மைல். இகன் கரைகள் நன்கு ஆராயப்பட்டவை; கலங்கரை விளக்கங்கள் நிரம்பப் பெற்றவை.
படிவுகள்
இதன் அடியில் சாம்பல் நிறமுள்ள படிவுகள் உள்ளன. சிவப்புக் களிமண்ணும் சில இடங்களில் காணப்படுகின்றது. குழைவான சேறும் உண்டு. தரை
இதிலுள்ள நீரை எல்லாம் நீக்க, அதன் தரை சீரற்று இருப்பது நன்கு தெரியும். அதில் ஆழமான பள்ளத்தாக்குகளும், குடைவுகளும் காணப்படும். மற்றும் மலைத்தொடர்கள், சமவெளி, மலைகள் ஆகியவையும் இதில் உண்டு.
மலைத்தொடர்
இதில் S போன்ற வடிவமுள்ள மலைத்தொடர் வடக்கிலிருந்து தெற்கே 8,000 மைல் வரை பரவி யுள்ளது. இது அட்லாண்டிக் தரையை இரு பள்ளத்தாக்குகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பள்ளத்தாக்கும் 500 மைல் அகலம் உள்ளது. கிழக்கிலுள்ள பள்ளத்தாக்கின் ஆழம் 14,000 - 15,000 அடி. மேற்கிலுள்ள பள்ளத்தாக்கின் ஆழம் 13,000 - 16,800 அடி.
சமவெளி
இதில் ஒரு சமவெளி உள்ளது. இதில் தந்திகள் போடப்பட்டுள்ளன. ஆகவே, இச்சமவெளிக்கு தொலை வரைச் சமவெளி (Telegraphic plateau ) என்று பெயர். இது நியூபவுண்ட்லாந்திலிருந்து ஹெப்ரிடிஸ் தீவுகள் வரை விரிந்துள்ளது. தந்திகள் ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் இணைக்கின்றன.
குடைவு
1952-இல் அமெரிக்க அறிவியலார் இதன் தரையில் 300 அடி ஆழமும் 800 மைல் நீளமும் உள்ள குடைவு ஒன்றைக் கண்டுபிடித்தனர். தீவுகள்
இதன் இரு பக்கங்களிலும் தீவுகள் நிறைய உள்ளன. குறிப்பாக, அவை மேற்கே அதிகம். பவழத் தீவுகளும் உண்டு.
வெப்ப நிலை
நில நடுக்கோடு இதை வட, தென் அட்லாண்டிக் என இரு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக், வட அட்லாண்டிக்கைவிடக் குளிர்ந்தது.
கடலின் அடியில் வெப்பநிலை உறைநிலையை நெருங்கும். வெப்பப் பகுதிகளில் மேற்பரப்பு வெப்பநிலை 80°F. குளிர்ப் பகுதிகளில் வெப்பநிலை 28°F.
உப்பு
இதன் நீர் உப்பு மிகுந்தது. வாணிபக் காற்றுள்ள பகுதிகளில் உப்பு அதிகம். நடுக் கோட்டுப் பகுதிகளில் உப்பு குறைவு. மேற்பரப்பிற்குக் கீழ் உப்புத் தன்மை அதிகரிக்கிறது. உப்பின் அளவு 3-4 பங்கு வரை உள்ளது. இதன் நீரின் ஒப்படர்த்தி 1:02.
ஆறுகள்
பெரும் ஆறுகள் இதில் கலக்கின்றன. மற்றப் பெருங்கடல்களைக் காட்டிலும் இதில் ஆற்று நீர் அதிகம் கலக்கிறது.
இது பழைய உலகத்தையும் கிழக்குக் கண்டம்) புதிய உலகத்தையும் மேற்குக் கண்டம்) இணைக்கிறது. உலகின் இரு அரைப் பகுதிகளிலும் உள்ள எல்லாப் பெரும் பள்ளத்தாக்குகளும் இப்பெருங் கடல் நோக்கிச் சாய்ந்துள்ளன.
குடாக்கள்
இதற்குப் பெரிய விரிகுடாக்களும் வளைகுடாக்களும் உண்டு. மற்றும், உள்நாட்டுக் கடல்களும் நீரோட்டங்களும் உண்டு. உலகம் முழுதிற்கும் இது மையத் தரைக் கடலாக உள்ளது.
இதன் ஆற்று வடிநிலம் (river basin) உலகிலேயே மிகப் பெரியது. இதன் நீரோட்டங்களும் மற்ற எந்தக் கடலின் நீரோட்டங்களைக் காட்டிலும் நன்கு அறியப்பட்டுள்ளன.
நீரோட்டங்கள்
வட அட்லாண்டிக்கில் முக்கிய நீரோட்டங்கள் உள்ளன. அவையாவன : நடுக்கோட்டு நீரோட்டம் கல்ப் நீரோட்டம், வட ஆப்பிரிக்க நீரோட்டம். இம்மூன்றும் நீர்ச் சுழி போல் பெரிய சுழல் இயக்கத்தை உண்டாக்குகின்றன. இதற்கு நடுவில் சார்கோசா கடல் உள்ளது.
கல்ப் நீரோட்டம் வெப்ப நீர்களை வடக்கேயும் கிழக்கேயும் இழுத்துச் சென்று, வடமேற்கு ஐரோப்பாவைக் கதகதப்பாக்குகிறது.
தென் அட்லாண்டிக்கில் தென் நடுக்கோட்டு நீரோட்டம், பிரேசில் நீரோட்டம், தென் இணைப்பு நீரோட்டம், தென் ஆப்பிரிக்க நீரோட்டம் ஆகியவை உள்ளன. இந்நான்கும் சுழல் இயக்கத்தை உடையவை. இதற்கு நடுவில் சிறிய சார்கோசா கடல் உள்ளது.
தவிர, லாப்ரடார் நீரோட்டம் ஆர்க்டிக் கடலில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கிழக்குக் கனடா, புதிய இங்கிலாந்து ஆகிய நாடுகளைக் குளிர வைக்கிறது. இது இடர்மிகு மூடுபனிகளையும், பனிப்பாறைகளையும் அட்லாண்டிக்கின் போக்கு வரவு வழிகளில் கொண்டு வருகிறது.
வாணிபக் காற்றுகள்
இவை கடல் நீரோட்டங்களின் போக்கை உறுதி செய்கின்றன. வட, தென் அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் அழுத்தம் அதிகமுள்ளது. இவை இப்பகுதியில் உண்டாகின்றன.
தென்கிழக்கு வடகிழக்கு வாணிபக் காற்றுகள் வெப்ப நடுக்கோட்டு நீரோட்டத்தை உண்டாக்குகின்றன. இந்த ஓட்டம் தெற்கே பிரேசில் நீரோட்டமாக மாறுகிறது; வடக்கே கல்ப் நீரோட்டமாக உருவாகிறது. கல்ப் நீரோட்டம் வடமேற்கு ஐரோப்பாவின் தட்பவெப்ப நிலையை உருவாக்குவதில் செல்வாக்குப் பெறுகின்றது.
கனிவளம்
இதில் மக்னீசியம் உப்புக்கள், நிலக்கரி, எண்ணெய் முதலியவை கிடைக்கின்றன.
உயிர்கள்
இதில் விலங்குகளும், பயிர்களும் உள்ளன. மீன்கள் (காட், ஹெரிங்), முத்துக்கள், சிப்பிகள், நண்டுகள், கடற்பஞ்சு முதலிய விலங்கினங்கள் இதில் வாழ்கின்றன. இதிலுள்ள பயிர் வகைகள் மருந்துகள் செய்யவும்; இரசாயனப் பொருள்கள், உரங்கள் ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகின்றன.
வாணிப வழி
நீர்வழி என்னும் வகையில் உலகின் சிறந்த வாணிப வழியாக அட்லாண்டிக் உள்ளது. பெருமளவுக்கு வாணிபம் இதன் வழியாகவே நடைபெறுகிறது. ஐம்பெருங்கடல்களிலும் வாணிப நோக்கில் இது மிகச் சிறந்தது. இதன் கரைகளில் வளமிக்க நாடுகள் உள்ளன.
பெயர்
மவுண்ட் அட்லாஸ் என்னும் மலை அல்லது அட்லாண்டிஸ் என்னும் தீவு ஆகிய இரண்டின் பெயர்களே இதன் பெயர் அமைவதற்குக் காரணமாயுள்ளன.
ஆய்வகம்
அட்லாண்டிக் பெருங்கடல் இராக்கெட்டு ஆய்வுகள் நடத்துவதற்கு ஆய்வுக் கூடமாக உள்ளது. ஆலன் ஷெப்பர்டு முதலிய அமெரிக்க வான் வெளி வீரர்கள் சென்ற வான் வெளிக் கப்பல்கள் இப்பெருங்கடலில்தான் இறங்கின.
.