அண்ணலாரும் அறிவியலும்/9
முதல் மருத்துவப்பல்கலைக் கழகம்
அக்காலத்தில் மிகப் புகழ்பெற்ற மாபெரும் மருத்துவமனை ஒன்று பாக்தாத் நகரில் செயல்பட்டு வந்தது. ஒரு பெரும் மருத்துவமனைக்கு தேவையான, இருக்கவேண்டிய வசதிகள் அனைத்தையும் கொண்டிருந்தது. பல பெருங்கட்டிடங்கள் ஒன்றிணைந்திருந்தன. இம்மாபெரும் மருத்துவமனையில் பெரும் எண்ணிக்கையில் மருத்துவர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பணியாற்றினர். மருத்துவக்கருவிகள் அனைத்தும் அங்கே இருந்தன. மருத்துவக் கல்வி பெறும் மாணவர்களும் மாணவிகளும் நிறைந்திருந்தனர். இதையே இஸ்லாமிய உலகில் உருவாக்கப்பட்டிருந்த முதல் ‘மருத்துவப் பல்கலைக் கழகம்’ எனக்கூறலாம்.
இம் மருத்துவமனையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய திறனாளர்கள் பலரும் பணியாற்றினர்; கண் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கிய அபுல் கைர், அபூ கோலத் ஆகியோரும் கண் மருத்துவ நிபுணருமான அபூ நஸ்க், இப்னு அல் துகாலி என்பவரும் இம் மாபெரும் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர்களேயாவர். இந்த மருத்துவமனையின் உன் மாதச் சிறப்புகளையும் அங்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் கையாண்ட கருவிகளையும்,அங்கு மாணவர்கட்கும் போதிக்கப்பட்ட சிறந்த மருத்துவக் கல்விப் பயிற்சியையும், இம் மருத்துவமனையைச் சுற்றியிருந்த மருந்துக்கடைகளின் மாண்பையும், மருந்துகளின் பட்டியலையும், அங்கு நோயாளிகட்கு வழங்கப்பட்ட உணவு வகைகளையும் பற்றிய குறிப்புகளைக் கொண்ட பட்டியல் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அன்றே கலப்படத்தடைச் சட்டம் !
பல புதிய நோய்கள் தோன்றுவதற்குக் காரணமான கலப்படம் செய்வதைத் தடுக்க அக்கால அரசுகள் கடுமையாகச் சட்டமியற்றி இருந்தனர். கலப்படக்காரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கலப்படத்தைக் கண்டறிய தனிச் சோதனைச் சாலைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்ற தகவல் நம்மை வியக்கச் செய்கிறது.
மருத்துவமனையோடு இணைந்த முதல் மருத்துவக் கல்லூரி
மருத்துவத்துறையின் மாமேதைகளான முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள் தாங்கள் மேற்கொண்ட இடையறா ஆய்வு முயற்சியின் விளைவாக தங்கள் மருத்துவ அறிவியல் அறிவை நாள்தோறும் வளர்த்துக் கொள்வதில் பெரும் நாட்டமுடையவர்களாகவே திகழ்ந்தனர். எனினும்,தாங்கள் பெற்ற மருத்துவ அறிவியல் அறிவை மற்றவர்கட்குப் புகட்டுவதிலும் பேரார்வமுள்ளவர்களாக விளங்கினர், ஒவ்வொரு முஸ்லிம் மருத்துவ அறிஞரும் தனக்கென மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக மருத்துவமனை ஒவ்வொன்றுமே ஒரு மருத்துவக் கல்வி புகட்டும் கல்விக்கூடங்களையும் மருத்துவக் கல்லூரியையும் கொண்டதாகவே அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவக் கல்விக்கூடங்களிலும் பயிலும் மாணவர்கள் மருத்துவம் பற்றிய கோட்பாடுகளைக் கற்றறிவதுடன் கல்விக்கூடத்தோடு இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவம் செய்துவரும் நோயாளிகளை நேரடியாகச் சோதனை செய்து பார்ப்பதன் மூலம் நோய்க்கான காரணங்களை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் பயிற்சியும் பெற்றனர். அதன் மூலம் நிறைந்த பட்டறிவும் பெற முடிகிறது. இதனால், மருத்துவமனைகளோடு இணைந்த மருத்துவக் கல்விக்கூடங்கள் எல்லா வகையான வசதிகளையும் கொண்டு சிறந்து விளங்கின.
இன்றும் அதே முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அன்று மருத்துவக்கல்வி புகட்டப்பட்ட முறையிலேயே இன்றும் நவீன மருத்துவக் கல்வி புகட்டப்பட்டு வருகிறது என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.
அது மட்டுமல்ல. அன்று உயர்தரமான மருத்துவக்கல்விக் கற்பிக்கப்படுவதற்கு வாய்ப்பாக சிறந்த நூலகங்களைக் கொண்டதாக ஒவ்வொரு மருத்துவமனைக் கல்விக்கூடங்களும் விளங்கின, அந்நூலகங்களில் நூற்றுக்கணக்கான மருத்துவ நூல்களும் ஆய்வேடுகளும் மாணவர் உயர்தரக் கல்வி பெற உதவின.
மருத்துவச் செலவை ஏற்ற வக்ஃபு அற நிறுவனங்கள்
மருத்துவக் கல்விக்கூடங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ அறிஞர்கள். ஆய்வாளர்கள் விரிவுரையும் விளக்கவுரையும் ஆற்றுவதற்கு வழியாக சொற்பொழிவுக்கூடங்களையும் கொண்டிருந்தன. அத்துடன் மருத்துவக் கல்விக்கூடங்களுக்கு அருகிலேயே ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் பிறஅலுவலர்கட்கும் தனித்தனி குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான செலவுகளையும் பிற மருத்துவத்துறைக்கான உதவிகளையும் அக்கால இஸ்லாமிய அற நிறுவனமான வக்ஃப்' அமைப்புகள் அளித்து வந்தன.
மருந்தியல் துறையின் முனைப்பான வளர்ச்சி
மருத்துவத்துறையின் இன்றியமையா மற்றொரு துறையான மருந்துத் தயாரிப்புத் துறையிலும் முஸ்லிம்களே முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.
நோய் தீர்க்கும் மருந்து தயாரிப்புப் பணியை எல்லோரும் செய்துவிட முடியாது. மருத்துவத்தைப் பற்றியும் மருந்துப் பொருட்களைப் பற்றியும் தெளிவான அறிவைப்பெற்றிருக்க வேண்டும் அத்தகைய மருந்தியல் ஞானம் வாய்க்கப் பெற்றவர்கள் மட்டுமே மருந்து தயாரிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ‘அல் அத்தார்’ என அழைக்கப்பட்டனர். இவர்களே மருந்து மூலப்பொருட்களைக் கொண்ட மருந்துப் பொருள் கடைகளையும் நடத்தி வந்தனர். இது மிகக் கண்டிப்பான வழிமுறையாகவும் அன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
மருந்தாக்கமும் மருந்துகளும்
அன்றைய இஸ்லாமிய உலகில் மருத்துவத் துறைக்கு தேவையான மருந்து மூலப் பொருட்கள் ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டன.இம் மருந்து மூலப் பொருட்களைக் கொண்ட மருந்துக்கடைகள் பாக்தாது போன்ற இஸ்லாமிய உலகின் பெரும் நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் இருந்தன. இம்மருந்துக்கடைகளை தனிப்பட்டவர்கள் நடத்தியதால் அவர்கள் மருந்துகளைப் பற்றியும் அவற்றின் குணப்பண்புகளை பற்றியும் நன்கு அறிந்தவர்களாகவே இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் மருந்தாக்கல் பற்றி முறையான பயிற்சியும் அறிவும் வாய்க்கப்பெற்றவர்களாலேயே மருந்துக்கடைகள் நடத்தப்பட்டன அப்பாஸியக் கலீஃபாக்களின் காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே இந்நிலை நிலவியதாகத் தெரிகிறது.
கட்டிடக்கலை வளர்ப்பில் முஸ்லிம்களின் பொறியியல் திறன்
அறிவியலின் மற்றொரு பிரிவான பொறியியல் துறையின் பல்வேறு கூறுகள் முஸ்லிம் பொறியியல் வல்லுநர்களின் மிகு திறனால் புதிய பரிமாணம் பெற்றது. குறிப்பாக கட்டிடக்கலை இஸ்லாமிய மரபொழுங்கோடு கூடிய தனிப்பெரும் துறையாக முஸ்லிம் கட்டிடக்கலைஞர்களாலும் பொறியியல் வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்டு சீரோடு வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
அக்காலத்தில் இறைவணக்கத் தலங்களான மசூதிகள் ஆன்மீக உணாவுக்கு வளமூட்டும் வகையில் அழகிய வடிவமைப்பும் அதே சமயம் உள்ளத்து உணர்வுகளை பண்படுத்தும் பாங்கும் கொண்டதாக மசூதிக் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. மசூதியின் இடைவரி மேட்டுக்கவிகை மாடங்களும் முன்புற வில் வளைவு விதானங்களும் லாடவடிவ கமான்களும் புதிய பொறியியல் நுணுக்கங்களை அடியொற்றி அமைக்கப்பட்டன என்பதை இஸ்லாம் நன்கு பரவிய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பெரும் மசூதிகளின் கட்டுமானங்களிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது.
முஸ்லிம்களின் கட்டிடக் கலைக்கும் பொறியியல் திறமைக்கும் இன்றும் ஏற்ற சான்றுகளாக கார்டோலாவிலுள்ள பெரிய மசூதியும் இஸ்தான்புலில் உள்ள நீல மசூதி’(Blue Mosque) எனும் சுலைமான் மசூதியும் இந்தியாவில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும் செல்வில் நகர் அல் சாஸர் கட்டிடமும் புகழ்பெற்று விளங்குகின்றன. கார் டோபா பெரிய மசூதியில் 1293 தூண்கள் உள்ளன. கிரனாடாவிலுள்ள அல் ஹம்பரா அரண்மனை முஸ்லிம் கட்டிடக் கட்டுமான பொறியியல் திறமைக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகும்.
முஸ்லிம் கட்டிடக் கலைச்செல்வாக்கால் உருவான புதுப் பாணி
முஸ்லிம் கட்டிடக் கலை திறனும் கட்டுமானப்பொறியியல் திறனும் இஸ்லாமிய நாடுகளிலும் அன்றைய இஸ்லாமிய ஸ்பெயினிலும் மட்டும் அடங்கிவிடவில்லை. அதன் செல்வாக்கு முஸ்லிம்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பரவியது. அந்தந்தப் பகுதிக்குரிய மரபான கட்டிடக் கலையோடு கலந்து ஒரு புதுப் பாணிக் கட்டுமான முறையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியை இன்றும் ஊக்குவிக்கும் முறையில் சில திட்டங்களும் செயல்பாடுகளும் உலகளாவிய முறையில் அமைந்து வருகின்றன, அவற்றுள் ஒன்றே ஆகாகான் இஸ்லாமியக் கட்டிடக்கலை விருது உள் நாட்டுப் பண்பாட்டிற்கும் தட்பவெப்பநிலைக்கும் இசைவாகவும் தேவைக்கு ஏற்புடையதாகவும் இஸ்லாமியத் தத்துவங்களுக்கு இணக்கமாகவும் உருவாக்கப்படும் கட்டிட கட்டுமானத் திறனுக்கு விருதும் பரிசும் வழங்க 1976இல் அறிவிக்கப்பட்டதே இப்பரிசுத் திட்டம் இந்நோக்கத்தை உரிய முறையில் நிறைவேற்றவும் முஸ்லிம்களின் கட்டிட பொறியியல் நுண் திறமையைப் போற்றிக்காத்து வளர்க்கவும் பன்னாட்டு அளவில் இஸ்லாமியக் கட்டிடக் கலைப் பொறியியல் திறன் தொடர்பான கருத்தரங்குகளும் உரைக் கோலைகளும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.
அன்றைய கட்டுமான பொறியியல் திறனும் இன்றைய கட்டுமானப் பொருட்களும்
இன்று பழைய பொறியியல் நுணுக்க அடிப்படையில் புதிய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன.இதற்குச் சான்றாக துருக்கிய கட்டிட வல்லுநர் வேதாத தலோக்கே என்பவர் இஸ்லாமாபாதில் உருவாக்கி வரும் தேசிய பெரு மசூதியைக் கூறலாம். இன்றைய நவீனப் பொருட்களைக் கொண்டு, பழைய கட்டுமான பொறியியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இதே போன்று புதிய ஜெத்தா விமான நிலையம் ஹஜ் பயணப்பகுதி கூடார வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும்போது அராபியர்கள் வழக்கமாக் பாலை வனத்தில் அமைக்கும் கூடாரங்களுக்குள் இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அண்மையில் புனித ஹஜ் பயணம் சென்றிருந்தபோது இதனை என்னால் நேரடியாக உணரமுடிந்தது. இக்கட்டுமானம் அமெரிக்காவின் புகழ் பெற்ற முஸ்லிம் கட்டுமான பொறியியல் வல்லுநரான பசுலுர்கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். தனித்தனிக் கூடாரங்கள் போல் தோற்றமளிக்கும் 210 கூடாரங்கள் ஒன்றிணைந்து அமைந்துள்ளன மரபொழுங்கோடு அமைந்த இதன் கூடாரக் கூரைகள் பெஃப்லான் வேதிப்பூச்சுக் கொண்ட ஃபைபர் கிளாஸ் ஃபைபரால் ஆனதாகும். இக்கட்டுமானம் பற்றி பசுலுர் கான் கூறுகிறார்:
“நான் 1986 ஆம் ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திருந்தேன். அரஃபாத் பெருவெளியில் கூடாரத்தில் தங்கியிருந்தபோது இந்த சூழ்நிலையை ஹஜ் கடமையாற்ற விமானம் மூலம் ஜெத்தா வரும் பயணிகளுக்கு வரும் போதே ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையின் விளைவாக உருவானதே இக்கூடார கட்டுமான வடிவமைப்பு.”
மேனாட்டுக் கட்டுமான பொறியியல் முறைகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே கையாள்வதைவிட அப்பகுதியின் சமூக அமைப்பின் தன்மையையும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையையும் கருத்திற்கொண்டு அப்பகுதியின் மரபொழுங்கு சிறிதும் மாறாமல் நவீன கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே சாலச் சிறந்தது என்ற உணர்வை இதன்மூலம் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார் இவ்வுணர்வே பண்டு தொட்டு இருந்து வரும் இஸ்லாமிய கட்டுமான பொறியியலின் அடிப்படை அம்சமாகும்.