அண்ணா சில நினைவுகள்/காதல் அனுபவம் உண்டா?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
காதல் அனுபவம் உண்டா?

“எங்கே கருணானந்தம்?” என்று கேட்ட இன்ப ஒலி என் செவிப்புலனில் பாய்ந்து, சிந்தையை உலுக்கி, எழச் செய்தது!

யார் குரல்? யாருடைய குரல் இது? அண்ணாவின் குரல்போல் இருக்கிறதே? அண்ணா எப்போது ஈரோடு வந்தார்கள்? கேள்வி அலைகள் அடுக்கடுக்காய்ப் புரண்டெழுந்து முடிவதற்குள் “குடி அரசு” அலுவலகத்தின் மெஷின் ரூமில் நான் நின்றிருந்த இடத்துக்கே விரைந்து வந்த வண்ணம் ஈ. வெ. கி. சம்பத், “வாங்க வாங்க! அண்ணா உங்களெப் பாக்க வந்திருக்கார்!” என்று அழைத்தார். புலவர் நா. மு. மாணிக்கம் வியப்புடன் எழுந்து வந்து வேடிக்கை பார்க்கிறார்.

வெளிப்புற முதல் அறையில் வீற்றிருந்த அண்ணா, என் வலது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்-“உன்னைப் பாராட்ட வந்தேன்” என்றார், புன்சிரிப்புத் தவழ! இறக்கையின்றி மேகமண்டலத்தில் பறந்து கொண்டிருக் கிறேன் நான்! என் உடம்பிலுள்ள மயிர்க்கால்களெல்லாம் சிலிர்த்து, உணர்வுகளின் உயிர்த்துடிப்போடு, மகிழ்வால் உள்ளம் பொங்கி நிரம்பி வழிகிறது! ஒன்றும் விளங்காமல், “எதற்காக அண்ணா?” என்கிறேன், வினாக்குறி தேக் கிய முகத்துடன், சம்பத்தையும் பார்த்தவாறே!

“நீ ‘குடி அரசில்’ எழுதிய நாடக விமர்சனம் ஊரிலேயே படிச்சேன். ஈரோடு வந்தா உன்னெப் பாராட்டணும்னு நெனச்சேன். ரொம்ப அருமையா எழுதி யிருக்கே அனுபவப்பட்ட நாடகத்துறை எழுத்தாளர்  மாதிரி இருக்குது...உனக்கேது இவ்வளவு தூரம் இதிலே அனுபவம்?”

“என்னண்ணா கேள்வி இது? நான் தஞ்சாவூர்க் காரணில்லியா? (கருவத்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டேன்!) உங்க நாடகம்-நீங்களே நடிச்சது, நீங்க எழுதினது, எவ்வளவு பார்த்திருக்கேன்! பாட்டுக்கச்சேரி, மேளக் கச்சேரி, நாட்டியம், சினிமா, நாடகம் எல்லாம் சிறு வயசிலிருந்தே பார்த்துப் பார்த்து ஏற்பட்ட பட்டறிவு, அனுபவம்...”

“அதெல்லாம் சரி! இந்த விமர்சனத்திலே, காதலைப் பத்தி ரெண்டு மூணு இடத்திலே எழுதியிருக்கியே-- அதிலேயும் உனக்கு அனுபவம் உண்டா?” (எனக்கு அப்போது திருமணம் ஆகவில்லை).

அருகிலிருந்த சம்பத் கைகொட்டி நகைத்தார். அவரே சொன்னார், “கவிஞராச்சே அண்ணா. அதனால கற்பனை பண்ணி எழுதியிருப்பார்!” என்று.

நான் வெட்கத்தால் தோற்றுப் போய்த் தலையைத் தாழ்த்திக் கொள்ள நேர்ந்தது! அண்ணா என் முதுகில் தட்டிக் கொடுத்தார். சம்பத்தோ, “இல்லீங்க கருணானந்தம்! நெஜமாகவே அண்ணா உங்க எழுத்தெப் பாராட்டி, எங்கிட்ட யும் சொல்லிக்கிட்டிருந்தாருங்க!” என்றதும், துணிவுடனே நிமிர்ந்தேன் மீண்டும்.

“டி. கே. எஸ். சகோதரர்களின் முள்ளில் ரோஜா நாடகம் - ப. நீலகண்டன எழுதியது - இப்போது கோயமுத்துளர் சண்முகா தியேட்டரில், அல்லவா நடக்குது. நீ எப்படி எழுதினே?” என்று வினவினார் அண்ணா.

“ஆமாண்ணா!-‘எங்கள் முள்ளில் ரோஜா’ நாடகம் சிறப்பாக நடக்கிறது. ‘குடி அரசு’ பத்திரிகையில் ஒரு விமர்சனம் எழுதினால் எங்களுக்குப் பெருமையாக இருக்கும். உங்கள் உதவி ஆசிரியர் யாரையாவது கோவைக்கு அனுப்பிவையுங்கள்’ என்று டி. கே. சண்முகம் கடிதம் எழுதியிருந்தார். அதனால, நானே போய், நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்துதான் எழுதினேன். ரயிலில் போக ஒருநாள், திரும்பிவர ஒருநாள் ஆச்சு!”

“அவர்கள் யாராவது நீ வந்ததைத் தெரிந்து கொண்டார்களா?“

“ஒ! டி. கே. பகவதி என்னை வரவேற்று, நிறைய நேரம் பேசிக்கிட்டிருந்தார். உங்க மேலயும் ஒரு (புகார்) கம்ப்ளெய்ண்ட் சொன்னார்.

“என்ன சொன்னார்?” சிரித்துக்கொண்டே கேட்டார் அண்ணா. அதற்குள் வெற்றிலை பாக்கு வாங்கி வந்தார் ‘குடி அரசு’ மேனேஜர் நல்லுசாமி. அண்ணா மெல்ல அவற்றை மெல்லத் துவங்கினார். ஒரு சிட்டிகை பொடியும்

உறிஞ்சினார். உற்சாகத்துடன் என்னைக் கேட்கத் தயாரானார்.

“‘அண்ணாச்சியும் நானும் அண்ணாகிட்டே எவ்வளவோ நாளா எங்களுக்காக ஒரு நாடகம் எழுதித் தரச் சொன்னோம். ஆனா, ராமசாமிக்கு மட்டும் ரெண்டு நாடகம் (ஒர் இரவு, வேலைக்காரி) குடுத்தாங்க; எங்களுக்குத் தர வேயில்லே! ராமசாமி நம்ம பையன்தான்; இருந்தாலும் எங்களுக்கு அது ஒரு மனக்குறை-திராத குறைதான்’ என்று பகவதி வருத்தப்பட்டார் அண்ணா!” என்றேன்.

“உனக்குத் தெரிந்தது தானேய்யா—நீயே பதில் சொல்லியிருக்கலாமே. இவுங்க கம்பெனியிலே இருக்க முடியாம, கொள்கை ரீதியா கருத்து வேறுபாடு ஏற்பட்டு தானே (டி. வி.) நாராயணசாமி, (எஸ். எஸ்.) ராஜேந்திரன் எல்லாம் வெளியேறினாங்க. கலைவாணர் ஜெயிலுக்குப் போனதாலே (கே. ஆர்.) ராமசாமியெத் தனிக்கம்பெனி வைக்கச் சொன்னேன், இல்லேண்ணா (சிவாஜி) கணேசன், (ஆர். எம்.) வீரப்பன். (பி. எஸ்) தட்சிணாமூர்த்தி, (ஜி. எஸ்.) மகாலிங்கம், (எம். என்) கிருஷ்ணன் எல்லாரும் ரொம்பக் கஷ்டப் பட்டிருப் பாங்களே...”

“ஆமாண்ணா-அந்தச் சமயம் நான் தஞ்சாவூர்லே தானே இருந்தேன். அங்கேதானே கம்பெனி துவக்கம்! நீங்க சரியான சந்தர்ப்பத்திலே நாடகம் கொடுக்க லேண்ணா, கே. ஆர். ஆர். நாடகக் கம்பெனி நொடிச்சுப் போயிருக்குமே! நான் இதெல்லாம் ஞாபகப்படுத்தி, டி.கே. பகவதிகிட்டே சொல்லிட்டுதான் அண்ணா வந்தேன். இருந்தாலும் நீலகண்டனுடைய முள்ளில் ரோஜா நாடகம் சுயமரியாதைக் கருத்துக்களுடன் - டி. கே. எஸ். நாடகக் குழுவினரின் தரத்தில், அருமை யாயிருந்ததாலே, அப்படியே எழுதினேண்ணா! ‘குடி அர’ சில் ஒண்ணரை பக்கம் முழுமையாக வந்துட்டுது!” என்றேன்.

அண்ணா என்னைக் கேலி செய்யத் துண்டிய அந்த இடம் இதுதான்:

தாசி கமலத்தின் மகள் மங்கைப்பருவம் அடைகிறாள். அதாவது காமத்தேன் எங்கு கிடைக்கும் எனச் சுற்றி யலையும் கருவண்டுகளைக் கவரும் வண்ணம் மலர்ச்சி அடைகிறாள்...

ராகவ முதலியார் துணுக்குச் சேலை கட்டியிருந்தா லும் விரும்பக்கூடிய பரம ரசிகர். அவர் எல்லா நகைகளும் போட்டு, 5000 ரூபாய் பணமும் கொடுத்துச் செல்லத்துக்குச் “சாந்தி” செய்ய ஒத்துக் கொள்ளுகிறார். இதற் கிடையில் மிராசுதார் கந்தசாமிப் பிள்ளையின் மகன் ராமநாதன், நண்பர்களின் சகவாச தோஷத்தால், இளமை இன்பம் துசுரத் தாசி வீடு செல்லத் துணிகிறான்...

தாசியின் உயர்குணத்தை எண்ணி எண்ணி அவளிடம் காதல்கொண்டு, அவளையே மணப்பதாக உறுதி பூண்டு கடிதம் எழுதிவிட்டான். ஒருவனையே நாடியிருந்த செல்லமும் காதல் வயப்பட்டாள், சந்திப்புகள் தவறாமல் நடந்தவண்ணமிருந்தன...

(“குடி அரசு” 20.12.1947)

அண்ணாவின் நினைவலைகள் அதற்குள் எங்கெங்கோ மோதி முட்டித் திரும்பி மீண்டிருக்க வேண்டும். உறங்கி விழித்தவர்போல, “அதெல்லாம் சரி, நீ எழுதிய நாடக விமர்சனம் பெரிதாயிருந்தாலும்.நன்றாயிருந்தது! சரி, வா சம்பத்து வீட்டில் சாப்பிடப் போகலாம்” என்றார். புறப்பட்டோம்.

அண்ணா, டி. கே. எஸ். சகோதரர்களின் “குமாஸ்தாவின் பெண்” நாடகத்திற்கு எழுதிய விமர்சனந்தான் இது வரை தமிழ் நாடக விமர்சனங்களிலேயே தலைசிறந்ததாகும். அவரே என்னைப் புகழ்ந்தால்...?