உள்ளடக்கத்துக்குச் செல்

அமர வாழ்வு/விமானம் மறைந்தது

விக்கிமூலம் இலிருந்து

அந்தமான் தீவில் சென்று விமானம் இறங்கியதும் நேதாஜியைத் தேடிக் கொண்டு ராகவன் அதிக தூரம் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் இறங்கிய விமானகூடத்தின் பக்கத்திலேயே நேதாஜியும் இருந்தார். அவரைச் சுற்றி இந்திய சுதந்திர சர்க்காரின் மந்திரிகள் சிலரும், மற்றவர்களும் இருந்தார்கள்.

அவர்களைப் பார்த்தால் ஏதோ ஒரு மிக முக்கியமான முடிவுக்கு வந்தவர்களைப் போலத் தோன்றியது. எல்லோருடைய முகத்திலும் சோகக் குறி காணப்பட்டது.

சில மாதத்துக்கு முன்பு வீரலக்ஷ்மி தாண்டவமாடிய நேதாஜியின் பூரண சந்திரனையொத்த முகத்தை சோகக் கிரகணம் பிடித்திருந்தது.

காப்டன் ராகவன் தான் கொண்டு வந்த கடிதத்தை நேதாஜியிடம் கொடுத்தான். நேதாஜி அதைப் படித்தபோது அவருடைய சோகச் சாயை படர்ந்த சௌந்தர்ய வதனத்தில் புன்சிரிப்பின் ரேகை காணப்பட்டது.

படித்து முடித்ததும் அவர் சொன்னார்..."ஆகா! எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். 'நாங்கள் உயிரை விட்டு விடுகிறோம்; நீ மட்டும் எப்படியாவது தப்பிப் பிழைத்து உயிரோடிருக்க வேண்டும்' என்கிறார்கள். 'பாரதத் தாயின் விடுதலைக்காக' என்று சேர்த்துக் கொண்டு சொல்கிறார்கள்... காப்டன் ராகவன்! நீ திரும்பிப் போக வேண்டிய அவசியமில்லை. உன்னுடைய ஜெனரலுக்கு முன்னமே நான் கடிதம் அனுப்பி விட்டேன். உன்னைப் பற்றி குமரப்பா ரொம்பப் பாராட்டியிருக்கிறார். அவருடைய சிபாரிசின் படி உனக்கு லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கிறேன், ஜே ஹிந்த்!" என்றார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் "ஜே ஹிந்த்!" என்று முழங்கினார்கள்.

"நண்பர்களே! சுதந்திர இந்தியாவின் சேனாதிபதி பதவியிலிருந்து நான் செய்த கடைசி காரியம் இதுவாக இருக்கலாம்." என்று நேதாஜி சொன்னபோது சுற்றி இருந்தவர்களில் ஒருவர் குறுக்கிட்டு, "இல்லை, நேதாஜி இல்லை; ஒரு நாளும் இல்லை, பாரத பூமியில் புது டில்லியில் தாங்கள் சுதந்திர இந்திய சைதன்யத்தின் மாபெரும் சேனாதிபதியாக விளங்கும் காலம் கட்டாயம் வரும்!" என்றார்.

"உங்களுடைய வாக்கு பலிக்கட்டும்! நண்பர்களே! இப்போதைக்கு நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நான் எங்கே போனாலும் என்ன செய்தாலும் உங்களையெல்லாம் மறக்க மாட்டேன். வருங்கால வேலையைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்ததும் ரேடியோ மூலம் தெரிவிப்பேன். பாங்காங்கிலிருந்தோ, டோ க்கியோவிலிருந்தோ, வேறிடத்திலிருந்தோ பேசுவேன். எல்லோரும் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள், அதன்படி செய்யுங்கள்."

"அப்படியே செய்வோம் நேதாஜி! ரேடியோவில் தங்களுடைய வீர கர்ஜனைக் குரல் எப்போது கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்."

நேதாஜி கம்பீரமாக நடந்து சென்று தயாராய்க் காத்திருந்த ஆகாச விமானத்தில் ஏறிக் கொண்டார். விமானத்தின் இறகுகள் சடசடவென்று சுழன்றன. விமானம் முதலில் விர்ரென்று ஏறத் தொடங்கியது. சுற்றிச் சுற்றி வந்து மேலே மேலே மேலே சென்றது. விமானம் வானத்தில் ஒரு சிறிய கரும்புள்ளியைப் போல் ஆகும் வரையில் எல்லோரும் மேலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கர்னல் ராகவனும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். கடிதத்தை நேதாஜியிடம் ஒப்புவித்ததும் தன்னுடைய சொந்த விஷயத்தை அவரிடம் சொல்லி மேஜர் ஜெனரல் குமரப்பாவைப் பழிவாங்க அனுமதி கேட்க வேண்டுமென்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை என்பதைக் கண்டான். நேதாஜியும் அவருடைய துணைவர்களும் கண்ட ஒரு மகத்தான கனவு - பாரத சுதந்திரக் கனவு - துகள் துகளாகப் போய்க் கொண்டிருந்த சமயம் அது. எல்லோரும் அவ்வளவு மகத்தான விஷயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய சொந்த விஷயம் அற்பத்திலும் அற்பமானதாக அவனுக்குத் தோன்றியது. ஏற்கனவே அவன் நேதாஜியைப் பார்த்திருந்த போதிலும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை. எடுத்த காரியத்தில் அத்தகைய பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருந்த சமயத்தில் அவருடைய தீரமும் கம்பீரமும் அவனுடைய உள்ளத்தை முழுக்க முழுக்கக் கவர்ந்து ஜன்ம ஜன்மங்களிலேயும் அப்பேர்ப்பட்ட தலைவரின் கீழ் அடிமைத் தொண்டு செய்யலாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. அவர் ஏறிய ஆகாச விமானம் உயரக் கிளம்பிய போது அவனுடைய உயிரானது உடலை மட்டும் இந்த பூமியில் விட்டு விட்டு மேலேறிச் செல்வது போலத் தோன்றியது. விமானத்தின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகச் சின்னதாகி, சிறிய கரும்புள்ளியாகி, கடைசியில் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்தபோது, கர்னல் ராகவன் சற்று நேரம் ஸ்ம்ரனையற்று ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தான். எல்லாரையும் போல் 'ஜேய் ஹிந்த்' கோஷம் செய்வதற்குக் கூட அவனுடைய நா எழவில்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள கையை உபயோகிக்கும் சக்தியைக் கூட அவன் இழந்து விட்டிருந்தான்.

நங்கூரம் இல்லாமல், சுக்கான் இல்லாமல், மாலுமிகளும் இல்லாமல் நடுக் கடலில் அலைகளால் மோதப் பட்டு காற்று அடித்த திசையில் அங்கு மிங்கும் அலைந்து மிதந்து கொண்டிருக்கும் கப்பலைப் போல் சில காலம் லெப்டினென்ட் கர்னல் ராகவன் பர்மாவில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். மேஜர் ஜெனரல் குமரப்பாவும் அவர் தலைமையிலிருந்த சுதந்திர சேனையின் வீரர்களும் பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. கேப்டன் ரேவதியைப் பற்றி யாதொரு தகவலும் தெரியவில்லை. பாறை ஓரத்துப் பயங்கர சம்பவத்துக்குப் பிறகு ஆகாய விமானத்தில் ஏறும் சமயத்தில் அவனுடைய நண்பன் ஒருவன் வந்து காதோடு சொன்ன செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. குழப்பமும் ஏமாற்றமும் துயரமும் குடி கொண்டு அலைப்புண்ட உள்ளத்தோடு லெப்டினென்ட் கர்னல் ராகவன் தாய் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். ஒருவித நோக்கமும் இலட்சியமும் இன்றி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, டில்லி செங்கோட்டையிலிருந்து மேஜர் ஜெனரல் குமரப்பா விடுதலையானார் என்று ஒரு நாள் பத்திரிகையில் படித்தான். பின்னர் அவரைத் தேடிக் கொண்டு அலைந்தான். அந்தத் தேடல் முற்றுப் பெறாத நிலையிலேதான் ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவைக் கழிக்கும்படி நேர்ந்தது.