அந்திம காலம்/அந்திம காலம் - 4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சுந்தரத்தின் வாழ்க்கை அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நேரானதாகத்தான் இருந்திருக்கிறது.. இளமையில் அவருடைய குறும்புகள் பெற்றோரினால் அடக்கப் பட்டிருந்தது உண்மைதான். ஆனால் இடைநிலைப் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த நாளிலேயே ஒழுக்கமும் நேர்மையும் அவரிடம் படிந்து விட்டன. அதிகம் பேசாத அடக்கமான புத்திசாலியான பிள்ளை என்ற பெயர் எடுத்திருந்தார். தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படித்த நீதிகளும் சமயநூல்களும் அவ்வப்போது அவரை நேர்படுத்தக் கைகொடுத்தன.

அவர் தந்தை ஓரளவு கண்டிப்பானவர்தான். ஆனால் அன்பானவர். அவருக்குக் கோபம் விரைந்து வந்தாலும் அதே வேகத்தில் தணிந்து விடும். அப்பா ஒரு காலத்தில் வீட்டில் ஒரு பிரம்பு வைத்திருந்தார். அந்தப் பிரம்பை எடுத்து ஆட்டியிருக்கிறாரே தவிர அடித்ததாத சுந்தரத்துக்கு ஞாபகமில்லை. ஆனால் பிரம்பைக் கையில் எடுக்கும் அளவுக்குப் போய்விட்டால் தான் செய்த குற்றத்தை எண்ணி சுந்தரத்தின் மனம் தானே சுருங்கித் தண்டனை விதித்துக் கொள்ளும். ஒன்று ஒரு வேளை சாப்பிடமாட்டார். அல்லது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு மணிக் கணக்கில் தனிமையில் இருப்பார்.

அவருடைய தாய் அவரைப் பெற்ற ஐந்தாறு ஆண்டுகளில் அடுத்த பிள்ளைப் பேற்றின் போது பெரியம்மை நோய் கண்டு அந்தப் பிள்ளையையும் இழந்து தானும் இறந்து போனார். தன் தாயைப் பற்றிய நினைவுகள் ஒரு கனவு போலக் கூட அவருக்கு இருக்கவில்லை. தாய் என்பவள் எப்படிப் பட்டவள் என்பது பற்றித் தன் நண்பர்களின் தாயர்களைப் பார்த்துத்தான் அவர் கணித்து வைத்திருந்தார். அந்தத் தாயன்புக்கு அவர் சில முறை ஏங்கியதுண்டு. ஆனால் தந்தையின் அன்பால் அது ஓரளவு சரியாகியது.

தாய் இறந்த பின் அவர் குடும்பத்தில் அவரும் அவருடைய அக்காள் அன்னபூரணியும் அவருடைய தந்தை ஆகிய மூவருடன் கொஞ்சம் மனநோய் பிடித்தவளான அப்பாவின் விதவைச் சகோதரி ஒருத்தியும் இருந்தாள். அந்த அத்தையின் கணவர் இளவயதிலேயே ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாராம். அந்தச் சம்பவத்தின் போது அவர் அலறியதையும் முழுகியும் அந்த அத்தை அருகில் இருந்து பார்த்தாளாம். அத்தைக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் தன் கணவனின் மரணத்துக்குத் தான்தான் பொறுப்பு என்ற குற்ற உணர்ச்சி ஆழப் பதிந்து விட்டது. அதிலிருந்து கிணற்றிலிருந்து கடல் வரை தண்ணீரைக் கண்டால் அவள் நடுநடுங்கிப் போவாள். பெரிய அண்டாவில், தொட்டியில் தண்ணீர் பிடித்து வைத்தாலும் பயம்தான்.

அத்தை அதிகமாகப் பேசி சுந்தரம் பார்த்ததில்லை. திடீர் திடீர் என்று "தண்ணிப்பக்கம் போவியா, போவியா?" என அன்ன பூரணியையும் சுந்தரத்தையும் முதுகில் அடிப்பாள். அது வலிக்காது. விளையாட்டு அடிதான். அதைப் பார்த்து இருவரும் சிரிக்கக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அத்தை வீட்டு வேலைகள் அத்தனையையும் பொறுப்பாகச் செய்வாள். நன்றாக ஆக்கிப் போடுவாள். ஆனால் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று கூடக் கேட்க மாட்டாள். சாப்பிடு என்று சொல்லவும் மாட்டாள். சுந்தரத்திற்கு அவள் ஓர் இயந்திரம் போலவே தென்பட்டாள். சொன்னதையெல்லாம் செய்வாள்.

சாப்பாடு துணி உட்பட எதையும் வாங்கித் தா என்று யாரிடமும் அவள் கேட்டதில்லை. வாங்கிக் கொடுத்தால் பிரித்தும் பார்க்கமாட்டாள். சுந்தரத்தின் இளவயதில் அத்தை என்று ஒரு ஜீவன் வீட்டில் இருப்பதை அவர் கவனித்தது கூட இல்லை. வீட்டில் கதவு இருப்பது போல ஒரு ஜடமாக இருந்தாள். ஆனால் அவர்களைக் காப்பாற்றினாள்.

பிற்காலத்தில் அத்தையைப்பற்ற நினைக்கும் போதெல்லாம் அவள் எல்லாம் அறிந்த ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுந்தரம் நினைத்துக் கொள்வார். தன்னுடைய இன்ப, துன்ப உணர்ச்சி நரம்புகளை முற்றாக வெட்டி எறிந்து விட்ட ஞானி. கடமையை மட்டும் செய்து பலனை எதிர்பார்க்காத கர்ம ஞானி. அந்தச் சலனமில்லாத உள்ளத்தோடு அவள் உடலும் உரமாக இருந்தது. ஒரு நாளும் அத்தை உடல் நலமில்லாமல் படுக்கையில் சாய்ந்து சுந்தரம் பார்த்தில்லை.

அக்காள் அன்னபூரணி அவரை விட நான்கு வயது மூத்தவள். அப்பா அவர்கள் இருவரையுமே தமிழும் ஆங்கிலமும் படிக்க வைத்தார். அக்கா அந்தக் கால மூன்றாம் பாரம் படித்ததோடு ஆசிரியர் பயிற்சிக்குப் போய்விட்டாள். சுந்தரம் தமிழ்ப் பள்ளி முடித்து ஆங்கில இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

அக்கா ஆசிரியப் பயிற்சி முடிந்து வேலைக்குப் போன முதலாண்டில் அப்பா ஒருநாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்தார். ஸ்ட்ரோக் என்றார்கள். ஒரு பக்கம் சுத்தமாக விளங்கவில்லை. வாய் பேச முடியவில்லை. மருத்துவ மனைப் படுக்கையில் இருந்தவாறு இரண்டு பிள்ளைகளையும் ஏக்கமாகப் பார்க்க மட்டும்தான் முடிந்தது. ஒரு கை கொஞ்சம் தூக்க முடிந்தது. அந்த ஒரு கை அசைவிலும் கண்களின் உருட்டலிலும் தலையின் அசைவிலும் அவர் காட்டுகின்ற சமிக்ஞைகளில்தான் அவருக்கு வேண்டியது என்னவென்று ஊகித்துத் தண்ணீர் தந்து, வியர்வை துடைத்து, முதுகையும் நெஞ்சையும் நீவிவிட வேண்டும்.

அத்தை சமைத்த கஞ்சிச் சாப்பாட்டை பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அப்பாவுக்கு வாயில் ஊட்டிவிடும் வேலை சுந்தரத்துக்குத்தான். அக்கா தூரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தாள். பள்ளிக் கூடம் விட்டு வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு மாலை நாலு மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்கு வர முடியும். அவள் வந்த பிறகுதான் சுந்தரம் வீட்டுக்குப் போவார்.

இப்படி தவணை வைத்துக்கொண்டு, அப்புறம் இரவு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் அவரும் அக்காவுமாய் அவருக்கு ஊட்டி அவரைச் சுத்தப்படுத்திவிட்டு வீட்டுக்கு வருவார்கள்.

ஒருநாள் சுந்தரமும் அன்னபூரணியும் எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பப் புறப்பட்ட வேளையில் அன்னத்தின் கையை அவர் பிடித்துக் கொண்டார். தலை கண் சமிக்ஞையில் சுந்தரத்தின் கையைக் கொண்டு வரச் சொன்னார். அவர் கையைக் கொண்டு போனதும் இருவரின் கைகளையும் தன் ஒரு கைக்குள் பிடித்துக் கொண்டு அழுத்தினார். அன்னபூரணியை இரக்கமாகப் பார்த்தார். "இவனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்று அவர் கண்கள் சொல்லியதை அன்னம் புரிந்து கொண்டாள். கொஞ்ச நேரம் அழுது பின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் சுந்தரம் கஞ்சி எடுத்துச் சென்றபோது படுக்கை காலியாக இருந்தது. நர்ஸ் சவக் கிடங்கைக் காட்டினாள்.

வீட்டுக்கு ஓடிவந்து அக்காவுக்குக் காத்திருந்து அவள் வந்தவுடன் தூரத்து உறவினர்களுக்குப் போன் செய்து மற்றவர்கள் சொல்லச் சொல்ல ஈமக் கடன்களை செய்து முடித்தார் சுந்தரம்.

அத்தை ஒரு சொட்டுக் கண்ணீரும் விடவில்லை. வீட்டுக்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் யார் யார் என்ன வேலைகள் ஏவினாலும் செய்தாள். அன்றிரவு எல்லாம் ஓய்ந்திருந்த நேரத்தில் அவள் தனக்குள் ஏதோ முனகுவது கேட்டது. சுந்தரம் பக்கத்தில் போய் நின்று கேட்டார். "தண்ணிக்கிட்ட போகாதேன்னா யார் கேக்கிறாங்க? ஏன் போகணும் தண்ணிக்கிட்ட? தண்ணி முளுங்கிடுன்னு தெரியாது? இப்ப முளுங்கிடிச்சே! இன்னும் யார முளுங்கப் போவுதோ? சொன்னா கேப்பாங்களா? தண்ணிலதான் போய் நிப்பாங்க!"

சுந்தரம் பக்கத்தில் போய் "அத்தை" என்று கூப்பிட்டுப் பார்த்தார். அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. "தண்ணி தண்ணி" என்றே முனகிக் கொண்டிருந்தாள்.

அப்பா என்ற ஆதாரம் போய்விட்ட பயமும் துயரமும் மனத்தைக் கவ்விக் கொண்டிருந்தாலும் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் நல்லவர்களாக இருந்தது சுந்தரத்துக்குப் பெரிய பலமாக இருந்தது. அப்பாவும் அவர்களை அப்படி ஒன்றும் நிராதரவாக விட்டுவிட்டுப் போய்விடவில்லை. அவர்கள் இருந்த வீடு சின்ன வீடாக இருந்தாலும் சொந்த வீடு. பேங்கிலும் ஒரு இரண்டாயிரம் வெள்ளி வைத்திருந்தார். அக்காவுக்குச் சில நகைகள் செய்து போட்டிருந்தார்.

அப்பாவின் நண்பர் ஒருவர் இராம கிருஷ்ணன் என்பவர் மட்டும்தான் அவர்கள் குடும்பத்துக்கு அணுக்கமானவராக இருந்தார். அடிக்கடி வீட்டுக்கு வந்து அப்பாவோடு பேசிக்கொண்டிருப்பார். சுந்தரமும் அன்னமும் அவரை மாமா என்று கூப்பிடப் பழகிக்கொண்டார்கள். அவர் ஒரு வழக்கறிஞரைப் பார்த்துப் பேசி வீட்டை அவர்கள் இரண்டு பேரிலும் எழுதவும் பொருளகத்தில் உள்ள கணக்கை அக்கா பேரில் மாற்றிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். அதே நண்பர் அக்காவுக்கு இன்னொரு பெரிய நன்மையையும் செய்ய முன் வந்தார்.

"அன்னம். இது இப்ப ஆம்பிள இல்லாத வீடா போச்சி. இது நல்லதில்ல. எனக்குத் தெரிஞ்ச தங்கமான பையன் இருக்கான். நான் சொல்லி ஏற்பாடு பண்ணுறேன். சீக்கிரத்தில கல்யாணத்த பண்ணிக்கம்மா" என்றார்.

அக்கா வெட்கத்தோடு மறுத்துவிட்டாள். "தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்குப் போகட்டும் மாமா. பிறகு பாப்போம்" என்றாள். அன்று தட்டிக் கடூத்தவள்தான். அதற்கப்புறம் கல்யாணத்தையே அக்கா நினைத்துப் பார்க்கவில்லை. அப்படியே உறைந்து போனாள். அவளிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் அடங்கிப் போனார்கள்.

சுந்தரம் சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தன் வகுப்பு நண்பன் வீட்டுக்கு ஒன்றாக இருந்து படிக்கப் போன காலத்தில்தான் அந்த நண்பனின் தங்கை ஜானகியை அங்கு சந்தித்தார். அந்த நண்பன் நாராயணனின் தந்தை போத்தல் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போத்தல்களும் டின்களும் அடுக்கிக் கிடக்கும். சாக்கின் மணமும் சணலில் மணமும் வீட்டின் முகப்பிலிருந்து சமயலறை வரையில் எந்த நாளும் இருக்கும்.

நாராயணனின் அப்பா வீட்டில் இருந்தால் ஒரு நிமிஷம் கூட சட்டையோடு இருக்க மாட்டார். அவருக்கு இந்த ஊரில் ஒரு மனைவி, தமிழ்நாட்டில் ஒரு மனைவி. வருடத்தில் மூன்று நான்கு மாதங்கள் ஊரில்தான் இருப்பார். வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஒன்று போத்தல்களையும் டின்களையும் எண்ணிக் கொண்டிருப்பார். அல்லது பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்.

சுந்தரத்தைப் பார்த்தால் உற்சாகமாகப் பேசுவார். அவனை ஒரு பெரிய மனிதனாகவே நடத்துவார். நாராயணன் மேல் அவருக்குச் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. "சுந்தரம். இந்தப் பயபுள்ளைக்கி படிப்பே ஏறமாட்டெங்குது. கணக்கு சுத்தமா வரமாட்டேங்குது. என்னோட மூத்தவ புள்ளங்க, எங்க ஊர்ல, கணக்கில கெட்டின்னா அப்படிக் கெட்டி. ஏன் தெரியுமா? அங்க படிப்ப சொல்லிக்குடுக்கிற விதம் அப்படி. வாத்தியாருங்க தோல உரிச்சிப்பிடுவாங்க.... இங்கதான் வாத்தியாருமாருக பிள்ளைகளுக்குப் பயப்பட்றாங்கள! அப்புறம் புள்ளங்க எப்படி படிக்கும்? சுந்தரம்! நீ எப்படியாவது இவனுக்குக் கணக்குச் சொல்லிக் குடுத்து பரிட்சையில பாஸ் பண்ண வை!" என்பார்.

நாராயணன் சுந்தரத்திடம் கணக்குக் கற்றுக் கொண்டானோ என்னவோ, ஆனால் சுந்தரம் அவன் தங்கை ஜானகியிடம் காதலை நன்றாகக் கற்றுக் கொண்டார். கொஞ்ச காலமே பள்ளிக்கூடம் போய் "பொம்பிள பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?" என்று தகப்பனால் நிறுத்தப்பட்டு வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட அவளிடம் கட்டுப்பாடான குடும்பங்களில் வளர்க்கப்பட்ட பெண்களுக்கே உரிய வெகுளித்தனம், பாமரத்தன்மை இருந்தது. அதோடு சின்னச் சின்ன கிண்டல்கள், சடையை வீசியும் தாவணியை விரல்களில் சுருட்டியும் கால் விரல்களால் மண்ணைக் கிளறியும் தருகின்ற கவர்ச்சி, ஒளிந்து ஒளிந்து கண்களால் மட்டும் காதல் செய்தி அனுப்பும் சாமர்த்தியம், "நம்ப வீட்டில எல்லாம் சாப்பிடுவாங்களா?" என்று மறைமுகமாகப் பேசி மூக்கு முட்டச் சாப்பாடு போடும் அன்பு, சாப்பாடு போடும் சாக்கில் அம்மாவுக்குத் தெரியாமல், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அண்ணனுக்குக் கூடத் தெரியாமல் அவன் கையைப் பிடித்துக் கிள்ளுகிற குறும்பு எல்லாமாக அவனுக்குப் பலவிதமான பாடங்கள் நடத்தும் காதல் பள்ளிக் கூடமாக அவள் இருந்தாள்.

நாராயணன் சீனியர் கேம்பிரிட்ஜ் பரிட்சையில் தோற்றுப் போனான். சுந்தரம் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்தார். ஆசிரியர் வேலைக்கு மனுப் போட்டார். அவருக்கு இங்கிலாந்தில் உள்ள கெர்க்பி நகரில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ள இடம் கிடைத்தது.

அக்காவிடம் விடைபெற்ற போது அவள் அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள். "பத்திரம் தம்பி! பத்திரம்! வெள்ளக்காரங்க ஊர். ஒழுக்கத்த பாதுகாத்துக்க. சாப்பாடு ஜாக்கரதை! அடிக்கடி லெட்டர் போடு" என்று அனுப்பி வைத்தாள். அத்தையிடம் சொல்லிக்கொண்ட போது "தண்ணிப் பக்கம் போகாத!" என்று மட்டும் சொன்னாள். தண்ணிப் பக்கம் போகாமல் இங்கிலாந்துக்கு எப்படிப் போவது என்று அவன் அத்தையிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை.

நாராயணனிடம் சொல்லிக் கொள்வது போல அவர்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரமாகப் போய் ஜானகியிடம் சொன்னார். முந்தானையைக் கண்களில் திணித்துக் கொண்டு "என்ன மறந்துடுவிங்க! யாராச்சும் வெள்ளக்காரியக் கட்டிக்கிட்டு வந்துடுவிங்க!" என்று உண்மையில் அழுதாள்.

"அழுவாத ஜானகி. என்ன பைத்தியமா இருக்கிற? ரெண்டு வருஷத்தில உன்னோட சுந்தரமாவே வந்து உன்னையே கட்டிக்கிறேன்!" என்று அவளை அணைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்ககேயோ வௌியே போயிருந்த நாராயணன் திடீரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். "என்ன நடக்குது இங்கே?" என்று அவன் போட்ட சத்தத்தில் ஜானகியும் சுந்தரமும் திடுக்கிட்டு நின்றனர்.

"சுந்தரம் இது நல்லா இருக்கா ஒனக்கு? எங்க அப்பாரு பாத்திருந்தார்னா என்ன நடந்திருக்கும் இந்நேரம்? உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்பாரு!" என்று கர்ஜித்தான்.

அந்த நேரத்தில் சுந்தரத்தின் மனத்தில் குற்ற உணர்வு அதிகமாக இருந்தது. செய்யக் கூடாத தவற்றைச் செய்து விட்டோம், தனக்கும் குடும்பத்திற்கும் மாறாத அவமானத்தை வாங்கித் தந்துவிட்டோம் என்ற உணர்ச்சியே ஓங்கியிருந்தது. நாராயணன் முன்னால் தலை குனிந்து நின்றார். வீட்டுக்குப் போய் அறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு நாள் கணக்கில் வௌியே வராமல் தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நாராயணன் அவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வௌியே போனான். ஒதுப்புறமான இடத்தில் வைத்து கேட்டான்.

"உங்களுக்குள்ள தகாத மொறையில ஏதாச்சிம் நடந்திச்சா?"

இல்லை என தலையாட்டினார்.

"தோ பாரு சுந்தரம், இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். நீ படிக்க வௌிநாட்டுக்குப் போற சந்தர்ப்பத்தில நமக்குள்ள அனாவசியமா சண்டை வேணாம். இதோட விட்டுடு. அப்பா ஊர்ல ஜானகிக்கு மாப்பிள்ள பாத்து வச்சிருக்காரு. அதனால அவள மறந்திட்டு வேலயப் பாரு. சொல்லிட்டேன் ஆமாம். எங்கப்பா முரட்டு ஆசாமி. அவருக்கு இந்த விஷயம் போனா கத்திய தூக்கிக்குவாரு, பாத்துக்க!"

அவன் உள்ளே சென்று சுந்தரத்தின் முகத்தில் அறைவது போலக் கதவை தடால் என்று சாத்தினான்.

வீட்டுக்குத் திரும்பும்போது மனம் அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் கூனிக் குறுகியிருந்தாலும் வீட்டுக்கு வந்த பின் கோபத்தில் சிலிர்த்து எழுந்தது. அவரை அது வரை யாரும் இப்படி இக்கட்டான சந்தர்ப்பத்தில் பிடித்துக் கொண்டு அவமானப் படுத்தியதில்லை. என்ன செய்துவிட்டேன் என்று என் முகத்தில் அறைந்தால் போல் கதவைச் சாத்தினான் நாராயணன்? என்ன குற்றத்துக்காக அவன் அப்பன் கத்தியைத் தூக்க வேண்டும்? நான் அவர்களுக்குத் தகுதியில்லாத மாப்பிள்ளையா? எந்த வகையில் குறைந்து விட்டேன்? ஒரு இளம் பெண்ணிடம் அன்பு செலுத்துவது - அது காதலேயானாலும் சரிதான் - எந்த விதத்தில் குற்றம்? எந்த நீதி நூலிலே இது குற்றம் என்று சொல்லியிருக்கிறது?

மனத்தைத் தௌிவு படுத்திக் கொண்டார். தன்னை இப்படி அவமானப் படுத்தியவர்களிடம் புறமுதுகிட்டு ஓடிவிடக் கூடாது என்ற வைராக்கியம் மனத்தில் எழுந்தது. ஆனால் இருந்து போராட சந்தர்ப்பங்கள் சரியாக இல்லை. அக்காவின் உதவி பெற்றுத்தான் இதை நடத்தியாக வேண்டும் என்று முடிவு செய்தார்.

மறுநாள் பயணத்திற்குப் பெட்டிகளையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அக்காவிடம் சொன்னார்:

"அக்கா உங்கிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லணும்!"

அன்னம் அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

"இந்த நாராயணனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு தெரியுமா அக்கா, ஜானகின்னு பேரு...." நடந்ததையெல்லாம் தயங்கித் தயங்கிச் சொன்னார்.

"அக்கா எனக்கு இப்ப கல்யாணத்துக்கு அவசரமில்ல. ஆனா அவளக் கட்டிக்கிறேன்னு வாக்கு குடுத்திட்டேன். இப்ப அவள என்னமோ ஊரு மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கப் போறாங்களாம். அதுக்குள்ள..."

அன்னம் பெருச்சு விட்டாள். "தம்பி! நம்ப வீட்ல பெரியவங்க இல்ல. நான் அந்த இராம கிருஷ்ணன் மாமாவ வரச்சொல்லி அவங்ககிட்ட பேசிப் பாக்கிறேன். நீ இப்ப அதப் பத்தி யோசிச்சி மனசக் குழப்பிக்காம போயிட்டு வா!" என்று அவனை அனுப்பி வைத்தாள்.

கெர்க்பியில் அவர் போய்ச் சேர்ந்ததிலிருந்து அக்காவிடமிருந்து கடிதங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தன.

முதல் கடிதத்தில்: "நானும் இராம கிருஷ்ணன் மாமாவும் போய்ப் பேசினோம். எடுத்தெறிந்து பேசி விரட்டாத குறையாக அனுப்பிவிட்டார்கள். ஜானகியின் அப்பாவை விட உன் நண்பன் நாராயணன்தான் மிகவும் குதிக்கிறான். கொஞ்சம் நாள் கோபம் ஆறவிட்டு மீண்டும் போய் பேசிப் பார்க்கிறோம்!"

அடுத்த கடிதத்தில்: "ஜானகி எப்படியோ என்னைத் தேடி ரகசியமாக வீட்டுக்கு வந்துவிட்டாள். வேற மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்தால் செத்துப் போவேன் என்று சொல்லிப் போயிருக்கிறாள்!"

"போனவாரம் மீண்டும் போய்ப் பேசினோம். பழைய கதைதான். ஜானகியும் உன்னை விரும்புகிறாள் என்று எடுத்துச் சொன்னேன். அதன் பலனாக அவளுக்குத்தான் உதை விழுந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை!"

"தம்பி, நேற்று ஜானகி தன் துணிகளைத் தூக்கி அள்ளிக்கொண்டு நம் வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் அப்பா ஊரில் மாப்பிள்ளை ஏற்பாடு செய்து விட்டாராம். இவள் மறுத்ததும் அடித்திருக்கிறார். ஆகவே ஓடிவந்து விட்டாள். நான் போலிசில் சென்று இந்த விஷயத்தைப் புகார் செய்திருக்கிறேன்."

"ஜானகியின் அம்மாவும் அண்ணனும் வந்து ஜானகியை மீண்டும் அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் அழுதுகொண்டே போயிருக்கிறாள்"

"தம்பி! நேற்று ஜானகியோடு அவள் அம்மாவும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஜானகியின் அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். தான் கல்யாண ஏற்பாடு செய்யப் போவதாகவும் அதன்பின் ஜானகியை ஊருக்கு அழைத்து வரும்படியும் அவள் அம்மாவுக்கு உத்தரவு போட்டுப் போயிருக்கிறார். அவள் அம்மாவுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. அவருக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது. நாராயணன் எப்படியானாலும் ஜானகியை ஊருக்கு அனுப்பியே தீருவேன் என என்னிடம் சவால் விட்டுப் போயிருக்கிறான். அவனுடைய அப்பனுடைய முரட்டுப் புத்திதான் அவனுக்கு இருக்கிறது. நடப்பது நடக்கட்டும். ஜானகியை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்."

அதன் பின்னர் அக்கா ஒரு தந்தி அனுப்பியிருந்தாள். "ஜானகியின் தந்தை இந்தியாவில் மாரடைப்பால் இறந்து போனார். கல்யாணம் ரத்தாகிவிட்டது."

ஜானகியின் தந்தை அவர்களுக்கென்று ஒரு காசும் விட்டுப் போகவில்லை. இருந்த வீடும் வாடகை வீடு. நாராயணனுக்கு அவர் வியாபாரத்தில் கொஞ்சமும் நாட்டமில்லை. அவன் ஏதோ சில்லறை வேலைகள் பார்த்து வீட்டை மறந்து திரிய ஆரம்பித்துவிட்டான். இருந்த சரக்குகளை வந்த விலைக்கு விற்று அவர்கள் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது சுந்தரம் பயிற்சி முடிந்து திரும்பினார்.

சுந்தரத்துக்குப் பினாங்கிலேயே ஒரு பள்ளியில் வேலை கொடுத்திருந்தார்கள். வேலையை ஏற்றுக்கொண்டு ஜானகியைப் போய்த் தைரியமாகப் பார்த்து வந்தார். நாராயணன் உடைந்து போயிருந்தான். அவர்கள் குடும்பம் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது.

அன்னம் இராம கிருஷ்ணன் மாமாவையும் அழைத்துக் கொண்டு முறையாகப் போய் பெண் கேட்டு நாள் குறித்துத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள். இராம கிருஷ்ணன் மாமா தன் மனைவியோடு வந்திருந்து எல்லா உதவிகளையும் செய்தார். தங்களுக்கு உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் இருந்தும், இராம கிருஷ்ணன் மாமா போன்றவர்கள் நட்பையே உறவாக ஆக்கிக் கொண்டு இப்படி உதவி செய்வதை எண்ணிப் பார்த்துச் சுந்தரம் மகிழ்ந்தார். நல்லவர்கள் பிற நல்லவர்களைக் கவருவது இயற்கைதான் போலும். அப்பா நல்லவராக இருந்துதான் இராம கிருஷ்ணன் போன்று ஆதாயம் கருதாத அன்பு மனம் கொண்டவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கின்றார். தானும் அக்காவும் நல்லவர்களாக இருப்பதினால்தான் அந்த நல்ல நண்பர்களைத் தங்க வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. தான் தொடர்ந்து நல்லவராக இருந்த வர இவை நல்ல காரணங்கள் என்று சுந்தரம் முடிவு செய்து கொண்டார்.

ஜானகியைப் பெண் பார்த்து வந்த அன்றைக்கே சுந்தரம் தன் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லி அன்றிரவே அந்த விஷயம் குடும்பச் சபையில் அலசப் பட்டது.

மாமாதான் ஆரம்பித்து வைத்தார்.

"ஏன் அன்னம். தம்பிக்குத்தான் எல்லாம் பேசி முடிச்சாச்சி. ரெண்டு பேரும் வேலையும் செய்றிங்க. இப்ப உன் கல்யாணத்தப் பத்தி யோசிக்க வேணாமா?" என்று கேட்டார்.

அன்னம் வெட்கப்பட்டாள். தலை குனிந்து பேசினாள். "இப்ப ஏன் மாமா இந்தப் பேச்சு? தம்பி கல்யாண வேல தலைக்கு மேல கிடக்குது" என்று தட்டிக் கடூத்தாள்.

"வேல என்னம்மா பெரிய வேல! நான் இதுவரைக்கும் நூறு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். இது பெரிய வேல இல்ல. ஆனா உன் முடிவச் சொல்லு. அந்தப் பையன், நான் ரெண்டு வருஷம் முன்ன சொன்னேனே அதே பையன், இன்னும் கல்யாணம் ஆகாமத்தான் இருக்கான். ஒன்னப் பாத்திருக்கான். அவனுக்குப் புடிச்சிருக்கு. தங்கமான புள்ள. சரின்னு சொல்லு. தம்பி கல்யாணத்தோட ஒரே பந்தல்ல முடிச்சிருவோம்."

மௌனமாக இருந்தாள். சுந்தரம் பேசினார். "அக்கா! நீ இப்படி இருக்கும்போது நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கே அது அவ்வளவு மகிழ்ச்சியா இல்லக்கா. மாமா சொல்றது போல நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டின்னா அதுவே ரெட்ட மகிழ்ச்சியா இருக்கும்! சரின்னு சொல்லுக்கா..." என்றாள்.

அன்னம் யோசித்தாள். "மாமா. கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எனக்கு ஒண்ணும் வைராக்கியம் இல்ல. ஆனா இந்த மாதிரி திடீர்னு பண்ணிக்க வேணாம் மாமா. தம்பிக்கு தாய் போல நான் முன்ன நின்னு செஞ்சி வைக்கணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கிற போது நானும் மாலை போட்டுக்கிட்டு மணவறையில உக்காந்துட்டா எனக்கே திருப்தியா இருக்காது! இந்தக் காரியம் நல்ல படியா முடியட்டும். அப்புறம் எப்ப கல்யாணம் தேவைன்னு தோணுதோ அப்ப நானே மாமாகிட்டயும், தம்பி கிட்டயும் சொல்றேன்!"

அவர்கள் இருவரையும் முறியடித்துவிட்டு வீராங்கனையாக வேறு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள் அன்னம்.

கல்யாணம் அடக்கமாக ஆனால் எல்லார் மனத்திலும் மகிழ்ச்சி பொங்க நடந்தது. ஜானகி மகிழ்ச்சியிலும் காதலிலும் பூரித்திருந்தாள். ஆனால் சுந்தரத்திற்கு எல்லாவற்றையும் விட ஒரு வெற்றியுணர்ச்சியே அதிகம் இருந்தது. காரணங்கள் இல்லாமல் தன்னை அவமானப்படுத்திய நாராயணனையும் அவன் தந்தையையும் ஒரு மானப் போரில் வெற்றி கொண்ட மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. ஆனால் தான் களத்தில் இல்லாமல் இங்கிலாந்தில் உட்கார்ந்து கொண்டு நடத்திய அந்தப் போரில் தேரையும் ஓட்டி வில் வளைத்து அம்பும் விட்டவளாய் இருந்த அக்காவின் மீது அவருக்கு நன்றி உணர்ச்சியும் பக்தியும் கூட வளர்ந்திருந்தன.

திருமணத்தின் போது வீடு கலகலவென்றிருந்தது. பல காலம் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெற்றிராத அந்த வீட்டில் எல்லாரும் ஓர் ஈடுபாட்டுடன் ஓடியாடினார்கள். திருமணத்திற்கென்று சேமித்து வைத்திருந்தவளைப் போல அக்கா எந்தச் செலவென்றாலும் ஏன் என்று கேட்காமல் தன் கைப்பையிலிருந்து காசு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கல்யாணத்தின் போது பின்னாலிருந்து மட்டும் வேலை செய்து கொண்டு கூட்டத்திலிருந்து ஒளிந்து கொண்டிருந்த அத்தையைத் தாலி கட்டும் நேரத்தில் முன்னால் இழுத்துக்கொண்டு வந்தாள் அக்கா. தம்பதிகள் அக்காவின் காலில் விழுந்து எழுந்தவுடன் அத்தையின் காலிலும் விழப் பண்ணினாள். அத்தை கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். ஆனால் அவர்கள் தலையைத் தொட்டாள். அவள் எந்த நேரத்திலும் "தண்ணிக்கிட்டப் போகாதே!" என்று சொல்லப் போகிறாள் என்று சுந்தரம் எதிர்பார்த்த நேரத்தில் படபடப்போடு உள்ளே ஓடிவிட்டாள்.

அத்தை அவர்கள் முதலிரவு அறையை அலங்கரித்து வைத்திருந்த விதம் அதிசயமானதாக இருந்தது. மல்லிகைப் பூவும் ரோஜா இதழுமாக கம கமவென்று கமழ்ந்திருந்தது. வர்ணத் தாள்கள் கட்டிலின் மேல் சரஞ்சரமாகப் பின்னிக் கட்டப் பட்டிருந்தன.

தனக்குள் சுருட்டிக்கொண்டு முடங்கிப்போய் கிடக்கும் அத்தைக்கு இத்தனை கலையுணர்ச்சி இருக்க முடியுமா? அவள் மனம் வளமாகத்தான் இருக்கிறது. கற்பனைத் திறனுடன் இருக்கிறது. ஆனால் வௌியில் முடங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை மட்டும் காட்டிக் கொள்கிறாளோ? அப்படிக் காட்டிக்கொண்டால்தான் உலகம் தன்னைச் சும்மா விடும் என்றும் அந்தத் தனிமையில் பாதுகாப்பு இருக்கும் என்றும் எண்ணுகிறாளோ!

அன்றிரவு அவருக்குப் படபடப்பு மிக்க இரவாக இருந்தது. அது பெண்ணின்பம் பருகுகின்ற இரவு. இதற்கு முன் அவருக்கு அந்த அனுபவம் இருந்ததில்லை. புத்தகத்திலும் படத்திலும் பார்த்ததுதான். அவரின் நண்பர்கள் அவரைப் பலமுறை அந்த இன்பத்தை வாடகைக்குப் பருக அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆசையிருந்தாலும் தைரியம் இருந்ததில்லை. இதனால் அவர் கேலிக்குள்ளாகியிருக்கிறார். நண்பர்கள் அடுத்த நாளில் அனுபவங்களை மிகைப்படுத்தியும் சுவைப் படுத்தியும் சொல்லி அவர் மனத்தை அலைக்கடூத்து இரவுகளில் படுக்கையில் புரளச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் பின்னர் ரகசியமாக டாக்டரை நாடி ஊசி போட்டுக்கொண்டு வெட்கத்துடன் தலை குனிந்திருக்கும் நிலை வந்த போது அவர் தனக்குள் மகிழ்ந்திருக்கிறார்.

அந்த ஆபத்துக்களை யெல்லாம் தாண்டி இன்று அந்த அனுபவம் சட்டபூர்வமாக பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு தான் விரும்பிய பெண்ணுடன் நிகழ்வதாக இருந்தும் மனத்தில் ஒரு பயமும் குற்ற உணர்ச்சியும் கூட இருந்தது. பால் உறவு என்பதே ஏதோ ஒரு குற்றம் போல மனத்தில் பதிந்திருந்து. ஏன் என்று விளங்கவில்லை. எல்லோருக்கும் இயற்கை விதித்து வைத்திருக்கிறது என்று தெரிந்தும் சமுதாயம் அது செய்யத் தகாத ஒன்று போலவே மறைத்தும் ஒதுக்கியும் வைத்திருப்பதுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஜானகி அறைக்குள் நுழைந்த போது கண்ணைப் பறிக்கும் பச்சைப் பட்டுப் புடவை கட்டி மோகமூட்டும் தேவதையாக இருந்தாள். இதற்கு முன் என்றுமில்லாத வெட்கம் அவளிடம் வந்து குடி கொண்டிருந்தது. படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டுத் தலையைக் குனிந்து கொண்டு அவர் தொடு முன் தோளைக் குறுக்கிக் கொண்டு... அவளுக்கும் குற்ற உணர்ச்சிதான் போலும். சமுதாயம் இந்த உறவை சடங்கு பூர்வமாக அனுமதித்திருக்கிறது என்ற உண்மை இன்னும் மனத்தில் உறுதியாக உட்காரவில்லை.

"ஏன் ஜானகி! என்னப் பாத்தா தொழு நோய்க்காரன் மாதிரி இருக்கா?" என்று கேட்டார்.

"ஐயோ, ஏன் அப்படிச் சொல்றிங்க? ராஜாவாட்டம் இருக்கிங்க!"

"நான் ராஜா மாதிரி இருந்தா நீ ராணி மாதிரி கம்பீரமா இருக்க வேண்டியதுதான! ஏன் என்னவோ கைதி மாதிரி கூனிக் குறுகிப் போய் இருக்கிற?"

"வெக்கம் இருக்க வேணாமாங்க கொஞ்சம்? உங்களப்போல நான் இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் கண்டவளா, தைரியமா இருக்க?"

அணைப்புக்குக் கொஞ்சமாக இடம் கொடுத்தாள். பயம் கொஞ்சம் தௌிந்தவுடன், பேசத் தைரியம் வந்தவுடன் "மாமி ரொம்ப நல்லவங்க!" என்றாள்.

"மாமியா? எந்த மாமி ஜானகி?"

"அதுதான் உங்க அக்கா. உங்களுக்கு அவங்க அம்மா மாதிரின்னா எனக்கு மாமி மாதிரிதான! வேற யாரு இருக்காங்க நான் ஆசயா மாமின்னு கூப்பிட?" அப்புறம் அக்காவைப் பற்றி நிறையப் பேசினாள். முடிந்த பின் அத்தையைப் பற்றி நிறையப் பேசினாள். தன் தாயின் விதவை வாழ்க்கை பற்றிப் பேசினாள். தன் தந்தையின் துரோகங்களைத் திட்டித் தீர்த்தாள். தன் அண்ணனின் ஊதாரித்தனம் பற்றிப் பேசினாள்.

"ஏன் ஜானகி இப்படிக் குடும்பக் கதைகளைப் பேசித் தீர்க்கிறதுக்குத்தான் முதலிரவுன்னு வச்சிருக்காங்களா?" என்று கேட்டார் சுந்தரம்.

"போங்க உங்களுக்கு ரொம்ப அவசரம்!" என்றாள். அதன் பின் "ஆமா உங்களுக்கு ஆண் குழந்த வேணுமா, பெண் குழந்த வேணுமா?" என்று கேட்டாள். அன்று இரவு அவள் ஆக செக்சியாகப் பேசிய பேச்சு அது ஒன்றுதான்.

"ஏன் கேள்வி? ஒவ்வொரு வகையிலும் ஒரு அரை டஜன் பெத்துப் போட்டுடேன்!"

"ஐயோ, போங்க" என்று அவள் சிரித்து அவர் மேல் விழுந்தவுடன் அந்த அன்பு அருவிகளின் சங்கமம் ஆரம்பமாகியது.

இரண்டு மூன்று நாட்கள் மாமியார் வீடு போதல் மறு உண்ணல் என்று கடூந்தவுடன் இருவரும் கொடிமலைக்குச் சென்று இரண்டு நாட்கள் தேனிலவு கடூத்து வந்தார்கள்.

அவர்கள் வீடு வந்த இரவு அக்கா அவர்கள் இருவரையும் அழைத்தாள். இருவர் கையையும் பிடித்து ஒரு பத்திரத்தை அவர்கள் கையில் திணித்தாள்.

"என்ன அக்கா இது?" என்று கேட்டார் சுந்தரம்.

சிரித்துக் கொண்டே சொன்னாள்: "என் கல்யாணப் பரிசு. இந்த வீடு நம்ப ரெண்டு பேர் பேர்லியும் இருந்தது. இப்ப அத உங்க ரெண்டு பேர் பேருக்கும் எழுதி வச்சிட்டேன்!"

அதிர்ந்து போனார்."ஏன் அக்கா இப்படி செஞ்ச? இதுக்கு என்ன தேவை வந்தது இப்ப?"

"உங்களுக்கு எதிர் காலத்தில தேவை வரும் தம்பி. அப்ப நீங்களா வந்து எங்கிட்டக் கையேந்தி நிக்க வேணாமில்லையா?"

"முடியாது அக்கா. இந்த வீட்டில பாதி உன்னோட. இது அப்பாவோட சொத்து. அதுக்குள்ள பணத்தையாவது நீ வாங்கிக்கத்தான் வேணும்!" என்றான்.

"எனக்கு எதுக்குத் தம்பி பணம்? என்னுடைய சேமிப்பே எனக்குப் போதும். அதோட அந்த சேமிப்பில ஒரு பகுதிய எடுத்து இன்னொரு புது வீட்டுக்கும் முன் பணம் கொடுத்திட்டேன். எல்லாம் இராம கிருஷ்ணன் மாமா மூலமாத்தான். வீடும் இப்ப ரெடியாயிடுச்சி!"

"எங்க இருக்கு அந்த வீடு?"

"மாமா இருக்கிற இடத்திலதான். தைப்பிங்கில!"

"தைப்பிங்கிலியா? அவ்வளவு தூரத்தில நமக்கு எதுக்கு வீடு?"

அப்புறம் அமைதியாக விளக்கினாள். தைப்பிங் பள்ளிக்கூடம் ஒன்றிற்குத் தான் மாற்றல் கேட்டு எழுதியிருந்ததாகவும் மாற்றல் கிடைத்து விட்டதாகவும் அடுத்த பருவம் பள்ளி தொடங்கும் போது போய் வேலை ஏற்க வேண்டும் என்றும் சொன்னாள்.

சுந்தரத்துக்கு மனம் உடைந்தது. ஜானகி அழவே ஆரம்பித்துவிட்டாள். சுந்தரம் கேட்டார்:

"ஏன் அக்கா இப்படி பண்ணின? நாங்க என்ன செஞ்சோம் உனக்கு?"

"தம்பி! நீங்க இளசுங்க. உங்க வாழ்க்கைய உங்க இஷ்டம் போல நீங்க நடத்தணும். நான் ஒருத்தி இருந்துகிட்டு உங்க மேல அதிகாரம் செலுத்திக்கிட்டு இருக்கக் கூடாது. அதோட அத்தைக்கு வயசாகிக்கிட்டு வருது! உங்க இளவயசில அவுங்க உங்களுக்கு பாரமாகிடக் கூடாது. ஆகவேதான் நாங்க ரெண்டு பேருமா கொஞ்சம் தனியா, இதோ கூப்பிடு தூரத்தில இருக்கிற தைப்பிங்கில, போய்த் தங்கிடப் போறோம்! உங்களுக்கு ஏதா ஒண்ணு வேணுமின்னா உடனே வந்து செஞ்சிட்டுப் போறோம்! இதுதான் எல்லாருக்கும் நல்லது தம்பி!"

அக்கா உறுதியானவள். எதையும் ஆழச் சிந்தித்துத் திட்டமிட்டுச் செய்பவள். மனதுக்குள் நினைத்து விட்டாளானால் மாற்ற முடியாது என்று சுந்தரத்துக்குத் தெரியும்.

அடுத்த மாதத்தில் அத்தையையும் அக்காவையும் தைப்பிங்கில் கொண்டு புது வீட்டில் இறக்கி அவள் வீட்டில் ஒரு வேளை உணவும் சாப்பிட்டு வந்தார்கள்.

அக்காவும் அத்தையும் அந்த வீட்டில் ஏற்படுத்திய வெறுமை ராதா பிறந்த பின்தான் தீர்ந்தது.