அண்ணா சில நினைவுகள்/விமானப் பயணத்தால் விளைந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விமானப் பயணத்தால் விளைந்தது!


“என்ன கருணானந்தம், பம்பாய் போய்வந்தாயாமே, என்னண்டே சொல்லவேயில்லயே?” இவ்வாறு அண்ணா என்னிடம் கேட்கும்படி நேர்ந்ததற்காக உண்மையிலேயே வருந்தினேன். தவற்றுக்கு மன்னிப்புக் கோரும் தன்மையில், “ஆமாண்ணா திடீருண்ணு எனக்கு விமானப் பயணத்துக்கு ஒரு சான்ஸ் கிடைச் சுது. நீங்க அந்தச் சமயம் சென்னையிலே இல்லே. அதனாலெ சொல்லாமப் போயி, படாதபாடு பட்டேன் அண்ணா!” எனத் துயரத்துடன் பதிலுரைத்தேன்.

1976ல் கலைஞர் தலைமையில் முதன் முதலாகச் சென்னையில் அண்ணா கவியரங்கம் ஏற்பாடு செய்தோம். வேலூர் நாராயணன், வக்கீல் நா.கணபதி, ஜி.லட்சுமணன், சீத்தாபதி ஆகியோர் தூண்டுதலில், பிரமாதமாகச் செய் தேன்; நானும் பாடினேன்! இந்த அண்ணா கவியரங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்தபோது, ஓரளவு வெளியுலகம் அறிந்திருந்த அப்துர்ரகுமான், குருவிக்கரம்பை சண்முகம், தி. கு. நடராசன், முருகுசுந்தரம், வா. மு. சேதுராமன் போன்றோர் மேலும் புகழ் ஈட்டினர். புதியவர்கள் சிலரையும் மேடையேற்றினேன். பின்னாட்களில் முத்துலிங்கம்: வைரமுத்து, இளந்தேவன் போன்ற புதிய கவிஞர்கள், கலைஞரின் அறிமுகவரிகளால் மக்கள் மனத்தில் இடம் பெற்றனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், ஒருநாள், என் தம்பி பரமசிவம், பம்பாயிலிருந்து வந்திருந்த B. V. ரங்கநாத் என்பவரை அழைத்து வந்தான்; ‘இவர் பாரதியார் சங்கம் அமைத்திருக்கிறார், கவியரங்கம் நடத்த விரும்புகிறார் என்று! கலைஞர் தலைமையில், அமைச்சர் மா. முத்துசாமி, நான், S. D. சுந்தரம், அப்துர் ரகுமான், கம்பனடிப் பொடி சா. கணேசன் ஆகியோர் பங்கேற்பதாக ஏற்பாடு. எனக்குத் தலைப்பு பாரதிதாசன். அமைச்சர்கள் விமானத் தில் செல்ல முடியும். மற்ற கவிஞர்களுக்கு ரயிலில் போக வர வசதியாகச் செலவுக்குப் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். கலைஞர் என்னிடம் “நீங்க இதுவரை பிளேனில் போனதில்லியே! மேற்கொண்டு ஆகிற செலவை நான் போட்டுக் கொள்கிறேன். என்னோடு பிளேனில் வாங்க” என்று அழைக்கவும், அப்போதே பறக்கத் தொடங்கி விட்டேன். எங்களோடு விமானத்தில் டைரக்டர் பஞ்சு, எஸ். எஸ். ஆர். ஆகியோரும் வந்தனர்.

கலைஞருடைய டேப்ரிக்கார்டரை என் தோளில் தொங்க விட்டிருந்தேன். அப்போதெல்லாம் ‘மைக்’ தனியாக இருக்கும். பம்பாய் விமான நிலையத்தில் போய் இறங்கியதும், முதன் முறையாகப் பம்பாயைப் பார்ப்பவ னாகையால், வியப்பு மேலிட நடந்த போது, அந்த மைக்” கீழே நழுவியது எனக்குத் தெரியவில்லை. தங்குமிடம் சென்றவுடனே தெரிந்து போயிற்று! கலைஞரிடம் சொல்ல அஞ்சி, நண்பர் ரங்கநாத்துடன் பல இடங்களுக்கும் அலைந்து-அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு-புதிதாக ‘மைக்’ ஒன்று வாங்கி வந்தேன். அதற்குள், எங்களுடன் வந்திருந்த செக்யூரிட்டி ஆபீசரிடம் நான் ரகசியமாகச் சொல்லியிருந்த விஷயம், கலைஞருக்குத் தெரிந்து போயிற்று! காரணம், காணாமற்போன அதே மைக் பம்பாய் ஏர்போட்டில் கிடைத்து விட்டதாம். கலைஞர் என்னை மிகவும் கேலி செய்தார்! கவியரங்கத்தில் நான் பாடும்போது, குறுக்கே இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் பந்தலில் நுழைய-அவ்வளவுதான் தமிழ் மக்கள் ரசனை! கவனம் எங்கேயோ போய் விடவே-நான் முடித்துக் கொண்டேன் பாடல்களை,

இந்தச் செய்திகளெல்லாம் முழுமையாக அண்ணாவின் காதுக்குப் போய்விட்டது போலும்! “நீ ஏய்யா கவியரங்கத் திலே நேரடியாக் கலந்துக்கிறே? நீயே படிப்பது எடு படாது! உன் குரல்வளம் போதாது! அதனாலெ, நீ எழுதிக் கொடுத்து, வேற யாரையாவது விட்டுப் படிக்கச் சொல்லு, இனிமே! பிரமாதமா அதுக்கு வரவேற்பு இருக்கும்!“ என்றார் அண்ணா. அண்ணாவின் இந்த அறிவுரையை சிரமேற் கொண்டு, அதன்பின் எந்தக் கவியரங்கத்திலும் நான் கலந்துகொள்ளவே யில்லை. அமைத்து, மேடை யேற்றி, அறிமுகம் செய்யும் நன்றி எதிர்பாராத நற்பணி யைத் தொடர்ந்து ஆற்றி வந்தேன். துவக்க நாட்களில் கூடத் தவமணி இராசனும் நானும்-நாங்கள் மேடை யேறிப் பேசுவதைவிட, மற்றவர்களுக்கு மேடையமைத்து ஏற்பாடுகள் செய்து பேச வைப்பதைப் பெருமையாகக் கருதியவர்களாவோம்.

“சரியண்ணா-இனிமே நான் கவியரங்கத்துக்குப் போறதில்லெ. இப்ப கூட நான் பம்பாய் போன காரணம் விமானப் பயண ஆசைதான்!” என்றேன், அசடு வழிய!

“விமானத்திலேதானே போகணும், சரி. இப்ப மோரீஷஸ் தீவுக்குப் போறீயா?” எனக் கேட்டபோது, அண்ணா கேலி மொழி புகன்றதாக எண்ணவில்லை நான்! விழித்தேன் புரியாததால்!!

“இப்ப, நம்ம சத்தியவாணிமுத்து அமைச்சர், மோரீஸ் நாட்டுக்கு, ஒரு டெலிகேஷன்ல போறாங்க. Short Visit தான். அவுங்ககூட நீயும் போறதானா, நானே அனுப்பறேன்!”

“அப்படி ஒண்ணும் ஆசையில்லெ அண்ணா என் மனசிலெ. இங்கேயே இருந்து, உங்களெயெல்லாம் பாத்து கிட்டிருந்தாலே எனக்குப் போதும்!”

“இல்லய்யா. மெய்யாவே உன்னை எங்காவது வெளி நாட்டுக்கு அனுப்பறேன்! ஆனா ஒண்னு ஏதாவது ஒரே ஒரு நாட்டுக்குதான் போக முடியும்னா-அது இங்லண்டா தான் இருக்கணும்!”

“ஏண்ணா! அமெரிக்கா, ஜப்பான் இதெல்லாம் வளந்த நாடுகளாச்சே?”

“வளர்ச்சிண்ணா, எதிலே? இங்கிலாந்து உலகத்துக்கே மொழியையும், நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் கத்துக் குடுத்த நாடு. முடி மன்னர்களும் வாழும்போது அவர்களை மதிச்சி, மரியாதை செலுத்துறதிலே குறைச்சல் இல்லாம, குடியாட்சித் தத் துவத்தையும் கோண ல் இல்லாம ஏத்துக்கிட்டிருக்கிற நாடு: அதிக நாகரிகம் என்கிற பேரால அநாகரிகத்தை வளர்க்காத நல்ல நாடு! அங்கே ஒரு தடவை போய்வந்தாப்போதும். உலகம் பூரா சுத்தின அறிவு கெடைக்கும்” -என்று, அண்ணா ஆங்கில நாட்டின் பெருமையை அளவிட்டு, அழகுற விளக்கினார்கள்.

“அருமையான கருத்தை இப்ப தெரிஞ்சிக்கிட்டேன் அண்ணா!’ என்று சீரியசாகச் சொல்லிவிட்டு, இப்ப என்னை ஒரு நொடியிலே லண்டன் ஏர்போர்ட்டிலே கொண்டுபோய் இறக்கி விட்டுட்டிங்க, பாஸ்போர்ட் இல்லாமெ. இது போதும் அண்ணா!” என நகைப்புக் கிடையே நவின்றேன்.

நான் ‘மைக்’ தொலைத்த நிகழ்ச்சியைப் “பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போலஎன்பது பழமொழி-ஆனால், கருணானந்தம் பம்பாய் விமான நிலையம் பார்த்தது போல-என்பது புதுமொழி” யெனத் தனது கவியரங்க முன்னுரையில் இணைத்திட்ட கலைஞர், அதனைச் சுவைபட அண்ணா அவர்களிடமும் எடுத்துக் கூறி, என்னை Laughing Stock ஆக்கினார் என்பதைப் புரிந்து கொண்டேன். அண்ணாவிடம் விடை பெற்றுப் புறப்பட்டேன் கலைஞருடன்; அவர் வீடு நோக்கித்தான்!