அன்பு வெள்ளம்/அன்பு எப்படியெல்லாம்

விக்கிமூலம் இலிருந்து

அன்பு எப்படியெல்லாம் அளிக்கிறது...!

ன்பே முன்வந்து அளிக்கின்ற போது, அன்பின் அடிப்படையில் அளிக்கின்றபோது அது நமக்கு இல்லாமையை அளிக்காது, உளமார அன்பாரக் கொடுத்த கையை ஏதும் இல்லாத கையாக வெற்றுக் கையாக ஆக்காது. சுருங்கவும் விளங்கவும் சொன்னால், கொடுக்கக் கொடுக்கக் கூடுமே தவிர குறையாது. அள்ளித் தர தரப் பெருகுமே தவிர குறையாது. மனித நலநாட்ட அடிப்படையில் வழங்கினாலும் கூட வழங்க வழங்க, வழங்கப் பட்ட பொருள் குறைந்து, வறுமையில் தள்ளிவிடும் இன்மையாகி விடும் அரசு கொடுக்கிறதே, அதன் கருவூலம் குறைவதில்லையே என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, குறையாது நிறையும். ஆனால் அரசாங்கம் அளிக்கும் எல்லாமே நமக்கு நல்லது விளைப்பதில்லை. ஒரு சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும்.

உலகையொட்டி வாழும் மாந்தர் எவரும், கொடுத்து உதவுவாரை உயர்ந்த நிலையில் வைத்து எண்ணிட மனம் இல்லா தவர்கள். ஆகவே, ஏதோ ஒருவருக்கு நன்றினைக் கொடுத்தோம் என்பதைவிட, கொடுக்காமல் இருப்பது மேலானது. கொடுப்பது வழங்குவது அளிப்பது - தருவது உதவி புரிவது ஆகிய சொற்கள் ஒன்றின் மாற்றுச் சொற்கள் ஆகும். எனவே நாம் வழங்குவதையும் ஓர் அழகான கலையாக நுண்கலையாக ஏன் உயர்த்தக் கூடாது?

அன்பின் சிந்தை நமக்கு இருக்குமேயானால், அந்த அன்பு நம்மை உதவி புரிவதனை ஓர் அழகுக் கலையாகவே மாற்றிடும். நம்முடைய சொல்லிலும் செயலிலும் அன்பு நோக்கம் வருகின்ற வரையில், நம் சொல்லிலும் செயலிலும் அன்பு ஒன்றே சிந்தையாக இருக்க வேண்டும்.

என்ன சொன்னாலும் நம் மனம் நம் போக்கிற்கு விடுவதில்லை; நீங்கள் ஏதாவது உதவி புரிகிறீர்கள் எனும் போது அதைப் பார்க்கின்ற கண்கள் பொறுத்துக் கொள்வதில்லை! அடுத்த வரைப் புண்படுத்துகிற கடுமையான பேச்சினைப் பேசி அவர்கள் கண்ணீர் விடும் அளவுக்கு வந்த பிறகு அன்பான வார்த்தைகளைப் பேசுவதில் ஏதேனும் பயன் உண்டா எனில் இல்லை! இருக்காது!

நான் பார்த்திருக்கிறேன், சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே சிறிய பொருள், ஒன்றினைத் தருவதானாலும் அல்லது ஒரு கைப் பிடி அரிசியை ஒரு பிச்சைக்காரருக்குப் போடும் போது கூட, முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டுதான் இடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு துண்டு எலும்பை எடுத்துச் சேறும் சகதியுமாக இருக்கிற இடத்தில் தூக்கி எறிந்து விட்டு, தெருவில் அலையும் சொறி பிடித்த நாய் ஒன்றினை அழைத்து, ஏதோ அறுசுவை உணவையே படைத்து விட்டது போல எண்ணி, “அதோ! எடுத்துச் சாப்பிடு” என்று சொல்வார்கள். அது போன்றே உதவிக்கு வருபவரிடம் தூக்கி எறிவது போலவே கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்களும் கண்டிருப்பீர்கள் எங்கும் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட கணவன் மனைவியர்! இத்துணை எதற்கு? தங்கள் குழந்தைகளிடம் பழித்துக் கொண்டே திட்டிக் கொண்டே எரிந்து விழுந்து கொண்டே கொடுக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள், கண்டிருப்பீர்களே.

மிச்சம் மீதி இருக்கின்ற ஒரு கெட்டுப் போன அப்பத்துண்டைக் கூட ஏதோ அறுசுவைப் பண்டம் தருவது போன்று எண்ணித் தருவார்கள்.

ஐந்தமுதம் படைப்பது போல் எண்ணிக் கொண்டு, பழைய கெட்டுப்போன சோற்றைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வார்கள். பசியில் வாடும் ஏழைகள் என்ன செய்வர்? சாப்பிடுவர். ஆனால் சுவைத்துச் சாப்பிட்டிருப்பாரா அந்த ஏழை மக்கள், பசித்த மக்கள்?

அதுபோல் எல்லாம் கொடுப்பது தவறு; கூடாது. அது கொடுப்பதம் அன்று; உதவுவதும் அன்று. அதைவிடச் சும்மாயிருப்பது நல்லது. கொடுப்பவர், நல்லதைத் தரவேண்டும்; பெறுவரும், நல்லதைப் பெற்றுக் கொடுத்தவரை நன்றி நினைக்க வேண்டும். ஆகவே தான், யாருக்கு எதைக் கொடுத்தாலும் இயேசு அருளியதுபோல அளிக்க முடியாது ஆனால் இயேசுவைப் பின்பற்றி அளிக்கலாம் அல்லவா? நாம் ஏன் கொடுக்கிறோம்? கொடுப்பதில் பெறுபவர்க்கு நன்மையிருக்குமா? பெற்றுக் கொண்டவர் நன்றி நினைக்க வேண்டாமா? என்று எண்ணிப் பார்த்துக் கொடுத்திட வேண்டும். அன்பார்ந்த நெஞ்சம் கொண்டு கொடுத்திடுங்கள். உங்கள் பணியில் எத்துணை ஈடுபாடும் அன்பும் கொண்டு வெற்றி கொள்கிறீர்களோ அத்துணை அன்பும் மற்றவர்க்கு உங்களால் ஆகின்ற பணியில் உதவிபுரிவதில் இருத்தல் வேண்டும்!

எனக்குத் தெரிந்த ஒரு வணிகர், இராப்பகலாகக் கடுமையாக உழைத்தார். உழைத்ததால், உழைப்பின் பயனைக் கொண்டார்! வளம் பெற, பெற்ற வளத்தினைப் பேணிக் காத்திட, வளம் பெறச் செய்த பணியினைத் தொடர்ந்து நடத்திட இராப்பகலாக உழைத்து வந்தார். அப்படிப்பட்ட வளம் நிறைந்த செல்வ நாள்களில் அன்பைப் பற்றிய எண்ணமே இல்லை. அன்பு என்னும் ஓர் அற்புத ஆற்றல் இருப்பதாகக் கூட ஒரு நினைவில்லை. அன்பு என்ற சொல்லையே கூட மறந்துவிட்டிருந்தார் அந்த வணிகர். அப்படிப்பட்ட நாள்களில் ஒரு பெண்மணியைக் காதலித்தார்; அவளையே மணந்து கொண்டார். அவளிடம் அன்பாக நடந்து கொள்ள முடியவில்லை, அதற்கு நேரமும் இல்லை. தொழில், பணம் இதில் தான்் கவனம் முழுவதும்! முதலில் அந்த வணிகரை மணந்து கொண்ட பெண்மணி, தன்னைக் காதலித்து மணம் புரிந்து கொண்ட கணவன், தொழிலிலும் செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் காப்பதிலுமே கண்ணுங் கருத்துமாயிருப்பதைக் கண்ணுற்றாள்; என்ன செய்வார் நம்மோடு கொஞ்சிக்குலவிட நேரம் போதவில்லை என்று தான்் எண்ணி ஆறுதல் பெற்றாள். தன்னைத் தானே ஆற்றிக் கொண்டாள்.

நாள்பட நாள்பட என்ன ஆயிற்று? தனிமையில் வாடினாள்: இளமையின் உள்ளப் பசியால் வாட்டப் பெற்றாள்.

குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைகளிடமாவது அன்பு செலுத்த அந்தத் தந்தைக்கு நேரம் இருந்ததா? நெஞ்சம் இருந்ததா என்றால் அறவே இல்லை. குழந்தைகளுக்குத் தேவைக்குமேற்பட்ட காசு - பனம் தந்து வந்தாரே தவிர அன்பினைக் காட்டவில்லை. சீராட்டவில்லை அதற்கு மாறாகக் குற்றம் கூறினார் அந்தக் குழந்தைகளின் மேல்; கடுகடுத்த முகத்துடன் கடுஞ்சொற்களை அள்ளித் தெளித்தார் அக் குழந்தைகளின் மேல்!

தன் வாணிகம் செழிக்கப் பணத்தில் கொழுக்க இராப்பகலாகப் பாடுபட்டாரே தவிர, சற்றேனும் மனைவி மக்களிடம் அன்பு காட்டினாரல்லர்! பல இலட்சங்களுக்கு உரிமையாளர் ஆனாரே தவிர, மனத்தில் இன்பம் இல்லை; அமைதியில்லை, சிந்தித்தார்.தன் குற்றத்தை உணர்ந்தார்; பணம் பத்துவகை செய்யும் ஆனால் பண்பையும் இன்பத்தையும் தராது என்று உணர்ந்தார்! ஏன் அவருக்கு இன்பமும் அமைதியும் இல்லை. அன்புள்ள மனைவி மக்கள்பால் அவருக்கு உறவு இல்லை; உறவுக்கான அன்பில்லை அதனால் அவருக்கு வீட்டில் இன்பமில்லை.

எனவே உங்கள் பணி ஆயிரம் இருக்கட்டும், செல்வம் ஆயிரம் பெருகட்டும், உங்கள் அன்பும் அந்த அளவுக்கு விட்டில் மனைவியிடம் மக்களிடம் பெருக வேண்டும். இல்லையேல் அந்த வணிகரைப் போன்று மனைவி மக்கள் இருந்தும் பயனில்லை. இன்பமும் அமைதியும் அற்றுப்போகும் மனைவிமக்கள் உங்கள் பால் கொண்ட பற்றும் பாசமும் அற்றுப் போவர். உங்கள் வீடு, வீடு இல்லை! காடாகும். உங்கள் வாழ்க்கை, கோடிப்பணம் கொண்டதான்ாலும் இடுகாடாகும். அன்பற்றுப் போனதால், உங்கள் வாழ்க்கைப் பாலைவனமாகும்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் கடைசிவரையில் அன்பு தழைக்கப் பாடுபடுங்கள். அன்பிலும் சிறந்த கவர்ச்சி ஒருவரை மற்றெருவர் பற்றியிழுக்கும் கவர்ச்சி, கவரும் ஆற்றல் வேறு இருக்காது. இல்லை, அன்பில்லாத ஒருவர் வெறும் தோல் போர்த்திய எலும்புக் கூடே என்பதை நெஞ்சில் நிறுத்தங்கள். அன்பின் வழியது உயிர் நிலை:

உங்களிடம் எந்தக் கவர்ச்சியும் காலத்தால் முதுமையால் விட்டு விலகிப்போகும். ஆனால் அன்பு மட்டும் உங்கள் கடைசி வரையும் அழகாகக் கவர்ச்சியாக உங்க்ள் அகத்தையும் புறத்தையும் காக்கும்; கவர்ச்சி சேர்க்கும் கர்க்கும்; அருளையும் சேர்க்கும்.

        அன்புற்று அமர்ந்த வழிக்கென்ய வையத்து
        இன்புற்றார் எய்தும் சிறப்பு - (குறள் 75)