அண்ணா சில நினைவுகள்/சென்னையில் பொறித்த சின்னம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சென்னையில் பொறித்த சின்னம்


ங்கள் RMS ஊழியர்களின் எட்டாவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தபோது எனக்குத் தவைவர் கிரீடம் சூட்டிவிட்டார்கள். அதில் கலந்துகொண்ட விழுப்புரம் நகராட்சி உறுப்பினர் எஸ். இராகவானந்தம் இதற்காகத்தன் வீட்டில் விருந்தளித்து மகிழ்ந்தார் எனக்கு.

இக்காரணத்தில் அடுத்த ஆண்டு 4.1.1966 முதல் மூன்று நாட்கள், சென்னையில் எங்கள் ஒன்பதாவது மாநில மாநாட்டை மிகச் சிறப்போடும் சீரோடும் நடத்திக் கொண்டாடினோம். எங்குமில்லாத புதுமையாக முதல் நாளும் மூன்றாவது நாளும் பொதுக் கூட்டங்கள் நடத்தி னோம். முதல் நாள் பொதுக்கூட்டத்திற்கு அண்ணாவை அழைத்தேன். தயங்காமல் ஒத்துக் கொண்டார்கள். மூன்றாவது நாளில் கலைஞர் கலந்து கொண்டார்.

அப்போது என் நண்பர் மைனர் மோசஸ் சென்னை நகர மேயராகப் பெருமையுடன் வீற்றிருந்த நேரம். நாள் தவறாமல் மாலைநேரங்களில் அவர் அண்ணாவையும் கலைஞரையும் சந்திக்க வருவார். அவரிடம் பேசி, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ரெட்ஹில்ஸ் விடுதி ஒன்றை அமர்த்திக் கொண்டேன். தமிழ்நாடெங்கிலு மிருந்து வரும் பிரதிநிதிகள் கூட்டம் 3 நாளும் அங்கே செங்குன்றத்தில் வசதியாக எவ்வித இடையூறுமின்றி என் தலைமையில் நடந்தது. சாப்பாட்டுக்கான அரிசி காய்கறி மளிகை சாமான்கள் சென்னையிலேயே வாங்கிச் சென்றேன். நண்பர் மீசை கோபாலசாமி மூலமாக ஒரு சமையல் அய்யர். அருமையான எளிமையான உணவும் சிற்றுண்டியும் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டன. என்னைத் தலைமை பீடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, என் பணிகளையும் சேர்த்து என் துணைத் தலைவர் எஸ். நாகலிங்கம், பொருளாளர் வீராசாமி, மாநிலச் செயலாளர் நம்மாழ்வார் ஆகியோர் பார்த்துக் கொள்வார்கள். விவாதங்கள் சூடாகவும் சுவையாகவும் இரவில் நெடுநேரம் வரை நடக்கும்.

அப்படியானால் ஆர். எம். எஸ். இலாக்கா அவ்வளவு முக்கியமானதா? இந்தக் கேள்விக்கு ஒரு மாஜிஸ்ட்ரேட் பதில் சொல்கிறார்: 1960 ஜூலை மாதம் மாயூரம் குற்றவியல் நீதிபதி கோர்ட்டில் கைதியாக அவர் முன் நான் நிற்கிறேன். “நீங்கள்தான் ஸ்ட்ரைக் கைத் துரண்டி விட்டதில் முக்கியமானவர் என்கிறார்கள். என்ன சொல்லுகிறீர்கள்?” கேட்பவர் நீதிபதி. “நான் துண்ட வில்லை. எங்கள் அனைத்திந்திய சங்கம் டெல்லியில் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்து, வேலை நிறுத்தம் செய்யுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது. சங்கக் கட்டுப்பாட்டுக்கு இணங்க எல்லாரும் வேலை நிறுத்தம் செய்தோம்.” என் பதில் இது.

“சரி. பேப்பர்களில் ‘வேலை நிறுத்தம் வெற்றி பெறவில்லை. தபால் ஊழியர்கள் வேலைக் குத் திரும்பி விட்டனர்’-என்று செய்தி போடுகிறார்கள். ஆனால் RMS ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறீர்கள். RMS இல்லாவிட்டால் தபால் இலாக்காவே இயங்காது என்பதை நானே நிதரிசனமாக உணர்கிறேன். ஒரு நாளைக்கு எனக்கு 30, 40 தபால் வருவது வழக்கம். ஆனால் ஒரு வாரமாக தினம் ஒன்று இரண்டுதான் வருகிறது. அதனால், அரசு உங்கள்மேல் குற்றம்சாட்டுவது நியாயமே என்று புரிகிறது. என்றாலும் உங்களை ஜாமீனில் விடுதலை செய்கிறேன்-” என்று , இரண்டு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ரிமாண்டில் இருந்த என்னை விடுவித்தார்.

மரத்துக்கு அடியில் மறைந்துகிடக்கும் வேர்போல RMS ஊழியம். இலை காய் கனிதான் தபால்துறை. எல்லாம் சேர்ந்தால்தானே மரம்?

அண்ணா அவர்கள் எங்கள் தொண்டினை உணர்ந்திருந்த காரணத்தால், நான் அழைத்தபோதெல்லாம் வந்து சிறப்பித்தார்கள். 4.1.66 சென்னை மவுண்ட்ரோடு தபால் நிலையத்துக்குப் பின்புறம் அதாவது போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் மேடை அமைத் திருந்தோம். (அப்போது யாருக்குத் தெரியும் இது அண்ணாசாலை அஞ்சல் நிலையம் என மாறும் என்பது!) அன்றைய கூட்டம் என் தலைமையில். நண்பர் முஸ்லிம்லீக் தலைவரான ஏ. கே. ஏ. அப்துஸ்சமது, தேசியவாதி T. செங்கல்வராயன், அஞ்சல்துறை இயக்குநர் டி. ஆர். சங்கரன், ஏ. பி. துளசிராம் ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்துவிட்டனர். கூட்டம் துவங்க வேண்டிய நேரம். அண்ணாவை மட்டும் காணோம்!

“நான் நேரே கூட்டத்துக்கு வந்துவிடுகிறேன். நீ கவலைப்படாமல் இரு!” என்று உறுதி சொல்லியிருந்தார் அண்ணா என்னிடம். என்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. ஆனாலும் காஞ்சியினின்று வர ஒருமணி அல்லது ஒன்றரை மணிநேரம் போதுமே: இன்னும் காணோமே! பதைப்பு-படபடப்பு-பதற்றம்-நடுக்கம்-பயம்-திகில்-அடுத்து மயக்கந்தான் பாக்கி!

P.M.G. அலுவலகத்தில் Returned letter பிரிவினில் உள்ள நம் இயக்க நண்பர் G. லட்சுமணன் துடிதுடிப்போடு மேலே போய் Phone-ல் விசாரிக்கிறார். அண்ணா காஞ்சியை விட்டுப் புறப்பட்டு விட்டாராம். ஆனால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே! ஆ! இதோ வந்து விட்டார்!... சரியாக ஒரு மணிநேரம் தாமதமாக வந்து இறங்கி, மன்னிப்புக் கோரும் தோரணையில் “வண்டி ரிப்பேராகி விட்டதய்யா வழியில்” என்கிறார் அண்ணா என்னிடம். பத்திரிகையாளர்கள் என்றுமில்லாத திரு நாளாக நிறையப்பேர் வருகை புரிந்தது அதிசயமே அன்று. காத்திருந்தது அதனிலும் பெரிய அதிசயம்!

“நானும் நீண்ட நாட்களாக உங்களைப் பார்த்து வருகிறேன். முன்பு சொன்ன அதே குறைகளை இப்போதும் சொல்கிறீர்கள். எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால், கோரிக்கைகளை நீங்கள் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லும் முறை சரியில்லை என்று கருதுகிறேன். ஆகவே பின்னால் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்ற தைரியத்துடன், நீங்கள் புரட்சி செய்யுங்கள்!” என்று அண்ணா எங்கள்மீது பொங்கிடும் அக்கறை உணர்வால் சிங்கநாதம் செய்தார்.

6.1.66 அன்று சென்னை சென்ட்ரல் ஸ்ஷேனில் உள்ள பெரிய RMS அலுவலகத்தில், என் தலைமையில் நடை பெற்ற நிறைவு விழாப் பொதுக் கூட்டத்திலும், கலைஞர் பேசும்போதும் இந்த பாணியில் எங்கள் கோரிக்கைகளுக்காக வாதாடினார்.

எங்கள் தொழிற்சங்க வரலாற்றிலேயே, இந்த இரு கூட்டங்களின் செய்திகள், சொற்பொழிவுகள், பிரச்னைகள் வெளியான அளவு, வேறு எப்போதும் பத்திரிகைகளில் பிரசுரமானது கிடையாது. அந்த அளவு மக்கள் கவனத்தைக் கவர, நாங்கள் எதிர்பார்த்தவாறே, சென்னை மாநாடு எங்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்ட, அண்ணா உறுதுணை புரிந்தார்கள்!