அன்பு வெள்ளம்/அன்பில் ஒடுங்கி

விக்கிமூலம் இலிருந்து

அன்பில் ஒடுங்கி மறைகிறது தன்னலம்

டவுளின் கையிலிருக்கும் உருக வைக்கும் மட்கலம் போன்றது அன்பு. அந்த மூசைக் கலத்தில்தான் நம் அனைவரையும் ஒருங்கே போட்டு உருக வைக்கிறார்; அவரோடு நம்மை ஒருங்கிணைய வைக்கிறார். அந்த இணைப்புத்தான் அன்பு. அவ் அன்பு ஒன்றுதான் நம்மை எதிர்நோக்கியிருக்கும் எல்லாச் சிக்கல்களுக்கும் காணப்படும் தீர்வு.

'இரு வகை அன்பு' என்பது பற்றி ஒரு முழுமையான பயிற்சிக்கென்று ஒரு துறையிலிருந்து அது, இரு வகை அன்பினைப் பற்றிய பயிற்சியும் தந்திட முன்வருவோமேயானால், ஒவ்வொரு பல்கலைக் கழகத்தினையும் புரட்சிகரமானதாக்கிவிடும்.

உலகினில், அஃது உயிர்ப்பார்ந்த - மிக இன்றியமையாத ஒன்றாகும். இதுவரை அன்பினைப் பற்றி நாம் அறிந்துள்ளது சிறிது அளவேயாம்.

இயற்கையில் மாந்தரிடையே உள்ள அன்பு எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது என்றால், மன முறிவு - நீதி மன்றங்களுக்குச் சென்றிடும் தேவதையாக வழக்கறிஞர்களின் சொல்லாடல்களில் அல்லற்பட்டு அலைக் கழிக்கப்படும் மானிடப் பந்துகளாகும் நிலைக்கு என்றால் மிகையல்ல. மானிட அன்பின் பேரால் வந்துறும் அழிபாடுகளிலிருந்து, அழிவு மீட்புச் செய்யப் போவது யார்? எப்போது? அந்த நற்காலம் விடிவது எந்நாள்?

ஆன்றவிந்தடங்கிய சான்றோர் அன்பினைப் போன்ற அன்பு நம் நாட்டில் உச்ச உயர்நிலை மேலாண்மையை எய்துமேயானால், நாட்டில் உள்ள வழக்கறிஞர்களில் பெரும்பாலோரை வழக்கறிஞர் தொழிலை விட்டு ஓடோடச் செய்துவிடும்.

ஏராளமான ஆண்களும் பெண்களும் மருத்துவர்களை அணுகி மருத்துவம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்ட நோய்கள் பலவற்றிற்கும் அடிப்படைக் காரணம், மாந்தர் அன்பின்மையால் ஏற்படும் சினம், அதன் விளைவாக உண்டாகும் நரம்புத் தளர்ச்சியின் சீர்குலைவே ஆகும்.

ஒருவர் பொறாமை கொண்டார் என்றால், அப் பொறாமையே அவரது உடலில் பாயும் அரத்தத்தில் நஞ்சாக மாறும். வயிறு, நெஞ்சு தொடர்பான நோய்களைக் கொண்டு வரும்; அல்லது உடலெங்கும் ஒருவித தீடீர் உணர்ச்சி, எழுச்சி உண்டாகி உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கும்; அழிக்கும்.

பண்டைய நாள் முதல் இன்று வரை உலகில் போர் மூள்வதின் காரணம் என்ன? அஞ்சத்தக்க வன்மமாம் பகைமை - காழ்ப்புணர்ச்சி மாந்தரிடையே உண்டானதால்தான்். அத்தகு வன்மம், பகைமை - காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டதன் விளைவாகப் போரும் அதன் விளைவாக, மனித இனத்தின் குருதி ஒட்டத் திலேயே கலந்து மானிடப் பண்பினையே நஞ்சாக்கிவிட்டது. அதன் பின் விளைவு என்ன? மானிட ஒழுக்கத்தின் அழிவுக்கேடு உண்டாகிறது.

ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவர்கள் நெஞ்சத்திலும் மனத்திலும் வன்மமாம் பகைமை தோன்றிவிட்டால் அவர்களை அதிலிருந்து யாராலும் மீட்கவே முடியாது. அப்படிப்பட்டவர் களின் மனத்தையும் குணமாக்கி நல்லவராகச் செய்திடவும் முடியாது.

யோவான் 1:4:7 "விருப்பத்துக்குரியவர்களே, ஒருவரில் ஒருவர் அன்பாக இருக்கக் கடவோம். ஏனெனில், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்"

இந்த மறைமொழியைக் கொண்டேனும் இனி நாம் ஒருவரில் ஒருவர் அன்பு கொள்வோம். அன்புடையவரே ஒருவர் மற்றொரு வரை அறிவர்!

ஓர் ஆணுடினோ, பெண்ணுடனோ நாற்பதாண்டு காலம் பழகிய பின்பும் கூட அவர் குணநலன்களைப் பற்றி, உள்ளக் கிடக்கையைப் பற்றி அறிந்திட நம்மால் இயல்வதில்லை. உள்ளபடியே அன்புடையவராக இருந்தால், ஒரே ஒருநாள் பழகினும் அவர்கள் உள்ளம், உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்துவிடும். அவர்களின் நெஞ்சத்தின் ஆழத்தில் உள்ள அத்தனையும் நமக்குத் தெரியக் காட்டிவிடும்.

"அன்புடைய ஒவ்வொருவரும் கடவுளால் பிறப்பிக்கப் பெற்றவர்" நம்மில் இயேசுவின் அன்பின் உண்மைத் தன்மையை நாம் அறிந்தோமா இல்லையா என்பதை ஆயத்தான் அவ்வாறு தேவனால் பிறப்பிக்கப் பெறுகிறோம்.

தேவனால் நாம் பிறப்பிக்கப் பெறாத யாரும் அன்பு செலுத்தாதவர்; அன்புள்ளவர் போல் பாசாங்கு செய்பவர் - போலியாக நடிப்பவர் - நடப்பவர்; அன்பினைப் பெற்றிட முயல்பவரைப் போன்று நடிக்கலாம் - நடக்கலாம் ஆனால் அதன் பின்விளைவு என்ன? வாழ்க்கையில் ஏமாற்றமும் தோல்வியும் தான் காணப்படும். வாழ்வில் வெற்றி ஒருபோதும் கிட்டாது.