அமர வாழ்வு/கிராதகன் உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

வழிப் பிரயாணத்தில் நேர்ந்த சகிக்க முடியாத கஷ்டங்களையெல்லாம் உள்ளத்தின் உறுதியினால் சகித்துக் கொண்டு ராகவனுடைய படை காட்டுப் பாதைகளிலும், மலை வழிகளிலும் பல நூறு மைல் தூரம் பிரயாணம் செய்து கிட்டத்தட்ட அஸ்ஸாமின் எல்லைப் புறத்தை அடைந்தது. அந்த வீர சுதந்திரப் படைக்கு அங்கே ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அந்தப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அதற்குள்ளாக புது டில்லியை அடையப் போகிறோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டான். இந்தியாவின் எல்லைக்குள்ளே அடியெடுத்து வைத்து இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும் நேதாஜிக்காகவும் ஒரு துப்பாக்கி வேட்டாவது தீர்த்து விட்டு சாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டான். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது கூட முடியாத காரியம் என்று தெரிய வந்தது.

அவர்களுக்கு முன்னால் வந்திருந்த இந்திய சுதந்திர சேனையின் வீரர்கள் ஏற்கெனவே இந்தியாவின் எல்லைக்குள்ளே பிரவேசித்து இம்பால் போர் முனையில் மகத்தான வீரப் போர் புரிந்தார்கள். அவர்களுக்குள்ளே எத்தனையோ அரவான்களும் அபிமன்யுக்களும் இணையில்லாத தீரத்தைக் காட்டினார்கள். உயிரைத் திரணமாக எண்ணிப் பத்து பிரிட்டிஷ் வீரருக்கு ஒரு சுதந்திர வீரர் வீதம் சில இடங்களில் நின்று சண்டையிட்டார்கள். ஆனாலும் என்ன பிரயோஜனம்? காந்தி மகானின் அஹிம்ஸா மார்க்கத்திலேயே பாரததேசம் சாத்வீக சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று இருக்கும் போது, அவர்களுடைய முயற்சி எவ்விதம் பலிதமடையும்?

பிரிட்டிஷ் ஆட்சிக்குத் துணையாக அமெரிக்க ஆகாச விமானங்கள் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்தன. இந்திய சுதந்திர வீரர்களுக்கும், ஜப்பானிய வீரர்களுக்கும் துணையாகப் போதிய ஜப்பானிய ஆகாச விமானங்கள் வந்து சேரவில்லை. சின்னஞ்சிறு ஜப்பான் தன்னுடைய சக்திக்கு மேலே காலை அகட்டி வைத்துவிட்டது! நாலாபுறமும் சூழ்ந்து தாக்கிய எதிரிகளுக்கு ஈடு கொடுக்க அதனால் முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் பிரவேசித்த ஜப்பானிய வீரர்களும் சுதந்திர இந்திய வீரர்களும் பெரும்பாலும் அங்கேயே உயிர் துறக்க நேர்ந்தது. ஒரு சிலர் இந்தியாவின் எல்லையை மறுபடியும் பின்புறமாகக் கடந்து பர்மாவில் பிரவேசிக்க வேண்டியதாயிற்று. இப்படியாக முன்னணியில் சென்றிருந்த படையில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் பின் வாங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் காப்டன் ராகவனுடைய படை இந்தியாவின் எல்லைக்குச் சமீபத்தில் வந்து தங்கியது. சைனியம் தங்கிய இடம் காட்டுப் பிரதேசம்; கையோடு கொண்டு வந்திருந்த உணவுப் பொருள் வெகு சீக்கிரம் கரைந்து போய்க் கொண்டிருந்தது. அந்தச் சைனியத்திலிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் முன்னால் போகப் போகிறோமா, பின்னால் போகப் போகிறோமோ என்று தெரியாமல் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் ராகவனும் அதே மனோநிலையிலேதான் இருந்தான்.

ரங்கூன் வீதிகளில் இந்திய சுதந்திரப் படை அணிவகுத்துச் சென்ற போது இரு புறமும் சமுத்திரம் போல் நின்ற ஜனங்கள் - பர்மியர்களும் இந்தியர்களும் - எவ்வளவு உற்சாகம் காட்டினார்கள்! எப்படி பூமாரி பொழிந்து வாழ்த்துக் கூறி வழி அனுப்பினார்கள்!

புது டில்லிக்குப் போய்க் கொடி ஏற்றுவதற்குப் பதிலாகத் திரும்பவும் ரங்கூனுக்கே போய்ச் சேர்ந்தால், அந்த ஜனங்கள் எப்படி நம்மை வரவேற்பார்கள்?

நல்லது; ரேவதிதான் என்ன சொல்வாள்?... ஆகா! சுதந்திர முழக்கத்துடன் கிளம்பிய இந்திய சுதந்திர படை இத்தகைய முடிவுக்கு ஆளானதைக் கேட்டால் அவள் மனம் எப்படித் துடிக்கும்? அவள் இப்போது எங்கே இருக்கிறாளோ? நேற்றுப் புதிதாக வந்திருப்பதாகச் சொன்னார்களே, அந்தப் பெண்கள் படையில் ஒருவேளை அவள் இருப்பாளோ? அவளையாவது சந்திக்க முடிந்தால் இந்த மனோ வேதனைக்கு ஒரு மாற்றாக இருக்கும்.

இப்படிப்பட்ட சிந்தனைகளில் காப்டன் ராகவன் ஆழ்ந்திருந்த சமயம், மேஜர் ஜெனரல் அவனைக் கூப்பிடுவதாகச் செய்தி வந்தது. "எதற்காகக் கூப்பிடுகிறார்?" என்ற அதிசயத்துடன் ராகவன் குமரப்பாவிடம் சென்றான்.

காப்டன் ராகவனை அவர் ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, "காப்டன்! உம்மிடம் மிக முக்கியமான ஒரு வேலையை ஒப்புவிக்கப் போகிறேன்" என்றார்.

ராகவன் கம்பீரமாக "மிக்க வந்தனம், ஜெனரல்! என் உயிரைக் கொடுத்தாவது கட்டளையை நிறைவேற்றுவேன்!" என்று சொன்னான். ஆனால், அவன் மனதிற்குள் ஏனோ திக்திக் என்றது.

"உயிரைக் கொடுக்கிறேன் என்று சொல்வதில் பயனில்லை. இந்தியாவின் வருங்காலத்தையே உம்மிடம் ஒப்புவிக்கப் போகிறேன். ஒரு கடிதம் கொடுப்பேன். அதைக் கொண்டு போய் பத்திரமாய்ச் சேர்க்க வேண்டும். வழியில் உயிருக்கு அபாயத்தைத் தேடிக் கொள்வது துரோகம் செய்வதாகும்."

"கடிதம் யாருக்கு?" என்று ராகவன் கேட்டபோது அவனுடைய குரல் தழதழத்தது.

"வேறு யாருக்கு? நமது மகோந்நத தலைவருக்குத்தான். தற்சமயம் நேதாஜி அந்தமான் தீவில் இருக்கிறார். ஆகாச விமானத்தில் போய்க் கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் பதிலும் வாங்கிவரவேண்டும்.

சற்று முன்னால் ராகவன் மனதில் குடிகொண்டிருந்த பயமெல்லாம் பறந்தது. குமரப்பாவிடம் சொல்ல முடியாத நன்றி அவனுடைய உள்ளத்தில் ததும்பியது.

"ரொம்ப வந்தனம்! இதோ புறப்படத் தயார்!" என்று எக்களிப்புடன் சொன்னான்.

"ஆனால் இந்த முக்கியமான கடிதத்தை அவ்வளவு சுலபமாக உம்மிடம் ஒப்புவிக்க முடியாது. அதற்கு முன்னால் உமக்கு ஒரு சோதனை இருக்கிறது. அதில் நீர் தேறியாக வேண்டும்."

சிறிது நேரம் ராகவனுடைய மனதைவிட்டு அகன்றிருந்த சந்தேகங்கள், பயங்கள் எல்லாம் திரும்பவும் அதி விரைவாக வந்து புகுந்தன. "என்ன சோதனை?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டான். "நாலு நாளைக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்த படையில் ஒருவர் மீது பிரிட்டிஷ் ஒற்றர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்ததில் அது நிச்சயமாயிற்று. நமக்குள்ளேயிருந்து கொண்டு ஒற்று வேலை பார்ப்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமல்லவா?"

"தெரியும்! மரணதண்டனை!"

"அந்த தண்டனையை நீர் நிறைவேற்ற வேண்டும்."

ராகவன் மனதில் பெரும் திகில் உண்டாயிற்று. மேலே எதுவும் பேச முடியாமல் நின்றான்.

"ஒற்று வேலை பார்த்தது ஒரு பெண்; அவள் உமக்கு அறிமுகமுள்ள பெண்தான்!"

ராகவனுக்கு இப்போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவள் ரேவதியாகத்தான் இருக்க வேண்டும்; சந்தேகமில்லை. ஆ! இந்தக் கொடிய கிராதகன் இந்த முறையில் இருவர் மேலும் பழி தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறான். இத்தனை நாள் ஒன்றுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேஷம் போட்டதெல்லாம் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத்தான்.

ராகவன் ஒரு நிமிஷ நேரம் யோசனை செய்தான். படைத் தலைவர்களின் கட்டளைகளை மறுவார்த்தை பேசாமல் நிறைவேற்றுவதாகச் செய்து கொடுத்த பிரதிக்ஞையை ஞாபகப் படுத்திக் கொண்டான். அதை நிறைவேற்றிவிட்டு, நேதாஜியையும் கடைசி முறையாகத் தரிசித்துவிட்டுப் பிறகு தன் சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தான்.

"என்ன யோசனை செய்கிறீர்? ஒப்புக் கொள்கிறீரா இல்லையா?" என்று அதிகாரக் குரலில் கேள்வி வந்தது.

"கட்டளையை நிறைவேற்றுகிறேன்!" என்று ராகவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

"ரொம்ப சரி! இதோ துப்பாக்கி! இதில் ஐந்து குண்டு இருக்கிறது; ஐந்தையும் தீர்த்து விட வேண்டும்; ஒரு வேளை கை நடுக்கத்தினால் குறி தவற இடமிருக்கக் கூடாதல்லவா?"

இவ்விதம் சொல்லிக் கொண்டே குமரப்பா மேஜை மேல் கிடந்த துப்பாக்கியை எடுத்து நீட்டினார். ராகவன் அதற்குள் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தான். சிறிதும் கை நடுக்கமின்றித் துப்பாக்கியை வாங்கிக் கொண்டான்.

காப்டன் ரேவதியின் கண்ணைக் கட்டி ஒரு பாறையின் பக்கத்தில் நிறுத்தியிருந்தார்கள்.

ராகவனும் அவளுக்கு எதிரில் முப்பது அடி தூரத்தில் நின்று கொண்டான். துப்பாக்கியை குறி பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டான். விசையை இழுத்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து!

ஐந்து வெடியும் ராகவனுடைய தலையின் உச்சியில் ஐந்து இடி விழுந்தது போல் வெடித்தன.

அவனுடைய தலை சுழன்றது. மறுபடியும் ஒரு பெரு முயற்சி செய்து சமாளித்துக் கொண்டான். கண்ணைத் திறந்து பார்த்த போது ஏற்கெனவே ரேவதி நின்ற பாறை ஓரத்தில் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டான். அந்தப் புகையினிடையே தரையில் ஓர் உருவம் கிடந்தது!

அங்கிருந்து காப்டன் ராகவனை மிக அவசரமாக விமானக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதன்பிறகு அவன் குமரப்பாவைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடிதம் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. விமானம் தயாராய் நின்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அதில் ஏறுவதற்கு யத்தனித்த சமயத்தில் ராகவனுடைய நண்பன் ஒருவன் வந்து அவன் காதோடு ஒரு செய்தியைச் சொன்னான். அதை அவனால் நம்ப முடியவில்லை. "ஆஹா! ஏன் பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்? ஏன் புண்பட்ட நெஞ்சில் வேலை எடுத்துக் குத்துகிறாய்?" என்று கேட்டான். "இல்லை, ராகவன்! நான் உன்னை ஏமாற்றவில்லை. நான் சொன்னது சத்தியம்" என்றான் நண்பன். மேலே பேசுவதற்கு அவகாசம் இல்லை. விமானத்தின் காற்றாடிச் சிறகுகள் சுழலத் தொடங்கின.