அந்திம காலம்/அந்திம காலம் - 9

விக்கிமூலம் இலிருந்து

அவர் மல்லாந்து படுத்திருந்த போது அந்த இயந்திரத்தின் வட்டமான ஒற்றைக் கண்ணாடிக் கண் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்புறம் அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்தார்கள். இப்போது அவரால் இயந்திரத்தைப் பார்க்க முடியவில்லை. படுக்கையின் மேல் அவருடைய தலைக்கு நேராக அந்த இயந்திரம் முகம் கவிந்திருந்தது. கொஞ்சம் வலமும் இடமுமாக அசைவது ஓரக் கண்ணில் தெரிந்தது. அந்த அசைவின் போது அதன் பாகங்கள் கிர் கிர்ரென அமைதியான ஓசை எழுப்பின.

இந்த இயந்திரத்துக்கு உயிர் உண்டா? என எண்ணிப் பார்த்தார். இதற்கு உயிர் இல்லை என்று யார் சொல்ல முடியும்? உயிர் என்பது என்ன என்று யாருக்குத் தெரியும்? எந்த விஞ்ஞானி, எந்த வேதாந்தி இந்த உலகில் உயிரின் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள்? இதோ இந்த இயந்திரம் என்னைப் பார்க்கிறது. என் தோலுக்குள் ஊடுருவிப் பார்க்கிறது. என் தலைக்குள் அதனால் பார்க்க முடிகிறது. என் மூளை மடிப்புக்களை, என் மூளைச் சோற்றை அதனால் காண முடிகிறது. அந்தச் சோற்றுக்குள் மண்ணாய் வளர்கின்ற புற்றுகளை அதனால் கணிக்க முடிகிறது. அப்புறம் எந்த இடத்தில் இருந்து லேசர் கதிர்களைப் பாய்ச்சினால் மூளையில் வளரும் இந்தப் புற்றைக் கரைக்கலாம் எனத் தீர்மானிக்கிறது. இவ்வளவு செய்ய முடிந்த இந்த இயந்திரத்திற்கா உயிரில்லை!.

ஏ இயந்திரமே! ஓ ஒற்றைக் கண் மிருகமே! என் மூளையை உன்னால் பார்க்க முடிகிறதே, அப்போது என் சிந்தனையையும் உன்னால் பார்க்க முடிகிறதா? நான் உன்னைப் பற்றி இப்போது யோசிப்பதும் உன்னோடு மானசீகமாகப் பேசுவதும் உன்னால் அறிய முடிகிறதா?

இயந்திரம் கிர்ரென்ற சத்தத்துடன் கொஞ்சம் இடப் பக்கம் சாய்ந்தது. இந்த கிர்ரென்ற ஒலி உன் பேச்சா? எனக்குப் பதில் சொல்லுகிறாயா? "ஆம்" என்கிறாயா "இல்லை" என்கிறாயா? இந்த கிர்ரென்ற ஒலி என் கேள்விக்கு நீ தரும் பதில் என்றால் அந்த பதில் "இல்லை" என இருக்க முடியாது. "ஆம்" என்றுதான் இருக்க வேண்டும். ஆம்! நீ உயிருள்ள புத்தியுள்ள இயந்திரம்தான்.

நீ இங்கிலாந்தில் செய்யப் பட்டிருந்தாலும் உனக்கு என் மொழி புரியும். எல்லா மொழிகளும் புரியும். ஏனென்றால் நீ பேசும் மொழி வாய் வழியான மொழியல்ல. நீ எல்லாருடைய மூளையோடும் நேரடியாகப் பேசுகிறாய். எண்ணங்களை அவற்றின் வேரிலிருந்தே அறிந்து கொள்ளுகிறாய். ஆகவே மனித மொழி உனக்குத் தேவையற்றது.

இயந்திரம் கிர்ரென்று கீழிறங்கி காதுக்கு அருகில் வந்தது. என் இனிய இயந்திரமே! என் பேச்சைக் கேட்டு அருகில் வருகிறாயா? காதோடு பேசவா? உனக்கு அருகில் தூரத்தில் என்ற வேறுபாடுகள் தேவையில்லையே. நீ காத தூரத்தில் இருந்தாலும் காதின் அருகில் இருந்தாலும் மனதின் மர்மங்கள் தெரிந்த உனக்கு தூரங்கள் ஒரு பொருட்டல்லவே!

அது கொஞ்சமாக சென்டிமீட்டர் அளவு மட்டும் நகர்ந்தது. இன்னும் நெருக்கமாகவா உயரமாகவா எனக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இன்னொரு முறை அதன் கண் எப்படியிருக்கிறது எனப் பார்க்கும் ஆசை எழுந்து. கோபத்தில் சிவந்திருக்கிறதா? அன்பில் கனிந்திருக்கிறதா? ஐயோ இவன் நோய் இத்தனை மோசமாக இருக்கிறதே எனக் கசிந்திருக்கிறதா? அவர் தனது விழிகளை ஓரத்திற்குக் கொண்டு வந்து இயந்திரத்தைப் பார்க்க சிரமப் பட்டபோது தலை கொஞ்சம் அசைந்திருக்க வேண்டும்.

"சுந்தரம். தயவு செய்து தலையை அசைக்காதீர்கள். அசைத்தால் படம் சரியாக வராது" என்று குரல் கொடுத்தார் அடுத்த அறையிலிருந்து இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த ரேடியோகிராபர்.

      • *** ***


இந்த Ximatron என்ற சிமுலேட்டர் கருவி பற்றி நேற்று காலை டாக்டர் லிம் அவருக்கு விளக்கமாகக் கூறியிருந்தார்.

சுந்தரத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த அப்பாய்ன்ட்மென்ட் படி நேற்று காலை நண்பர் ராமாவின் துணையுடன் அவர் மௌன்ட் மிரியத்திற்கு வந்திருந்தார். ஜானகியை அழைத்து வரவில்லை. அவள் பரமாவுடன் வீட்டிலிருக்க ஒப்புக் கொண்டாள். நோய் பற்றித் தொடக்கத்தில் அவளிடமிருந்த படபடப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது. தான் ஒருவாரம் உயிர் பிழைத்திருந்து விட்டதால் வரவிருக்கும் ஆபத்து அப்படி ஒன்றும் பெரியதல்ல எனக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் போல் இருந்தாள். மேலும் அன்னபூரணி அக்காவும் தைப்பிங் திரும்பியிருந்தாள். சில டியூஷன் வகுப்புக்கள் இருப்பதால் அவற்றை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு அத்தையை மட்டும் துணைக்கு விட்டுவிட்டு அக்கா தைப்பிங் போய்விட்டாள்.

அவன் அப்பன் சிவமணி வந்து போனதிலிருந்து பரமா சோர்ந்து சோர்ந்து இருந்தான். அடிக்கடி இருமிக் கொண்டிருந்தான். சரியாகச் சாப்பிடுவதுமில்லை. அடிக்கடி அவனுடைய தாயைப் பற்றிக் கேட்டவாறே இருந்தான். பரமாவை கவனிப்பதே ஜானகிக்கு முழு நேர வேலையாக இருந்தது. அத்தை சமையல், வீடு சுத்தப் படுத்துதல் போன்ற எல்லா வேலைகளையும் தானாக தன் மௌனம் கலையாமல் பார்த்துக் கொண்டாள்.

டாக்டர் லிம் சுந்தரத்திடம் அவர் நோயின் எல்லா அம்சங்களையும் கவனமாக விவரித்தார். ஏற்கனவே அரசாங்க மருத்துவ மனையில் இந்த விளக்கங்கள் பெற்றிருந்ததால் இவை சுந்தரத்திற்கு அதிர்ச்சியை ஊட்டவில்லை.

"புற்று நோய் என்பதே ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் நோயுற்று அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பிப்பதுதான். அப்புறம் அந்த வளர்ச்சிக் கட்டுப் படுத்த முடியாமல் போய் ஆரோக்கியமான செல்களை அவை இயங்க விடாமல் தடுக்கின்றன. பின்னர் இந்தத் தீய செல்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து வெவ்வேறு இடங்களுக்குப் பரவி அங்கும் புற்றுகள் போல் வளர ஆரம்பித்து அங்குள்ள அவயவங்களையும் செயல் படாமல் ஆக்குகின்றன. உங்கள் உடம்பில் இந்த நடவடிக்கை எல்லாம் இப்போது நடக்கிறது. முற்றிய நிலை!"

மௌனமாக இருந்து மீண்டும் சொன்னார்: "இந்த நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது. நவீன வாழ்க்கையில் காற்றில் உணவில் அதிகமாகிப் போன தூய்மைக் கேடுகள் என்று சொல்கிறார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வருகின்றன. ஆனால் நிச்சயமான முடிவுகள் தெரியவில்லை. ஒரே சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கிடையிலும் சில பேருக்கு புற்று நோய் தோன்றுகிறது. பலருக்குத் தோன்றுவதில்லை. உடல் வாகுவைப் பொறுத்தும் பாதிக்கும் என்று சொல்லலாம். சில பலவீனங்களை நம் பெற்றோரின் உயிரணுக்களிலிருந்தும் பெற்றிருப்போம். விஞ்ஞானம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. இவ்வளவு நாளாக ஆராய்ச்சி செய்து நாம் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கத்தான் கற்றிருக்கிறோமே தவிர விடைகளைப் பெறத் தெரிந்திருக்கவில்லை" என்றார்.

இந்த டாக்டருக்கு இந்து சமயம் சொல்லும் ஊழ்வினை பற்றியும் முற்பிறப்புக்களில் செய்த பாவங்களை நாம் சுமப்பது பற்றியும் தெரியுமா என சுந்தரம் நினைத்துப் பார்த்தார். நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மிக அதிகமாகப் படித்த கூர்மையான அறிவுள்ளவர். இவற்றைப் பற்றியெல்லாம் படித்தறிந்திராமல் இருக்க மாட்டார். ஆனால் அவற்றைப் பற்றிப் பேசமாட்டார். ஏனெனில் அவை அறிவியல் உண்மைகளாகக் கருதப் படுவதில்லை. இவர் விஞ்ஞானி. தத்துவங்கள் பக்கம் போய்க் குழப்ப மாட்டார். விஞ்ஞான பூர்வமல்லாத எதையும் தன் தொழிலோடு போட்டுக் குழப்ப மாட்டார்.

அதற்காகத்தான் மதர் மேகி போன்றவர்களை இங்கு வைத்திருக்கிறார்கள். மனிதன் எவ்வாறு இயங்குகிறான் என்று கற்றுத் தௌிந்து அந்த இயக்கத்தைச் சீர்படுத்த டாக்டர் லிம்மின் விஞ்ஞானம் உதவும். ஆனால் அந்த மனிதன் ஏன் இயங்குகிறான் என்பதை மதர் மேகி போன்றவர்கள்தான் சொல்ல முடியும். அந்த இயக்கம் தோன்றுவதற்கும் அடங்குவதற்குமான காரணங்களை இந்த விஞ்ஞானத்துக்கு மேற்பட்ட மெய்ஞானம்தான் விளக்க வேண்டும். அதை மதர் மேகி தெரிந்திருப்பார். ஆனால் அதைக் கல்லூரியில் படித்திருக்க மாட்டார். கர்த்தரை சிந்தையில் நிறுத்தி அவரிடம் சரணடைந்து கேட்டுத் தௌிந்திருப்பார். அதனால்தான் அவரால் எந்த நாளிலும் புன்னகை பூத்த வண்ணம் இருக்க முடிகிறது. இந்த விளக்கங்கள் எல்லாம் முடிந்த பின் மதர் மேகியை ஒருமுறை பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என சுந்தரம் முடிவு செய்து கொண்டார்.

அதன் பிறகு சுந்தரத்திற்கு சிகிச்சையளிக்கவிருக்கும் அறை, இயந்திரங்கள் ஆகியவற்றையும் டாக்டர் லிம் கொண்டு காட்டினார். அந்த இயந்திரங்களில் Ximatron என்னும் புதிய சிமுலேட்டர் கருவி பிரம்மாண்டமானதாக இருந்தது.

"சுந்தரம், இந்த Ximatron கருவி உங்கள் மூளையின் பகுதிகளைத் துல்லிதமாக எக்ஸ்ரே எடுத்துக் காட்டிவிடும். மூளையில் கட்டி உள்ள சரியான இடம், அதன் அளவு, அதன் வீரியம் எல்லாவற்றையும் காட்டிவிடும். இந்தப் பாகங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்களே இயக்குகின்றன. ஆகவே மனிதப் பிழை ஏற்படும் வாய்ப்புக்கள் மிகக்குறைவு. அதன் பிறகு அது தரும் படங்களைக் கொண்டு எந்த அளவுக்கு உங்களுக்குக் கதிரியக்கம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வோம். தலையின் எந்தப் பகுதியின் வடூயாகச் செலுத்துவது என்பதையும் முடிவு செய்வோம். உங்கள் தலையின் பகுதியில் அந்த வழியின் வாசலை மார்க்கர் பேனாவால் கோடு போட்டு வைப்போம். அந்தக் கோடுகள் சில காலத்திற்கு அடூயாமல் இருக்கும். அடுத்த முறை நீங்கள் சிகிச்சைக்கு வரும் போது அந்த இடத்தைக் கண்டறிய இது உதவும்."

Ximatron-ஐத் தொட்டுப் பார்த்தார் சுந்தரம். சில்லென்றிருந்தது. டாக்டர் லிம் சிரித்தார். "இப்போது இதனால் அபாயம் இல்லை. ஆனால் எக்ஸ்ரே பாய்ச்சப்படும் பொழுது நாங்கள் யாரும் அருகில் இருக்க மாட்டோம். அதிகமான எக்ஸ்ரே உடலில் புகுவது நல்லதல்ல. அதனாலேயே புற்று நோய் உண்டாகலாம்" என்றார்.

"ஆனால் நோயாளிகள் மூளைக்குள் மட்டும் எப்படிப் பாய்ச்ச முடிகிறது?"

"இது சாதாரண மனிதர்களுக்கு விஷம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் நோயாளிகளுக்கு இந்த விஷமே மருந்தாகிறது. நாங்கள் உங்கள் புற்று நோய் செல்களை நோக்கிப் பாய்ச்சுகிற லேசர் கதிர்கள் கொள்ளிக் கட்டை போல. நோய் செல்களை இவை தீய்த்து எரித்துவிடும்"

"அப்படியானால் நோயில்லாத நல்ல செல்கள்...?"

"அவையும் கொஞ்சம் தீயத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த Ximatron கருவி இருப்பதால் தீப்படும் இடத்தைக் கட்டுப் படுத்தலாம். ஆரோக்கியமான செல்கள் அதிகமாகப் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்யலாம். ஆனால் பயப்படாதீர்கள். நல்ல ஆரோக்கியமான செல்கள் மீண்டும் உயிர்த்து வளர்ந்து விடும். நோய்பட்ட செல்கள் மட்டுமே தீய்ந்து மடியும்"

சுந்தரத்தின் முகத்தில் கலவரம் படர்வதை டாக்டர் லிம் கவனித்திருக்க வேண்டும். "பார்த்தீர்களா! உங்களுக்கு விளக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் தவறான வார்த்தைகளைப் பயன் படுத்தி உங்களைக் கலவரப் படுத்தி விட்டேன். இந்த கொள்ளிக் கட்டை, தீய்த்து விடுவது என்பதெல்லாம் ஒரு உருவகம்தான். உண்மையில் உங்களுக்கு ஒரு வலியும் இருக்காது. இந்த கதிரியக்கம் பாய்ச்சப்படுவது ஒரு சில நிமிடங்கள்தான். உங்களால் அதைப் பார்க்கவோ உணரவோ முடியாது" என்று விளக்கினார்.

"எவ்வளவு காலத்திற்கு டாக்டர்?" என்று கேட்டார் சுந்தரம்.

"வாரத்திற்கு ஐந்து நாளும் நீங்கள் சிகிச்சைக்கு வரவேண்டும். மூளைக் கட்டிக்குக் கதிரியக்கம் பாய்ச்சலாம். அது எவ்வளவு கரைகிறது என்பதை ஒவ்வொரு நாளும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருக்கும் புற்று நோய்க்கு மருந்துகள் கொடுக்கப் போகிறோம். ஒரு நாளைக்கு மூன்று முறை நீங்கள் சாப்பிட வேண்டும். தினசரி ரத்த சோதனை பண்ணி அது தணிகிறதா என்று பார்ப்போம். கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு அந்தக் கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. அது மருந்தால் தணிகிறதா என்று பார்ப்போம். ஒரு வாரத்தில் தணிய வில்லையானால் அதற்கும் கதிரியக்க சிகிச்சைதான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு வாரம் கடூத்து அதை முடிவு பண்ணுவோம்!" என்றார்.

"நான் இங்கு தங்க வேண்டுமா?" என்று கேட்டார்.

"வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் வந்து கதிரியக்க சிகிச்சை மட்டும் பெற்றுச் செல்லுங்கள். வீட்டுக்குத் திரும்பி உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கலாம். அதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை!" என்றார்.

வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்ற செய்தி நிம்மதியாக இருந்தது. ஆனால் சந்தோஷமாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. ராதா, சிவமணி, ஜானகி, பரமா என பலரின் துன்பங்களுக்கிடையில் சந்தோஷம் என்பது எப்படி விளையும் என விளங்கவில்லை. ஆனால் டாக்டருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வடூயில்லை என நினைத்துக் கொண்டார்.

கேட்பதற்குத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டார் சுந்தரம்: "டாக்டர் லிம்! இதற்குப் பக்க விளைவுகள் அதிகம் இருக்குமென்று சொல்கிறார்களே?"

"ஆமாம் திரு. சுந்தரம். பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். அதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட நான் கடமைப் பட்டுள்ளேன். ஆனால் முதலில் இந்த விளைவுகள் கடுமையாக இருந்தால் கூட தற்காலிகமானவை என்பதை நீங்கள் உணர வேண்டும். சிகிச்சை முடிந்த இரண்டு மூன்று வாரங்களில் இவை முற்றாக மறைந்து விடும்.

"முதலில் உங்களுக்குக் கதிரியக்கம் பாய்ச்சப்படும் இடத்தில் தோல் கருத்துப் போகும். புண் உண்டாகும். நாங்கள் கொடுக்கின்ற களிம்புகளை மட்டும் பூசி வாருங்கள். சிகிச்சை நீடிக்கும் வரை களைப்பாக இருக்கும். பசி இருக்காது. வாந்தி குமட்டல் இருக்கும். தொண்டை வறண்டு விடும். புண்ணாகி விட்டதைப் போல் இருக்கும். வலிக்கும்"

சுந்தரத்தின் முகம் கருத்திருந்து.

டாக்டர் அவர் தோள்களைத் தொட்டுச் சொன்னார்: "பாருங்கள் திரு. சுந்தரம். நான் சொல்லும் இந்தப் பக்க விளைவுகள் நீங்கள் இப்போது இந்தப் புற்று நோயால் அனுபவித்து வரும் துன்பங்களை விடக் கொடியவையல்ல. சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள் தற்காலிகமானவை. சிகிச்சை அளிக்காமல் விட்டால் இது நீங்கள் சாகும் வரை நீடிக்கும். ஆகவே பக்க விளைவுகளின் துன்பங்களைச் சிந்திக்காமல் அதனால் வரும் நன்மைகளைச் சிந்தியுங்கள்" என்றார்.

"சரி டாக்டர். நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகப் புரிகிறது!" என்று புன்னகைத்தவாறே பதில் சொன்னார் சுந்தரம்.

"ஓகே! நீங்கள் தௌிவான ஆளாக இருக்கிறீர்கள். இந்த சிகிச்சைக்கு வேண்டிய மன பலம் உங்களுக்கு இருக்கிறது. அது மிகவும் முக்கியம். நாளைக்குக் காலையில் வந்து விடுங்கள். சிகிச்சையை ஆரம்பித்துவிடுவோம்!" என்றவர் திடீரென்று நினைவு வந்தவர் போல் சொன்னார்: "ஓ! உங்கள் தலைமுடி கொட்டிவிடும் என்பதைச் சொன்னேனா? ஆமாம் தற்காலிகமாகக் கொட்டி மீண்டும் வளர்ந்து விடும். ஆனால் பரவாயில்லை. கொட்டுவதற்கு அப்படி ஒன்றும் அதிகமான முடி உங்கள் தலையில் இல்லை!" சிரித்துத் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு டாக்டர் லிம் போய்விட்டார்.


      • *** ***

அவர் போன பிறகு சுந்தரம் வரவேற்பறைக்குப் போய் மதர் மேகியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார். காத்திருக்கச் சொன்னார்கள். ராமாவுடன் ஹாலில் காத்திருந்தார்.

"அன்னைக்கு நீ இந்த மதர் மேகிய எங்கிட்ட காட்டலியே!" என்றார் ராமா.

"நான் என்ன செய்றது ராமா? அறையிலேயே உக்காந்து பேசினாங்க! போயிட்டாங்க! ஏன் கேக்கிற?"

"இல்ல அவங்களப் பத்தி இவ்வளவு அன்பா பேசிறியே, அதினால அவங்களப் பாக்கணுன்னு எனக்கும் ஒரு ஆச!" என்றார் ராமா.

காத்திருந்தார்கள். மதர் மேகி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிற்று. வந்தவுடன் "சுந்தரம்! ஹலோ!" என்று கை குலுக்கினார். சுந்தரம் ராமாவை அறிமுகப் படுத்தி வைத்தார்.

"ஓ உங்கள் பெயர் ராமாவா? நீங்கள்தான் ராமாயணத்தின் கதைத் தலைவரா?" என்று கேட்டார் மதர் மேகி.

"மதர் மேகி, ராமரின் பெயரைக் கொண்டிருப்பதைத் தவிற நான் ராமாயணம் எல்லாம் படித்ததில்லை. என்னிடம் கேட்காதீர்கள். அநேகமாக ராமாயணத்தைப் பற்றி என்னை விட உங்களுக்கே அதிகம் தெரியலாம்!" என்றார் ராமா.

"நான் ராமாயணம் மொழிபெயர்ப்புச் சுருக்கம் படித்திருக்கிறேன். ராமாயணம் டெலிவிஷனில் பார்த்திருக்கிறேன். ஆகவே கொஞ்சம் தெரியும்!" மதர் மேகிக்கு இந்து சமயம் சொல்லும் வாழ்வுத் தத்துவங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார். சில கிறித்துவப் பாதிரியார்கள் இந்து மட்டுமல்லாது பௌத்த, இஸ்லாமிய உண்மைகளையும் பாடமாகத் தங்கள் மதக் கல்லூரிகளில் படிப்பதை சுந்தரம் அறிந்திருக்கிறார்.

மதர் மேகி அவர்கள் இருவரையும் ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். "உங்களை நீண்ட நேரம் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள். எங்கள் பேஷண்டாக இருந்த ஒரு பத்து வயதுப் பெண் இன்று காலை இறந்து விட்டாள். லியுகேமியா. நல்ல பாசமுள்ள பெண். கேள்விப் பட்டதும் அவர்கள் வீடு சென்று ஜபம் செய்து கர்த்தரிடம் ஒப்புவித்து வந்தேன்." என்றார்.

"அப்படியா? வருந்துகிறேன் மதர் மேகி!" என்றார் சுந்தரம். மனத்தினுள் "உன்னுடைய முறை சீக்கிரம் வருகிறது" என ஏதோ ஒன்று சொல்லிற்று.

"என்ன செய்யலாம்? கர்த்தரின் அழைப்புக்கு நாம் அனைவரும் இணங்கித்தான் போக வேண்டும். சிறுவயதில் இறப்பவர்கள் கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்று எங்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு."

கனிய முகமுடைய அன்னையே! மரணத்தின் ரகசியம் உனக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். அதனால்தான் நோயின் மத்தியிலும் சாவின் மத்தியிலும் உன்னால் சிரித்துக் கொண்டே வாழ முடிகிறது.

மௌனமாக இருந்து பின் கேட்டார்: "டாக்டர் லிம்மைப் பார்த்து விட்டீர்களா? என்ன சொன்னார்?" சுந்தரம் நடந்தவைகளைச் சொன்னார்.

"நல்லது! டாக்டர் லிம் மிகவும் அக்கறையும் பரிவும் அதே போல கண்டிப்பும் உள்ள டாக்டர். அவர் கையில் நீங்கள் நல்ல குணமடைவீர்கள்" என்றார் மதர் மேகி.

"சிகிச்சையும் பக்க விளைவுகளையும் நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. டாக்டர் எவ்வளவுதான் ஊக்கமூட்டினாலும் பயம் போகவில்லை" என்றார்.

மதர் மேகி சிரித்தார். "சிறு வயதில் எனக்குப் பல் பிடுங்கக் கூட்டிப் போனார்கள். டாக்டரின் அந்தப் பிடுங்கும் குறட்டைக் கண்டதும் நான் போட்ட கூச்சல் அந்த ஊர் முழுக்கக் கேட்டிருக்கும். ஆனால் எனஸ்தீசியா போட்டு பல் பிடுங்கப் பட்ட போது வலியே தெரியவில்லை. வலியை விட வலி பற்றிய பயம்தான் கொடுமையானது" என்றார். களங்கமில்லாமல் வாய்விட்டுச் சிரித்தார். மரணத்தின் ரகசியத்தின் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டாரோ!

பிறகு தொடர்ந்தார்: "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சுந்தரம்? நம் உடம்பின் வலியையெல்லாம் நம்மை உணரச் செய்வது இந்த மூளைதான். ஆனால் இந்த மூளை தனது சொந்த வலியைத் தான் உணரமுடியாது. அதற்கு வலி என்பதே இல்லை. ஆகவே அதை வெட்டினாலும் கொத்தினாலும் எந்தத் துன்பமும் இருக்காது. தன் சொந்த வலியை உணரும் சக்தியை இறைவன் அதற்கு வைக்கவில்லை!"

அவர்கள் அதைக் கிரகித்துக் கொண்டார்களா என்று கொஞ்சம் மௌனமாகக் கவனித்துவிட்டுப் பின் தொடர்ந்தார்: "இந்த உடல் முழுவதும் ஒரே யூனிட். மற்ற இயந்திரங்களைப் போல தனித்தனியாக செய்து பூட்டப் பட்டதல்ல. ஒரே ஒரு செல்லிலிருந்து இரட்டிப்பு இரட்டிப்பாகப் பல்கிப் பெருகியது. ஆகவே உடம்பிலுள்ள பில்லியன், டிரில்லியன் செல்களும் ஒன்றாகப் பிறந்தவை. அத்தனையும் ரெட்டைப் பிள்ளைகள் போல. அதனால்தான் உடம்பின் எந்த இடத்தில் நோய் வந்தாலும் உடலிலுள்ள அத்தனை அவயவங்களும் அதில் ஈடுபடுகின்றன. கால் பெருவிரலில் காயம் பட்டால் கை அங்கு போய் தடவிக் கொடுக்கிறது. முகம் சுளிக்கிறது. இருதயம் ரத்த ஓட்டத்தைத் துரிதப் படுத்துகிறது. வாய் முனகுகிறது. கண் அழுகிறது. பாருங்கள். ஆகவேதான் நோயாளிகளுக்கு சிகிச்சை முழுமையாக அளிக்க வேண்டும். நோயுற்ற பாகத்திற்கு மட்டிலும் மருந்திட்டால் போதாது!" என்றார்.

அப்புறம் கொஞ்ச நேரம் முகமனாகப் பேசிக்கொண்டிருந்த பின், மதர் மேகி தனக்கு வேறு வேலைகள் இருப்பதைச் சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.

திரும்பி வரும் போது ராமாவுக்கு மதர் மேகி மேல் ஒரு பெரிய பாசமே உருவாகி விட்டது. "நீ சொன்னது சரிதான் சுந்தரம். தன் வாய் புன்னகை மாறாம எவ்வளவு இனிமையா பேசிறாங்க இந்த அம்மா! இவங்க பேச்சிலேயே நோய் தீர்ந்திடும் போல இருக்கு!" என்றார்.

சுந்தரம் வேறு எதையோ யோசித்தவர் போல இருந்தார். மௌனமாக இருந்தார். அவருக்கு உரையாடலில் ஆர்வமில்லை எனத் தெரிந்து கொண்டு அமைதியாகக் காரோட்டினார் ராமா.

சுந்தரம் அமைதியைக் கலைத்தார். "வாரத்துக்கு ஐந்து நாள் வரணும்னு சொல்றாங்களே ராமா!" என்று கவலையுடன் கூறினார்.

"ஆமாம், அதுக்கென்ன இப்போ?"

"நான் கஷ்டப்பட்டாவது கார ஓட்டிக்கிட்டுத்தான் வரணும்!"

"ஏன்? நான் ஒருத்தன் இருக்கும் போது உனக்கு ஏன் அந்தக் கவல?"

"இல்ல ராமா! ஒரு ஆபத்துக்கு உதவுறது வேற மாதிரி. ஆனா வாரத்துக்கு அஞ்சு நாள் நீ வேலயெல்லாம் போட்டுட்டு...!" இந்த மாதிரி வேளைகளில்தான் ஜானகிக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைவு வருகிறது. அவள் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றிருந்தாலும் இது ஒன்றை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.

"இதோ பார் சுந்தரம். எனக்கு ஒண்ணும் அப்படி வெட்டி முறிக்ககிற வேல எதுவும் வீட்டில காத்துக்கிட்டு இருக்கில. அப்படியே வேல இருந்தா உங்கிட்டச் சொல்லி வேற ஏற்பாடு பண்ணிக்கச் சொல்றேன். அதுவரைக்கும் ஒன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வர்ரது, வீட்டுக்குக் கொண்டு போறது என் வேலன்னு எங்கிட்டயே விட்டிடு!" என்றார் ராமா.

நன்றியுணர்ச்சியுடன் ராமாவைப் பார்த்தார். அந்த நட்புக்கு எவை எல்லைகள்? இன்னும் தெரியவில்லை. இருக்கட்டும். இப்போது இந்த நண்பனின் நெஞ்சில் பரிவும் பாசமும் அதிகமாக இருக்கின்றன. கொஞ்ச நாள் ஓய்வில்லாமல் இந்த வேலையைச் செய்து அவனின் மற்ற வேலைகளுக்கு இது குறுக்கீடாய் இருக்கும் போது அவனாக விலகிக் கொள்வான். அல்லது சூசகமாகச் சொல்வான். அது வரை இப்படியே அவன் திருப்திக்கு அவன் செய்யட்டும்.

அல்லது இந்த நண்பனுக்கு இந்த சேவை சலிக்காததாக இருக்குமோ! "அக்குளத்தில் நெட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே ஒட்டுயுறுவார் உறவு" என்ற பழைய செய்யுள் நினைவுக்கு வந்தது. என்னோடே இருந்து இந்த நண்பனும் துன்பங்களைக் கடைசி வரையில் பகிர்ந்து கொள்ளப் போகிறானா?

பொதுவாக மனித உறவுகளில் அவருக்கு நிரந்தரமான நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தது. ஒருவர் இன்னொருவருக்கு அன்பின் அடிப்படையில் பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் நன்மை செய்து கொண்டே இருக்க முடியும் என அவரால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு நன்மையும் ஒரு பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கும் சுய நலமாகத்தான் இருக்க முடியும் போலும். அந்தப் பிரதி உபகாரம் கிடைக்காது போனால் உதவி செய்வதில் உள்ள ஆர்வமும் குன்றி விடும்.

ஆனால் அவர் வாழ்வில் பலபேர் அந்த அவநம்பிக்கையைப் பொய்யாக்கி வைத்தும் அவரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறார்கள். இதோ இப்போதைக்குத் தனக்குக் காரோட்டும் இந்த நண்பன். அதே போல அன்னம் அக்காள். எதை எதிர்பார்த்துத் தனக்காக இத்தனை கஷ்டப் பட்டிருக்கிறாள் இந்த அக்கா!

அத்தை! தாங்கள் போடும் மூன்று வேளை சோற்றுக்காகவும் கட்டும் துணிக்காகவுமா இப்படி வாய் பேசாமல் மாடாய் உழைக்கிறாள். "தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும்" பெருமக்கள் இந்த உலகத்தில் இருந்து இந்த நவீன பொருளாதாரத்திலும் இன்னும் மறைந்து விடவில்லை என எண்ணிக் கொண்டார்.

மதர் மேகி! அவருடைய இனிய முகம் அவர் மனதில் வந்து நின்றது. நோய்க்கும் மரணத்துக்கும் நடுவில்தான் வாழ்வது எனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். வாழ்க்கையில் பிற இன்பங்கள் இல்லை. குடும்பத்தைத் துறந்தாயிற்று. திருமணம், உடலுறவு என்ற ஆசைகளைத் தீய்த்தாயிற்று. இதையெல்லாம் தீய்ப்பதற்கும் ஒரு Ximatron கருவி இருக்குமா? "ஏசு" என்ற சொல்லே இவற்றையெல்லாம் தீய்த்திருக்கிறது. ஆனால் தீக்கொள்ளியால் கொடுமையாக எரிக்கவில்லை. தன் பார்வையை, தன் சொல்லை, தன் அன்பை, கருணையை ஊற்றாகப் பெருக்கி இந்த சில்லறை இன்பங்களை முழுகடித்துப் பேரின்பத்தைப் பெருக்கியுள்ளது.

"என்ன ஒரே கவலப்பட்ற மாதிரி இருக்குது. எனக்கொண்ணும் இதெல்லாம் சிரமம் இல்ல. பொழுது போகாம கஷ்டப் பட்றவன் நான். ஆகவே என் பொழுது ஒரு மாதிரி போக இது ஒரு வடூ, தெரியுதா சுந்தரம்" என்றார் ராமா.

"சரி ராமா! தேங்க் யூ!" என்றார்.

அப்படிச் சொன்னது போலவே, இன்று காலை சரியாக வீடு வந்து அவரைக் கொண்டு ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு, சுந்தரம் Ximatron இயந்திரத்தின் அடியில் படுத்திருக்கும் போது வௌியே வெயிட்டிங் ரூமில் ஓரமாக ஒரு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார் ராமா.

      • *** ***

சுந்தரத்தின் வலது காதுக்கு மேலாக கபாலத்தில் கொஞ்சம் தலைமுடியை வடூத்து விட்டு டாக்டர் லிம் மார்க்கர் பென்னால் கோடுகள் போட்டார். அதுதான் கதிரியக்கம் பாய்ச்சப் படும் வாசல் என விளக்கினார்.

சுந்தரத்தின் தலை அசையாமல் இருக்குமாறு பிடித்து வைத்துவிட்டு டாக்டரும் ரேடியோ கிராபரும் வௌியே போய்விட்டார்கள். டாக்டர் அப்புறம் பேசியது இன்டர்காம் வழியாக மட்டுமே கேட்டது. "சுந்தரம் அசையாமல் இருங்கள். இப்போது லேசர் சிகிச்சை ஆரம்பிக்கப் போகிறோம். ஏறக்குறைய ஒரு நிமிடம்தான். அப்புறம் நீங்கள் எழுந்து விடலாம்."

கணங்கள் யுகங்களாகும் சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று போலும். கிர், கிர்ரென ஓசைகள் கேட்டன. ஆனால் அவர் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அசையாமல் படுத்திருந்தார். Ximatron-ஓடு பேசிக் கொண்டிருந்தார். தன் புற்று நோய் செல்கள் எரிந்து கருகுவதாகக் கற்பனை செய்து கொண்டார். உடலில் புதிய செல்கள் வளர்ந்து தாம் புதிய மனிதனாக ஆகி வருவதாக நினைத்துக் கொண்டார்.

ஒரு நிமிடத்தில் ரேடியோகிராபர் உள்ளே வந்தார். இயந்திரத்தைத் தள்ளி வைத்தார். "அவ்வளவுதான்! நீங்கள் எழுந்து கொள்ளலாம்" என்றார். அவ்வளவு எளிதில் எழ முடியவில்லை. உடம்பு ஆளைத் தள்ளியது. மெதுவாக எழுந்து உட்கார்ந்தார்.

டாக்டர் லிம் உள்ளே வந்தார். "இன்றைக்கு அவ்வளவுதான் மிஸ்டர் சுந்தரம். வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டுத் தொடருவோம். மருந்துகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். எப்படி எத்தனை முறை என்பதெல்லாம் மருந்துக் கௌண்டரில் சொல்வார்கள். தவறாமல் சாப்பிடுங்கள்!"

"சரி டாக்டர்" என்றார் சோர்வாக.

"உடல் களைப்பு அதிகமாகும். சாப்பாட்டில் ஆசை இருக்காது. ஆனால் முயன்று சாப்பிடுங்கள். உடம்புக்குச் சத்து வேண்டும். காரமான எண்ணெய் மிக்க ஆகாரங்கள் சாப்பிடாதீர்கள். கொஞ்சம் தண்ணீராகவும் சூப்பாகவும் செய்து சாப்பிடுங்கள். பால், தண்ணீர் நிறைய அருந்துங்கள்" என்றார்.

நன்றி சொல்லி உடைகளைப் போட்டுக் கொண்டு மெதுவாக நடந்து வௌியில் வந்தார். கதவுக்கு வௌியே கதிரியக்க சிகிச்சைக்காக நோயாளிகள் கியூவில் நின்றார்கள். அவர்களுடைய உறவினர்களும் சூழ்ந்து நின்றதால் அந்தப் பகுதி முழுவதிலும் நடப்பதற்கு மட்டும் இடம் விட்டு நெருக்கடி மிகுந்திருந்தது.

இத்தனை பேருக்கா புற்று நோய் கண்டிருக்கிறது? ஓராண்டில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புற்று நோய் சிகிச்சைக்காக மௌன்ட் மிரியத்துக்கு வருவதாக மதர் மேகி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதிலும் மூளையிலும் தலைப்பகுதியிலும் புற்று நோய்க் கண்டவர்களே அதிகம் எனவும் கூறியிருந்தார்.

சிகிச்சைக்காக வரிசை பிடித்து இருந்தவர்களில் பலர் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தார்கள். கழுத்தில், மார்பகத்தில், கருப்பையில், நுரையீரலில் இப்படி பல இடங்களில் புற்று நோய் கண்டவர்கள்.

இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது தெய்வம் தண்டிப்பதற்குத் தன்னை மட்டும் தனியாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை எண்ணி ஆறுதல் தோன்றியது. ஆனால் ஆரோக்கியமாய் பழுதில்லாதவனாய் சாமானியனாய் உலவிக்கொண்டிருந்த என்னை இந்தக் கூட்டத்துடன் தெய்வம் சேர்த்து விட்டதுவே என்ற அடங்காத துயரமும் வந்து தங்கியது.

மருந்துக் கௌன்டரில் கலர் கலராக பல மருந்துகள் கொடுத்தார்கள். எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார்கள்.

நாற்காலியில் சாய்ந்து தூங்கிவிட்ட ராமாவின் அருகில் போய்த் தட்டி எழுப்பினார். தலை குலுங்கி எழுந்தார் ராமா. "முடிஞ்சதா சுந்தரம். சீச்சீ, படுத்துத் தூங்கிட்டம் பாரு!" என்றார்.

"அதினால என்ன ராமா! உனக்கும் களைப்புத்தான!" ராமாவுடன் காரை நோக்கி நடந்தார்.


      • *** ***

மாலையில் வீட்டில் சோர்ந்து படுத்திருந்த வேளையில் டெலிபோன் அடித்தது. கை நீட்டி மெதுவாக எடுத்து "ஹலோ" என்றார்.

"அப்பா, ராதா பேசிறேன்!" என்றாள். துணைக் கோளம் வழியாக இங்கிலாந்திலிருந்து பாய்ந்த குரல் ஒரு வித எதிரொலியுடன் இருந்தது.

"ராதா! எப்படிம்மா இருக்கே? இப்பதான் கூப்பிட மனசு வந்ததா உனக்கு?" என்றார். குரலில் கோபம் தொனித்துவிட வேண்டாம் என கவனமாகப் பேசினார்.

"லண்டன்ல இருந்துதான் பேசிறேன் அப்பா. எப்படியிருக்கிங்க?" என்றாள்.

"ஏதோ இருக்கிறோம்மா!" என்றார்.

"அப்பா, உங்ககிட்ட பேசவே வெக்கமா இருக்கு. என்ன மன்னிச்சிருங்க..." குரல் குழைந்தது. அழுகிறாள் எனத் தெரிந்தது.

"சரி, சரி. செய்றத செஞ்சிட்டு இப்ப அழுது என்ன புண்ணியம்! அங்க நீ சுகமா இருக்கியாம்மா?" என்று கேட்டார்.

"இங்க சுகமா இருக்கேம்பா. ஹென்றி ரொம்ப நல்லவர். அன்பானவர். நீங்க அவர ரொம்ப விரும்புவிங்க அப்பா!" என்றாள்.

அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டார்.

"பிரேம் எப்படியிருக்கான் அப்பா?" என்று கேட்டாள்.

"இருக்கிறாம்மா! உன்னக் கேட்டபடி இருக்கிறான். ஏக்கத்தில அவனுக்கு அடிக்கடி உடம்பு கூட சரியில்லாம போயிடுது" என்றார்.

"அவனுக்கு உடம்புக்கு என்னப்பா?" என்றாள். மீண்டும் குரல் தளுதளுத்திருந்தது.

"சும்மா இருமல் காய்ச்சல்தான். மருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறோம். சரியா போயிடும்னு நெனைக்கிறேன்!" என்றார்.

அப்புறம் பரமாவைக் கூப்பிட்டுப் பேசினாள். "வை ஆர் யு நோட் கமிங் டூ தாத்தாஸ் ஹவுஸ்?" என்று பரமா கேட்டான். என்ன பதில் சொன்னாள் என்று தெரியவில்லை.

"ஐ எம் சிக். தாத்தா இஸ் அல்சோ சிக்" என்று அறிவித்தான் பரமா.

பின்பு ஜானகியைக் கூப்பிட்டுப் பேசினாள். "இப்படி பண்ணிட்டுப் போயிட்டியே ராதா, இது உனக்கே நல்லா இருக்கா!" என்று ஜானகி திட்ட ஆரம்பித்த போது சுந்தரம் சைகை காட்டி அவளை அடக்கினார்.

பின்னர் சுந்தரம் மீண்டும் டெலிபோனை வாங்கிப் பேசினார். சிவமணி வந்து விட்டுப் போனதை அவளுக்கு அறிவித்தார்.

பின்னர் "ஏம்மா! ஏதாச்சும் ஒண்ணுன்னா உன்ன எப்படி நாங்க தொடர்பு கொள்றது? ஒன்னோட டெலிபோன் நம்பரக் கொடுக்கிறியா?" என்று கேட்டார்.

"இப்ப வேணாம்பா! பின்னால கொடுக்கிறேன். நானே உங்களுக்கு அடிக்கடி போன் பண்ணித் தெரிஞ்சிக்கிறேன்!" என்றாள்.

"அப்பா, என் பிரேமை பத்திரமாப் பாத்துக்குங்க! எப்படியும் ஒரு ரெண்டு மாசத்துக்குள்ள நான் வந்து அவன அழச்சிக்கிட்டு வந்திர்ரேன்பா. மறுபடி என்ன மன்னிச்சிக்குங்க அப்பா! நீங்களும் அம்மாவும் என்ன மன்னிச்சிடுங்க" அழுது கொண்டே போனை வைத்தாள்.

ஜானகி அவளைத் திட்டியவாறே இருந்தாள். "தறுதல, தறுதல! எப்படித்தான் இந்தக் குடும்பத்தில வந்து பொறந்தாளோ!" என்று புலம்பினாள்.

ஊழ்வினை வசமாகத்தான் அவள் வந்து இந்தக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். ஊழ்வினை பற்றி மீண்டும் சிந்தித்தார் சுந்தரம். எத்தனை வகையாக இது தோன்றும்? எந்த வினைக்கு என்ன தண்டனை? இந்த உலகில் நாம் நீதிமன்றங்களில் இந்தக் குற்றத்திற்கு இந்தத் தண்டனை என விதித்திருப்பதைப் போல தெய்வம் விதித்து வைத்திருக்கிறதா? எந்தக் குற்றம் செய்தால் புற்றுநோய்த் தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் மூன்று வயதுப் பிஞ்சுப் பருவத்தில் அப்பாவையும் அம்மாவையும் பிரிந்து வாழும் தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் அன்புக் கணவன் அநியாயக்காரனாக மாறி தோலில் எரியும் சிகெரெட்டால் சுடுகின்ற தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் கணவனை இளவயதில் பறிகொடுத்து விட்டு வாழ்நாள் முழுவதும் தண்ணீருக்கு பயந்து வாய்பேசாமல் தன்னை மற்றவர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு பிரமை பிடித்து வாழும் தண்டனை விதிக்கப்படும்?

"இவ்வளவு நாளாக ஆராய்ச்சி செய்து நாம் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கத்தான் கற்றிருக்கிறோமே தவிர விடைகளைப் பெறத் தெரிந்திருக்கவில்லை." டாக்டர் லிம்மின் குரல் மனத்தின் ஆழத்தில் எதிரொலித்தது.