அந்தமான் கைதி/37

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 37.


இடம் : அந்தமான் தீவு.

காலம் : இரவு.

பாத்திரங்கள் : சின்னக் கைதி, பெரிய கைதி.
[ஆரம்பக் காட்சியின் தொடர்ச்சி. மறுபடியும் அந்தமான் தீவில் கைதிகளின் சம்பாஷணை]

சின்னக் கைதி :பிறகு வழக்கு அப்பீல் செய்யப்பட்டு லீலாவையும், பாலுவையும் பிரித்துவிட வேண்டுமென்பதற்காக, திவான் பகதூரிடம் வேலைக்கமர்ந்து திவான்பகதூருக்குத், தூபம்போட்டுக் கல்யாண ஏற்பாட்டை ஆரம்பித்து எங்கள் வீட்டை ஏலத்துக்குக் கொண்டு வந்து, என்னை ரெங்கோனுக்குக் கடத்தி, என் தாயை மயக்கி, பாலுவுக்கும் லீலாவின் மேல் வெறுப்புண்டாகச் செய்து திவான்பகதூருக்குக் கல்யாணம் முடித்து, முடிவில் லீலாவைத் தானே அடைய வேண்டுமென அசுர முயற்சியும், சூழ்ச்சிகளும் செய்த அதே ஜம்பு, தன் தவறுகளை உணர்ந்து வருந்தி, அதற்குப் பிராயச்சித்தமாகவேனும் பாலுவை விடுதலை செய்து, லீலாவையும், பாலுவையும் சதிபதிகளாக்கிப் பார்க்க வேண்டும் என்ற தியாக புத்தியோடும் தீவிர வைராக்கியத்தோடும் தன் பிதுரார்ஜித சொத்துக்கள் யாவையும் அப்பீல் வழக்குக்கே செலவழித்து வழக்கை வெற்றியடையச் செய்தான். லீலா, பாலு இவர்களை ஒன்று படுத்தி வைக்க வேண்டியதே தனது வாழ்க்கையின் லட்சியமாக கொண்ட ஜம்புவின் தியாகம் என்றும் மறக்க முடியாதது.

(இது சமயம் தன்னை மீறி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுகிறான்.)

பிறகு பாலசுந்தரம் விடுவிக்கப்பட்டான். குற்றத்தை நானே ஒப்புக் கொண்டதற்காகத் தூக்குத் தண்டனையை மாற்றித் தீவாந்திர சிறை விதிக்கப்பட்டு நான் இங்கு வந்தேன்.

பெரிய கைதி : (பெரு மூச்சிட்டு) அப்படியானால் அந்தப் பையன் பாலுவுக்கும் உன் தங்கைக்கும் மறுபடியும் கல்யாணம் ஆகிவிட்டதா?

சி. கைதி : எனக்குத் தெரியாது. ஆனால் அதுதான் என் மனப்பூர்வமான ஆசை. அதற்காகத்தான் நான் இப் பிறவியில் கொலைகாரனென்ற பழியையும் தேடிக் கொண்டேன். இன்றும் அதற்காகத்தான் இந்தச் சிறைச்சாலையிலே தவமிருக்கிறேன். என்னிலும் பன் மடங்கு தீவிர வைராக்கியம் கொண்ட ஜம்பு அங்கு இருக்கும்போது அவர்கள் மறுமணம் இதுவரை தாமதித்திருக்க முடியாதென்றே நினைக்கிறேன்.  (நீண்ட பெருமூச்சு, மேலே பார்த்து) இன்ப அலைகளே இதயத்தில் எழுப்பும் பூரணச் சந்திரன் பொலிவுற்றுத் திகழும் இந்த இரவில்கூட அவர்கள் ஆனந்தமாய்த் தங்கள் மறுமணத்தால் புத்துணர்ச்சி பெற்ற புது வாழ்க்கையை நடத்துவார்கள், (கண்களை மூடிப் புன்முறுவல் தவழ) ஆம், நடத்துவார்கள்; அனுதினமும் என் மனக்கண்ணால் அவர்கள் உல்லாச வாழ்க்கையின் இன்பக் கனவைத்தான் காணுகிறேன். இதோ! இதோ பாருங்கள். இப்பொழுதுகூட அதே இன்பக் காட்சிதான்!

(கண்ணை மூடிக்கொண்டே வெட்ட வெளியைக் காட்டிப் பைத்தியம்போல் அதோ அதோ! என்று தனக்குள் மகிழ்ச்சி அடைகிறான்.)

பெ.கைதி: ச்சு-ச்சு-ச்சி (பெருமூச்சிட்டு) ஐயோ! பாவம், ஒரு பெண்ணால் உன் வாழ்க்கையே கெட்டு விட்டதே!

சி.கைதி: இல்லை, இல்லை! தாத்தா. நான் கெட்டதற்குக் காரணம் அந்தப் பெண்ணா? சற்று யோசனை செய்து பாருங்கள்.

பெ.கைதி: பின்னே என்னப்பா?

சி.கைதி: இப்படிபட்ட அக்ரமங்களுக்கெல்லாம் இடமளிப்பது நம் இந்து சமூகமல்லவா? வேறு எந்த நாட்டில் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன? (சற்று மெளனம், பெருமூச்சு) இருந்தாலும் தாத்தா எனக்கு இப்போது ஆனந்தமாய்த்தான் இருக்கிறது. என் வாழ்க்கையின் லட்சியத்தை நிறைவேற்றி விட்டேன். இன்றைக்கு என் தங்கை தன் காதலனோடு இன்ப வாழ்க்கை நடத்துவாளென்பது திண்ணம். எங்கள் கதையைக் கேட்ட இளம் காதலர்களும் அவரவர்களின் வாழ்க்கை லட்சியத்தில் வெற்றிபெற்று இன்ப வாழ்க்கை வாழ்வார்களானால், அதுவே போதும்; அதுதான் என் ஆசை அதுதான் நான் இந்த ஜென்மத்தில் கடவுளிடம் கோரும் கைமாறு. என் தங்கையைப் போன்ற இந்நாட்டு இளம் சகோதரிகள் சுகமடைவதற்காக, இந்தியத் தாயால் ஈன்றெடுக்கப்பட்ட நான் இந்த அந்தமான் தீவில் ஒரு கைதியாக இருப்பதில் எனக்குத் திருப்திதான். என்னைப் பார்த்தாவது இந்நாட்டுத் தாய் தந்தைமார்களுக்குப் புத்தி வந்தால், அதுவே இந்த அந்தமான் தீவை எனக்கு இந்திரலோகமாக்கிவிடும்.

பெ.கைதி: அப்பா! நீ பெரிய வைராக்கியசாலிதான், உம் சரி-நாழிகை அதிகமாகிவிட்டது. வார்டர் தேடுவார், வா போகலாம்.

(போகிறார்கள்.)
சுபம்
"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/37&oldid=1073531" இலிருந்து மீள்விக்கப்பட்டது