உள்ளடக்கத்துக்குச் செல்

அமுதவல்லி/இட்டார்க்கு இட்ட பலன்

விக்கிமூலம் இலிருந்து

7. இட்டார்க்கு இட்ட பலன்
ஒன்று

கஞ்சிப்பொழுது, மண்பட்ட பாதங்களைப் புண்ணாக்கும் வெயில்; இடையீடு விட்டு வீசியது அனற்காற்று.

கிழவி செல்லாயிக்கு ஏப்பம் பறிந்தது. அது பசிஏப்பம்: அதில் ஓரளவு தண்ணீர் ஏப்பமும் கலந்திருந்தது. பவளக்கொடியைப் பார்த்து மறுபடி அவள் கை ஏந்தினாள்.

“பாட்டி, இன்னம் தாகம் அடங்கலையா?” என்று கேட்டாள் பவளக்கொடி..

குடிக்கறதுக்கு இல்லேம்மா; மூஞ்சியிலே தெளிச்சுக்கிட்டா ஒண்னுக்குப் பாதியா சொகமாயிருக்குமில்லே அது க்காவத் தான்!”

‘ கட்டைத் தூக்கி விடட்டுமா, பாட்டி?’ “ஆமாம்மா!’ “ஏம்மா, சீமோடு வீட்டுச் சின்னையா அம்பலக்காரர் பொண்னு தானே நீ?”

‘இல்லை, நாட்டோடு வீட்டு நல்ல தம்பித்தேவர் மகள்!’

“தடங்கெட்டுப் போச்சு, தாயி. நீ பதினாறும் பெத்துச்சொகமா வாழனும்மா!' பூவை எஸ். ஆறு முகம் 137

‘எனக்கு இன்னம் கல்யாணமே ஆகலையே, கிழவியம்மா?’’

“ஆணப்புறம் ஏஞ் சொல்லுப் பலிக்கும். ஆமா, ஒம்பேரு என்னா, தாயி?”

பவளக்கொடி!’

‘அப்படின்னா, அர்ச்சுன மவராசா கெகடைச்சதும் எனக்குக் கண்ணாலச் சாப்பாடு போடோ ணும்!’’

“நிச்சயம் போடுவேன், பாட்டி!’

‘நானும் நிச்சயமாப் பொளைச்சுக் கெடப்பேன்!’

பிரிந்த ஒற்றையடிப் பாதைகள் அவர்களைப் பிரித்துவிட்டு வேடிக்கை பார்த்தன.

இரண்டு

அரிசிக் குறுணையை மடியிலிருந்து அவிழ்த்து முறத் தில் கொட்டினாள் செல்வாயி; வியர்வையைத் துடைத்தபின், சேலைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டாள்: மூச்சைக் கட்டிப் பிடித்து இழுத்த வண்ணம் முழங்காவிட்டு அமர்ந்தாள் : முறத்தைக் கையிலெடுத்துத் தட்டிப் புடைத் தாள்; கல்லும், நெல்லும் இந்தியப் பூகோளப்படத்தின் பாகிஸ்தானாம் ஆயின.

எரிந்தது தீ; கொதித்தது நீர் வெந்தது அரிசி: தப்பித்தவறிக் கிடந்தது தேங்காய்ச் சில் ஒன்று; சுற்றிச் சூழ்ந்திருந்த “பூரணம் மாயமானது; உப்பு, புளி, மிளகாய் ஒப்பந்தப் பத்திரத்தில் கைநாட்டுச்

அ-9 138 அமுதவல்லி

செய்தன. துகையல் தயாரானது. வடி தண்ணிர் கல்சட்டியில்; மிஞ்சிய கஞ்சி பானையில்; எஞ்சியது மண்ணுக்கு.

மேலவளவுத் தொங்கலிலிருந்து தவழ்ந்து வந்த சினிமாப்பாட்டுக் களின் ஒலி, செல்லாயியின் நெஞ்சைத் தொட்டது. பசி வயிற்றைக் கிள்ளியெடுத்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு மெல்ல எழுந்தாள்; மெல்ல நடந்தாள்; மனம் அல்லாடியது; உடல் தள்ளாடியது. குருவி மணலைப் பிரிமனையாக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் திவலை, அவளுக்குத் தான் பணிந்தது. திரும்பி நடந்தாள்: குடிசைவந்தது; குனிந்து தான் நுழைந்தாள் ; இருந்தும் தலையை இடித்துத் தொலைத் தது. எண் சாண் உடம்பிற்கு எட்டடிக் குச்சுக்குமேல் தேவை ஏது? அங்காளம்மன் திருநாளில் பெரியட்டான் புரத்து மண்டகப்படி பன்றைக்கு குருக்கள் ஐயர் தந்த விபூதிப் பிரசாதம் காட்சியளித்தது. முதலில் எடுத்து அதை வாய்க்கும், அடுத்து அள்ளியதை நெற்றி மேட்டுக்கும் பகிர்ந்து கொண்டாள் அவள். கிழக்குப் பாரிசத்தில் பதித் திருந்த கண்ணாடித் துண்டொன்று, அவளை அழைத்தது. வதனம் பதித்தாள் கிழவி. சுருக்கம் விழுந்து தொங்கிய முகமும், குழி பறித்துக் கிடந்த கண்களும், நரை திரண்ட கேசமும், ஒட்டிய வயிறும், உலர்ந்த உடலும் அப்போது அவ்ளது பார்வையில் தட்டுப்படவில்லை. கடந்து வந்த நெருஞ்சிமுள் காடு தெரிந்தது; தாண்டி வந்த அறுபத்தேழு மைல் கற்கள் காணக்கிடந்தன: தாம்பூலம் மாற்றி, பரிசம் போட்டு, தாலி பூட்டிய அவள் துணைவன் உடல், பொருள், ஆவி முன்றையும் கொடுப்பதாகக் கையடித்துக் கொடுத்துவிட்டுக் கடைசியில் ஒர் இரவிலே அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் உடல், பொருள். பூவை எஸ். ஆறுமுகம்

ஆவியில் ஒன்றையும் அவளுக்கென்று மிச்சம் வைக் காமல், மண்ணில் பதிந்து விண்ணுக்குச் சென்றுவிட்டான்! கொண்டவனும் கொண்டவளும் குப்பை கொட்டிய லட்சணத்துக்கு அடையாளமாகக் கிடைத்த பரிசான பதினாறு வயசு இள வட்டம் அக்கரைச் சீமைக்குச் சென்று இக்கரைக்கு வராமலேயே நாதியற்றுச் செத்து மடிந்து விட்டது.

‘நானு ஏதுக்காவ உசிரோடு இருக்கோணும்?'அலுத்துச் சலித் துப் போன தருணம் பார்த்து, இக் கேள்வி சம்மட்டியாக உருவாகி, அவளது தளர்ந்த நெஞ்சத்தினை மேலும் தளர்ச்சி யடையச் செய்யத் தவறுவது கிடையாது. ஒரு நாள், இரண்டு நாள் அனுபவம் மட்டும் அல்லவே இது?

வடித்த கஞ்சியின் சூடு ஆறிவிட்டது; வடிந்த கண்ணிரின் வெம்மை தணிந்தது. கிழவிக்குச் சிறு குடலைப் பெருங்குடல் கவ்வியது. காய்ச்சின கஞ்சி, வெங்காயம், உப்புக் கற்கள். துகையல் எல்லாம் அவளை வருந்தி வருந்தி அழைத்தன. குவளையில் கஞ்சியை ஊற்றினாள்: மடக் மடக் என்ற சத்தம் மூன்று வினாடிகளுக்கு ஒரு முறை கேட்டது. அரைக் கால் நாழி கூடத் தாண்டியிராது. கிண், கிண்’ என்று அவளுக்குத் தலை கனத்து வந்தது. பிறகு சுற்றவும் ஆரம்பித்தது. மறு வினாடி அவள் வாத்தி பண்ணி விட்டாள்.

அந்தி சந்திப் பொழுதிலே படுக்கக் கூடாதென்பார்கள் நாலுந் தெரிந்தவர்கள். இதற்குச் செல்லாயி விதிவிலக்கு!

எல்லார்க்கும் உண்டு இலையும் பழுப்பும்!பழமொழி இது. செல்லாயி பழுத்த இலை. பசுமை அமுதவல்லி

நரம்போடிய பழைய நாட்களை அவள் எண்ணிப் பெருமூச்செறியும் நிலையில் அவள் இல்லை. சுயநினைவு கிடையாது; கணப்புக் குழியின் தலை மாட்டில் படுத்துக் கிடப்பது போன்ற பிரமை ஒரு சமயம்; மறுகணம் சாரலில் அகப்பட்டுக் கொண்ட மாதிரி ஒரு நடுக்கம். நெற்றியும் நெஞ்சும் கூத்து மேடை ஆயின. அவள் கைப் பிடித்த மணவாளனும் ஈன் றெடுத்த தனயனும் தோன்றாமல் இருந்தனர். உள்வாத்திடைச் சூழ்ந்த இருள் குடிலையும் கப்பியது. பொக்கைவாய் ஓரங்களில் கண்ணிர் அணைந்தது. அவளையும் மறந்த நிலையில் அவளுள்ளே ஏதேதோ கனவுகளும் காட்சிகளும் சோபனம் கொட்டின.

உடலைத் தீண்டிய உணர்வு ஏற்பட்டதும். அவள் விழி மலர்ந்தாள்; அகல்விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டாள்.

“நான் தான் முருகன், செல்லாயி அக்கா!” என்ற குரல் கேட்டது. வயது சென்றவன் ஒருவன் உட் கார்ந்திருந்தான். அவள் நிலை உணர்ந்து ‘சுக்குத் தண்ணி வைத்துக் கொணர்ந்திருந்தான் அவன்; பக்கத்துத் தோட்டம்தான் அவனுக்கு அரண்மனை

நல்ல மனம் தான் அவனுடைய சொத்து போதாதா?

‘ஒரு மெடறு குடிச்சுப்புடு, அக்கா!’

“யாதொண்ணும் எனக்கு வேணாம்; தானு: இனி யாருக்காக உசிரோடே வாழனும்?. . இம்புட்டுக் காலமா நானும் ஏதுக்கு பூமிக்குப் பாரமா இருந்தேன்னு எனக்கு மட்டும் படலை!...” .

முருகனின் கைப்பிடியிலிருந்த லோட்டா நடுங்கிக் கொண்டிருந்தது. பூவை எஸ். ஆறுமுகம்

‘அப்படியெல்லாம் சொல்லாதே. தர்மராசா நம்பளுக்கு ஒறவா என்ன, நம்ப மனசுப்படி நடக் கறதுக்கும்! . இதைக் குடிச்சிடு; அப்பாலே சுடுகஞ்சி கொண்டா ரேன்.’ .

அன்பு எதையும் கேட்பதில்லை என்பார்கள் ஆனால் அவனோ தண்ணீரைக் கொடுத்துக்கொண் டிருந்தாள். சற்று முன்னம் உணர்வு தப்பிய கோலத்தில் நடந்த போராட்டத்தையும் குழப்பத்தையும் எண்ணிப்பார்க்க முயற்சி செய்தது அவள் வரை விரயமே!

பிடிவாதத்துக்கு மருந்து கொடுக் கப்பட்டது,

“முன்னே போலே இப்ப என்னாலே ஓடித்திரிஞ்சு வேலை செய்ய ஏலல்லேயே, தம்பி! ... அன்னன்னையப் பொளுதைக் கடத்தோனுமே, என்னா செய்யிறது?’’

சுள்ளி கொண்டு வருவாள் ; புல் கட்டு சுமப்பாள்: இலைதழை சேகரம் செய்வாள்; அரிசி புடைப்பாள்; பாத்திரம் பண்டம் கழுவுவாள்; எடுபிடி அலுவல் அவளுக்கு அத்துபடி, செல்லாயியின் வாழ்க்கை அனு பவங்கள் இவை. சாண் வாயிற்றுக்குப் பதில்’ சொன்ன உழைப்பின் சுருக்கம் இது.

‘அக்கா! உன்னோட சொந்தக் காரரு கந்தசாமிகிட்டே நீ குடுத்து வச்சிருக்கிற பணத்தை வாங்கு; முதலிலே வைத்தியர்கிட்டே கை காட்டி மருந்து சாப்பிடு; அப்பறம் வயத்துக்கும் வஞ்சனை செய் யாமச் சாப்பிடு!” -

‘ஆபத்து சம்பத்துக்கு ஒத்தாசையா இருக்கணுமின்னு இருபத்தேளுருவாய் என்னோட பணம்  அங்கே இருக்கு; அம்புட்டுத்தான்! எல்லாத்தையும் ஒரு முட்டாச் செலவு செஞ்சிட்டா அப்பாலே என்னா செய்யுறது, முருகா?’’

‘மரம் வச்ச மகராசன் தண்ணி ஊத்த மாட்டானா? ... உடம்பை அலட்டிக்காம இதை முதலிலே குடி, அக்கா.

‘ம்'- உந்திக் கமலத்திலிருந்து புறப்பட்டது!

நான்கு

தாமரைக் குளம் குறுஞ்சிரிப்பை உதிர்க்கத் தொடங்கியது.

“குடுகுடு கிழவி’ குறு குறு வென நடை பயின்றாள்; காளி ஆத்தாள் வழி மறித்தாள்: தேடி வந்த தெய்வத்தை நாடிச் சென்று கை தொழுதாள்; செல்லாயியின் பார்வையைக் கண்ணீர் மறைத்தது. “ஆமா, அந்தத் தம்பி சொன்னது நூத்திலே ஒரு சேதி தான்; அ ப ய ஞ் சமயத்துக்கிண்ணு தானே வாயைக் கட்டி வவுத்தைக் கட்டி காசு சேத்துக் குடுத்து வச்சிருக்கேன்; இதை விட வேறே கெட்ட வேளை வேணும்? ...

இருபத்தேழு ரூபாய் அவள் முன் எடுத்து வைத்தாள் உருவில் காற்றில் அழகு காட்டிப் பறந்தது: மறைந்தது. சார் ஐயர் கடைப் பட்சணங்கள் தோன்றின. ஆடு இறைச்சி, நண்டு, வெளவால், மீன் முதலியனவும் நாக்கில் நீர் ஊறச்செய்தன: மாற்றுப் புடவை சொக்குப் பொடி தூவத் தவறவில்லை. துளைத்தெடுத்த இருமலைக் கூட ஒரு பொருட்டெனக் கருதாதவளாய் வழி மிதித்து விழி பதித்து பூவை எஸ். ஆறுமுகம் ‌‌143 __________________________________

நடந்தாள் அவள். சோளக் கதிர்கள் உடலில் உரசின, வயல் வரப்புகள் 'பித்த வெடிப்பு'ப் பாதங்களை நோகச் செய்தன. "வா,பெரியம்மாயி!" “யாரது?” "நாந்தான் கந்தசாமி!" "ஒன்னைத்தா தேடி வந்தேன் தம்பீ!’ "பையப் பாத்து இங்கிட்டாலே கோவி வா...!”

"ம் . மேலுக்கு முடியல் லேப்பா...!”
“ஜய சேதி சொல்லப்புடாதா, பெரியம் மாயீ?”
“நாதி ஏது தம்பி?"
"ம்!"
“தம்பீ, உங்கிட்டே ஏம் பணம் எம்பிட்டு இருக்கு, நெனப்பு வருதா?”
"இருபத்தேழு ரூபா"
"அம்பிட்டும் எனக்கு. இப்பமே வேணும்!”
“ஆ!’
"என்ன தம்பி, அப்படி மலைச் சிட்டே?”
“ஒண்ணுமில்லே!’
"பொறவு?”
“ஆத்தா வூட்டுக்குப் போன எம்பொம்பளை அடுத்த கிளமை தான் வருவா;
 மதியத்துக்கு வீட்டுப் பக்கமா வா; உங்கச் செலவுக்கு ஒரு ரூபா தாரேன்!" 

“என்னா தம்பி, புதுக் கதையாப் படிக்கிறே?”

‘ஏன், பூராவும் தேவைங்கிறீயாக்கும், பெரியம்மாயி?

“ஆமா, ஆமா..!”

‘அதான் ஏலாது!’

ஏனிங்கிறேன்?”

“நீ திடுதிப்னு வாயைப் பொளந்துப் புட்டா அப்பாலே யாராம் ஒன்னைச் சுடுகாட்டுக்குத் துாக்கிக் கிட்டுப் போயி அடக்கம் செய்யிறதாம்?... ஒன் சொந்தக்காரன் நான் தானே செஞ்சாகணும்?... அதுக்கெல்லாம் செலவுக்கு வேணாமா?... இல்லே, தெரியாமத்தான் கேக்கறேன்!”

‘ஐயைய்யோ!... ஆத்தாடி!’

நல்லவேளை, பூமி வெடித்து அவளை விழுங்கி விடவில்லை!

மிளகாய்ப் பாத்திப் பணியில் கவனம் பதித்திருந்த கந்தசாமி, குனிந்த தலை நிமிராமல் இருந்தான்.

‘உசிரும் ஒடம்புமாத் திரியிறப்பத் தானே என் பணம் எனக்கு ஒதவோணும்?... நானு செத்துப் பூட்டா, அந்தக் கட்டையை அதோ அந்த எரியிற காளவாய்க்கு ஒணக்கையா வயசு காலத்தலே ஏதாச்சும் சாப்பிட்டுட்டுச் சாகறேன், தம்பி ஒனக்குக் கோடிப் புண்ணியம் கெடைக்கும். என்னோட காசு பணத்தை ஒத்தலையைச் சுத்தி, ஏம் பக்கமா வீசிப்போடு'-அழுதாள்! .  கூன் விழுந்த முதுகு மேலும் குறுகி வளைந்தது பட்டிக் காட்டு மண்ணும், பாடுபட்டு உழைத்த உழைப்பும் அவளைக் கண்டு எள்ளி நகையாடினவோ? பின், ஏன் கந்தசாமி அப்படிச் சிரிக்கிறான்?. எரியும் காளவாய் ஏன் அவ்வாறு நகைக்க வேண்டும்?

‘சரிப்பா தம்பி, சரி!... நீ எம்பணத்தை அப்படியே பத்தரமாப் பூட்டி வச்சுக்க; சல்லிக் காசு கூட எனக்கு வேணாம். நான் வாரேன்!... ம்ம்... காளி ஆத்தா!...”

ஐந்து

மெய்யாலும் நானு இனிமே உசிரோட விருக்கவே படாது!...”

கடந்த ஐந்து நாழிகைப் பொழுதாக செல்லாயிக் கிழவிக்கு இ ந் த ஒ ர் எண்ணம் தான் மேலோங்கி நின்றது. எட்டாத் தொலைவும், பயம் மண்டின காடும், விடுதலை தர வல்ல குன்றுகளின் கூட்டமுமே அவளுடைய சிந்தையில் சுழன்றன. வழி நாள் அவளுக்குப் பயம் காட்டிற்று; இது பரியந்தம் ஒண்ட இடம் தந்த அந்த மண் மாதாவுக்குக் கடைசி வணக்கம் சொல்லி விட்டுப் புறப்பட்டாள் அவள். ‘நாளைக்கு நீ கட்டையைப் போட்டுப்பிட்டா, அனாதைச் சாவுன்னு சொல்லி ஒன்னோட , சொந்தக்காரனான என்னைப் பாத்து ஊரு ஏசுமே? ... , என்ற கந்தசாமியின் சொற்கள், அவள் காதுகளில் எதிரொலித்தன. என்னைப் படச்ச ஆத்தாவுக்குக் கூட இனிமே என்னாலே ஒரு தொல்லையும் இருக்காது!’ செல்லாயி நடந்தாள் ; முருகன் எதிர்ப்பட்டான்; நடந்த கதைக்கு வியாக்யானம் கேட்டான்; சொன்னாள்.

‘அக்கா, இதிலே ஏதோ சூது இருக்கு; அவனுக்கு இப்ப கை ரொம்ப எறக்கமாம்; ஊருக்காட்டிலே பேசறாங்க; காய்கறி வாவாரத்திலேயும் ஏகப்பட்ட நஷ்ட மாம்; உன் பணத்தைச் செலவழிச்சிருப்பான்! அதுக்குத்தான் இம்பிட்டுத் தில்லு: மல்லு . கந்தசாமி இப்பத் தான் ஒத்தக்கடை ரோட்டிலே ரேக்ளா வண்டியிலே போறானாம்...! பொட்டிக் கடை ராவுத்தர் சொன்னாரு! ...வருத்தப் படாதே, அக்கா. மணியக்கார ஐயா கிட்டே அந்திக்குக் கண்டு பேசி, இதுக்கு ஒரு வளி செய்யறேன் அதுவரை நம்ப வீட்டிலேயே வந்து படுத்துக்க !’ என்று உரைத்தான் முருகன்.

‘ராவுல கந்தசாமிப் பயல் வயல் காட்டுக்கு காவலுக்குப் போனதும், அவன் ஆட்டை ஒடைச்சு எம் பணத்தை எடுத்துக் கிட்டு ஒடியாந்திட்டா என்னா?’ என்று ஓடிய அந்த ஆலோசனை எங்கே? பொட்டுப் பொழுதுக்கு முந்திப் பிறந்த அந்த வைர நெஞ்சம் எங்கே? -

செல்லாயி சிரித்துக் கொண்டாள்.

“என்னா அக்கா, சிரிக்கிறே?”

“என்னை நெனச்சுச் சிரிக்கிறேன், முருகா!’

எனக்கு ஏதும் புரிமாட்டேங்குது!’ -
அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். 

ஆறு

‘இந்தா பாட்டி, உன் பணம்!’ பவளக்கொடி நின்றாள்.

‘ஏது கண்ணு?’ சிலையானாள் கிழவி.

‘நீங்க கந்தசாமி அண்ணாச்சியிடம் கொடுத்து வச்ச பனந்தான் இது. இந்தா, எண்ணிக்க: சரியா இருபத்தேழு ரூபா இருக்கு. காலம்பற குடிக்காட்டிலே நீங்க ரெண்டு பேரும் தர்க்கம் பண்ணிக் கிட்டதை நான் சோளக்கொல்லை மறைவிலேருந்து ஒட்டுக்கேட்டேன். நீ வீட்டுக்குப் போனதும், அந்த அண்ணாச்சியோட வம்பு பண்ணி. பணத்தைக் கறந்து கிட்டு வந்திட்டேன்!’’

‘நீ மகராசியாக எளுதிக் கெடக் கணும், தாயே!”

நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவளுக்குக் கனவு போன்றே தென் பட்டது. ரூபாய்த் தாள்கள் சில, கிழவியின் மெலிந்த வலது கைக்குள் அடங்கின.

‘இனி ஒரு பத்து இருபது நாளைக்கு வேணுங்கிறதை நல்லாச் சாப்பிடு, பாட்டி!’ என்றாள் பவளக் கொடி.

‘ ஆமா ஆமா. நான் அக்காளைக் கவனிச்சுக்கிறேன், தங்கச்சி!’ என ஆறுதல் தெரிவித்தான் முருகன்.

“இரு பவளக்கொடி, கடைலேருந்து சுடுத் தண்ணி வாங்கியாராச் சொல்றேன்! நீ தாம்மா இப்ப  எனக்குக் கைக்கு மெய்யான சாமி!-வழிந்தது ஏழை மனம்,

அப்போது, “பாட்டி , உங்க கந்தசாமி ரேக்ளா வண்டியிலே யிருந்து உருண்டு விழுந்து கெடந்ததைக் கண்டு மணியக்கார ஐயா வண்டியிலே தூக்கிப் போட்டாந்திருக்காக; வழியிலேயே உயிர் போயிட்டுதாம். அவரு பெண்சாதிக்கு சொல்வி அனுப்ப வேணுமாம்; பிணத்தை அடக்கம் செய்யணும்; தம் பிடி காசு அங்கே, இல்லையாம்!...” என்று துயரச் செய்தியை வெளியிட்டான் ஒருவன்.

‘நெசம்மாவா?... ஐயோ... கந்தசாமி!...”*

ஒப்பாரி வைத்தாள் கிழவி. அடுத்த இமைப் பொழுதில் செல்லாயி ஓட்டமும் நடையுமாகச்

சென்று கொண்டிருந்தாள்.

“நானு ஒருத்தி உசிரோட இருக்கிறப்போ, எங்க கந்தசாமித் தம்பி எப்பிடி நாதியத்தவனாவான்...??

இருபத்தேழு ரூபாய் கூட்டுச் சேர்ந்து சிரிக்கலாயின!

ஏழு

பிறைக் கீற்றுக்கு அடியில் அமர்ந்திருந்தாள் பவளக்கொடி,

காளி ஆத்தாள் விளையாட்டு வேடிக்கையாத்தான் அமைஞ்சிடுது!...ம். என் தந்திரம் கடைசியிலே மண்ணாயிடுச்சு! ஆனா, பாவம், மண் பூவை எஸ். ஆறுமுகம் ‌‌149 __________________________________

ணாகிப் போன கந்தசாமி அண்ணாச்சிக்கு பாட்டி கிட்டேயிருந்து நல்ல பேர் வாங்கிக் கொடுத்திட்டேன்! ... கிழவிக்குத் தான் எவ்வளவு தங்கமான மனசும் ...இட்டவங்களுக்கு இட்ட பலன்!...என் சொந்தப் பணம் இருபத்தேழு ரூபாய் நஷ்டமானால் என்ன?... என் பேச்சைத் தட்டாமல் எங்க வீட்டிலேயே பாட்டி தங்கியிருக்கிறது எனக்கு என்ன மோ மனசுக்கு ரொம்ப நிம்மதியாகத் தான் இருக்குது: ம்... என் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டாத் தான் அதுக்கு நிம்மதி வருமாம்! எல்லாம் காளி அம்மன் கருணை தான் !..."