அன்பு வெள்ளம்/அன்பில் நிலைத்தோங்குதல்
அன்பில் நிலைத்தோங்குதல்
நீங்கள் இது போன்ற அழகிய அருள் மொழிகளைச் சிந்தித்துப் பார்க்க முடியுமா என்று படித்துப் பாருங்கள்.
1 தெசலோனி 3:11:13, "நம்முடைய தந்தையாகிய தேவனும் நம்முடைய மீட்பரான இயேசு கிறித்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழி நடத்துவாராக."
"நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மாந்தரிடத்தில் வைக்கும் அன்பிலும் மீட்பர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,
இவ்விதமாய் நம்முடைய மீட்பராகிய இயேசு கிறித்து நமது தூயவர்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்க்ள் நம்முடைய தந்தையாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற தூய்மையுள்ளவர்களாகியிருக்கும்படி உங்கள் நெஞ்சங்களை உறுதிப் படுத்துவீராக".
'நற்செய்திப் பணியின் அன்பொளி பற்றிப் படர வேண்டும்; கிறித்துவ சமய நெறியில் அன்புக் கனல் பரவேண்டும். இல்லையென்றால் திருச்சபையில் அன்பொளி இருக்காது. அன்பொளியற்ற திருச்சபையில் கிறித்துவ சமய நெறி கண்ணுக்குப் புலப்படாது; நற்செய்தியின் ஒளி ஒலிக்காட்சி தென்படாது.
நம்முடைய தந்தையாகிய தேவன், ஒருவர் மற்றொருவரில் அன்புகூர்ந்திட விழைகிறார். மற்ற எல்லாருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்று விழைகிறார். ஏன்? எதற்காக? இயேசு கிறித்து வருகை தருகிறபோது நம் நெஞ்சங்கள் அன்பில் நிலைத்தோங்கி இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில்!
அன்பில் பெருகுதல் - அல்லது அன்பின் பெருக்கம் என்பது, நம் உடல் வலிமையில் அல்லது அறிவில் பெருக்கம் என்று பொருள். அன்பு நம்மில் பெருகப் பெருக, அளப்பரும் அன்பினை நம்முள் தேக்கி வைக்கிறோம். அதனால் நம்முள் இருக்கும் அன்பினை வெளிப்படுத்தவும், மற்றவர்க்கு நாம் அன்பு செய்யவும் கூடிய நிலை ஏற்படுகிறது.
மானிடர் தம்முள் இருப்பவற்றினுள் அன்பு ஒன்றுமட்டும் தான்் என்றென்றைக்கும் முதுமை எய்துவதில்லை. தளர்ந்து சோர்ந்து வீழ்வதும் இல்லை.
மாந்தர் தம் ஆவியைப் போன்று அன்பும் அழியாத ஒன்று. உலக வாழ்வியல் தோல்விகளை எல்லாம் விட்டு, உயிர்த்தெழுந்த இயேசு கிறித்துவின் அருட்பேரரசில் சென்றடைந்து அதன் மூலம் தந்தையுடன் இரண்டறக் கலந்து ஒன்றானதில் ஒரு பெரும் பகுதியாக விளங்குவது அன்பு.
புலனறிவுக்கு வேண்டுமானால் குறுக்கை (சிலுவை) என்பது மிகப்பெரும் தோல்வியின் குறியீடாகத் தென்படலாம். ஆனால் உண்மைக் கண்ணோட்டத்தில் காணும்போது, முள்முடி தரித்த இயேசுவின் தலையில் மீண்டும் அதே முள் முடியாக இல்லாமல் 'அன்பு' என்னும் மணி மகுடத்தை 'உயிர்தெழுதல்’ எனும் வெற்றி சூட்டியது. அத்தகு உயிர்த்தெழுதலுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்ற குறுக்கை (சிலுவுை) அதுவாகக் காட்சி தருகிறது. மெலிந்து உதவி செய்வார் அற்றுக் குலைந்த இயேசு கிறித்துவுக்குக் கொடியவர்கள் முள்ளால் ஆன முடியைச் சூட்டினார்கள். ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு கிறித்துவுக்கு திருப்பெருந்தந்தை 'இறையொளி மாட்சி' எனும் மகுடம் சூட்டி மகிழ்ந்தார். அந்த இறைஒளி மாட்சி எனும் மகுடம் இயேசு கிறித்துவால் மீட்கப்பட்ட எண்ணற்றவர்களின் அன்பினால் செய்யப் பெற்றதாகும்.
எதை வேண்டி நாம் ஏங்கிக் கடவுளிடம் எதிர்பார்க்கிறோமா அதனை எய்திடச் செய்யும், அன்பு.
அன்பு நெறியினில் தொடர்ந்து நடந்தால், வாழ்வில் தோல்வி என்பது இல்லை. வெற்றியே பெறுவோம்.
அன்பின் நிழலில் அனைத்துலகும் இன்பின்
அருள் ஒளியில் ஒங்கும் இணைந்து.