அண்ணா சில நினைவுகள்/உயிர் பறிக்கும் துப்பாக்கி வேண்டாம்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
உயிர் பறிக்கும் துப்பாக்கி வேண்டாம்!

ன்று மாநிலங்களவை உறுப்பினராயிருக்கும் ஆலடி அருணா அவர்கள் எழுதிய “இந்தி ஏகாதிபத்தியம்” என்ற நூலும், வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் அ. இராமசாமி அவர்கள் எழுதிய “இரத்தத்தில் 50 நாட்கள்” என்ற நூலும், 1965-ஆம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் கலிங்கத்துப் பரணிகளாகும். உலக வரலாற்றிலேயே, மாணவர்கள் தாமே சினந்தெழுந்து, பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை அனைத்து ஊர்களிலும் கிளர்ச்சிகள் செய்ததும், தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் ரயில்களே ஓடாமல் செய்ததும், பள்ளிச் சிறார்களும் பங்கேற்று நின்றதும் கிடைத்தற்கரிய செய்தியாகும். அதேபோல, எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு முதல்வர், தம்மிடமுள்ள போலீஸ் படை போதாமல், ராணுவத்தையும் வரவழைத்து, மாணாக்கர்களைக் காக்கை குருவிகளைப் போலச் சுட்டுக் கொன்றதாகவும் தகவலில்லை. நமது பெரியவர் பக்தவத்சலம் என்ற மகானுபாவர் அந்த அருஞ் செயல் புரிந்து, தான் பதவியில் அமர்வதற்குக் காரணமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அற்றுப் போக உறுதுணையாய் விளங்கியவர்-இன்னும் வாழ்கிறார்-வாழிய!

1965 ஜனவரி 26-முதல் இந்தி அரியணை ஏறும் என அன்றையப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தனது எதிர்ப்பினை அமைதியாகத் தெரிவிக்கும் என்றார் அண்ணா. குடிஅரசு நாளில் ஏதும் செய்தல் நாகரிகமாகாது என்ற பெருங்குணத்தால், ஜனவரி 25-ஆம் நாள், கழகத் தோழர்கள் தம் சொந்த வீடுகளிலும், சொந்த அலுவலகம் அல்லது பணிமனைகளிலும் கருப்புக் கொடி ஏற்றி வைத்தால் போதும் என்பது தான் அண்ணாவின் ஆணை ! ராஜதந்திரம் தெரிந்த முதல்வராயிருந்தால், இதை அலட்சியம் செய்திருக்கலாம். ஆனால், காமராஜர் பதவி விலகியதால் இடைக்கால முதல்வரான பக்தவத்சலனார் என்ன கருதினார் தெரியுமா? இது என்ன சுண்டைக்காய் கட்சி. 1957-இல் 15 பேர். 1962-இல் 50 பேர்தானே சட்டமன்ற உறுப்பினர் என்று உதாசீனம் செய்து, “தி.மு. கழகத்தார் கருப்புக் கொடி ஏற்றினால், அரசு ஒன்றும் செய்யாது? மக்களே பார்த்துக் கொள்வார்கள்” -என்று சொன்னதன் மூலம், குண்டர்களை உசுப்பி விட்டார். G. உமாபதி போன்ற அடையாளம் தெரியக்கூடிய காங்கிரஸ் பிரமுகர்களே முன்னின்று, நமது கழகத்தார் வீடுகளையும், ‘முரசொவி’ ‘நம் நாடு’ அலுவலகங்களையும் ஆட்களையும் வெறித்தனமாகத் தாக்கியது கண்டோம். தேன்கூட்டைக் கலைத்ததுபோல் மாணவர் விடுதிகளில் புகுந்து தாக்கினர்.

எட்டுப்பேர் இந்தியை எதிர்த்துத் தீக்குளித்தும், நஞ்சுண்டும் தம் இன்னுயிர் ஈந்தனர். மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர். புரட்சி அடங்கவில்லை. ஆணவ தர்பார் கொடிகட்டிப் பறந்ததால் மாணவ உலகம் மடையுடைத்த வெள்ளமாய்ப் பாய்ந்தது.

அண்ணா, மாணவர் உலகத்தின் மீது அரசின் காட்டு மிராண்டித் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை விட்டார். இது மாணவர்கள் தாமே நடத்தும் போராட்டம் என்பதை அரசு உணர வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். ஆயினும், அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாணவர்கள் போராட்டத் திட்டங்களை அறிவித்து - மறியல், ரயில் நிறுத்தம், பொது வேலை நிறுத்தமெனத் தேதிகள் குறித்தனர்; பிப்ரவரி இரண்டாம் வாரம்.

அண்ணா, காலையில் எழுந்தவர், மேலே சட்டையில்லாமல் படுக்கையிலேயே உட்கார்ந்திருக்கிறார். செய்தித் தாள்களிலும், வானொலியிலும், தொலைபேசியிலும் வெளியூர்களின் போராட்டச் செய்திகள் வந்தவண்ணமுள்ளன - கோவை, திருப்பூர், குமாரபாளையம், பொள்ளாச்சி இங்கெல்லாம் மாணவர் மீது ராணுவம் சுடுகிறது ஆணவமாய் என்று! நேரம் செல்லச் செல்ல அண்ணா அப்படியே சுருண்டு படுக்கிறார். எதிரிலிருந்த கலைஞரும் நானும் “அண்ணா பல் விளக்கிவிட்டு ஏதாவது சாப்பிடுங்கள்” என்று கெஞ்சுகிறோம். முகம் பொலிவும் களையும் இழந்து, கண்கள் ஒளி குன்றிக் காணப்படுகின்றன. எழவே மறுக்கிறார். “இவ்வளவு பேர் சாகிறான். சாப்பாடு ஒரு கேடா? போலீசார் சுட்டாலும் காரணம் கேட்கலாம். ராணுவம் சுடும்போது ஒன்றும் கேட்கக்கூட முடியாதே!” என்கிறார். “நாம் என்னண்ணா செய்ய முடியும்? மாணவர்களைப் போராடச் சொல்லி நாமா வேண்டினோம்?” என்கிறார் கலைஞர். “பிறகு இதற்கு என்னதான் முடிவு? எப்படி நிறுத்துவது?” -இது அண்ணா விடுத்த வினா?

“நாமே ஓர் அறிக்கை விட்டு மாணவர்களைக் கேட்டுக் கொள்வோம், நிறுத்தும்படி"-கலைஞர்.

“அப்படியானால், இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னதே நாம்தான் என்ற எண்ணம் வராதா?” -அணனா.

“ஆமாம், அண்ணா! கட்டாயம் வரும்! இரண்டுங் கெட்டான் நிலையில், நாம் வருத்தப்படுவது தவிர வேறென்ன செய்வது?"-கலைஞர்.

கடைசியில், மாலையில்தான் அண்ணா பல் விளக்கினார். பின்பு, ஓர் அறிக்கை வெளியிட்டார். பயன்? அடுத்து, கலைஞர் கைது செய்யப்பட்டுப், பாளையங் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார், தனியே!

தாம் எதிர்க்கட்சியாயிருந்தபோது, ஆளுங்கட்சியினரின் துப்பாக்கிச் சூடுகளினால் மாணவர்கள் மடிந்தார்களே என்று மட்டும் அண்ணா மனங்கலங்கினாரா? தாம் ஆட்சிக் கட்டில் ஏறிய பின்னர், ஒரு துப்பாக்கிப் பிரயோகமும் அவரை மிகவும் வருத்திவிட்டது!

ஒருநாள் முன் காலை நேரம். நான்மட்டும் நுங்கம் பாக்கம் சென்றேன். தனிமையிலிருந்த அண்ணா மாடிக் கூடத்தில் பரபரப்போடு அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தார்; திகில் படர்ந்த முகத்தோடு!

என்னைப் பார்த்ததும், “கருணாநிதி வந்திருக்கிறதா?” என ஆவலுடன் வினவினார். இல்லை யண்ணா! நான் மட்டுந்தான் வந்தேன். ஏன்?” - “என்னய்யா! கொடுமை ஒண்ணு நடந்து போச்சு! திருவொற்றியூர்லெ போலீஸ் Firing நடந்து, ரெண்டு பேர் செத்துட்டாங்களாம். தொழிலாளர் போராட்டம் ! எங்கேய்யா, லேபர் மினிஸ்டரா ஒரு ஆளைப் போட்டோமில்ல? ஆளையே காணோமே! வரச் சொல்லுய்யா அந்த மாதவனை! அப்புறம், நீ உடனே போயி, கருணாநிதியைக் கூட்டிகிட்டுவா!” -அண்ணன் ஆணை.

“நான் இப்போ அங்கேயிருந்துதான் வர்றேன் அவருக்கு இந்தச் சேதி தெரியாதண்ணா! இதோ போயி அழைச்சிகிட்டு வாறேன். நீங்க பதறாமெ இருங்க!” என்று இறங்கி ஓடினேன்.

மென்மையான அந்த உள்ளத்தின் தன்மை-மனித உயிர்கள் அநியாயமாய்ப் பறிக்கப்படக் கூடாது என்பது தான்!