அமலனாதிபிரான்
Appearance
திருப்பாணாழ்வார் பாடியருளிய
[தொகு]அமலனாதிபிரான்
[தொகு]- (அழகிய மணவாளனது திருமேனி அழகில் ஈடுபட்டுப் பாதாதி கேசாந்தமாகப் பாடியருளியது)
திருமலைநம்பிகள் அருளிச்செய்த தனியன்
[தொகு]- காட்டவே கண்ட பாதம் கமலநல் லாடை யுந்தி
- தேட்டரு முதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
- வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபு குந்து
- பாட்டினாற் கண்டு வாழும் பாணர்தாள் பரவி னோமே.
- (இப்பாடல் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
நூல்
[தொகு]அமலனாதிபிரான்
[தொகு]பாடல்:1 (அமலனாதி)
[தொகு]- அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த
- விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
- நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்
- கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.
- பதப்பிரிப்பு
- (கமலபாதத்தின் அழகு)
- அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
- விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
- நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக்
- கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே.
பாடல்: 2 (உவந்தவுள்ளத்தன்)
[தொகு]- உவந்த வுள்ளத் தனாயுல கமளந் தண்டமுற
- நிவந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிராசரரைக்
- கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழி லரங்கத் தம்மானரைச்
- சிவந்த வாடையின் மேற்சென்ற தாமென் சிந்தனையே.
- பதப்பிரிப்பு
- (சிவந்த அரை ஆடையின் அழகு)
- உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
- நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிராசரரைக்
- கவர்ந்த வெம்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
- சிவந்த ஆடையின் மேல்சென்றதாம் என் சிந்தனையே.
பாடல்: 3 (மந்திபாய்)
[தொகு]- மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
- சந்தி செய்யநின் றானரங் கத்தர வினணையா
- னந்தி போனிறத் தாடையு மதன்மே லயனைப்படைத்த தோரெழி
- லுந்தி மேலதன் றோவடி யேனுள்ளத் தின்னுயிரே.
- பதப்பிரிப்பு
- (உந்தி அழகில் உள்ளம் ஈடுபடல்)
- மந்தி பாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
- சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
- அந்தி போல்நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
- உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே.
பாடல்: 4 (சதுரமாமதிள்)
[தொகு]- சதுர மாமதிள் சூழிலங் கைக்கிறை வன்றலைபத்
- துதிர வோட்டி யோர்வெங்கணை யுய்த்தவ னோதவண்ணன்
- மதுர மாவண்டு பாட மாமயிலாட ரங்கத் தம்மான் றிருவயிற்
- றுதர பந்தமென் னுள்ளத் துண்ணின் றுலாகின்றதே.
- பதப்பிரிப்பு
- (உதரபந்தத்தின் அழகு)
- சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
- உதிர ஓட்டி ஓர் வெம்கணை உய்த்தவன் ஓத வண்ணன்
- மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று
- உதர பந்தம் என் உள்ளத்து உள்நின்று உலாகின்றதே.
பாடல்: 5 (பாரமாய)
[தொகு]- பார மாய பழவினை பற்றறுத் தென்னைத்தன்
- வார மாக்கிவைத் தான்வைத்த தன்றியென் னுட்புகுந்தான்
- கோர மாத வஞ்செய் தனன்கொ லறியே னரங்கத் தம்மான்
- வார மார்பதன் றோவடி யேனை யாட்கொண்டதே.
- பதப்பிரிப்பு
- (மார்பின் அழகு மனதைக் கொள்ளைகொள்ளல்)
- பாரம் ஆய பழ வினை பற்று அறுத்து என்னைத் தன்
- வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
- கோர மாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங்கத்தம்மான்
- வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
பாடல்: 06 (துண்டவெண்பிறை)
[தொகு]- துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னஞ்சிறைய
- வண்டு வாழ்பொழிற்சூ ழரங்கநகர் மேய வப்பன்
- அண்ட ரண்ட பகிரண் டத்தொரு மாநிலமெழு மால்வரை முற்று
- முண்ட கண்டங் கண்டீரடி யேனையுய் யக்கொண்டதே.
- பதப்பிரிப்பு
- (கண்டத்தின் அழகு)
- துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
- வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
- அண்டர் அண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
- உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.
பாடல்: 07 (கையினார்)
[தொகு]- கையி னார்சுரி சங்கன லாழியர் நீள்வரைபோல்
- மெய்ய னார்துள பவிரை யார்கமழ் நீண்முடியெம்
- மய்ய னாரணி யரங்கனா ரரவி னணைமிசை மேய மாயனார்
- செய்ய வாயையோ வென்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
- பதப்பிரிப்பு
- (செய்ய (சிவந்த) வாய் என் சிந்தை கவர்ந்தது)
- கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள்வரைபோல்
- மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
- அய்யனார் அணி அரங்கனார் அரவின் அணை மிசை மேய மாயனார்
- செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
பாடல்: 08 (பரியனாகி)
[தொகு]- பரிய னாகிவந் தவவு ணனுடல் கீண்டமரர்க்
- கரிய வாதிபி ரானரங் கத்தம லன்முகத்துக்
- கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்
- பெரிய வாயகண்க ளென்னைப் பேதைமை செய்தனவே.
- பதப்பிரிப்பு
- (பெரியவாய கண்களின் பேரழகு)
- பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்டு அமரர்க்கு
- அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
- கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
- பெரியவாய கண்கள் என்னைப் பேதைமே செய்தனவே.
பாடல்: 09 (ஆலமாமரத்தின்)
[தொகு]- ஆல மாமரத் தினிலை மேலொரு பாலகனாய்
- ஞால மேழுமு்ண் டானரங் கத்தரவி னணையான்
- கோல மாமணி யாரமு முத்துத் தாமமு முடிவில்ல தோரெழில்
- நீல மேனியை யோநிறை கொண்டதென் நெஞ்சினையே.
- பதப்பிரிப்பு
- (நீலமேனியின் நிறை அழகு)
- ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
- ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
- கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர்எழில்
- நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
- (இந்த ஒன்பது பாடல்களும் ஆசிரியத்துறை)
பாடல்: 10 (கொண்டல்வண்ணனை)
[தொகு]- கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெ
- யுண்ட வாயனென் னுள்ளங் கவர்ந்தானை
- யண்டர் கோனணி யரங்க னென்னமுதினைக்
- கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.
- பதப்பிரிப்பு
- (அரங்கனையே காணும் எம் கண்கள்)
- கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
- உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை
- அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
- கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.
- (இப்பாடல் கலிவிருத்தம்)
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் முற்றும்
[தொகு]- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.