அந்திம காலம்/அந்திம காலம் - 2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பத்தரை மணிக்கு அவர்களின் மனப் படபடப்பு தொடங்கியது. ஜானகி அர்த்தமில்லாமல் சமையலறைக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். எட்டு மணியளவில் தான் சாப்பிட்ட சூப்பையும் இரண்டு ரொட்டித் துண்டுகளையும் ஜீரணிப்பதில் சிரமத்துடன் தலையில் லேசான வலியுடன் சுந்தரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்து, திரையில் என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஜானகியின் நடையையும் வாசலில் தோன்றித் தோன்றி மறையும் கார் விளக்குகளின் வௌிச்சத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அதில் ஏதாவது ஒன்று ராதாவின் காராக இருக்காதா என்ற நப்பாசை தோன்றித் தோன்றி அமிழ்ந்து கொண்டிருந்தது. மத்தியானம் டாக்டர் கொடுத்த மரணச் செய்தியும் ராதாவின் துயரமும் மனத்துக்குள் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டிருந்தன.

பதினொரு மணியளவில் ஜானகி ஒரு நிமிஷ நீளத்திற்கு வாசலில் நின்று வடூயை வெறித்துப் பார்த்தாள். "எங்கேயாவது வழியில நின்னு போன் பண்ணக் கூடாது? கொஞ்சங்கூட பொறுப்பில்லாத புள்ள..." என்று முனகிக் கொண்டாள்.

பதினொன்று முப்பதுக்கு சடசடவென மழை பெய்யத் தொடங்கியது. ஜானகி அசந்து நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். "இப்படி மழை பெய்யுதே!" என்றாள்.

தொலைக்காட்சியில் ஏதோ ஓர் ஆங்கிலப் படத்தில் இரண்டு தரப்பினர்கள் துப்பாக்கியால் தட தடவென சுட்டுக் கொண்டார்கள். பலர் சுருண்டு வீழ்ந்தார்கள். ஆனால் எங்கும் ரத்தம் சிந்திக் கிடக்கவில்லை. அப்படியே ரத்தம் சிந்தும் காட்சிகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழு அவற்றை இரக்கமில்லாமல் வெட்டி எறிந்திருக்கும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

தொலைக்காட்சித் துப்பாக்கிப் போர் பார்க்கச் சோர்வாக இருந்தது. தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தார். மழைத் தண்ணீர் வழிந்து சிறு சிறு ஆறுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

"ஏங்க எதுக்கும் வீட்டுக்குப் போன் பண்ணி புறப்பட்டுட்டாளா இல்லையான்னு கேட்டிருவமா?" என்றாள் ஜானகி.

சுந்தரம் யோசித்தார். கேட்கலாம். ஏதாவது தகவல் கிடைத்தால் ஆறுதலாக இருக்கும். ஆனால் புறப்பட்டு நெடு நேரமாயிற்று என்று தகவல் வந்தால் ஜானகியின் பீதி இன்னும் அதிகமாகும். அதைவிட மருமகன் சிவமணி போனை எடுத்தால் என்ன பேசுவது என்று தெரியாது. அவனிடம் சொல்லிவிட்டு வருகிறாளா, சொல்லாமல் வருகிறாளா ஒன்றும் தெரியவில்லை. இந்த நிலையில் ஏதாகிலும் பேசப்போய் பிரச்சினை விபரீதமாகிவிடலாம்.

"கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம் ஜானகி. மழையினால தாமதமாகலாம். பாக்கலாம்" என்றார். ஜானகி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தார்.

தொலைக்காட்சியில் ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. ஒரு துப்பாக்கியின் முனை தெரிந்தது. துப்பாக்கி வெடித்தது. அடுத்த ஷாட்டில் ஹெலிகாப்டர் ஒரு தீப்பந்தாக மாறி பூமியை நோக்கி விழுந்தது. அதன் பாகங்கள் நெருப்புத் துண்டங்களாகச் சிதறி விழுந்தன.

சுந்தரத்தின் தலையின் வலதுப் பொட்டில் சுரீர் என்று வலித்தது. முகத்தைச் சுளித்து அந்தப் பக்கத்தைத் தடவிக் கொண்டார். வலி மறைந்து விட்டது. ஆனால் மனத்தில் கிலி வந்து புகுந்தது. என்ன செய்தி அனுப்புகிறாய் என் உடலே? உன்னை விடமாட்டேன் என்கிறாயா? சித்திரவதைக்குத் தயாராயிரு என்கிறாயா? உன் காலம் முடிகிறது, அதைக் கவனிக்காமல் தொலைக்காட்சி ஒரு கேடா என்கிறாயா?

பொறு, பொறு. இன்றிரவு உன்னைப் பற்றி அதிகம் யோசிக்க எனக்கு நேரமில்லை. என் மகள் பற்றிய செய்தி முடிவாக வேண்டும். அதன் பின் உன்னைப் பற்றி யோசிக்கிறேன்.

நெஞ்சில் லேசாகக் குமட்டல் வந்தது. தொண்டையைக் கனைத்து அடக்கிக் கொண்டார்.

மழை பட்டென்று நின்றுவிட்டது. முன்வாசல் மரத்தின் இலைகளிலிருந்து தண்ணீர் சொட்டுகின்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

பதினொன்றே முக்காலுக்கு கேட்டின் முன்னால் பளீரென்று விளக்குகள் தெரிந்தன. கார் "பீப்" என்று ஹாரன் அடித்தது. ஜானகி முகத்தில் உயிர் வந்தது. "இதோ வந்திடுச்சிங்க. போய் கேட்டத் தெறங்க" என்றாள். சுந்தரம் எழுந்து சென்று கேட்டைத் திறந்தார். காரை காம்பவுண்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினாள் ராதா.

அவர் கேட்டைச் சாத்தி வருவதற்குள் பரமா காரை விட்டு இறங்கினான். "தாத்தா" என்று கூவிக்கொண்டு ஒடிவந்தான். "பரமா... வா... வாடா கண்ணு" என்று அவனைக் கட்டித் தூக்கிக் கொண்டார். தூக்க முடிந்தது. மூன்று வயதுக் குழந்தை இலேசாகத்தான் இருந்தான். போனமுறை பார்த்தற்கு இப்போது இளைத்திருந்தான்.

"தாத்தா, டோன்ட் கால் மி பரமா. மை நேம் இஸ் பிரேம்..." என்றான் குழந்தை.

"மத்தவங்களுக்கு நீ பிரேம்... தாத்தாவுக்கு நீ பரமாதான்" என்று முத்தமிட்டார். பேரனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. மலேசியாவில் தமிழ்க் குடும்பங்களின் நடுத்தர வர்கத்துப் பழக்க வழக்கங்களுக்குப் பலியானது அவனுடைய குடும்பம். பிரேம் என்று அவன் பெற்றோர்கள் நாகரிகமாக வடநாட்டுப் பேராக வைத்திருந்தார்கள். சுந்தரத்திற்கு அந்தப் பெயர் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தப் பெயரை பரமா என மாற்றிக் கூப்பிட்டார்.

பரமா திமிறிக் கொண்டு பாட்டியிடம் ஓடினான். ஜானகி அவனைத் தூக்கி முத்தமிட்டாள். ராதா ஒரு சிறிய துணிப் பையையும் கைப் பையையும் எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கினாள். சுந்தரம் போய் அவள் துணிப் பையை வாங்கிக் கொண்டார்.

"ஏம்மா இவ்வளவு நேரம்?" என்று ஜானகி கேட்டாள். அவள் குரலில் படபடப்புப் போய் ஆறுதல் வந்திருந்தது.

"வர்ர வழியெல்லாம் ரொம்ப மழைம்மா. அதான் மெது மெதுவா வரவேண்டியதாப் போச்சி!" என்றாள்.

"வழியில நின்னு போன் பண்ணியிருக்கலாமே!"

"போன் பண்ண வசதியில்ல. பிரேமுக்கு சாப்பாடு வாங்கிக் குடுக்க ஒரு இடத்தில நிப்பாட்னதத் தவிர வேற எங்கியுமே நாங்க நிக்கல..." என்றாள்.

"சரி, சரி. வா. சாப்பாடு வச்சிருக்கேன். வந்து துணி மாத்திட்டு சாப்பிடு" என்றாள் ஜானகி.

"பாட்டி. கிவ் மீ சொக்கலேட்" என்றான் பரமா.

"வா. மொதல்ல சோறு சாப்பிடு! அப்புறந்தான் சொக்லேட்" என்று அவனைத் தூக்கியவாறு உள்ளே போனாள்.

ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவாறு மீண்டும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தார் சுந்தரம். இப்போது ஏதோ நகைச்சுவைப் படம் நடந்து கொண்டிருந்தது. வரிக்கு வரி வெடிச்சிரிப்பு கேட்டது. கறுப்பர்கள் சிலரும் வெளுப்பர்கள் சிலரும் ஆண்களும் பெண்களுமாக சரிசமமாக ஜீன்ஸ் அணிந்து கொண்டு பெரிய பெரிய சப்பாத்துக்களுடன் வீட்டினுள் நடந்து கொண்டு பேசிப் பேசிச் சிரிக்க வைத்தார்கள். அதில் உள்ள போலித் தனத்தை சுந்தரம் நினைத்துப் பார்த்தார். இவர்கள் நாட்டில் இவர்கள் இப்படிக் குலவிக் கொள்வதில்லை. தொலைக் காட்சியில்தான் இது. வாழ்க்கையில் இவர்கள் நாட்டிலும் சரி, உலகத்தில் வேறு எங்காகினும் சரி, இத்தனை சிரிப்பில்லை. ராதாவின் வாழ்க்கையில் சிரிப்பில்லை. என் வாழ்க்கையில் இனி சிரிப்புக்கு இடமில்லை.

மீண்டும் தலைக்குள் சுரீர் என்று வலித்தது. முகம் சுளித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு பொட்டைத் தடவினார். வலி வலது முன் கையில் இறங்கி முறுக்கியது. இடது கையால் பிசைந்து விட்டுக் கொண்டார். யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தார். அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் மட்டும் வடை பொரிப்பது போல சர் சர்ரென்று சரஞ்சரமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.


      • *** ***

சாப்பாட்டு மேசையில் மௌனம்தான் கனத்திருந்தது. பரமாவுக்கு முன்னால் குடும்பக் கதைகள் பேசவேண்டாம் என ராதா நினைத்திருக்க வேண்டும். பரமா அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்து எதையும் சாப்பிடாமல் சோர்ந்து தூங்கி விழுந்தான். ராதா சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவனைத் தூங்க வைக்க அறைக்குள் போனாள். ஜானகி பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்திருந்தாள்.

தலையிலும் வயிற்றிலும் வலி இப்போது வருவதும் போவதுமாக இருந்தது. சிறிய சிறிய அலைகளாக, சுருட்டிச் சுருட்டி...

வலி தணிந்த நேரங்களில் சுந்தரத்தின் மனம் ராதாவின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வந்தது.

இவர்களின் இந்தச் சண்டைகள் கடந்த மூன்று வருடங்களாகவே நடந்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் முற்றிக்கொண்டுதான் போகிறதே தவிர சமரசமாவதாகத் தெரியவில்லை. தம்பதிகளுக்கிடையில் உண்மையான அன்பிருந்தால் இது இப்படி மோசமாக வேண்டாமே என்று சுந்தரம் நினைத்துக் கொண்டார். அந்த அன்புச் சுனைகள் எப்படியோ வற்றிவிட்டன. அந்த வறட்சியிலிருந்து காய்ந்த எரிந்த துகள்கள் பறக்கின்றன. புதிய புல் பச்சைகள் வளர முடியாத உரமிடூந்த வெள்ளை மணலாக அது ஆகிக் கொண்டு வருகிறது.

இத்தனைக்கும் இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். ராதா கோலாலும்பூரில் ஒரு பிரபலப் பொருளகத்தில் அதிகாரியாக இருந்தாள். சிவமணி கம்ப்யூட்டர் கம்பெனி ஒன்றில் உயர் அதிகாரியாக இருந்தான். ராதாவின் பொருளகத்தில் அவனுக்குக் கணக்கு. அங்குதான் சந்தித்தார்கள். அந்த சந்திப்பில் மந்திரம் இருந்திருக்க வேண்டும். அவனைப் பற்றி வேறொன்றையும் அறிந்து கொள்ளாமலேயே அவனோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டாள்.

அவனை முதன் முறையாக ராதா வீட்டுக்கு அழைத்து வந்த போது சுந்தரமும் ஜானகியும் அவனை அன்பாகத்தான் வரவேற்றார்கள். ஆனால் சிவமணியின் பேச்சும் போக்கும் சுந்தரத்திற்குப் பிடிக்கவில்லை. சளசளவென்று பேசினான். எல்லா நேரமும் தன் வேலை, உத்தியோக உயர்வு, தன் நண்பர்கள், பங்குச் சந்தை, அதில் எப்படி விரைவாகப் பணம் புரட்டுவது என்பது பற்றிப் பேசினான். சுந்தரத்தைப் பற்றியோ அவரின் குடும்பம் பற்றியோ ஒன்றும் அறிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. ராதாவிடம் மட்டும் முற்றாக மயங்கிப் போயிருக்கிறான் என்று தெரிந்தது. அவளை "டார்லிங், டார்லிங்" என்று அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே அடிக்கடி அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான். ராதா அந்தப் பிடியில் கிறங்கிப் போயிருப்பதும் தெரிந்தது.

ராதா கண்டிப்பாகவும் ஒழுக்கம் போதிக்கப்பட்டும் அளவான பாசத்தோடும் வளர்க்கப் பட்டவள். சுந்தரம் பிள்ளைகளிடம் பாசமாக இருப்பாரே தவிர கொஞ்சுவது அதிகம் இல்லை. இப்படிக் குடும்பத்தில் மிதமான, மிகைப்படுத்தப்படாத, வௌிப்படுத்தப் படாத பாசம் அவளுக்கு ஒரு குறையாகக் கூட அமைந்து விட்டிருக்கலாம். இப்போது இங்கே இன்னொரு ஆண் கட்டுப்பாடில்லாமல், வெட்கப்படாமல் வௌிப்படையாகக் கொஞ்சுகிறபோது தந்தையிடம் கண்ட குறையை நிறைவு செய்து கொள்ளுகிறாள் என்று அவருக்குத் தோன்றியது. இதைத் தவிர இந்த சிவமணியென்கிற ஆண்பிள்ளையிடம் இவள் கண்ட சிறப்புக்கள் அதிகமாக இருக்க முடியாது.

ஜானகிக்கும் அவனைப் பிடிக்கவில்லை. ராதாவும் சிவமணியும் திரும்பப் போனபிறகு அதை வௌிப்படையாகவே சுந்தரத்திடம் சொன்னாள்.

"ஏன் பிடிக்கல உனக்கு?" என்று கேட்டார் சுந்தரம்.

"என்ன மாதிரி ஜனங்களோ தெரியிலிங்க. அவனோட சொந்தக்காரங்க யாரையும் நமக்குக் கொஞ்சங்கூட அறிமுகமில்ல. முன்ன பின்ன கேள்விப்படாத ஆளுகளா இருக்காங்க" என்றாள். அப்படியானால் அவளுக்கு உறுதியான காரணங்கள் இல்லை. தான் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாமல் போனது, முன்பின் தெரியாத ஒருவன் தன் அனுமதிக்குக் காத்திராமல் தன் சொத்தை அபகரித்துப் போகும் உணர்வு இவைதான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

"இதையெல்லாம் இப்ப நெனச்சி என்ன பிரயோஜனம் ஜானகி? உன் பெண்ணோட கண்களக் கவனிச்சியா? அவன் முகத்திலேயே அது நெலச்சிப் போச்சி. அந்தக் காதல்ல இருந்து அவள மீட்க முடியாது. அதோட அவ படிச்ச பொண்ணு. பட்டதாரி. அவளுடைய கணவனத் தேர்ந்தெடுக்கிற அளவுக்கு அவளுக்குப் புத்தியிருக்காதா?" என்றார்.

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது! பட்டப் படிப்பு படிச்சிட்டா எல்லாந் தெரிஞ்சதுன்னு அர்த்தமா? வாழ்க்கையில அனுபவப்பட வேண்டாமா? நான் அவளுக்குப் புத்தி சொல்றேன். என் பேச்சக் கேப்பா!" என்றாள் ஜானகி.

கேட்கவில்லை. அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது ராதாவைத் தனியாக அழைத்து ஜானகி பேசினாள். கட்டினால் அவனைத்தான் கட்டுவேன் என ஒரே போடாகப் போட்டுவிட்டாள் ராதா. அவன் அன்போடு நடந்து கொள்ளுகிறான். அவள் சொல்வதையெல்லாம் மதிக்கிறான். எந்நாளும் அவளுடனேயே குழையக் குழைய வருகிறான். தடபுடலாக உடுத்துகிறான். தன்னுடைய அந்தரங்க விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக நீதான் என் தேவதை என்று சொல்லிவிட்டான். அவளைத் தான் பூஜிக்கின்ற பீடத்தில் உயர்த்தி வைத்துவிட்டான். இந்த நிலையில் நிர்தாட்சண்யமாக, நடுநிலையாக அவனை எப்படி எடை போட முடியும் அவளால்? ஜானகி தோற்று விட்டாள்.

திருமணம் பேச அவன் பெற்றோர்கள் வந்தபோது தடங்கல்கள் நிறைய வந்தன. தங்கள் பிள்ளையைப் போலவே அவர்களும் அவர்களைப் பற்றியே நிறையப் பேசினார்கள். "எங்க சொந்தக்காரங்க ஏராளம் பாருங்க! உலகம் பூரா இருக்காங்க. என் தம்பி ஆஸ்த்திரேலியாவுல செட்டில் ஆகியிருக்கு. சிவமணிக்குப் பொண்ணக் குடுக்க காத்திக்கிட்டு இருக்காங்க. இவனுக்குத்தான் குடுத்து வைக்கில!" என்று அவன் அம்மா பிரகடனப் படுத்தி, போனால் போகிறதென்று இதற்கு உடன்பட்டதை மறைக்காமல் சொன்னாள். பின்னர் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணையைப் பற்றியும் கேட்டாள் அந்த அம்மா.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரம் அந்த இடத்தில் மட்டும் உறுதியாகத் தௌிவாகச் சொன்னார். "அம்மா, நான் வரதட்சணை கொடுக்க மாட்டேன். அந்தப் பேச்சையே எடுக்க வேணாம். பொண்ணுக்கு நாங்க கொஞ்சம் பணம், நகைகள் தனியா வச்சிருக்கிறோம். அதக் கொடுப்போம். ஆனால் அது எவ்வளவுன்னு நீங்க கேக்கிறதும் நாகரிகமில்ல, நாங்க சொல்றதும் நாகரிகமில்ல!" என்றார். சம்பந்தியம்மாள் அடங்கிப் போனாள். ஆனால் அவள் முகம் தொங்கிப் போனது.

ஆனால் திருமண சமயத்தில் பல விஷயங்களில் அவள் அவர்களை நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். திருமணத்தன்று அவள் ஆர்ப்பாட்டம் சொல்லிமுடியவில்லை. ஆனால் சுந்தரமும் ஜானகியும் காரியம் கெடக்கூடாது என ஒத்துப் போனார்கள்.

திருமணம் முடிந்த ஓராண்டு அவர்கள் வாழ்க்கை இன்பமாகத்தான் இருந்தது. அப்புறம் பரமா கருத்தரித்துப் பிறந்தான். அதன் பின் சின்னச் சின்ன விரிசல்கள் ஆரம்பித்தன. சிவமணி பங்கு மார்க்கெட்டில் திடீர் பணக்காரனாக ஆசை கொண்டு கொஞ்சம் பணத்தை இழந்தான். சுந்தரம் கொடுத்துச் சரிகட்டினார். மீண்டும் அவனுக்குப் பணமுடை வந்தபோது சுந்தரம் மறுத்துவிட்டார். ராதா தன் சேமிப்பிலிருந்து கொடுத்தாள். அதற்கப்புறம் அப்படிக் கொடுக்க அவள் தயங்கியபோது சண்டைகள் தொடங்கின. அப்புறம்தான் இந்த அடிதடிக் கொடுமை.

      • *** ***

பரமாவைத் தூங்கப் போட்டுவிட்டு ராதா ஹாலில் வந்து உட்கார்ந்தாள். உடை மாற்றி இரவு டிரஸ் போட்டிருந்தாள். மேக்கப் கலைந்து எண்ணெய் முகமாக இருந்தாள். ஜானகியும் எல்லாவற்றையும் கழுவித் துடைத்துவிட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். சுந்தரம் தொலைக்காட்சியை அடைத்தார்.

"நீ வந்திருக்கிறது உன் புருஷனுக்குத் தெரியுமா அம்மா?" என்று கேட்டார்.

"தெரியாது. தன் அட்டகாசங்கள் முடிஞ்சதோட ஆள் தன் காரை எடுத்துக் கொண்டு வௌியே போயாச்சி!" என்றாள் ராதா.

"என்னம்மா பிரச்சினை உன் வீட்டில...?" என்று கேட்டார்.

"எல்லாம் எப்போதும் உள்ள பிரச்சினைதான் அப்பா! அந்த மனுஷன் வரவர மிருகமாகிகிட்டு வர்ராரு. கொஞ்சம் விவகாரம் வந்திட்டா கைய நீட்டிட்றாரு!"

"என்ன விவகாரம், புதுசா?"

"என்னமோ புதுசா ஒரு பிஸ்னஸ்ல பணம் போடப் போறாராம். அதுக்கு என் சேமிப்பில இருக்கிற பணம் வேணுமாம். நான் முடியாதின்னேன். அதுக்குப் பலவிதமான ஏச்சு பேச்சு. அது முத்தினவொண்ண கையில பிடிச்சித் தள்றது, அறையிறது! நான் என்ன அவருக்கு வேலைக்காரியா, அடிமையா இதெல்லாம் ஏத்துக்கிட்டு போறதுக்கு?" கண்களை கசக்கிக் கொண்டாள்.

"என்ன மாதிரி ஜென்மம் இந்த மனுஷன்? அவங்க அப்பா அம்மா வளர்த்த வளர்ப்பு அப்படி. ஆந்த ஜனங்கள அப்ப இருந்தே எனக்குப் பிடிக்காது" என்று தான் முன்னால் சொல்லமுடியாமல் மறைத்து வைத்திருந்த குறைகளைக் கொட்டித் தீர்த்தாள் ஜானகி.

"அவங்க அம்மாகாரி மாசத்துக்கு ஒருதடவ வந்ததிர்ராம்மா ஊட்டுக்கு. வந்து என்ன தூபம் போடுவாளோ தெரியில. அவ போனவுடனே இந்த மனுஷன் என்னக் கறிக்க ஆரம்பிச்சிடுவாரு!" என்றாள் ராதா.

சுந்தரம் யோசித்துச் சொன்னார். "நான் உனக்கெதிரா பேசிறதா நெனைக்காதம்மா. உன் புருஷன் முரடனா மாறிக்கிட்டிருக்கான் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன். ஆனா நீ கொஞ்சம் அடங்கிப் போய் விட்டுக் கொடுத்து மாத்தலாமில்லியா? குடும்ப ஒத்துமை முக்கியம் இல்லியா? இப்படி கோவிச்சிக்கிட்டு வீட்ட விட்டு வந்திட்டா விஷயம் முத்திப் போய் ஒட்ட முடியாத அளவுக்கு ஒடஞ்சிடுமே அம்மா!"

ராதா சீறினாள். "அந்த 'பாஸ்டர்டோட' நான் இனிமே இருந்து குடும்பம் நடத்த முடியாது அப்பா. முடியவே முடியாது. அவன் மனுஷன் இல்ல மிருகம்!"

அந்தச் சொற்களின் கடுமை அவரைத் தாக்கிற்று. இவளை இத்தனை மென்மையாக வளர்த்திருந்தும் இத்தனை வன்முறை இவள் மனத்திலும் வாயிலும் எப்படி வந்து விளைந்தது?

"ராதா! எல்லா மனுஷருக்குள்ளேயும் மிருகங்கள் இருக்கத்தான் செய்யுது. அந்த மிருகத்த எழுப்பிறதுக்கு எடங் குடுக்கும் போது அது எழும்பி வந்து சீறுது. இப்ப நீ ஒரு கொடிய பாம்பாகச் சீறலியா? அப்படித்தான். இந்த முகந் தெரியாத, இனந்தெரியாத மிருகங்கள நாம் அடிச்சித் துவச்சி அடக்க முடியாதம்மா. அடிக்க அடிக்க அது புதுசா உயிரெடுத்து இன்னும் சீறும். உன்னக் கொல்ற வரையில அது உன்னத் துவம்சம் செய்யும். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி"ன்னு திருக்குறள்ள இருந்து நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்ல..." சிறு வயதில் தன் குழந்தைகளுக்குத் தமிழும் திருக்குறளும் அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது இப்போது ஞாபகப் படுத்தக் கை கொடுத்தது.

"அப்பா! அந்த மனுஷனப் பத்திப் புரியாம பேசிறிங்க. நான் அவன மிருகம்னு சாதாரணமா சொல்லல. மொதல்ல வாயால திட்டினாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் பிடிச்சித் தள்ள ஆரம்பிச்சாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் அடி, கிள்ளல். இப்ப என்ன நடக்குது தெரியுமா அப்பா?"

நைட் டிரசைக் கொஞ்சம் தூக்கி துடையைக் காட்டினாள். தளும்புகள். திட்டுத் திட்டாக... "சிகிரெட்டால சூடு வைக்கிறாருப்பா..." விம்மி அழுதாள்.

மனம் நைந்தது. எப்படி மனிதன் முற்றாக இப்படி மிருகமாகிவிட முடியும்? மிருகத்திலும் இது கொடிய மிருகம். இன்னொரு சக மிருகத்தைச் சித்திரவதை செய்கின்ற கொடிய மிருகம். இரையாக ஒரு பறவையை தாடையில் பற்றியவுடன் பகுதி பகுதியாக அதை நீண்ட நேரம் சித்திரவதைச் செய்து கொல்லுகின்ற விஷப் பாம்பு.

தன் உள்ளத்திலும் சினம் சீறி எழுவது தெரிந்தது. இப்படிச் செய்யப் பட்டால் தான் கூட கத்தியைத் தூக்கி தன் எதிராளியைக் கொல்ல முடியும் என்று தோன்றியது. மருமகன் இப்போது தன் முன் இருந்தால் "அட மிருகமே" என்று சீறி அவனை அடித்திருப்பேன் என்று தோன்றியது. உடலில் நோய் இருந்தாலும், இதனால் எனக்குத்தான் ஆபத்து என்று தெரிந்தாலும் அவற்றையெல்லாம் அந்தக் கணத்தில் மறந்துவிட்டு பழி வாங்கும் உணர்ச்சிக்குத் தான் முற்றாக ஆட்படமுடியும் எனத் தெரிந்தது.

ஆனால் அந்த எதிர்ச்செயலும் ஒரு மிருக உணர்வுதான். மிருகங்கள்தாம் கொஞ்சமும் யோசிக்க இடமில்லாமல் தங்கள் தற்காப்புக்காக வெறும் உணர்ச்சி நிலையில் எதிர்க்கின்றன. ஆனால் அறிவு நிலையில் மனிதன் அப்படிச் செய்யக் கூடாது. தன்னுடைய எட்ரினலின் சுரப்பிக்கு அவன் முற்றாக அடிமைப்பட்டுப் போக முடியாது. நீதி என்று ஒன்று இருக்கிறது. கொள்கை என்று ஒன்று இருக்கிறது. ஒழுக்கம் என்றும் வாழ்க்கை நெறி என்றும் உள்ளன. இவற்றுக்குக் கீழ்தான் மனிதன் செயல்படவேண்டும்.

57 வயதில் தனக்கு இது புரிகிறது. ஆனால் 33 வயதில் வாழ்க்கையின் சுகங்களை உணர்ச்சி நிலையில் உடல் ரீதியில் அனுபவிக்கக் காத்திருக்கும் மகளுக்கு அதைச் சொல்ல முடியுமா?

விம்மும் மகளை ஜானகி அணைத்துப் பிடித்திருந்தாள். சுந்தரம் மௌனமாக இருந்தார். அவள் விம்மல்கள் தணிந்த நேரத்தில் சொன்னார்.

"ஏம்மா! இந்த விஷயம் ரொம்ப முத்திப் போச்சின்னு தெரியுது. இத இப்படியே விட்டுட்டா குடும்பம் செதஞ்சி போயிடுமே. பிள்ளை ஒண்ணு இருக்குங்கிறதும் ஞாபகத்தில வச்சிக்க. ஆக உங்கள சமரசப் படுத்தி வைக்க நாங்க ஏதாவது செய்ய முடியுமா? சிவமணியக் கூப்பிட்டு நான் சீரியசாப் பேசிப் பாக்கட்டுமா?"

கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்: "அது இனிமே நடக்காதப்பா. சமரசம் பண்ணி வைக்கிற கட்டத்தையெல்லாம் தாண்டியாச்சி. அவரு தயாரா இருந்தாலும் நான் தயாரா இல்ல. என்னால முடியாது. அந்த நரகத்தில இருந்து நான் விடுபடணும். எனக்கு விடுதலை வேணும்!"

"அப்படின்னா...?"

"விவாக ரத்துக்கு மனுச் செய்யப் போறேம்பா!"

மீண்டும் உள்ளத்தில் சம்மட்டி அடி விழுந்தது. எத்தனை எளிதாகச் சொல்லுகிறாள்! எவ்வளவு பெரிய விஷயத்தை எத்தனை சிறிய சொற்களில் சொல்லுகிறாள்!

விவாக ரத்து இந்த நவீன காலத்தில் எல்லா சமுகங்களுக்கிடையே நடக்கிறதுதான் ஆனால் குடும்ப வாழ்வில் அந்த நிகழ்ச்சி ஏற்படுத்துகின்ற பூகம்பங்கள் சாதாரணமானவையல்ல. அதுவும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடந்த ஒரு குடும்பத்தில் இப்படி நடக்கும் போது... நீதிமன்றத்தில் ஏறி, குடும்ப ரகசியங்களைப் பொத்தாம் பொதுவில் அலசி, சொத்துப் பகிர்வுக்குப் போராடி, குழந்தைகளைப் பிரித்தெடுக்க சட்ட நுணுக்கங்கள் தேடி... இதற்காகவா ஊரறியப் பந்தல் போட்டு, மேளம் கொட்டி, அக்கினி வலம் வந்து, ஆயிரம் தெய்வங்களைத் துணைக்கழைத்து, நூறு சத்தியங்கள் செய்து திருமணம் செய்து கொள்வது?

தானும் ஜானகியும் வாழ்வில் எவ்வளவோ சண்டைகள் போட்டாயிற்று. ஆனால் மண முறிவு என்பதை நினைத்துக் கூடப் பார்ததில்லை. இளவயதில் வீட்டை விட்டுப் போய் ஓரிரு இரவுகள் கோபத்தில் வௌியே கூட இருந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அறிவும் நிதானமும் எந்நாளும் உணர்ச்சிகளை வென்றிருக்கின்றன. தங்களுக்குப் பிடித்தமான ஆசைகளை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அவர்கள் இருவரும் வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெண் முறிவுக்குத் தயாராக இருக்கிறாள். விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறாளா?

"ஏம்மா! இதனால ஏற்படக் கூடிய பின் விளைவுகள யோசிச்சிப் பாத்தியாம்மா?"

"பின் விளைவுகள் வர்ர மாதிரி வரட்டும். அதையெல்லாம் அனுபவிச்சித்தான் ஆகணும். ஆனா அதையெல்லாம் யோசிச்சி நான் காலம்பூரா இந்த பாஸ்டர்ட் கிட்ட அடிமையா இருந்து அடியும் உதையும் வாங்கிறதா அப்பா? இப்ப இவர் கிட்ட பணிஞ்சி போனா இன்னும் மோசமாத்தான் போவாரு! அப்ப எனக்கு எப்ப விடிவு? முடியாதப்பா, இனிமே முடியவே முடியாது!"

இல்லை. இவள் விளைவுகளை இன்னும் யோசிக்கவில்லை. தன் நலனைத்தான் யோசிக்கிறாள். தான் துன்பப் படக் கூடாது என்றுதான் நினைக்கிறாள். தன் குழந்தையின் துன்பமும் தன் கணவனின் துன்பமும் தன் பெற்றோர்களின் குடும்ப மானமும் இவளுக்கு இந்தக் கணத்தில் பெரிதாகத் தெரியவில்லை. தன் நலனுக்கு முன்னால் வேறு எதையும் இவள் பொருட் படுத்தவில்லை.

ஆனால் "இந்தக் காரணங்களையெல்லாம் எண்ணி நீ துன்பப் படு" என்று யோசனை சொல்ல நான் யார்? குழந்தையின் நலனுக்காகவும் குடும்பத்தின் நலனுக்காகவும் உன் தன்னலத்தைத் துறந்துவிடு என்று ஒரு தியாகத்தை அவள் மீது திணிக்க நான் யார்?

நவீன காலத்து வாழ்க்கையைத் தன்னலம்தான் இயக்குகிறது. அவள் இயங்குகின்ற சமுதாயத்தில் தனி மனிதரின் முக்கியத்துவமும் பெண் விடுதலையும் பெண் முன்னேற்றமும்தான் கருப் பொருள்களாக இருக்கின்றன. ஜானகியும் அவரும் பிறந்த தலைமுறையோடு குடும்பம் சமுதாயம் பொது நலம் என்ற உணர்ச்சிகள் முடிந்து விட்டன.

சிவமணியும் இந்தத் தலைமுறை ஆண்மகன்தான். முன்னேறு, உன்னை வளர்த்துக்கொள், கல்வி பெருக்கு, பொருள் பெருக்கு என்ற உந்துதல்களைத் தன் சூழ் நிலையில் பெற்று வளர்ந்தவன். அவன் ஆசைப்படும் அளவுக்கு, அவன் நண்பர்கள் அடைந்த அளவுக்கு அவனுக்கு முன்னேற்றம் இல்லாத போது அவனுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்ப்பதைத் தவிர வேறு லட்சியங்கள் இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை. கையில் பணம் நிறைய இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என நினைக்கிறான். அந்தப் பணத்தைப் பெற பல குறுக்கு வழிகளை நாடுகிறான். அது அவனிடமிருந்து நழுவிப் போகும் போது அவன் நெஞ்சில் பயமும், கோபமும் எரிச்சலும் நிறைகின்றன.

சுந்தரம் ஜானகியைத் தானாகப் பார்த்து விரும்பிப் பேசிப் பழகிக் காதலித்துத்தான் மணந்து கொண்டார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தபோது அவர் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர். முன்னூறு நானூறு வெள்ளிக்கு மேல் சம்பளம் பார்த்ததில்லை. அந்தக் காசில் சின்ன வீட்டில் சிக்கனமான வாழ்க்கைதான் வாழ முடிந்தது. ஆனால் அது செழிப்பான வாழ்க்கை. அன்பு கொடூத்த வாழ்க்கை.

ஜானகி அடங்கி கணவனுக்கு அடிமை போல் நடந்தாள். ஆனால் அவர் அவளை அடிமையாக நடத்தவில்லை. பல விஷயங்களில் ஜானகியையே எஜமானாக நடக்கவிட்டார். அவள் விடுதலை கேட்கவில்லை. இவராகவே அதைக் கொடுத்திருந்தார். அந்த வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. பண்பாட்டோடு இருந்தது. இவர்கள் எந்தக் காலத்திலும் பொருளாதார உச்சத்தில் இல்லாவிட்டாலும் அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயம் அவர்களை மரியாதையாகப் பார்த்து அன்போடு பேசியது.

ஏதாகிலும் காரணத்தால் அந்த மரியாதையையும் அன்பையும் மற்றவர்கள் அவர்களுக்குக் காட்டவில்லை என உணர்ந்தால் அவர்கள் அதை வற்புறுத்திப் பெறவில்லை. அவர்கள் எந்தக் காலத்திலும் எந்த விஷயத்திலும் முன்னுக்கு நிற்க வேண்டும் என்று முயன்றதில்லை. ஆனால் பல வேளைகளில் அவர்கள் முன்னுக்கு நிறுத்தி வைக்கப் பட்டபோது தங்கள் கடமையைப் பொறுப்புடன் ஆற்றியிருக்கிறார்கள்.

அந்தப் பண்புகள் இந்த இளைய தலைமுறையைப் போய்ச் சேரவில்லை. குடும்பம் தந்த பண்புகளை விட வௌியில் உள்ள ஆடம்பர உலகம் தந்த பண்புகளே இவர்களிடம் பதிந்துள்ளன. தங்கள் சூழ்நிலையிலிருந்து பலவற்றைத் தாங்களே கற்றுக் கொண்டார்கள். மிகச் சிறு வயதிலேயே பெற்றோர்களை அந்நியப் படுத்திக்கொண்டு தங்கள் சகவயது மக்களோடு இணைந்து வாழ்க்கையின் எல்லாவித இன்பங்களையும் அனுபவிக்கத் துடித்து, பின் அதனால் - இப்போது ராதாவின் வாழ்க்கையில் நடப்பது போல - எல்லாவிதத் துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். வேண்டாம் என்று சொல்வது, நீங்கியிருப்பது, ஒதுங்கியிருப்பது இவர்களுக்குப் பழக்கமில்லை. கொடு என்பதும் அனுபவிப்பதும் முழுகுவதும் பின்னர் துன்பப்படுவதும் இவர்கள் வாழ்க்கையாக இருக்கிறது. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல" என்பது இவர்களுக்கு ஒரு காலும் புரியாது.

ஜானகி என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்திருந்த வேளையில் சுந்தரமும் சொல்லிழந்து உட்கார்ந்திருந்தார். அந்த மௌனத்தில் இத்தனை நேரம் அடங்கியிருந்த வயிற்றின் நோய் தலை தூக்கிற்று. எங்கோ ஆழத்தில் ஒரு சிறிய தீப்பொறியாக ஆரம்பித்தது விறு விறுவென்று பற்றி எரிமலையாக வெடித்தது. அம்மா என்று வாய்விட்டுக் கத்த வேண்டிய நேரம்தான். ஆனால் அதற்குப் பதிலாக மௌனத்தைத் தூள் தூளாக உடைப்பது போல் டெலிபோன் மணி அலறியது. வயிற்றில் வலி கப்பென்று அடங்கிவிட்டது.

வயிற்றை லேசாகத் தடவியவாறு அவர் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தார். ஒன்றே கால். இந்த நடு நிசியில் யார் போன் பண்ணுவார்கள்?

மனத்தின் அடியில் யாராக இருக்கலாம் என்ற உத்தேசம் இருந்தது. ராதாவின் முகத்திலும் ஜானகியின் முகத்திலும் இருந்த கலவரத்தைப் பார்த்த போது அவர்கள் உத்தேசமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தது.

டெலிபோனைக் காதில் வைத்து "ஹலோ" என்றார்.

"ராதா அங்க வந்தாளா?" ஒரு ஹலோ இல்லை, வணக்கம் இல்லை, யார் பேசுவது என்ற கேள்வி இல்லை. அவனுடைய அவசரம்தான் அவனுக்குப் பெரிது.

"யார் சிவமணியா பேசிறது?"

"சொல்லுங்க மாமா! வந்தாளா?"

"ஆமாப்பா. இங்கதான் இருக்கா!"

"ப்ளடி, ஸ்டுப்பிட் வூமன். ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லாம என் பிள்ளையையும் தூக்கிட்டுப் போயிட்டா!"

அவன் கோபத்தோடு அவர் போட்டி போட விரும்பவில்லை. "உன்கிட்ட நல்ல முறையில சொல்லிட்டுப் புறப்பட்ற சூழ்நிலை உன் வீட்டில இல்லைன்னு நெனைக்கிறேன்!" என்றார் அமைதியாக.

"அவளப் பேசச் சொல்லுங்க!"

சுந்தரம் போனைப் பொத்திக் கொண்டு ராதாவைப் பார்த்தார். "சிவமணி பேசணும்கிறதும்மா!"

ராதா கையை பலமாக ஆட்டினாள். மாட்டேன் என்றாள். முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சுந்தரம் போனில் சொன்னார்.

"அவ இப்ப இங்க இல்லப்பா. தூங்கிட்டான்னு நெனைக்கிறேன்!" பொய்தான். அந்தத்தருணத்தில் ஏன் பொய் இந்த வாய்க்குள் வந்தது எனத் தெரியவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்பதாலா? "புரை தீர்ந்த நன்மை பயக்கும்" என்பதாலா?

"எனக்குத் தெரியும் மாமா! எங்கிட்ட பேசமாட்டேங்கிறாள்ள? ஓக்கே. நாளக்கு ராத்திரி புறப்பட்டு நான் அங்க வர்ரேன். அவ என்ன செஞ்சான்னு உங்க கிட்ட சொல்றேன். உங்க மக செஞ்சது சரிதானான்னு நீங்களே சொல்லுங்க!" போனை வைக்கப் போனவன் திடீரென்று கேட்டான்: "பிரேம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்காம்பா. அசந்து தூங்கிறான்"

"மாமா! யூ ரிமெம்பர் திஸ். உங்களுக்கும் சொல்றேன், அவளுக்கும் சொல்றேன். பிரேம் என் பிள்ளை. எங்கிட்ட இருந்த பிரேம பிரிக்க நெனைச்சான்னா நான் கொலைகாரனாயிடுவேன்னு சொல்லுங்க!" படார் என்று போனை வைத்தான்.

சுந்தரம் வயிற்றில் அந்த வலி எரிமலை இன்னொருமுறை வெடித்துக் குழம்பு கக்கி அடங்கியது. முகம் சுளித்து வயிற்றைப் பிசைந்தார்.

"என்னப்பா?" என்று கேட்டாள் ராதா. அவள் தன் வலியைப் பற்றிக் கேட்கவில்லை. டெலிபோன் உரையாடலைப் பற்றிக் கேட்கிறாள் என்பதை அவர் ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

வயிற்றைப் பிசைந்தவாறு சொன்னார். "மணி நாளைக்கு ராத்திரி இங்க வருதாம்மா. பிரேம் அவரோட பிள்ளைங்கிறத ஞாபகப் படுத்தச் சொன்னிச்சி!"

"ஆமா. அதில கொறச்சல் இல்ல! பத்து மாசம் சுமந்து பெத்துப் போட்டாரில்ல!"

இன்னொரு எரிமலை வயிற்றுக்குள் வெடித்து குழம்பு வடூந்து தணிந்தது. என் வேளை வந்து விட்டதா? இத்தனை விரைவாகவா? மத்தியானம் தண்டிக்கப்பட்டு இரவுக்குள் தண்டனை நிறைவேற்றமா?

"ஜானகி! நான் போய் படுக்கிறேன். உடம்பு சரியில்ல..." படுக்கை அறையை நோக்கி நடந்தவர் திரும்பி ஜானகியைப் பார்த்துச் சொன்னார். "ஜானகி. நேரமாச்சி வந்து படு. ராதாவையும் படுக்க விடு. களைப்பா இருக்கும்."

ஜானகி அரை குறையாகத் தலையாட்டினாள்.

ஜானகிக்குத் தெரியாது. நான் கூப்பிடும் அர்த்தம் புரியாது. இந்தத் துயரம் கப்பிய சூழ்நிலையில் என் சூசகங்கள் புரியா.

ஜானகி, சீக்கிரம் படுக்கைக்கு வா. நான் செத்துப் போகும் வேளை வந்துவிட்டது. உன்னிடம் தனிமையில் சொல்லி விடைபெற்றுக் கொள்ள வேண்டும். சீக்கிரம் வா என் அன்பு மனைவியே! உன் மகள் துயரத்தை அவள் மெதுவாக அனுபவிக்கட்டும். உனக்கென தனித்துயரங்கள் நான் ரகசியமாய் வைத்திருக்கிறேன். உன்னிடம் தந்து நான் போக வேண்டும். வா. விரைந்து வா.