அந்தமான் கைதி/4

விக்கிமூலம் இலிருந்து
காட்சி 4


இடம்: பூந்தோட்டம்

காலம்: மாலை

பாத்திரங்கள்: லீலா, பாலு, நடராஜன்.

[லீலா ஒரு கல்லின் மீது அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறாள்]
(பாட்டு)

இன்பம் இன்பம் எழில்மிகும் அதிசய
மலர் வனமே! (இ)

இன்னிசைக் குயில்கள் இதயம் மகிழ
எங்கும் கூவுதே! (இ)

தென்றலினுல் தேகமும் சிலிர்த்திடுதே!
சிந்தை குளிர்ந்திடுதே!
செல்வ மணாளனை காணேன்!
(இ)

மாலையும் போகுதே! காலம் வீணாகுதே!
காதலன் வரவைக் காணேன்! (இ)

[பாலு பின்புறமாக வந்து லீலாவின் கண்ணைப் பொத்துகிறாப். திடுக்கிட்டுத் திரும்புகிறாள்]

பாலு : லீலா! லீலா! இதோ பார், என்னுடன் பேச மாட்டாய்? (முகத்தைத் திருப்பிப் பார்த்து) ஹா! இதென்ன கண்ணீர்? ஏன் அழுகிறாய் ? இங்கே பார். என்னைப் பார்க்க மாட்டாயா? ஓஹோ ! உன்னிடம் நான் சொன்னபடி நேற்று வரவில்லையென்ற கோபம்தானே? எனக்குத் தெரியும்! இப்படியெல்லாம் ஆகுமென்று சொன்னால் கேட்கிறார்களா? சுத்த மடையர்கள், பிரன்ஸ்களாம் பிரன்ஸ். நான் என்னென்னவோ சாக்குப் போக்குகள்தான் சொன்னேன்; கேட்கிறார்களா? விடாப் பிடியாகச் சினிமாவுக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான்கு பேர் பிடிவாதம் செய்யும்போது எப்படி மறுக்க முடியும்?

லீலா : இன்றைக்கு மட்டும் ஏன் வந்தீர்கள்? யாரும் சினிமா ட்ராமாவுக்குக் கூப்பிடவில்லை போலிருக்கிறது?

பாலு : (சிரித்துக் கொண்டே) எனக்கு அதுதான் வேலை? லீலா, ஏதோ ஒரு நாளும் கூப்பிடாதவர்கள் கூப்பிடுகிறார்களே என்று போய்விட்டேன். இதற்காக இப்படிக் கோபிக்கலாமா?

லீலா : ஒருவரிடம் வருவதாக வாக்குக் கொடுத்தால் தலை போகிற காரியம் வந்து தடுத்தாலும் வந்துதான் தீர வேண்டும். அப்படிச் செய்யாதவர்களை எனக்குப் பிடிப்பதே இல்லை. இது நம்மவர்களிடம் உள்ள ஒரு பெரிய கெட்ட பழக்கம்.

பாலு : வாஸ்தவந்தான்; இந்தியர்களுக்குப் "பன்ச்சு வாலிட்டி'யே இல்லை யென்று எல்லோரும் தான் சொல்லுகிறார்கள். ஆனால், நான் உன் விஷயத்தில் மட்டும் இனிமேல் நீ சொன்ன சொல்லைத் தவறவே மாட்டேன். போதுமா? இதற்காகச் சிறு குழந்தையைப் போல் அழலாமா?...... உம்...... பேச்சு மட்டும் ஒரு கூடைப் பேச்சுப் பேசுகிறாயே! (ஒரு மலரைக் கிள்ளி அவன் மீது வீசுகிறான்)

லீலா : (புன் முறுவலோடு) ஆமாம், கொஞ்ச வந்து விட்டீர்கள். நான்படும் கஷ்டம் உங்களுக்கென்ன தெரி கிறது? இதோ பாருங்கள்! இனிமேல் இப்படி யெல்லாம் செய்தால் என்னை நீங்கள் பார்க்கவே முடியாது.  பாலு : ஏன்? வீட்டைவிட்டு வெளியில் வரவே மாட்டாயோ?

லீலா : ஆமாம். உங்களுக்கு எப்பொழுதும் இந்த விளையாட்டுப் பேச்சுத்தான். என் மனவேதனை உங்களுக்கென்ன தெரிகிறது?

பாலு : லீலா! ஒரு விஷயமல்லவா, அதைச் சொல்ல மறந்து விட்டேனே.

லீலா : என்ன?

பாலு : இன்று மாலை காந்தி மைதானத்தில் பிரமாதக் கூட்டம். உன் அண்ணாவின் பிரசங்கம் ரொம்பப் பிரமாதம். அதனால்தான் நான் வரக்கூடத் தாமதம்.

லீலா : அப்படியா? இன்னிக்குக் கூட்டத்தில் அண்ணாவும் பேசினரா? அவர் பேசுவதாக என்னிடம் சொல்ல வில்லையே? ஐயோ பாவம், காலையில் போனவர் இன்று பகல் உணவுக்குக்கூட வரவில்லை.

பாலு : சாப்பாட்டுக்குக்கூட வரவில்லையா, ஏன்?

லீலா : ஆமாம், புண்ணில் கோலிடுவதுபோல, சதா ஒரு மனிதனை இடித்து இடித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்?

பாலு : நீ சொல்வதொன்றும் எனக்கு விளங்கவில்லையே?

லீலா : வறுமையும் வயதும் அதிகம் ஆக ஆக, என் அம்மா வின் புத்தியும் பொறுமையும் குறைந்து கொண்டே வருகிறது போலிருக்கிறது. அவரைக் காணும் போதெல்லாம் “வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுகிறாய்; கொஞ்சங்கூடக் கவலையில்லை; அந்தக் கடன் கட்டவில்லை, இந்தக் கடன் கொடுக்கவில்லை” என்று சிடுசிடென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் வீட்டில் இருப்பது வேறு அவர்களுக்குப் பெரிய பாரமாய் இருக்கிறதாம். அம்மா பேச ஆரம்பித்தால் உடலே குன்றிவிடுகிறது. பாவம் அவர் என்ன செய்வார்? வேலைக்காக அலையாத இடமே இல்லை.

பாலு : அடடா! பாவம் உலகமே இப்படித்தான். நல்லவர்களுக்கும் திறமைசாலிகளுக்கும், இவ்வுலகத்தில் மதிப்பே யில்லை. அவர்கள் உழைத்தாலும் தகுந்த ஊதியம் கிடைப்பதும் இல்லை. அடாடாடா! இன்றையக் கூட்டத்தில் அவர் பேசியிருக்கிறார் பாரு அதைப்பற்றி என்ன அபிப்பிராயம் சொல்வதென்றே எனக்கு விளங்கவில்லை......

லீலா : (ஆவலோடு) தாங்கள் முழுமையும் கேட்டீர்களா? அடாடா! நான் கேட்க முடியாமல் போய்விட்டதே! எதைப் பற்றிப் பேசினார்? என்னென்ன பேசினார்?

பாலு : பால்ய விவாகத்தின் தீமைகளைப் பற்றியும் காதல் மணம் மறுமணம் இவற்றின் அவசியத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இன்னும் மொழிப் பற்று, நாட்டுப் பற்று, அடிமை வாழ்வின் கேவல நிலை, சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம், பெண்கள் முன்னேற்றம், விபசாரத்தின் இழிவுத் தன்மை, தற்காலக் கல்வி முறையின் சீர்கேடு, கைத் தொழில், கிராம முன்னேற்றம் அடாடாடா! இனி மேல் சொல்லவேண்டியது என்பதாக ஒன்றும் பாக்கியில்லை. அப்பப்பா! என்ன கம்பீரமான பேச்சு, உயர்ந்த உவமானங்கள்; ஆணித்தரமான எடுத்துக் காட்டுகள்! ஒவ்வொரு வார்த்தைக்கும் சபையில் கர கோஷமும் ஆரவாரமும்தான். உன் அண்ணாவும் இவ்வளவு உயர்வாகப் பேசுவாரென்று நான் எதிர் பார்த்ததே இல்லை. எனக்கே ஆச்சரியமாகப் போய் விட்டது, போயேன்!  லீலா : இதுதானா பிரமாதம்! இன்னும் அவர் எழுதிக் கத்தை கத்தையாய்க் குவித்திருக்கும் கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் பார்த்தால் நீங்கள் அப்படியே பிரமித்து விடமாட்டீர்களா!

பாலு : ஏன்! அதையெல்லாம் திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டாலென்ன?

லீலா : அதற்கும் காலம் வரவேண்டாமா? இந்த உலகத்தில் நல்ல சரக்குகளுக்கு மதிப்பில்லை என்று இப் பொழுதுதானே சொன்னீர்கள்.

பாலு : ஆமாம்; அதுவும் சரிதான்.

லீலா : மேலும், 'வித்தைக்குச் சத்துரு விசனமும் தரித்திரமும்' என்பதுபோல் ஓயாக் கவலையும் பொழுது விடிந்து பொழுது போனால் சதா இடிச் சொல்லுமாக இருந்தால் அவர்தான் என்ன செய்ய முடியும் முதலில் இதைப் பாருங்களேன்! அவர் பிரசங்கத்திற்குப் போவதே எங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லையாம்! பிரசங்கம் செய்வது கேவலமாம்.

பாலு : ஆகா! ரொம்ப நன்யிறாருக்கிறது...... கர்னாடகங்களுக்கு இதைப்பற்றி என்ன தெரியும்? அதெல்லாம் இருக்கட்டும். நமது காதலைப்பற்றி...... உன் அண்ணாவுக்கு ஏதாவது தெரியுமா?...

[இதுசமயம் தற்செயலாக அந்தப் பக்கம் வந்த நடராஜன் இவர்களைக் கண்டு திகைத்து மறைந்து நின்று கவனிக்கிறான்]

லீலா : (நாணத்துடன்) ஆமாம் உங்களுக்கு இதுதான் வேலை.

பாலு : வந்துவிட்டதா இந்தப் பாழாய்ப்போன வெட்கம்?

லீலா : இதெல்லாம் என்ன கேள்வி?  பாலு : ஏன்? இது அவசியமான கேள்வி இல்லையா என்ன? காதல் மணத்தின் அவசியத்தைப் பற்றி மேடையில் நின்று பிரமாதமாய்க் கர்ஜிக்கும் வீரராயிற்றே, ஒருக்கால், நம் விஷயம் அவர் காதுக்கு எட்டினால் நமது காதலுக்கும் ஒரு விமோசனம் உண்டாகுமே என்றுதான் நினைத்தேன்.

லீலா : (புன்முறுவலோடு முகத்தைச் சொடுக்கிவிட்டு) தெரிந்தால், விமோசனம்தான். என் அண்ணா என்ன உங்களைப்போல் பிறர் சொல்லுக்கு அஞ்சும் கோழையென்றா நினைத்தீர்கள்?

பாலு : ஆஹா ஹா! சொல்ல வேண்டுமா என்ன! சூரப் புலிதான்! இப்படிச் சொந்த விஷயத்தில் நிறைந்த ஊழலை வைத்துக்கொண்டு உலகத்திற்கு ஞானோபதேசம் செய்யும் மேடைப் பிரசங்கிகளையும் தலைவர்களையும் எத்தனையோ பேர்களை நான் பார்த்திருக்கிறேன்.

லீலா : இதோ பாருங்கள்! என் அண்ணாவைப்பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் முடியாது. இனிமேல் எனக்கு முன்னால் அவரைப்பற்றி இப்படியெல்லாம் பேசாதீர்கள்.

(முகம் கடுத்துத் திரும்புகிறாள்)

பாலு : அடடே மைத்துனராயிற்றே என்று விளையாட்டாய்ப் பேசினால், அதற்குள் நீ பிரமாதமாகக் கோபித்துக் கொள்ளுகிறாயே வேண்டுமானால் நீயும் என்னுடன் வா, உன் முன்னாலேயே நான் அவரை இன்னும் கேலி செய்கிறேன்; அவர் என்ன என்ன செய்கிறார் என்று பார்ப்போம். என்ன? இப்போதே வருகிறாயா?  லீலா : வேண்டாம் வேண்டாம்! உங்கள் தைரியம் எனக்குத் தெரியாதா என்ன? எதிரி இல்லாத இடத்தில் நீங்கள்...

பாலு : இருந்தால்தான் என்ன? நான் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக உன்னை நான் கல்யாணம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவார்; அவ்வளவுதானே. குற்றத்திற்குத் தண்டனையாகவும் அவர் சொல்லுக்காகவும் எதிர் பார்த்த உன்னை ஏற்றுக்கொள்வதுதான் எனக்குக் கஷ்டம்?

லீலா : ஆஹா ஹா! எவ்வளவு பெரிய தண்டனை! சாமர்த்தியத்தைப் பாருங்கள்!... சரி. அதிருக்கட்டும்; உங்கள் வாதி ஜம்பு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறான்?

பாலு : என் வாதியா! நம் இருவருக்கும் வாதி யென்று சொல்லு. மூன்றாவது முறையாக ஆறாவது பாரத்திலே இந்த வருஷமும் கோட் அடித்துவிட்டானென்று நான் முன்பே சொல்லவில்லையா? பிறகு இப்படியே பலரோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். இப்பொழுது உங்கள் மாமா இருக்கிறாரே திவான் பகதூர், அவருக்கு இவன் தான் அந்தரங்கக் காரியதரிசியாம்; கேட்கவேண்டுமா? இனி மேல் அவன்தான் திவான்பகதூர்.

லீலா : ஒஹோ! அதுதான் நிமிஷத்திற்கு ஒரு அலங்காரம் செய்துகொண்டு வீதியில் ஒரு நாளைக்கு நூறுதரம் ராஜ நடை நடக்கிறான் போலிருக்கிறது.

பாலு : என்ன! உங்கள் வீதிப்பக்கமா? உன்னிடம் எவ்வளவு அவமானப்பட்டாலும் அவனுக்குக் கொஞ்சங் கூட வெட்கமே இல்லையே!......  லீலா : என்னமோ நாய் முழுத் தேங்காய்க்கு ஆசைப்பட்ட கதையைப் போலத்தான்.

பாலு : ஏன் லீலா! நாம் இருவரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது? அப்பா அம்மா இருவரும் சில நாளாக மெள்ளக் கலியாணப் பிரச்னையை ஆரம்பம் செய்கிறார்கள். எனக்கோ வாய்விட்டு அவர்களிடம் சொல்ல யோசனையாயிருக்கிறது.

லீலா : (நீண்ட பெருமூச்சுடன்) யோசனையின் முடிவு இரண்டில் ஒன்றுதானே?

பாலு : லீலா என்ன சொல்லுகிறாய்?

லீலா : ஒன்றுமில்லை ஒன்று வாழ்வு. இல்லையேல் சாவு இது தானே... என் முடிவு... அதுதான் உங்கள் முடிவில் இருக்கிறது என்றேன். நான் வேறென்ன சொல்வேன்?

பாலு : (பதட்டத்துடன்) இல்லை, இல்லை. லீலா! நீ அப்படி ஒன்றும் தவறாக நினைத்துவிடாதே. அதற்காகத்தானே அவர்கள் வார்த்தைக்குப் பிடிகொடுக்காமலே நாளைக் கடத்திக் கொண்டு வருகிறேன். லீலா அதோ பார்த்தாயா! இப்பொழுதுதான் வானத்தில் பூரணச் சந்திரன் உதயமாகிறான். ஆஹா!

(பாலு - லீலா - பாட்டு)

பாலு : ஒளி நிலவின் எழில் பாராய்!

லீலா : உமையே நிகராமோ!

(ஓ)

பாலு : களிநடமிடு மயில் போலே!

லீலா : காதலரே நாமே!

பாலு : பூதல் மேல் மகிழ்வோம்

(ஓ)

லீலா : இனிதாகும் மலராவேன்! 

பாலு : மலர் மேவும் வண்டாவேன்!

லீலா :
உள்ளமெலாம் இன்பமெனும்
தெள்ளமுதத் தேன் பாய!

பாலு :
கள்ளமிலாக் காதல்
உனை நான் மறவேனே!

லீலா : உயிர் நீர் உடல் நானே!

பாலு : உயிர் மாமட மானே!

இருவரும் :
நிலவும் கலையும் போல்
மலரும் மணமும் போல்
உலகினில் வாழ்வோமே......

லீலா : (நகர சபை மணி 7 அடிக்கும் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு) அடடே மணி ஏழாகிவிட்டதே சரி, அம்மா தேடுவார்கள். அண்ணாவும் இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார்; நான்...... போய்வரட்டுமா?

பாலு : லீலா அதற்குள்ளாகவா? இன்னும் சற்று நேரம்...

லீலா  : இல்லை, இல்லை. அதிக நேரம் ஆகிவிட்டது. நாளை மாலை சந்திக்கலாம். நான் வரட்டுமா?

பாலு : நாளை மாலை 5½ மணிக்கு. மறந்துவிட மாட்டாயே?

லீலா : மறக்கமாட்டேன், நான் வருகிறேன்.

(லீலா புன்முறுவலோடு மறைகிறாள். அவள் சென்ற திக்கை நோக்கிக் கொண்டிருந்து விட்டு சிறிது நேரத்தில் பாலுவும் செல்லுகிறான், மறைந்திருந்த நடராஜன் வெளியே வந்து அவர்கள் இருவரையும் பார்த்துப் பெருமூச்சுடன் புன்முறுவல் பூக்கிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/4&oldid=1073490" இலிருந்து மீள்விக்கப்பட்டது