உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் கைதி/16

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 16.

இடம் : நடராஜன் வீடு

பாத்திரங்கள் : லீலா காமாட்சி.

[லீலா கட்டிலில் அமர்ந்து கைக்குட்டை பின்னியபடி பாடிக் கொண்டிருக்கிருள். காமாட்சி வருகிறாள். ஒரு ஆள் தலையில் இரண்டு மூன்று மூட்டைகளையும் பெட்டியையும் கொண்டு வந்து இறக்கிவைக்கிறான்.]

லீலா : இது என்ன அம்மா மூட்டை முடிச்சுகளெல்லாம் பலமாயிருக்கிறதே! இவை யெல்லாம் என்ன?

காமா : எல்லாம் ஒனக்காகத்தான். இந்தா இதை வாங்கி அப்படிவை.

(எல்லாவற்றையும் வாங்கி வைக்கிறாள்)

வேலை ஆள் : நான் போயிட்டு வரட்டுங்களா அம்மா?

காமா : மகராசனாய் போயிட்டு வாப்பா. போயிட்டுவா.

(போகிறான்)



லீலா: இதென்னம்மா இந்தக் கூடையில்?

காமா : அதுவா பழங்கள். ஆரஞ்சி, மாதளை, சாத்துக் கட்டி, மலைப்பழம் எல்லாம் நிறைய இருக்கு; எடுத்துக்கோ. வேண்டியதை எடுத்துச் சாப்பிடு. இந்தா இதெல்லாம் பலகாரங்கள். இதையும் எடுத்துக்கோ. இந்தா பாரு இதெல்லாம் பட்டுச் சேலையும் ரவிக்கையுந்தான்; அவ்வளவும் நிறைய ஜரிகை போட்டது. எல்லாம் ஒனக்காகத்தான் வாங்கிக்கிட்டு வந்தேன். மொதல்லே அந்தப் பழைய சேலையை அவுத்தெரிஞ்சிட்டு இதிலே நல்லதா ஒனக்குப் புடிச்ச சேலையாப் பார்த்து எடுத்துக் கட்டிக்கோ (குதூகலத்துடன் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுக்கொண்டு லீலா ஆச்சரியத்தோடு சொல்லுகிறாள்.)

லீலா : ஏம்மா! இதெல்லாம் ஏது? அவ்வளவும் புதிதாயிருக்கிறதே!

காமா : ஏண்டியம்மா! உன் அதிஷ்டத்துக்கு யார் பொறந்திருக்கா. எல்லாம் நல்ல காலத்துக்குத் தான் வரும்! இதைப் பாரு! (நகைப் பெட்டியைத் திறந்து ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டுகிறாள்) காசுமாலை! இது கழுத்துச் சங்கிலி, கம்மல், வளவி இதெல்லாம் பாத்தியா? இந்தக் கல்லு நகையெல்லாம் அவ்வளவும் வைரமாம்! இதெல்லாம் போட்டுக்கிட்டு இந்தச் சேலை ரவிக்கையையும் போட்டுக்கிட்டா உன் அழகுக்கு எவ்வளவு நல்லா இருக்கும்:

லீலா : இவையெல்லாம் ஏதம்மா என்றால் அதற்குப் பதில் சொல்லாமல் நீ பாட்டுக்கு வர்ணித்துக் கொண்டே, இருக்கிறாயே!  காமா : ஏண்டி ஒன்னே நான் வர்ணிக்காமே பின்னே யாரு வர்ணிப்பா? இன்னமே ஒனக்கு என்ன குறைச்சல்? எத்தனையோ லக்ஷ ரூபாய்க்கு எஜமானி ஆகப்போறே. அப்புறம் அம்மாளைக்கூடக் கவனிக்கிறயோ என்னமோ?

லீலா : என்னம்மா சும்மா உளருகிறாய்!

காமா : நானா ஒளர்ரேன், அப்படித்தான் இருக்கும். இப்பவே இப்படி இருந்தா அப்புறம் கேக்கவே வாண்டாம், பெத்தவளாச்சேன்னுகூடத் திரும்பிப் பார்க்கமாட்டே.

லீலா : (கோபத்தோடும் வெறுப்போடும்) என்னம்மா இது போட்டுக்குப் புரியாமல் பேசிக்கொண்டே இருந்தால் எனக்குக் கோபம் வரும்.

காமா : புரியுமா, புரியாதுதான். கோபங்கூட வரும்தான். ஏன்னா. நீ திவான்பகதூர் பெண்டாட்டியா இல்லையா?

லீலா : என்ன! திவான்பகதூர் பெண்டாட்டியா? யார் நானா?

காமா : ஆமாண்டியம்மா, ஆமா! நீ தான் இந்த மாதம் 22 உனக்கும் உன் மாமாவுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருக்கு இந்தத் துணிமணி, நகை, நட்டெல்லாம் ஒனக்காகத்தான் அவர் வாங்கிக் குடுத்திருக்கார்.

லீலா : போம்மா. இதெல்லாம் என்ன விளையாட்டு!

காமா : நெசந்தாண்டின்னா! வெளையாட்டாவது வெனையாவது. இன்ன மட்டும் பேசிக்கிட்டு இருந்துட்டு, அய்யரைக் கூட்டிக்கிட்டு வந்து முகூர்த்த நாளெல்லாம் பார்த்து முடிவு பண்ணிக்கிட்டு வர்ரேங்கிறேன்.  லீலா : என்ன! உண்மையாகவா? அம்மா. இதென்ன அநியாயம் உடன் பிறந்த அண்ணன் கண் காணாத நாட்டுக்குப் போய் இன்னும் ஒரு வாரம்கூட ஆக வில்லை; அதற்குள் இது என்ன கூத்து? உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?

காமா : என்னடி இது. என்ன வாயெல்லாம் ரொம்ப அதிகமாப் போச்சே! அண்ணனாம் அண்ணன். ஆட்டுக்குட்டி...... அவன் இருந்திருந்தா, வருஷம் பத்தானாலும்கூட உனக்கு ஒரு கல்யாணங் காச்சி செய்யனுமின்னு நெனைக்க மாட்டான். எங்க அண்ணன் பார்த்து மனசுவைக்காமே இருந்திருந்தா நீயும் ஒங்க அண்ணனும் நானும் சந்தியிலே நின்னு பிச்சை எடுக்கவேண்டியதுதான்.

லீலா : பிச்சை யெடுத்தாலும்கூடப் பரவாயில்லை. நீ செய்யும் காரியங்கள் அதைவிடக் கேவலமாயிருக்கிறது.

காமா : என்னடீது கேவலம்? ஊரு ஒலகத்திலே இல்லாத கேவலத்தே நீ அதிசயமாக் கண்டுட்டே. தாய் மாமனைக் கல்யாணம் பண்ணிக்கரதா ஒரு கேவலம்? (பெருமூச்சு விட்டு) ஊம்...... உன்னைச் சொல்லக் குத்தமில்லே, ஒன்னெப் பத்து மாசம் செமந்து பெத்து வளத்து நாலு எழுத்துப் படிக்கவைச்சு, ஆளாக்கிவிட்டேம்பாரு! அதுக்கு இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே.

லீலா : நீதான் பெற்றாய், வளர்த்தாய், ஆளாக்கிவிட்டாய்; அதற்காக என்னை உயிரோடு சித்திரவதை செய்ய வேண்டுமா? இதைவிட ஒரு பாழுங்கிணற்றில் தள்ளினால்கூட பரவாயில்லையே?  காமா : நானா ஒன்னேக் கொல்றேங்கிறேன். காலம் கலி காலமா இல்லையா? இந்தப் பஞ்ச காலத்திலே பத்தாயிரம் இருவதாயிரமுன்னு எழுதிவச்சு நெலபலத்தெயும் எழுதிவச்சி நாலாயிரம் அய்யாயிரத்துக்கு நகை யும் போட்டுக்கல்யாணம் பண்ணிக்கிறேண்ணு சொல்றானே. நம்ம பெண்ணு நல்லாருந்தா நமக்குத்தானே கண்ணுக்கு அழகுன்னு பாத்தா, நீ என்னன்னா தலைக்கு மேலப் பேசுரே...... ஊம்......... நல்லதுக்குக் காலம் ஏது?......... எல்லாம் ஏம்புத்திக்குச் சொல்லணும்.

லீலா : அப்படி ஒன்று உனக்குக் கூடவா இருக்கிறது? இருந்தால் ஐம்பத்தைந்து வயதுக் கிழட்டுப் பிணத்திற்குப் பதினைந்து வயதுக் குமரியை சம்பந்தம் பேசிவிட்டு வந்து சந்தோஷப்படுவாயா? (எல்லை மீறிய ஆத்திரத்தில் வாய் விட்டு) ஐயோ அண்ணா! இந்த அக்ரமத்தை நான் யாரிடம் சொல்லி அழுவேன்! அம்மா! அவன் பணத்தையும், நிலத்தையும், நகைகளையும், துணிமணிகளையும் நீயே கட்டி அழு. எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கருமாதியும் வேண்டாம். (அங்கு கிடந்த நகை, புடவை முதலிய சாமான்களைக் காலால் எத்திவிட்டுக் கட்டிலில் குப்புற விழுந்து தேம்பித் தேம்பி அழுகிறாள். காமாட்சி இதைக் கண்டு பிரமித்துச் சிலையாய்ச் சமைந்து விடுகிறாள்.)


"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/16&oldid=1073503" இலிருந்து மீள்விக்கப்பட்டது