அபிதான சிந்தாமணி/அ முதல் ஃ வரை/அ/அகத்தியமுனிவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அகத்தியமுனிவர்[தொகு]

  1. . தாரகன் முதலிய அரக்கர் உலகை வருத்த அவர்களை நிவர்த்திக்க, இந்திரன், அக்நி, வாயு முதலியவர்களுடன் கூடிப் பூமியில் வந்தனன். அதைக் கண்டு அசுரர் கடலில் ஒளித்தனர். ஒளித்த அசுரர், தேவர்களை வருத்த உபாயந்தேடுகையில் அக்நி, அவர்களுடைய துராலோசனையையறியாமல் அசுரர் கடலிற் பயந்து ஒளித்தாராதலின் வருத்தலா காதென முயற்சியின்றி யிருந்தனன். பின் அசுரர், காலாவதியிற்பூமியில்வந்து தேவர், மக்கள், நரகர், இருடிகள் முதலியவர்களை வருத்த இந்திரன், மருத்துக்களோடு கூடிய அக்நியைப் பார்த்து நீ சும்மாவிருந்தமையால் இத்துன்பம் விளைந்தது. ஆகையால் கடலிலுள்ள நீரை வறட்டின் அசுரர் அகப்பட்டு நம்மாலழிவரென அக்நி, இந்திரனைப் பார்த்து அசுரர் பொருட்டுக் கடல்நீரை வறளச் செய்தால் சலரங்கள் அழியுமென்று கூற, இந்திரன் கோபித்து நீ என் சொல்லை மறுத்தனையாதலால், வாயுவுடன் கூடிப் பூமியிற்போய்க் கும்பத்திற்பிறந்து கடனீரெல்லாங் குடிக்க என்றனன். பிறகு தேவ சரீரங் கொண்ட அக்நி, மருத்துக்களுடன் கூடிப் பூமியில் விழுந்து அகத்தியனாயினான். எவ்வாறெனில், பூர்வம் விஷ்ணுமூர்த்தி, தருமன் குமரனாய்க் கந்தமாதன பருவதத்தில் தவஞ் செய்கையில், அத்தவத்தைக் கெடுக்க, இந்திரன், அப்சரசுக்களை யனுப்ப, அத்தபோதனர், சலிக்காமல் தம் தொடையினின்றும் அதிரூபலாவண்யத்துடன் ஒரு பெண்ணை சிருட்டித்து ஊர்வசியெனப் பெயரிட்டனர். அந்த ஊர்வசியை மித்திரன் மணந்து அவளோடு கூடியிருக்கையில் வருணன், அவளை விரும்பினன். அதற்கு அவள், புன்னகையுடன், என்னையொருவன் மணந்திருக்கையில், அந்நியன் விரும்பலாமோவென, வருணன், அவளைப் பார்த்து ஆயின் அம்மித்திரனுடன் நீ கூடியிருக்கையில் உன் எண்ணமாத்திரம் என்னிடத்தில் வைக்க என, அதற்கு ஒப்புக்கொண்டு மித்திரனுடன் கலந்திருந்தனள். இதனை ஞானதிருஷ்டியால் அறிந்த மித்திரன், ஊர்வசியைப் பார்த்து, நீ, வேறு எண்ணத்துடன் என்னிடமிருந்தனையாகையாற் பூமியில் மனுஷப் பிறவியடைந்து புரூவரன் தேவியாக எனச் சாபமிட்டனன். இவ்வகைப் பட்ட ஊர்வசியின் மோகத்தால் மித்திரா வருணர்க்கு வெளிப்பட்ட ரேதஸு ஒரு கும்பத்திலடைபட, அதிலிருந்து நிமி பிறந்தனன். அந்த நிமி அநேக பெண்களுடன் கூடி விளையாடுகையில் வசிட்ட முனிவர்வர, அவரை அவன் மரியாதை செய்யாததனால் அவர் கோபித்து நீ தேகமில்லாதவனாக எனச் சபித்தனர். அச்சாபஞ் சகியாத நிமி, வசிட்டரையும் அவ்வாறு தேகமில்லாதிருக்க சபித்தனன். இவ்வகை ஒருவர்க்கொருவர் சாபமேற்று சிமி பிரமனிடத்திற்போகப் பிரமன், நிமியை நேத்திரத்தில் வசிக்கச் செய்தனன். அது காரணமாக நிமிஷம் உண்டாயிற்று. பிறகு நிமிசாபத்தால் தேகமிழந்த வசிட்டர், மித்திராவருண வீரியமுள்ள கும்பத்திலிருந்து முதலினும், இரண்டாவது சதுர்புஜத்துடன் கமண்டலங் கொண்டவராய் அகத்தியரும், பிறந்து தவமியற்றி, தாரகாசுரன் முதலியவர்களைக் கொல்லுதல், வேண்டிச் சமுத்திரபானஞ் செய்து, இரண்டாவது மிருத்துயுவை நியமித்து, கடலிற் பிறந்த காலகூட விஷத்தை வியர்த்தமாக்கியிருக்கையில் இவரிடம் திரிமூர்த்திகள் வந்து உனக்கென்னவரம் வேண்டுமென்ன, 250000000000 கணக்குள்ள சிருட்டி கர்தாக்கள் மாறுமளவும் தக்ஷிணபதத்தில் ஆகாசவீதியிலிருக்க வரங்கேட்டுப் பெற்றனர். (மச்சபுராணம்). இவரைப் புலத்திய புத்திரர் என்றும் கூறுவர்.
  2. வாதாபி, வில்வலன் என்னும் அரக்கர் இருவரில், வில்வலன் வேதியர் உருக்கொண்டு வழியிற்செல்லும் வேதியர் இருடிகள் முதலாயினரை விருந்திற்கு வலிய அழைத்துவந்து, வாதாபியை ஆடாக்கியறுத்துப் பாகஞ் செய்து விருந்தாக வந்தவரையுண்பித்து இறுதியில் வில்வலன் வாதாபியை அழைப்பன். அவனுண்டோர் வயிற்றைக் கிழித்து வெளிவர இறந்தவனை இவ்விரண்டு அரக்கருந் தின்று பசிதீர்வர். இவ்வகையியற்றும் இந்த அரக்கரது தீமைகளை இருடிகள் அகத்தியருடன் முறையிட, அகத்தியர், அவர்களிடம் விருந்தாக சென்றுண்டனர். வில்வலன் அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியைக் கூப்பிட, அகத்தியர் ‘வாதாபே ஜீர்ணோபவ’ என்று வயிற்றை தடவ, அரக்கனிறந்தனன். வாதாபி வராமை கண்ட அரக்கன். கோபித்து அகத்தியரையடிக்கச் செல்ல முனிவர், சினத்துடன் நோக்கிக் தருப்பையில் பாசுபதமந்திரமேவி அரக்கனைக் கொல்ல முயன்றனர். பின் வில்வலன், அகத்தியர் வேண்டிய பொருள்களைக் கொடுத்து உயிர்பிச்சையேற்றுப் பிழைத்தான் என்ப (பாரவன - பு)
  3. சிவபிரான், பார்வதிதேவியாரைத் திருமணஞ்செய்த காலையில் தேவர் முதலியோர் வடதிசை நிறையத் தென் திசை யுயர்ந்ததால் சிவபிரான் கட்டளைப்படி அகத்தியர், தென்திசையிற் பொதிகைமலையிலிருக்க வருகையில் ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த இருடி கூட்டங்களைப் பார்த்து நீங்களேன் இவ்வகைத் தொங்குகின்றீர்களென இருடிகள், எங்கள் சந்ததியில் அகத்தியன் என்ற ஒருவன் பிறந்து இல்லறமடையாது இருக்கின்றானாதலால் மறுமொழி கூற, அகத்தியர் கேட்டுத் திடுக்கிட, அவர்களைத் தன்னை சபியாதிருக்க வேண்டி, நானே அகத்தியன், அதிசீக்கிரத்தில் இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்தினின்று நீக்குகின்றேனென்று, விதர்ப்பநாடடைந்து, அவ்வரசன் யாகத்திற் பிறந்த உலோபாமுத்திரையை அதிக பொருள் தந்து மணந்து தாதைகளை சுவர்க்கமடைவித்தவர். (பாரவன - பு)
  4. இவர், தென்திசைநோக்கிச் செல்லுகையில் விந்தமலையின் மிகுதியைத் தேவர் அகத்தியருக்குக் கூறினர். அதைக் கேட்ட அகத்தியர், அவ்விடம் வருகையில் விந்தம், மேருவுடன் மாறுபட்டு வழியிலாது நிற்றலைக் கண்டு அதனிடஞ் சென்றனர். விந்தம் முனிவரை பணிய அகத்தியர், நாம் தென்றிசை நின்று மீளும் வரையில் இவ்வகை பணிந்திருக்கவென்று பொதிகையிலெழுந்தருளி இராவணன் நாடாளாமல் அவனை காந்தருவத் தாற் பிணித்தவர். (திருநெல்வேலிப்புராணம், தொல்காப்பியப் பாயிரம்)
  5. தமிழ்நாட்டைக் கந்தமூர்த்தி அகத்தியருக்குக் கொடுக்க இருடி, பாண்டியனுக்குக் கொடுத்தனர். (நெல் - புரா)
  6. அகத்தியருக்கு தாமிரபரணி சிவமூர்த்தியாற் கொடுக்கப்பட்டது.
  7. மதியநந்தை யென்பவள், தவத்திற் கிடையூறு செய்ய, அவளை மனிதபிறவியடைய சபித்தவர்.
  8. தேவர்களை வருத்தியவிருத்திராசுரன் இந்திரனது வச்சிராயுதத்திற்குப் பயந்து கடலில் ஒளிக்கத் தேவர் வேண்டுகோளாற் சமுத்திரஜலத்தை ஆபோசனஞ் செய்து, அவனை இந்திரன் கொலைபுரிய, மீண்டு ஜலத்தை விடுத்தவர். (திருவிளை)