உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் கைதி/2

விக்கிமூலம் இலிருந்து

காட்சி 2.

இடம்: நடராஜன் வீடு.

காலம்: காலை

பாத்திரங்கள் : நடராஜன், லீலா, காமாட்சி

[லீலா புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறாள். நடராஜன் வருகிறான்.]

லீலா : எங்கே அண்ணா இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாய்ப் புறப்பட்டு விட்டீர்கள்? 

நடராஜன்: இன்று மாலை டவுன்ஹாலில் ஒரு பொதுக்கூட்டம், எங்கள் கழகச் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்காகத்தான் இன்று சீக்கிரம் புறப்பட்டுவிட்டேன்.

(காமாட்சி வருகிறாள்)

லீலா : அண்ணா! அதோ அம்மா வருகிறார்கள்.

காமாட்சி : ஆமாம், இதுதான் பொளப்பாபோச்சு பின் என்னதான் செய்வே, வேளாவேளைக்குக் கடனோ ஒடனோபட்டுச் சோறு போட நானொருத்தி இருக்கும் போது ஒனக்கு என்ன கவலை? நீ பாட்டுக்கு ஊருலே உள்ள காலிப்பசங்களை யெல்லாம் சேத்துக்கிட்டு கம்முனாட்டிக்கெல்லாங் கல்யாணம் பண்ணனும்; அவிசாரிகளெயெங்லாங் குடுத்தனக்காரி யாக்கனும் இன்னு பேசிக்கிட்டுத் திரியரே! ஏதுடா கைக் கொசந்தப் பொண்ணு ஒண்னு ஆளாயி வீட்டுலே இருக்கெ! அதுக்குக் காலாகாலத்திலே ஒரு கல்யாணத்தைப் பண்ணனுமே; எப்படி எப்படியோ இருந்த குடும்பம் இப்படிப் போயிடிச்சே நம்ம தானே இதெல்லாங் கொண்டு செலுத்தணுங்குற கவலையே மனசிலே வச்சி, ஒரு வேலைவெட்டியேப் பாப்போமின்னு இல்லாமே, காலமெல்லா இப்படி சீர்திருத்தம் மீட்டிங்கு இன்னு சுத்திக்கிட்டு இருந்தா எப்பதான் ஒனக்குக் குடும்பக் கவலை தெரியிறது? நீ யென்ன சின்னப் பிள்ளையா?...உம் (பெரு மூச்சிட்டு) என்னமோப்பா நீ செய்றது எனக்கொண்ணும் புடிச்சுக்கெல்லே. ஒங்குடும்பத்தே நீயே பார்த்துக்க. நான் எங்கேயாவது போயிடுறேன். எனக்கென்ன? கால் வயித்துக் கஞ்சிதானே? நடராஜன்: உம்; முடிந்ததா ராமாயணம்? இல்லை...... இன்னும் ஏதாவது இருக்கா?

காமா: பொறந்தவள் ஒருத்தி இருக்காளேன்னு வரப் போவ இருந்த அண்ணனையும் இந்தப் பக்கமே வராமேப் பண்ணிட்டே, அவரும் நம்பளெ திரும்பிப் பாத்து வருஷம் ரெண்டுக்கு மேலே ஆச்சு. அவரெப் பகைச்சிக்காமெ இருந்தால் ஏன் நமக்கு இந்தக் கஷ்டமெல்லாம்? இந்த ஊருலே அவரெவிடப் பெரிய மனுஷென் யாரு இருக்கா? அவர் மனசுவச்சா நம்மளும் நாலுபேருக்குப் பெருமையாத்தான் இருக்கலாம். (முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொள்ளுகிறாள்.) ஊம் அதெச் சொல்லி யென்ன பிரயோசனம்? என்னமோ அப்பா போனதெல்லாம் போகட்டும். இந்தா பாரு நடராஜா அவர் யாரு? ஒன் தாயோட பொறந்த மாமன்தானே? "மாமா! நான் இப்படியெல்லாங் கஷ்டப்படறேன். எனக்கு இதைச் செய்......”

நடராஜன்: போதும் போதும். அவன் பெரிய மனிதனாயிருந்தால் அவன் மட்டில் இருக்கட்டும்; இல்லை, அவன் குபேர சம்பத்தில் நீயும்போய் அனுபவி. என்னுடலில் உயிர் உள்ளவரை நான் யாரையும் கெஞ்சத்தயாராயில்லை.

காமா: ஆமாம்...... சொல்லப்போனக் கோவம் மட்டும் வந்துவிடும். ஏன்,நீயாத்தான் ஒரு வேலையைப் பாத்து இருக்கிறதுதானே?

நடராஜன்: பார்க்காமலா இருக்கிறேன்? பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஊர் இருக்கும் நிலை உனக்கெங்கே தெரிகிறது? பி. ஏ., எம். ஏ. படித்தவனெல்லாம் பத்து ரூபாய் சம்பளத்துக்குப் பஞ்சாய்ப் பறக்கிற இந்தக் காலத்திலே பத்தாவது படித்த நான் என்ன பண்ணுவதென்றுதான் தெரியவில்லை.

காமா: அதென்னமோப்பா, நான் சொல்லறதைச் சொல்லிட்டேன். இன்னமே நான் இந்தக் கண்றாவிகளெ எல்லாம் பார்க்காமே எங்கேயாச்சும் போயிடப் போறேன். என்னெ நம்பாதே, ஆமாம்.

நடராஜன்: அடாடாடா! இதென்ன பெரிய தொல்லையா இருக்கிறதே.

(நடராஜன் போகிறான்)

காமா: என்னடா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்; நீ போயிக்கிட்டே இருக்கிறீயே!

நடராஜன்: நீ சொல்லிக்கிட்டே இரு நான் போய்கிட்டே இருக்கேன்.

(போய்விடுகிறான்)

லீலா : ஏம்மா! நீ எப்பொழுது பார்த்தாலும் அண்ணனிடம் இப்படியே சிடுசிடென்று பேசிக் கொண்டிருக்கிறாய். அண்ணன் என்ன சிறு பிள்ளையா? அவருக்கு மட்டும் நம் குடும்பக்கவலை யில்லாமலா இருக்கிறது? அவரும்தான் எவ்வளவோ பிரயாசைப் படுகிறார். என்ன செய்யலாம்? வேலை கிடைத்தால்தானே?

காமா: ஆமாடி ஆமாம், இப்படிக் காலிப்பசங்களோடவே சேர்ந்துக்கிட்டு ஊரைச் சுத்திக்கிட்டே இருந்தா, வேலை தான் வந்து ஐயா கைமேலே கெடைக்கும். மூதேவி, அவங்கூடப் பொறந்தவதானே நீ. அவனுக்கு மேலே பேசமாட்டே போடிபோ, வேலையைப் பாருடி, வாயாடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/2&oldid=1073487" இலிருந்து மீள்விக்கப்பட்டது