அண்ணா சில நினைவுகள்/விபத்தை மறக்கச் செய்த முடிவு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விபத்தை மறக்கச் செய்த முடிவு!

“இதே வார்டில் உனக் கொரு ரூம் தரச் சொல்கிறேன். இங்கேயே அட்மிட் ஆகிப் பார்த்துக்கய்யா. காலில இவ்வளவு பெரிய காயமிருக்கே. கவனக் கொறவா யிருக்கியே!” என்றார் முதலமைச்சர் அண்ணா மிக்க கரிசனத்துடன். பெரிய காயம் ஒண்ணுமில்லேண்ணா. டாக்டர் கலாநிதி இங்கே G.H.க்கே வந்து எனக்கு A.T.S. இஞ்செக்ஷன் போட்டு, இத்தைல் கிளிசரைன் மருந்து வைத்து பேண்டேஜும் அவரே கட்டிவிட்டார். நீங்க அந்தக் கருப்பு மருந்தைப் பார்த்துதான் பயந்துட்டீங்க” என்று பதில் சொல்லிக்கொண்டே காயத்தையும் வலியையும் மறைக்க முயல்கிறேன். உள்புற அறையில் கலைஞர் காயங்களுடன் படுத்திருக்கிறார். இரவு நேரம்.

அன்று காலை 4 மணிக்குத் தொழுப்பேடு அருகில் கார் விபத்து. மூன்று முறை கரணம் போட்டு மல்லாந்து கிடந்த காரில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க முடியாது என்றே காரின் சேதத்தைப் பார்த்தவர் எண்ணினர். ஆனால் கலைஞருக்குத்தான் முகத்தில் கண்ணாடித் தூள்கள் நிறைய செருகிக் கொண்டன. மதுரைமுத்துவுக்கு இரண்டு கைகளிலும் அடி. புலவர் பொன்னிவளவனுக்கு லேசான அடிதான். எனக்கு இடது காலில் சிறாய்ப்பு. டிரைவர் பாண்டியன் ஆறுமாதம் படுக்கையில் கிடந்தார். விபத்துக்குள்ளான காரிலிருந்து ஒவ்வொருவரையும் தூக்கி வெளியே கொணர்ந்து, காவலர் ஜீப்பில் ஏற்றித் திண்டிவனம் மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தவன் நான்தான். சென்னைக்கு Phone செய்து, செய்தி சொன்னவனும் நானே. சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்து, அமைச்சரான கலைஞருடைய உடல்நலத்துக்குப் பொறுப்பேற்றபின்-சென்னை சென்று கலைஞருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய பொறுப்பிலுள்ளவனும் நானே. வழக்கறிஞர்களான வேலூர் நாராயணன், நா. கணபதி இருவரும் காரிலிலேயே திண்டிவனம் வந்து கலைஞரைப் பார்த்ததும் அவர்கள் காரில் சென்னை திரும்பிக் கடமைகளை முடித்தேன்.

முதலமைச்சர் அண்ணா அவர்களே திண்டிவனம் சென்றார்கள். கலைஞரை ஆம்புலன்சில் ஏற்றி, மாலையில் சென்னைக்குக் கொண்டுவந்தனர்.

என் உடலில் வேட்டி, துண்டு இல்லாமல், ஜிப்பா மட்டுமே இருந்தது. திண்டிவனம் தங்கவேல் தனது வேட்டி துண்டுகளைக் கொணர்ந்து தந்தார். அந்தக் கோலத்தில், மாற்றுடையில்லாமல், இரவு மாயவரத்துக்கு Call போட்டு என் உடல்நிலை குறித்து அஞ்சவேண்டாம் என்று நானே பேசி, துணிகள் கொணரவும் சொன்னேன்.

உளமார்ந்த அக்கறையுடன் அண்ணா என்னை விசாரித்துக், கவலைப்பட ஏதுமில்லை எனத் தெளிவாக உணர்ந்தபின், “சரி, அப்ப, எங்ககூட வீட்டுக்கு வா. தர்மலிங்கம், நீயும் வா!” என்று அழைத்தார்கள், அவர் (அண்மையில் மறைந்த) திருண்ணாமலை தர்மலிங்கம்.

மொட்டை மாடியில் போய் அமர்ந்தோம். “இங்க பார்! இப்ப என் இடத்திலே, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு, முரசொலி மாறனை நிறுத்தலாம்னு நான் முடிவு பண்ணிருக்கேன். சீக்கிரமே பைஎலக்ஷன் வந்துடும். கருணாநிதி ஒத்துக்கலெ! வீட்டிலே அவுங்க அக்கா எல்லாருமே வேண்டாம்ண்ணு சொல்றாங்களாம். நீ அவுங்க எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வக்கணும். அது உன்னாலெதான் முடியும்—” என்றார் அண்ணா என்னிடம். பெரிய பொறுப்பான ஒரு சுமையை என் தலையில் இறக்கிவைத்த நிம்மதி அவர் முகத்தில் பொலிந்தது. தர்மலிங்கம், “சரிங்கண்ணா! கலைஞரை நான் சரிப்படுத்தறேன். வீட்டில் அக்காமார் களிடம் இவர் பேசட்டும்” என்று, பாதிச்சுமையை அவர் ஏற்றுக்கொண்டார். மீதி என்னிடம், உடனேயே G.H. திரும்பினோம் நாங்களிருவரும்.

“அய்யய்யோ.வேனவே வேணாங்க. அது ரொம்ப சின்னப்பிள்ளை. டெல்லிக்குப் போயி அது எங்க தனியா இருக்கப் போவுது. வீட்டிலேருந்து ஒரு பிள்ளயத்தான் பொது வேலைக்கு அனுப்பிட்டோம். இது வா வது குடும்பத்தைக் கவனிக்கட்டும். கெடுத்துடாதீங்க. அண்ணா கிட்டே நீங்களே சமாதானம் சொல்லுங்க” என்று கலைஞரின் பெரியக்கா சின்னக்கா இருவருமே பிடிவாத மாய் என்னிடம் சொன்னார்கள்,

அண்ணா வைத்த குறி தப்பவில்லை. தர்மலிங்கமும் நானுந்தான் இறுதியில் வெற்றி பெற்றோம். இடைத் தேர்தலில் மாறன், அண்ணாவைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மைனர் மோசசும் நானும் இணையாக ஒரு மாதம் அரும்பாடு பட்டு உழைத்தோம்.

பி. ஏ. ஆனர்ஸ் பட்டம் பெறும்போது தியாகராஜ சுந்தரம்; “முரசொலி”ப் பொறுப்பேற்றபோது நெடு மாறன்; நாடாளுமன்றத் தேர்தலுக்கு நின்றபோது முரசொலி மாறன். அன்று முதல் இன்று வரை தம்பியை யாரும் பெயர் சொல்வதில்லை; எம். பி. என்றே வீட்டிலும் வெளியிலும் அழைக்கிறார்கள்!

1967 செப்டம்பர்.தஞ்சையில் அண்ணா கவியரங்கத்தில் பங்கேற்கச் சென்றபோது-கார்விபத்துக்குள்ளான அன்றே, ஆஸ்பத்திரி வார்டில் வைத்து, அண்ணா எடுத்த முடிவும் முயற்சியும் வெற்றிபெற, நானும் முக்கிய கருவியா யிருந்தேன் அல்லவா?