உள்ளடக்கத்துக்குச் செல்

அட்லாண்டிக் பெருங்கடல்/வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

3. வரலாறு


பல நூற்றாண்டுகள் அட்லாண்டிக், அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து பிரித்து வைத்தது. அட்லாண்டிக் உலகின் கடைக் கோடி என்றும் கருதப்பட்டது.

அட்லாண்டிக் கடலை முதன் முதலில் கடந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பசே ஆவார். இவர் தம் தீரமிகு பயணத்தை 1492 இல் மேற்கொண்டார். இவர் பயணம் அட்லாண்டிக்கைக் கடப்பதற்கும் அதில் வாணிபம் தொடங்குவதற்கும் வழிவகை செய்தது.

இன்று அட்லாண்டிக்கில் சிறிய கப்பல்களிலிருந்து பெரிய கப்பல்கள் வரை சென்ற வண்ணம் உள்ளன. அது உலகின் சிறந்த வாணிப வழியாகத் திகழ்கின்றது. பெரிய வான் ஊர்திகளும் அதைக் கடந்த வண்ணம் உள்ளன. செய்திப் போக்குவரத்தும் அதன் வழியாக வானொலி, கடல் தந்திகள் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகின்றது.

கப்பல்

கப்பல்களைப் பொறுத்த வரை கொலம்பஸ் சென்ற சாதாரண கப்பலே முதன் முதலாக அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது. இவர் 1492 இல் 70 நாட்கள் பயணம் செய்து கெளனாகனி என்னுமிடத்தை அடைந்தார். நீராவிப்படகு முதன் முதலாக 1838 இல் 19 நாட்களில் அட்லாண்டிக்கைக் கடந்தது.

1938 இல் குயின் மேரி என்னுங்கப்பல் அட்லாண்டிக்கை விரைவாகக் கடந்தது. அவ்வாறு அது கடப்பதற்கு 3 நாட்கள் ஆயிற்று. இதற்குப் பின் பல கப்பல்கள் விரைவாகக் கடந்தன. இன்று வாணிபக் கப்பல்களும் மற்றக் கப்பல்களும் அதைக் கடந்த வண்ணம் உள்ளன.

வான் ஊர்தி

முதல் உலகப் போருக்குப் பின் வான் ஊர்திகள் மூலம் அட்லாண்டிக்கைக் கடக்க, பல முயற்சிகள் செய்யப்பட்டன. அவற்றில் சில பயணங்கள் வெற்றியுடன் நடைபெற்றன. பல பயணங்கள் தோல்வியுற்று, விமானிகளும் இறக்க நேர்ந்தது.

அட்லாண்டிக்கைக் கடக்கும் முதல் பயணம் அமெரிக்கக் கடற்படை விமானம் மூலம் 1919 இல் நடைபெற்றது. விமானம் நியூபவுண்ட்லாந்தை விட்டுக் கிளம்பி, பிளைமவுத்தை அடைந்தது. அசோர்ஸ் என்னுமிடத்தில் இறங்கி எண்ணெய் நிரப்பிக்கொண்டது. பயணத்திற்கு 12 நாட்கள் ஆயிற்று.

இதற்கிடையில் டெய்லி மெயில் என்னும் இதழ் 10,000 பவுன் பெறுமானமுள்ள பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தியது. அட்லாண்டிக்கைக் கடக்கும் பயணத்தை ஊக்கவே இத்திட்டம் உருவாயிற்று. இத்திட்டத்தின் பரிசைப் பெற ஹேரி காக்கர், மெக்கன்சி கிரீவ் ஆகிய இரு விமானிகள் இறங்காமல் அட்லாண்டிக்கைக் கடக்க முயன்றனர்; முடியவில்லை. குளிர் நீர்த் தொல்லையினால் விமானம் அயர்லாந்திற்கு 100 மைல்களுக்கு அப்பால் இறங்க நேர்ந்தது. திட்டமிட்டபடி இறங்காமல், அவர்கள் பறந்து சென்று அட்லாண்டிக்கைக் கடக்க முடியவில்லை. இருவரும் விமானப் படைப் பதக்கத்தைப் பெற்றனர்.

கேப்டன் ஜான் ஆல்காக், லெப்டினண்ட் ஆர்தர் ஒயிட் பிரவுன் ஆகிய இருவரும் விமானத்தில், இறங்காமல் அட்லாண்டிக்கைக் கடந்தனர். பயணத்திற்கு 15 மணி ஆயிற்று; கடந்த தொலைவு 1,890 மைல். இது ஓர் உலகக் குறிப்பே. இருவருக்கும் வீரர் பட்டம் அளிக்கப் பட்டது.

1919 இல் முதல் பிரிட்டிஷ் வானக் கப்பல் 30 பேரை ஏற்றிக் கொண்டு அட்லாண்டிக்கைக் கடந்தது; நியூயார்க்கை அடைந்தது. பயணத்திற்கு 5 நாட்கள் ஆயிற்று. செல்லும் பொழுது 3,600 மைல்களை ஒரு மணிக்கு 33 மைல் விதத்தில் பறந்து சென்றது. திரும்பும் பொழுது 3,800 மைல்களை ஒரு மணிக்கு 50 மைல் வீதம் கடந்து வந்தது.

1924 இல் இரு அமெரிக்க விமானங்கள் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து வழியாக இங்கிலாந்திலிருந்து கனடாவிற்குப் பறந்து சென்றன. இதைத் தொடர்ந்து ஜெர்மன் விமானம் ஒன்றும் அட்லாண்டிக் வழியாகப் பறந்து சென்றது.

நியூயார்க்கிலிருந்து பாரிசுக்கு விமானம் இறங்காமல் பறந்து செல்வதை ஊக்குவிக்க 5,000 பவுன் பரிசுத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கேற்ப 1927 இல் விமானம் ஒன்றில், கேப்டன் லிண்ட்பர்க் என்பார் 33½ மணி நேரத்தில் பாரிசுக்குப் பறந்து சென்றார். 1930 இல் பாரிசிலிருந்து நியூயார்க்கிற்கு மேஜர் கோஸ்டஸ் என்பவரும் லெப்டிணண்ட் பெல்லோனட் என்பவரும் பறந்து சென்றனர்.

1927 ஆம் ஆண்டிலிருந்து சரளமாக விமானங்கள் அட்லாண்டிக்கைக் கடக்கத் தொடங்கின. பல நாடுகளும் இதில் கலந்து கொண்டன.

1928 இல் முதல் கிழக்கு மேற்கு விமானப் பயணம் இனிது நடைபெற்றது. 1932 இல் அமீலியா ஏர்கர்ட் என்னும் முதல் பெண்மணி அட்லாண்டைக் கடந்து சென்றார். பயணத்திற்கு 13½ மணி நேரம் ஆயிற்று.

1937 இல் ஆய்வுநிலையில் ஆங்கில - அமெரிக்கப் போக்குவரத்துப் பயணங்கள் தொடங்கின, வானப் போக்குவரத்தும் முறையாக வளரலாயிற்று. நில நீர் விமானத் தளங்கள் கட்டப்பட்டன. வானிலை நிலையங்களும் அமைக்கப்பட்டன. விமானங்கள் கப்பல் போக்குவரத்துக்கும் உதவலாயின. போர்க் காலத்திலும் விமானங்கள் பறக்கலாயின.

1939 இல் பயண விமானம் ஒன்று அட்லாண்டிக்கைக் கடந்து சென்றது. இதில் விமானக்  குழுவினர் 11 பேரும், பயணிகள் 10 பேரும் இருந்தனர். பயணத் தொலைவு 2,448 மைல். பயண நேரம் 17மணி அளவை செய்ய, பயணம் மேற்கொள்ளப்பட்டது.

1945 இல் பறக்கும் விரைவும் அதிகமாயிற்று. உளவு பார்க்கும் விமானம் ஒன்று 1 மணிக்கு 330 மைல் விரைவில் 2,300 மைல்களைக் கடந்தது. பயணத்திற்கு 7 மணி ஆயிற்று. இன்று பல விமானங்கள் அட்லாண்டிக்கைக் கடந்த வண்ணம் உள்ளன. ஆக, கப்பல், விமானம் ஆகிய இரு வகைக் கலங்களும் அட்லாண்டிக்கைக் கடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அஞ்சல் விமானங்களும் பயணி விமானங்களும், அட்லாண்டிக்கைக் கடந்து சென்ற வண்ணம் உள்ளன.

.