உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணலாரும் அறிவியலும்/3

விக்கிமூலம் இலிருந்து

அன்றைய கிரேக்க சிந்தனை வளம்

அக்காலத்தில் கிரேக்க நாடு தத்துவக் களஞ்சியமாகத் திகழ்ந்து வந்தது. புதிய புதிய சிந்தனைகள், கோட்பாடுகள் சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களால் உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியிலே உலவவிடப்பட்டிருந்தன.

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சாக்ரட்டீஸ் ‘தர்கா’

நான் அண்மையில் கிரேக்க நாடு சென்றிருந்தபோது அதன் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இச்சமயத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏதென்ஸின் மையப் பகுதியில் அமைந்துள்ள குன்றின் மேல் சிதிலமாகிக் கிடக்கும் ‘அக்ரப்பொலிஸ்’ எனும் இடத்தில் பழம்பெரும் கிரேக்கக் கோயிலோடு கூடிய இடிபாடுகளைக் கொண்ட நினைவுச் சின்னங்களைக் கண்டு களித்தேன். அப்போது என்னை அங்கே அழைத்துச் சென்ற கிரேக்க நண்பரைப் பார்த்து, “சாக்ரட்டீசைச் சிறை வைத்திருந்த இடம் எங்கே உள்ளது? அதைப் போய் பார்க்க முடியுமா?” எனக் கேட்டு அங்கே செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்தை வெளிப்படுத்தினேன். அதைக்கேட்ட அவர் மலர்ந்த முகத்துடன் “சாக்ரட்டீஸ் சிறை வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை மட்டுமல்ல; அவரது ‘கப்ர்’ மீது அமைக்கப்பட்டுள்ள ‘தர்கா’வுக்குச் சென்று இஸ்லாமிய முறைப்படி நீங்கள் “ஜியாரத்” தும் செய்துவரலாம்,” எனக் கூறிச் சிரித்தார். இதைக் கேட்டபோது எனக்கேற்பட்ட ஆச்சரியத்தைவிட குழப்பமே அதிகமாக இருந்தது.

“சாக்ரட்டீசுக்குத் ‘தர்கா’வா? இஸ்லாமிய முறைப்படி ஜியாரத்தா?” என வியப்பு மேலிட்ட வனாகக் கேட்டுஎன் ஐய உணர்வை வெளிப்படுத்தினேன் இதைக் குறிப்பாக உணர்ந்த நண்பர் என் சந்தேகத்தைத் தெளிவாக்க முனைந்தார்

‘கிரேக்க நாடு முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் நீண்டகாலம் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். இஸ்லாமியக் கோட்பாட்டின்படி மக்களை நல்வழிப்படுத்த இறை தூதர்களாகிய நபிமார்களை உலகெங்கும் இறைவன் அனுப்பியுள்ளான். அவர்கள் எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் எல்லா இனத்திலும் தோன்றி மக்களுக்கு இறைச்செய்தியை உணர்த்தி நல்வாழிகாட்டிச் சென்றுள்ளார்கள். அவர்களில் சிலர் ஒரு இன மக்களை வழி நடத்தினார்கள். இன்னும் சில இறைதூதர்கள் ஒரு மொழி பேசும் மக்களின் உயர்வுக்காக கடைத்தேற்றத்துக்காக உழைத்துள்ளார்கள். இன்னும் சில நபிமார்கள் ஒரு நாட்டுமக்களையே சிந்திக்கத் தூண்டி, செயலூக்கம் பெறச்செய்து உய்தி பெற நெறி வகுத்துச் சென்றுள்ளனர். இத்தலைவர்களில் சிந்திக்கத் தூண்டி, தக்க காரண காரியங்களோடு செயல்படத் தூண்டிய சாக்ரட்டீஸும் அவரது மாணவர் பிளேட்டோவும் கிரேக்க நாடு பெற்ற இறைதூதர்களாக இருக்கலாம் என்ற உணர்வில் அவர்கள் சமாதியை நினைவுச் சின்னமாக்கியுள்ளனர் கிரேக்கத்தை ஆண்ட அன்றைய முஸ்லிம் மன்னர்கள். ஏனெனில், இவர்கள் போதித்த போதனைகள். தூண்டிய சிந்தனைகள் அனைத்துமே இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தனவாகும் எனவே, அவர்ளை ஏதென்ஸின் வட்டார இறை தூதர்களாக கருதி, அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இத்தகயை தர்காவாக நினைவிட மாக ஆக்கியுள்ளனர்’ என ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தியபோது நான் பேருவகையுற்றேன். அவர்கள் நினைவிடமான தர்காவுக்குச் சென்று பார்த்து வந்தேன். சாக்ரட்டீஸ், பிளேட்டோவுக்குப் பின் அவர் தம் வழி முறையினரான அரிஸ்டாட்டிலின் வளமான அறிவியல் கருத்துக்களும் சிந்தனை உணர்வுகளும் பிற்காலத்தில் முஸ்லிம்களின் அறிவுத் தேடலுக்கு ஆதாரமாயமைந்தன.

அறிவுத் தேடலில் துடிப்பு

அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிப் பெறவேண்டும் என்ற அண்ணலாரின் அறிவுரையால் தூண்டப்பட்ட அன்றைய முஸ்லிம் ஆர்வலர்கள் அறிவை — புதிய புதிய செய்திகளைத் தேடி எங்கும் செல்லலாயினர். அறிவு வேட்கைமிக்க இவர்கட்கு புதிய கருத்துக்கள் சிந்தனைகள் எழுத்துருவில், நூல் வடிவில் எவையெல்லாம் கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் பெற்று, படித்து உணர்ந்து, சிந்தித்து, அதன் மூலம் புதிய சிந்தனைகளை உருவாக்கிப் பரவச் செய்ய அன்றைய முஸ்லிம்கள் முற்பட்டனர், இதற்காக சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவச் சிந்தனைகளை யெல்லாம் கிரேக்கத்திலிருந்து அரபு மொழியில் பெயர்க்க முற்பட்டனர். அவற்றையெல்லாம் அறிந்தபோது. அவை வெறும் தத்துவங்களாக மட்டும் இருக்கவில்லை கணிதம் முதல் வானவியல் ஈராக மனிதகுல முன்னேற்றத்துக்குத் துணைபுரிய வல்ல துறைகள் அத்தனையும் பற்றிய கருவைக் கொண்ட சிந்தனைக் களஞ்சியங்களாக அமைந்திருந்தன.

அறிவியல் சிந்தனைகளுக்கு கொள்கைவடிவம் தந்த கிரேக்கம்

இஸ்லாம் எழு முன் எகிப்து, பாபிலோன் பகுதிகளில் நாகரிக வளர்ச்சியின் பயனாகக் கணிதம், வானியல், மருத்துவம் போன்ற அறிவியல் துறைகள் பலவும் சூழ் (கரு) கொண்டிருந்தன என்பது அனைவரும் அறிந்த ஒப்ப முடிந்த உண்மையாகும். அவற்றைப் பண்டைய கிரேக்கப்பொற்காலத்தைச் சேர்ந்த ஆற்றல்மிகு சிந்தனையாளர்களாக முகிழ்ந்தெழுந்த பிளட்டோ , அரிஸ்டாட்டில், பித்தகோரஸ் போன்றோர் இல்வறிவியல் சிந்தனைகளுக்குக் கொள்கை வடிவம் வழங்கினர். பிற்காலத்தில் கிரேக்க மையமாகவே மலர்ந்து அறிவுமணம் வீசிய அலெக்ஸாண்டிரியாவிலிருந்த யூக்ளிட், தாலமி போன்றோர் கிரேக்க அறிவியல் சிந்தனைகளுக்கு மேலும் வளமூட்டிச் செழுமைப்படுத்தினர். பின்னர், இதனுடன் பாரசீக, இந்திய அறிவியல் அம்சங்களும் நுணுக்கங்களும் கலக்கலாயின. அறிவுத் தேடலில் முனைப்புக் காட்டிய முஸ்லிம்களால் இவ்வறிவியல் கருத்துக்களும் கொள்கைக் கோட்பாடுகளும் அரபி மொழியில் பெயர்க்கப்பட்டு, இஸ்லாமிய அறிவியலாக செயல் வடிவம் பெற்றுச் சிறப்படையலாயின. அது வரையில் நத்தை வேகத்தில் நடைபோட்டு வந்த அறிவியல் துறை முஸ்லிம்களின் முனைப்பினால் துடிப்பு மிக்கக் காளையைப்போல் துள்ளுநடைபோட்டு விரைந்து வளரலாயிற்று.

செயல் வடிவிலா அறிவியல் சிந்தனை

கிரேக்க நாட்டுத் தத்துவச் சிந்தனைகளுடன் அறிவியல் சார்புடைய கருத்துக்கள் பலவும் நூல்களெங்கும் விரவிக் கிடந்த போதிலும் அவை அனைத்தும் வெறும் சொற்றொடர்களாக, கொள்கை, கோட்பாடுகளாகவே கருதப்பட்டு வந்தனவே தவிர, அவற்றிற்குச் செயல் வடிவம் தந்து நிறுவும் வழிமுறைகளைக் கொண்டதாக அமைந்திருக்கவில்லை.

யூக்ளிட் போன்ற கிரேக்கக் கணித மேதைகள் அறிவியலின் அடிப்படையாக அமையவல்ல கணிதவியலைப் பற்றிய அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளைக் கூறியிருந்த போதிலும், அவற்றைப் பல்வேறு வகைகளில் கணித்தறிந்து கணிதவியல் உண்மைகளைக் கண்டறியக்கூடிய சோதனை முறைகளை — ஆராய்ச்சி வழிகளை வகுத்துரைக்கவில்லை.

கணிதம் வளர்த்த அறிவியல் துறைகள்

கணிதவியல் அறிவியலின் அடிப்படைக் கூறு என்பதைக்கூற வேண்டியதில்லை கணிதவியல் கோட்பாடுகளை கிரேக்கக் கணிதவியல் நூல்களிலிருந்து மொழி பெயர்ப்பு மூலம் அரபு நாட்டு அறிஞர்கள் பெற்று ஆராய முற்பட்டனர். இதன் விளைவாக புதிய புதிய கணிதவியல் கோட்பாடுகள் உருவாகலாயின. இச் செயல்பூர்வ ஆராய்ச்சி மூலமாக புதிய புதிய கணிதவியல் நுட்பங்கள் அரபிகளால் கட்டறியப்பட்டன. இதன் மூலம் கணிதவியல் மட்டும் விரைந்து வளரவில்லை. கணிதவியலை ஆதாரமாகக் கொண்ட இயற்பியல் (Physics) வேகமாக வளர்ந்தது. வேதியியல் (Chemistry) துரித வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து உயிரியல் (Biology) போன்ற துறைகளும் வானவியல், கடலியல், கட்டடக் கலை போன்ற துறைகளெல்லாம் உன்னதமான வளர்ச்சிக்கு ஆட்படுத்திக் கொண்டன.

இவ்வாறு அண்ணலாரால் ஆர்வமூட்டப்பட்ட அறிவுத் தாகம் — புதிய புதிய சிந்தனைகள், கருத்துக்கள், கொள்கை, கோட்பாடுகள், புதியன புனையும் ஆய்வுகள் எங்கிருந்தாலும் அவற்றைப் பெற்றுவரப் பணித்த பான்மை அரபிகளை உலகெங்கும் சென்று புதியன அறிந்து வரச் செய்தது : ஆய்வுகளை மேற்கொள்ளப் பணித்தது. இதன் மூலம் முஸ்லிம்கள் தெளிந்த அறிவாற்றலும் ஆய்வுத்திறனும் ஒருசேரப் பெற்றதோடு அறிவியலை முனைப்புடன் வளர்த்து வளப்படுத்த அதன் வாயிலாகத் தாங்களும் வளம்பெறவழி ஏற்பட்டது.

அறிவியல் வரலாறு தரும் அரிய செய்தி

அண்ணலார் காலந்தொட்டு அரபு நாட்டில் கால்பதித்த அறிவியல் ஆய்வு முயற்சிகள் ஓராண்டு ஈராண்டுகள் அல்ல! எண்ணூறு ஆண்டுகள் இஸ்லாமியர் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அரசோச்சி வளர்ந்து உச்ச வளர்ச்சி பெற்றன. இஸ்லாமிய நாடுகளில்லிருந்து இந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் வீசிய அறிவாெளி உலகெலாம் பரவி, அறிவுச் சுடர் கொளுத்தி இன்றைய அறிவுலக வளர்ச்சியாக விஞ்ஞான விந்தைகளாகப் பரிமாணம் பெற்றன என்பதுதான் கடந்தகாலஅறிவியல் வரலாறு தரும் செய்தி. இதற்கான ஆழமானஅழுத்தமான அடித்தளத்தை அழகுற அமைத்த பெருமை,அறிவியல் ராஜபாட்டை உருவாக உந்து சக்தியாக விளங்கிய சிறப்பு அண்ணலார் அவர்களையும் திருமறையை யுமே சாரும்.

உலக அறிவியல் மொழி அரபி

உலகெங்கும் அறிவை — புதிய செய்திகளை கண்டுபிடிப்புகளை அறிந்துவரச் சென்ற முஸ்லிம்கள் தாங்கள்சென்ற நாடுகளில் புகழ் பெற்று விளங்கிய நூல்களையெல்லாம் தக்கவர்களைக் குழுவாகக் கொண்டு மொழிமாற்றம் செய்து அரபு மொழிக்கு இறக்குமதி செய் தனர். இம்மொழி பெயர்ப்பு அமைப்பு ‘பைத் அல்ஹிக்மா’ அதாவது ‘அறிவு இல்லம்’ என அழைக்கப்பட்டது.

இவ்வாறு கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்துபத்தாம் நூற்றாண்டு வரை (ஹிஜிரி முதல் மூன்று நூற்றாண்டுகள் ) உலக அறிவியல், தொழில் நுட்ப ஆய்வுச்செய்திகளில் பெரும்பாலானவற்றை அரபு மொழியில்கொண்டு வந்து சேர்த்தனர். அரபு மொழியில் இல்லாத அறிவுச் செல்வங்கள் உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லை என்ற நிலையை முனைந்து உருவாக்கினர். இதனால் இலக்கிய, இலக்கண வளம் செறிந்த அரபு மொழி ‘அறிவியல் மொழி’ எனும் மகுடத்தோடு விளங்கலாயிற்று. கி பி. பத்தாம் நூற்றாண்டு முதல் முஸ்லிம்கள் சொந்தவிஞ்ஞான வளர்ச்சியில் கருத்தூன்றலாயினர்.

மருத்துவ ஆய்வுக்கு அடிப்படை வகுத்த மொழிபெயர்ப்பாளர்

கிரேக்க விஞ்ஞான நூல்களின் பல அறிவியல் பிரிவுகளைப் ‘பைத் அல் ஹிக்மா’ குழுவினர் மொழி பெயர்த்தனர். அவர்களுள் கிரேக்க மொழியில் இருந்த அனைத்து மருத்துவ நூல்களையும் அரபி மொழியில் பெயர்த்தளித்த பெருமை ஹுனைன் இப்னு இஸ்ஹாக் அல் இபாதி (819 - 873) என்பவரையே சாரும். இவர் வெறும் மருத்துவராக — மொழி பெயர்ப்பாளராக மட்டும் இல்லாது ஆராய்ச்சி அணுகுமுறைகளை வகுத்த பெருமைக்குரியவருமாவார். இவர் வகுத்த ஆய்வு விதி அடிப்படையிலேயே மருத்துவ ஆராய்ச்சிகள் அன்று நடைபெற்று வந்தன எனலாம். பிற்காலத்தில் இதுவே ஒரு சில மாற்றங்களுடன் முழுமைப்படுத்தப்பட்டது.

ஆரோக்கியத்திற்கு ஆறு விதிகள்

இவரே ஒவ்வொருவரும் நோய் நொடி ஏதுமின்றி நல்ல உடல் நலத்தோடும் வளத்தோடும் வாழ ஆறு விதிகளைக் கடைப்பிடித்தொழுகுமாறு கூறினார். அவையாவன : சுத்தமான காற்று ; அளவோடு உண்ணலும் பருகலும்; உழைப்பும் அதற்கேற்ப ஓய்வும், தேவையற்ற கழிவை வெளியாக்கல்; உணர்ச்சி மாறுபாடுகள், செயற்பாடுகள் ஆகியவற்றில் கவனமுடன் ஒவ்வொருவரும் இருப்பதன் மூலம் நல்ல உடல் நலனைப் பேண முடியும் எனக் கோட்பாடுகளாக வகுத்துக் கூறினார். இந்த ஆறு அடிப்படைகளையும் பின்னர் ஒரு சில மாற்ற திருத்தங்களுடன் விரிவாக்கி இப்னு பத்லான் எனும் மருத்துவர் தரப்படுத்தம் செய்தார். இக்கோட்பாடுகள் இன்றும் நல்ல உடல் நலத்துக்குரியவைகளாக மருத்துவ உலகால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/3&oldid=1637058" இலிருந்து மீள்விக்கப்பட்டது