உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் கைதி/6

விக்கிமூலம் இலிருந்து

காட்சி 6.

இடம்:திவான்பகதூர் மாளிகை

காலம் : மாலை

பாத்திரங்கள்:
திவான்பகதூர், முனியாண்டி, ராமசாமி சேர்வை.

பொன்: (நடமாடிக்கொண்டே பெருமூச்சு விடுகிறார்) என்ன மமதை என்ன திமிர் நிற்க நிழல் இல்லை! குடிக்கக் கூழில்லே! என் கெளரவமென்ன! அந்தஸ் தென்ன! கொஞ்சங்கூட கவனிக்காமல் பேசிவிட்டானே.......... மடையன். கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்வதுபோல் அவன் என்னைப் பகைத்துக்கொண்டான். இருக்கட்டும்; கூடிய சீக்கிரம் திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை யாரென்பதைத் தெரிந்துகொள்ளச் செய்றேன். (சோபாவில் சாய்கிறார். தரகன் முனியாண்டிப் பூசாரி "மகமாயி' என்றபடி வருகிறான். குழைந்து ஒரு பக்கம் ஒதுங்கி வணங்குகிறான்.)

பொன் : வாய்யா வா! நானும் உன்னைத்தான் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன். சரி, சேர்வையைப் பார்த்தாயா? அவன் என்ன சொன்னான்?

முனி : சொல்றதென்னங்க? இந்த முனியாண்டி போர காரியம் முடியாமே இருக்குமா என்ன? எல்லாம் ஒங்க தயவை எதிர்பார்த்துத் தானே ஆகணும்.

(சேர்வை வருகிறான்)

சேர்வை : நமஸ்காரங்க!

பொன் : வாய்யா வா! உன் பெயர்தான் ராமசாமி சேர்வையா? சேர்வை : ஆமாங்க.

பொன் : சரி அப்படி உட்காரு.

(சேர்வை நிற்கிறான்)

முனி: அட சும்மா உட்காரய்யா! எஜமான் அப்படியெல்லாம் ஒன்றும் வித்தியாசமா நினைக்கமாட்டாரு.

(சேர்வை உட்காருகிறான்)

பொன்: ஊம்...நீர்தான் என் மைத்துனர் நாராயணசாமி பிள்ளை வீட்டின் பேரில் பணம் கொடுத்திருக்கிறீரோ?

சேர்வை : ஆமாங்க.

பொன்: எவ்வளவு?

சேர்வை: ஆயிரத்தி ஐநூறு ரூபாயிங்க ஆறு வருஷம் ஆச்சுங்க, ஒன்று வட்டி போட்டுப் பத்திரம் எழுதினது. இப்பக் கிட்டத்தட்ட மூணு ரூபாய்க்கு மேலே ஆவுமுங்க.

பொன்: நீ ஏன் அந்தப் பணத்தை இன்னும் வசூல் பண்ணாமல் இருக்கிறாய்?

சேர்வை: என்ன பண்றதுங்க நல்லா வாழ்ந்த குடும்பம், நொடிச்சுப்போச்சு. அந்தப் புண்ணியவான் இருந்த காலத்திலே எனக்கு எவ்வளவோ ஒதவி செய்திருக்காருங்க. இப்போ ஊட்டே ஏலத்துக்குக் கொண்டாந்தாத்தான் பணம் வரும்போல இருக்கு, பாவம்! அந்த வீடும் போயிட்டா அவரு சம்சாரம் புள்ளே குட்டிங்க எல்லாம் எங்கே போவுமுன்னுதான் யோசிக்கிறேன்.

முனி: அட போய்யா போ. அதெல்லாம் பாத்தா இந்தக் காலத்திலே எப்படியய்யா பிழைக்க முடியும்? இந்தப் பஞ்சகாலத்திலே இரண்டாயிரம் மூவாயிரம் போகிறதென்றால் சாமானியமா என்ன?

சேர்வை : ஆமாங்க! அதுக்கு என்னங்க பண்றது?

முனி : ஐயா சொல்றபடி கேட்டா ஒனக்குப் பணத்துக்குப் பணமும் வரும் ஐயா தயவும் கிடைக்கும். அவுங்கக் குடும்பத்துக்கு உபகாரம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.

சேர்வை : நெஜமாவா? அப்புடீன்னா அதையேங்க நான் வேண்டாங்குறேன்? எப்படியாச்சும் அவங்களும் நல்லா இருக்கணும். எனக்கும் பணம் கெடைக்கனும.

முனி : அப்படீன்னா நான் சொல்றபடி செய்தா அது சீக்கிரம் முடியும்.

சேர்வை : என்ன செய்யச் சொல்றீங்க?

முனி : நீ உடனே கோர்ட்டுலே தாவாப் போட்டு எவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டை ஏலத்துக்குக் கொண்டு. வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டார வேணும்.

சேர்வை : ஐயோ பாவம். அவங்க பணத்துக்கு எங்கேங்க போவாங்க?

பொன் : அட அந்தக் கவலை உனக்கெதற்கையா? பணம் கொடுக்கத்தான் நான் இருக்கிறேனே.

சேர்வை : அப்புடீன்னா இப்பவே குடுத்துடுங்களேன். நான் வேணுமின்னாலும் எதாச்சுங் தள்ளிக் குடுக்கிறேன். எதுக்குங்க வீணா வக்கீலுக்குங் கோர்ட்டுக்கும் செலவழிக்கணும்.

முனி : அட அவுங்க அதுக்குத்தான் ஐயா இருக்காங்க..

 பொன் : சேர்வே! அதிலே விஷயமிருக்கு. முனியாண்டி சொல்கிறபடி செய்

சேர்வை : ஆகட்டுங்க, எப்படியும் உங்க தயவு இருந்தா சரி.

பொன் : அப்படியானால் இன்றைக்கே வக்கீலைக் கலந்து. ஆக வேண்டியதை........

சேர்வை : ஆகட்டுமுங்க; அப்படியே செய்திடுறேன். எஜமானே சொல்லும்போது...... அப்போ நான் வரட்டுங்களா?

பொன் : சரி, சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்.

சேர்வை : ஆஹா அதான் சரின்னு சொல்லிட்டேனே! அப்பறம்......

முனி : சரி அப்போ......... நானும்... உத்திரவு வாங்கிக்கிறேன்.

பொன்: உனக்கும் ஞாபகம் இருக்கட்டும்.

முனி : ஆகட்டுங்க ஏதாவது சில்லரை இருக்குதுங்களா?

பொன்: எல்லாம் பிறகு ஆகட்டும்.

முனி: மகமாயி!

(போகிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/6&oldid=1073492" இலிருந்து மீள்விக்கப்பட்டது