உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் கைதி/31

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 31.


இடம் : திவான் பகதூர்

காலம் : மாலை மாளிகையின் தோட்டம்

பாத்திரங்கள்: ஜம்பு, லீலா.

[லீலா ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்கிறாள். ஜம்பு திருடனைப் போல் அடிமேல் அடிவைத்து வந்து பக்கத்தில் நின்று மெல்லக் கனைக்கிறான். லீலா திடுக்கிட்டுக் கண்ணைத் துடைத்துக் கொள்ளுகிறாள்.]

ஜம்பு : லீலா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? வீட்டில் ஏதாவது.....

 லீலா: நான் எப்படி இருந்தால் உனக்கென்ன? நீயேன் நான் தனியாக இருக்கும் இடத்திற்கு வந்தாய்?

ஜம்பு : நெடுநாளாகவே உன்னைத் தனித்துக் கண்டு பேச வேண்டுமென்பது ஆசை. அதற்கு இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

லீலா: எனக்குப் பேசச் சந்தர்ப்பமில்லை, நீ போகலாம்.

ஜம்பு : ஏன் என்னைக் கண்டால் பிடிக்கவில்லையா? ஆமாம், பாலசுந்தரத்தைக் கண்டால் பிடிக்கும்.

லீலா: ஜம்பு நாம் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்திலிருந்தே உன்னை எனக்கு நன்றாத் தெரியும். தயவு செய்து நீ போய்விடு. இங்கு நாம் தனித்திருப்பது தகாது.

ஜம்பு : லீலா அன்றுதான் பாலசுந்தரத்தை நம்பி இருந்தாய். இப்போது அவனும் கைவிட்டு விட்டான்! இப்பொழுதாவது என்னை உனது ஆசை நாயகனாக..

லீலா : ஜம்பு,நீ மரியாதையாகப் போகமாட்டாயா என்ன? உலகில் நான் யாரையுமே விரும்பவில்லை.

ஜம்பு : என்ன! பாலுவைக்கூடவா?

லீலா : ஆமாம்.

ஜம்பு : ஒகோ அதனால்தான் இங்கு வந்த பிறகு கூட இரண்டு முறை தபால் எழுதிக்கொடுத்து ஆள் அனுப்பினாயோ?

லீலா : யார் நானா?

ஜம்பு: நீதான், லீலா! எனக்கு எல்லாம் தெரியும். பள்ளியில் படித்த காலத்திலும் அதன் பிறகு நீ பள்ளியை நிறுத்திய பிறகும், தினமும் நீயும் அவனும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் சந்திப்பதிலிருந்து நேற்று லெட்டர் எழுதிக் கொடுத்தனுப்பியது வரை எல்லாம் எனக்குத் தெரியும். நீ என்னை ஏமாற்ற முடியாது.

லீலா : ஆமாம் உண்மைதான், அது என் இஷ்டம். அதைக் குறித்துக் கேட்க நீ யார்?

ஜம்பு : எனக்குக் கேட்க உரிமை யில்லாமலா நான் கேட்றேன்? நீ இனி பாலுவை நம்பிப் பயனில்லை. அவன் உன்னை விரும்பவே மாட்டான். அவன் என்ன என்னைவிட உயர்ந்தவன். நீ அவனிடத்தில் விரும்பும் இன்பத்தை என்னிடம் விரும்பினால் கிடைக்காதா என்ன?

லீலா : சீச்சி மடையா! என்ன சொன்னாய்?

ஜம்பு : லீலா! பதறாதே. இதற்குமுன் பல தடவைகளில் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறேன். ஆனால் நீ இன்று திவான்பகதூர் மனைவி. நான் உங்கள் வேலைக்காரன் என்று நினைக்கலாம். ஆனல் அந்த திவான்பகதூர் இந்த ஜம்புவின் கையில் இருக்கிறார் தெரியுமா? பிசாசு ஆடிக் கிழவனை ஏமாற்றுவது போல் என்னை ஏமாற்றி விட முடியாது. என்னை நீ பகைத்துக்கொண்டால் உன் ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன். லீலா, லீலா என் மனதை நீ யறியவில்லை. நான் எத்தனை வருஷங்களாக உன்னைக் கெஞ்சுகிறேன். எவ்வளவு பாடுபடுகிறேனென்பது உனக்குத் தெரியுமா? என் எண்ணத்தைக் கடைசியாக இப்படியாவது நிறைவேற்றலாமென்று தானே இங்கு திவான் பகதூர் வீட்டில் வேலைக்கு அமர்ந்து இந்தக் கல்யாணத்தையும் முடித்து வைத்தேன்.  லீலா : (ஆச்சரியத்துடன்) என்ன! கல்யாணத்தை நீ முடித்துவைத்தாயா?

ஜம்பு : ஆம், லீலா! உன் மீதுள்ள காதலால் உன்னை எப்படியாவது பாலுவிடமிருந்து பிரிக்கவேண்டு மென்று நினைத்தேன். அதற்காகவே திவான்பகதுரரிடம் வேலைக்கமர்ந்தேன். அவர் குணம் எனக்குத் தெரியுமாகையால் அவரை நாலாந்தாரமாக கல்யாணம் செய்துகொள்ளும்படி தூண்டி, உன்னைப் பற்றியும் உனது அழகைப் பற்றியும் அடிக்கடி அவரிடம் தூபம்போட்டு, உன் போட்டோவையும் காட்டி அவரை உன் அழகில் மயங்கும்படி செய்தேன். நான் ஆட்டிவைத்தேன், அவர் ஆடினார். பழைய குடும்ப வருத்தங்களைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர் பெண் கேட்க வந்தார். எப்படியும் உங்கள் அண்ணன் இருந்தால் காரியம் முடியாதென நினைத்த நான், தகுந்த சூழ்ச்சி செய்து உன் அண்ணனையும் ரங்கோனுக்குக் கடத்தினேன். உங்கள் கல்யாணத்தை முடித்துவைத்தேன். ஏன், திவான்பகதூருக்காகவா? இல்லை. எப்படியாவது உன்னை பாலுவிடமிருந்து பிரித்துவிட்டால், பிறகு.. நீ வயது சென்ற திவான்பகதூரை வெறுத்து என் இஷ்டத்திற்கு இணங்குவாயென்றுதான். லீலா! லீலா! நான் செய்ததெல்லாம் அக்ரமம்தான். ஏன் அப்படிச் செய்தேன்? உன் மீதுள்ள, ஒப்பற்ற காதலால்தான். இப்பொழுது நீ சரியென்று ஒரு வார்த்தை சென்னால் போதும். நமது வர்ழ்க்கை இந்திர போகமாய்த் திகழும். இத்திரண்ட செல்வம் எல்லாம் உன்னையே சேரும்; நாம் இருவரும் மதனும் ரதியும்போல் இன்பமாய் வாழலாம். கிழவனைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைகொள்ள வேண்டாம். அவனை ஒரே நிமிஷத்தில் முடிப்பதற்கு எனக்கு வழி தெரியும். எங்கே! எங்கே ஒரு வார்த்தை சொல்லு, ஒரு வார்த்தை சரி என்று சொல்லு. (லீலாவை நெருங்குகிறான்.)

லீலா : சீச்சீ மிருகமே! உனக்கு வெட்கமில்லை. தூ! உன் நெஞ்சு என்ன கல்லா அல்லது இரும்பா? நான் படித்த, கேள்விப்பட்ட கதைகளில் கூட உன்னைப்போல் ஒரு அசுரன் இருந்ததில்லையே! மனிதர்களிலும் இவ்வளவு கொடிய கடின சித்தம் உடையவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைத்ததில்லையே. ஐயோ, அடப்பாவி! உன் வாழ்க்கையைக் கெடுத்ததெல்லாம் நானே என்று இவ்வளவும் என் முன்னாலேயே கூற உனக்கு என்ன துணிவு? அடே சண்டாளா! இதுதான் நீ என்மேல்கொண்ட உண்மைக் காதல்! இதுதான் ஒப்பற்ற காதல், காமவெறி என்று சொல். நீ என்னை விரும்பினாய். ஆனால் நான் உன்னை விரும்பவில்லையே! தானாகக் கனியாத காயைத் தடிகொண்டடித்தால் பழுக்குமா? வெம்பி அழுகி அல்லவா போகும். (அழுகிறாள்), ஐயோ, ஜம்பு ஜம்பு உன் காம நோயைத் தீர்க்க வேறு ஒரு வழியும் தோன்றவில்லையா? எனக்காக நீ செய்த அக்ரமங்களை யெல்லாம் நீ தியாகமென்றா நினைக்கிறாய்? உன் மேல்நாட்டு நாகரீக மோகம் உன் பள்ளிப்படிப்பு உன்னை எவ்வளவு கேவல வழிகளில் செலுத்திவிட்டதென்பதை உணராமல் நீ செய்ததை யெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுகிறாயே! ஐயோ! என்னைக் கெடுத்து, என் அண்ணனை ஊரை விட்டுப் பிற நாடு கடத்தி, இத்தனையும் போதாதென்று இதுவரை உன்னை நம்பி, உன் சொல்லைக் கேட்டு, உனக்கு ஊதியம் கொடுத்துக் காப்பாற்றி வந்த திவான் பகதூரையும் கொன்று விட்டுச் சுகமடைய நினைக்கும் நீ ஒரு மனிதனா? நீ விரும்புவது காதலா? இல்லை! இல்லை! நீ கற்பனைக்கும் எட்டாத ஒரு அரக்கன்; காமவெறி பிடித்த மிருகம். பைசாச வெறிகொண்ட ஒரு காமப் பிசாசுதான் நீ ஆம்; இத்தனை அநியாயங்களையும் செய்த உனக்கு எதுதான் இனிக் கடினம் இல்லை? நீ எதையும் செய்வாய், அட சண்டாளா! நரம்பும், தோலும், எலும்பும், தசையும், மலமும், மூத்திரமும் நிறைந்த இந்த நாற்ற சரீரத்திற்குத் தானே இத்தனை அநியாயங்களும் செய்தாய்? இதோ எடுத்துக்கொள், எடுத்துக்கொள், நானே கொடுக்கிறேன். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். ஆனால் என் ஹிருதயத்தை, நான் வேறொருவருக்கு அளித்துவிட்ட என் உள்ளத்தை என் இன்ப நாயகன் இடைவிடாது இருக்கும் இதயத்தை (ஆவேசம் வந்தவளைப் போல் நெஞ்சில் திடீர் திடீரென்று பலங்கொண்டவரை தாக்கிக்கொள்ளுகிறாள். ஜம்பு நடுங்குகிறான்.) நீ கவர்ந்து விட முடியாதே? (அடியற்ற மரம்போல் மூர்ச்சையோடு கீழே சாய்கிறாள்.)

ஜம்பு : லீலா! லீலா! தெரியாத்தனம், மோக வெறி, என்னை மன்னித்து விடு; என்னை மன்னித்து விடு. நான் இனி உன் சகோதரன், சத்தியமாக நான் இனி உன் சகோதரன். லீலா!, லீலா! (லீலா கீழே விழுவதற்கு முன், ஜம்பு தன் கைகளில் தாங்கிப் பக்கத்தில் உள்ள கல்லின் மேல் கிடத்துகிறான். இச் சமயம் அத் தோட்டத்திற்கு அப்புறம் ரோட்டில் போய்க்கொணடிருந்த பாலு, ‘லீலா லீலா’ என்ற ஜம்புவின் சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் தோட்டப் பக்கம் எட்டிப் பார்க்கிறான். அப்போது லீலா ஜம்புவின் அணைப்பில் இருப்பதைக் கண்டு தப்பபிப்ராயத்தோடு பற்களைக் கடித்துக்கொண்டு திரும்பி விடுகிறான். இதே சமயம் ஜம்புவும் பாலுவைப் பார்த்து விடுகிறான், லீலாவுக்குத் தண்ணீரைத் தெளித்து விசிறிக் கொண்டே) ஐயோ! இதென்ன கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதைபோல் ஆகி விட்டதே! இந்த மகா உத்தமிக்கு நான் செய்த தீமை யெல்லாம் போதாதென்று கடைசியில் நான் செய்த நன்மையுமல்லவா தீமையாகிவிட்டது. மயங்கி வீழ்ந்த லீலாவைத் தொட்டுத் தூக்கியதைக்கண்ட பாலு, என்னைத் தவறாகவல்லவா நினைத்துக்கொண்டு போகிறான். இனி அவனை எப்படி இந்த உண்மையை நம்பச் செய்வேன்? (கண்ணீர் விடுகிறான், லீலா மெள்ளப் புரண்டு கண்ணைத் திறக்கிறாள்) லீலா, லீலா, இதோ பார்! நான் இனி உன் சகோதரன். சத்தியமாக நான் இனி உன் சகோதரன். லீலா! நீ என்னை மன்னிக்க மாட்டாயா? என்னை மன்னிக்க மாட்டாயா?

(கைகளைப் பிடித்துக் கொண்டு கதறுகிறான், லீலாவும் கண்ணீர் விடுகிறாள்.)

லீலா : உன்னைக் கடவுள் மன்னிப்பார். எழுந்திரு.

ஜம்பு : சரி, லீலா! கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும் என்பது போல் இப்போதும் நமக்கு ஒரு ஆபத்து. மயங்கி வீழ்ந்த உன்னைத் தூக்கும்போது சப்தம் கேட்டு இப்பக்கம் போன பாலு எட்டிப் பார்த்துவிட்டு நம்மீது தப்பபிப்ராயம் கொண்டு போகிறான். நான் சீக்கிரம் போய் உண்மையை விளக்கி அவன் சந்தேகங்களைத் தெளிவித்து முன்பு உங்களைக் கெடுத்துப் பிரித்த இந்தச் சண்டாளனே ஒன்றுபடுத்தியும் வைத்துவிடுகிறேன். நீ போ பங்களாவுக்கு நான் இதோ வருகிறேன்.

 லீலா :வேண்டாம் வேண்டாம். அவருக்கு இந்தச் சந்தேகம் மட்டுமல்ல. அவர் சந்தேகங்கள் எல்லாம் தானாகவே ஒரு நாள் நிவர்த்தியாகும். அப்போது அவர் உணர்ந்தால் போதும்.

ஜம்பு : இல்லை, இல்லை, லீலா இனி உன் அண்ணன் நடராஜன் ரெங்கோனில் இருக்கிறாரென்று நினைக்காதே. இதோ இதோ இருக்கிறேன். இனி எனக்கு உன் இன்ப வாழ்வைக் கண்டு ஆனந்திப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. உண்மை யாவும் பாலுவுக்கு உரைப்பேன். அவனிடமும் மன்னிப்பைப் பெறுவேன். அவன் சம்மதத்தையும் பெறுவேன். திவான் பகதூரே சம்மதித்து உங்கள் மறுமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்வேன். அதுதான் நான் உங்களுக்குச் செய்த தீமைகளுக் கெல்லாம், பிராயச்சித்தமாகும். போ, நீ போ, நான் வருகிறேன்.

(ஓடுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/31&oldid=1073524" இலிருந்து மீள்விக்கப்பட்டது