அண்ணா சில நினைவுகள்/இடக்காகக் கேட்டால் மடக்குவார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இடக்காகக் கேட்டால் மடக்குவார்


1967 பொதுத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாய்த் தெரியத் தொடங்கும் நேரம். அண்ணா ஒரு சிறிய டிரான் சிஸ்டர் ரேடியோவை அருகில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே நாங்கள் சிறு கூட்டமாகத் தரையில் உட்கார்ந்து காதைத் தீட்டிய வண்ணம் காத்திருக்கிறோம். அப்போது யார்தான் எதிர் பார்த்தோம், காங்கிரஸ் கப்பல்,காகிதக் கப்பலாய் மூழ்கு மென்று; காங்கிரஸ் கோட்டை மணற்கோட்டையாய்ச் சரிந்து வீழுமென்று!

முதல் முடிவு, சென்னை பார்க்டவுனில் காங்கிரஸ் தோற்று, சுதந்திரக்கட்சி வேட்பாளர் டாக்டர் ஹண்டே வெற்றி என்பது. புன்னகை பூத்தார் அண்ணா. அடுத்த முடிவு வரும்போது நான் கீழே போயிருந்தேன். அண்ணா பெருங்கூச்சலிட்டு என்னை விளித்து, மாயூரம் கிட்டப்பாவின் முதல் தி.மு.க. வெற்றியை எடுத்துச் சொன்னார்கள். அப்போது மலரத் தொடங்கிய அண்ணாவின் முகம் செந்தாமரையாய் ஒளி வீசியது எனினும் தி.மு.க. வெற்றியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, அண்ணாமட்டும் மகிழ்வினைப் பெருக்காமல், ஒரளவு கவலை படர்ந்த முகத்தினராய்க் காணப்பட்டார்! எங்கள் குதூகலத்துக்கு எல்லையுண்டோ?

திடீரென்று, விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் வெற்றி என்று வானொலியின் சிறப்பு ஒலிபரப்பு வெளியிட்டதும், நாங்கள் எழுந்து நின்று குதிக்கத் தொடங்கி விட்டோம். “என்னய்யா இது! உண்மையைத் தான் சொல்றானா? அப்படின்னா காமராஜ் தோல்வியா? சேச்சே! இது நடக்கக்கூடாதே! அவரு தோற்கலாமா? நாம அவரைத் தோற்கடிப்பதா?” என விசனப்பட்டு எங்கள் ஆனந்தத்தைக் கருகச் செய்தார், அண்ணா.

காமராசரை எதிர்ப்பதே முதலில் அண்ணாவுக்கு விருப்பமில்லை. கலைஞரின் பிடிவாதம் வென்றது. பெ. சீனிவாசன் எம்.ஏ., 1965 இந்திப் போரின் ஒரு தளபதி என்பதால், அவரை நிற்க வைத்துக் காமராசரைத் தோற்கடிக்கலாம் என்பது கலைஞரின் நம்பிக்கை. அண்ணா பல்வேறு நிர்ப்பந்தங்களால் ஏற்க நேரிட்டதே ஒழிய, சீனிவாசன் என்னும் யாரோ ஒரு தி.மு.க. மாணவன், இமயம் போன்ற காமராசரை வெல்லமுடியும் என அவர் நம்பவில்லை. எனக்கு நன்கு நினைவிருக்கிறது; டிரைவ் இன் வுட்லண்ட்ஸ் ஒட்டலில், ஒரு நாள் மாலை, நடிகமணி டி. வி. நாராயணசாமி சூளுரைத்தார் என்னிடம் :- “நான் வேறு தொகுதிகளுக்குப் போகாமல் விருது நகரிலேயே தங்கி, வேலை செய்து, தம்பி சீனிவாசனுடைய வெற்றியுடன் திரும்பி வருகிறேனா இல்லையா பாருங்கள், கவிஞரே!” என்று.

“என்னண்ணா நீங்க! படுத்துகிட்டேஜெயிப் பேண்ணாரு: அவ்வளவு அலட்சியம் நம்மைப்பத்தி கட்டை விர லை வெட்டணும்னு சொன்னாரு முந்தி! அவர் தோத்ததுக்கு வருத்தப்படlங்களே? ஜெயிச்சது நம்ம ஆளுங்கறதே உங்களுக்கு மறந்துடுச்சா?” என்று துணிவுடன் கேட்டேன் அண்ணாவிடம்,

“அரசியலில் அவர் எதிரிங்கறதை நான் மறுக்கலேய்யா. ஆனா தமிழ்நாட்டுக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக் காருங்கறதை மக்கள் மறந்துட்டாங்களே. அவர் மட்டும் தோத்திருக்கக்கூடாது” என்றார் பெருந்தன்மையின் அருந் துணைவர். அத்துடன் நின்றாரா? நாடாளுமன்றத் தொகுதியில் சி. சுப்ரமணியம் தோல்வி எனத் தெரிந்ததும், மீண்டும் வருந்தினார். “அய்யோ! தமிழர் ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது போயிற்றே” என இரங்கினார்.

நாமே நினைத்துப் பாராத அளவு தி. மு. க. வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏதேது அண்ணாவின் மனப்பான்மையைப் பார்த்தால் முதல்வர் பக்தவத்சலம் கூட வெற்றிபெற வேண்டுமென விரும்புவாரோ, என எங்களுக்கு அய்யப்பாடு தோன்றிற்று. இல்லை! அப்போது மட்டும் அண்ணா வருத்தப்படவில்லை! அளகேசன் தோற்ற போதும் அவ்வாறே! சரி: ‘இப்போது தான் நமது அண்ணா’ என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம்.

ஒரு வழியாக எல்லா முடிவுகளும் தெரிந்துவிட்டன. சுதந்திரம் வாங்கித் தந்து, அதனால் ஆட்சி பீடமேறிய ஒரு கட்சியை, 20 ஆண்டுகள் ஆண்டது போதம், மக்கள் மாண்டது போதுமெனக் கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்ட இந்த ஏழைகள் தலைவன், எளிய எம் அண்ணனின் வன்மைதான் என்னே! காங்கிரஸ் 233 இடங்களிலும் (ஒன்று தவிர) போட்டியிட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது 49 தொகுதிகளில்! வலது சாரிப் பொதுவுடைமை வாதியினர் தனியே போட்டியிட்டு 33-ல் இரண்டே இடம் பெற்றனர்! தி. மு. க. ஆதரவுடன் சுதந்திரா 27-ல் 20. இடது சாரிப் பொதுவுடமைக் கட்சி 22-ல் 11, முஸ்லிம் லீக் 4-ல் 3, திராவிட முன்னேற்றக்கழகமோ தமிழகத்தின் 173 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, 138 வெற்றிக்கனிகளைக் கொய்தது! மாபெரும் சாதனை!!

நான் பார்த்ததேயில்லை அவ்வளவு பெரியதொரு (Pressmeet) பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தை. அனைத்து முடிவுகளும் வெளியானவுடன் அண்ணா வீட்டில் இடமே யில்லை. எல்லாம் செய்தியாளர்களே! எத்தனை. காமெராக்கள்! தொடுத்தனர் கேள்விக்கணைகளை. அனைத்துக்கும் அண்ணா விடுத்தனர் விடைகளைச் சற்றும் தயங்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி அமைக்கும் (சுதந்திராவும் இணைந்த கூட்டணி ஆட்சி நடக்கும். அனுபவசாலியான நம்மைத்தான் முதலமைச்சராக வீற்றிருக்குமாறு அண்ணா வேண்டுவார் என்று கனவு கண்டார் ராஜாஜி) என்ற திடமான முடிவு முதலில் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. பிறகு கோடைமழை போல் குளிர்விக்கும் செயல் திட்டங்கள் தெரிவித்தார். எல்லாம் முடிந்த தறுவாயில், திடீரென ஒரு செய்தியாளர் அண்ணாவை மடக்கிவிட்டதாக எண்ணி ஒரு கேள்வி அம்பை எய்தார். “இவ்வளவும் சொன்னிர்களே, எந்த Capacity யில் (தகுதியில்) ? நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அல்லவா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்! தி. மு. க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையே?” என்றார்.

“I am speaking to you in the capacity of the General Secretary of the D. M. K.” என்று சொன்னதும், அனைவரும் வியப்பினால் விரிந்த விழிகளுடன் வாயடைத்துப் போய் நின்றனர்; அதாவது தி.மு. க.கழகத் தின் பொதுச் செயலாளர் என்ற தகுதியினால்தான் இவ் வளவும் கூறினேன்-என்று கணமும் தயங்காமல் கூறி விட்டார் அண்ணா-எம் அண்ணா-அறிஞர் அண்ணா பேரறிஞர் அண்ணா!