உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் கைதி/35

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 35.


இடம்: ஷண்முகநாத புரத்திலிருந்து

காலம் : மாலை

70-மைல்களுக்கு அப்பாலுள்ள ஊரில் ஒரு பொதுத் தோட்டம்.

[ஆண்களும் பெண்களுமாக அநேகர் உலாவுகிறார்கள். ஒரு புறம் தனியாய் இருவர் அமர்ந்து அன்றைய தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். திவான் பகதூரைக் கொலைசெய்து விட்டு ஷண்முகநாதபுரத்தை விட்டு ஓடிய நடராஜன் உருமாறி அழுக்கு நிறைந்த கந்தல் ஆடையுடனும் நீண்ட தாடியிடனும் பைத்தியம்போல் சுற்றி வருகிறான்.)

நபர் 1 : (பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து ஆச்சரியத்துடன்) திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை கொலை வழக்கு நாளைக்குத் தீர்ப்பாமே?

(நடராஜன் திடுக்கிட்டு அதைக் கவனிக்கிறான்).

நபர் 2 : நாளைக்கா? எங்கே அதைப் படியுங்கள்!

நபர் 1 : (பத்திரிகையைப் படிக்கிறார்)

திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை கொலை வழக்கு

பொருந்தாமணத்தின் கொடுமை!

கள்ளக்காதலன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்!

ஷண்முகநாதபுரம், ஜூன்-2

இன்று இவ்வூர் பிரபல மிராஸ்தார் திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை கொலை வழக்கு செஷன் ஜட்ஜ் அமானுல்லாகான் அவர்கள் முன் விசாரிக்கப்பட்டது. எதிரி தான் கொலை செய்தது உண்மை என்று ஒப்புக் கொண்டான். எதிரி கொலை செய்ய நேர்ந்த காரணத்தைக் கூற மறுத்துவிட்டான். எதிரிக்கும் கொலை செய்யப்பட்டவரின் நான்காவது மனைவிக்கும் ஏற்பட்ட கள்ளக் காதலே கொலைக்குக் காரணமென்று நம்பப்படுகிறது. மேற்படி கொலை வழக்கு சம்பந்தமாய் நாளைத் தீர்ப்பளிக்கப்படுமெனத் தெரிகிறது. (ந. நீ.)

(படித்து முடிக்கும்வரை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நடராஜன் ஆவேசத்துடன் எழுந்து) என்ன கொலை செய்தவன் பாலசுந்தரமா? எங்கே எங்கே அதைக் கொடுங்கள்! (பத்திரிகையை அவர்கள் கையிலிருந்து வெடுக்கென்று பறித்து மளமளவென்று படித்துக் கீழே போட்டுவிட்டு) ஐயய்யோ! இதென்ன அநியாயம்? அவன் நிரபராதியாயிற்றே! பாலசுந்தரம் நிரபராதியாயிற்றே! பாலு.. பாலு...

(ஓடுகிறான்)

நபர் 1 : இதென்ன பைத்தியம்..... இது புது மாதிரியாக இருக்கிறதே!

நபர் 2 : லேட்டஸ்டு மாடல் போலிருக்கிறது.

(இருவரும் சிரிக்கிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/35&oldid=1073529" இலிருந்து மீள்விக்கப்பட்டது