உள்ளடக்கத்துக்குச் செல்

அம்புலிப் பயணம்/அப்போலோ - 9

விக்கிமூலம் இலிருந்து

9. அப்போலோ-9

னிதன் சந்திர மண்டலத்திற்குச் செல்லுவதற்கு முன்னர் மேலும் சில சோதனைகளை விண்வெளியில் செய்து பார்த்தல் வேண்டும். ஐம்பது டன் எடையுள்ள அப்போலோ-9 கலம்[1] முழுவதையும் முதல் தடவையாக விண்வெளியில் சோதிப்பதே அப்போலோ 9 விண்வெளிப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக அம்புலியில் இறங்குவதற்குப் பயன்படப் போகும் அம்புலி ஊர்தியின் (Lunar Module) செயல்திறனை நன்கு சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். விண்வெளி வீரர்கள் தங்கும் பகுதியாகிய கட்டளைப் பகுதி (Command Modle ), தளவாடங்களும் கருவிகளும் அடங்கிய பகுதி. (Service Module), நான்கு கால்களைக் கொண்ட அம்புலி ஊர்தி ஆகிய மூன்று பகுதிகளும் அடங்கியதே அப்போலோ.9 என்ற விண்வெளிக் கலம் ஆகும்.

இராக்கெட்டு தளத்தில் இந்த விண்கலத்தைச் சுமந்து நிற்கும் இராக்கெட்டும் கலமும் சேர்ந்து 109 மீட்டர் உயரம் இருந்தது. இரண்டும் சேர்ந்த அமைப்பின் எடையே 6,200 டன் ஆகும். பணிப் பகுதி 7.2 மீட்டர் நீளமும், 3.6 மீட்டர் 25 செ. மீ. குறுக்களவும் கொண்ட ஓர் உருளையைப் போன்றது. கட்டளைப் பகுதியும் அதன் விரிந்துள்ள முனையில் இதே குறுக்களவினைக் கொண்டதே ஆனால் அதன் அடுத்த முனை ஒரு புனலைப் போல் குறுகிய வடிவத்தைக் கொண்டது. அதன் உயரம் 3 மீட்டர் 17-5 செ. மீ. ஆகும். அம்புலி ஊர்தியோ அதன் கால்கள் நீட்டிய நிலையில் 6.6 மீ. 27.5 செ. மீ. உயரமுடையது; 93 மீட்டர் குறுக்களவினைக் கொண்டது. இந்த மூன்று பகுதிகளும் அடங்கிய அப்போலோ-9 விண்வெளிக் கலம் படத்தில் (படம். 12) காட்டப் பெற்றுள்ளது. அம்புலி ஊர்தி அதன் கால்கள்

படம். 13 அப்போலோ-9 விண்வெளிக் கலத்தைக் காட்டுவது

மடக்கிய நிலையில் விண்கலத்தினுள் இருப்பதைக் காண்க. இந்த விண்கலத்தை விண்வெளிக்குக் கொண்டு செலுத்துவதற்கு அப்போலோ-8 பயணத்தில் பயன்பட்ட சட்டர்ன்-5 என்ற இராக்கெட்டே பயன்படுத்தப் பெற்றது. இதன் இயக்கம் ஏற்கெனவே முன் இயலில் விளக்கப் பெற்றுள்ளது.

இந்தப் பயணத்தில் விண்வெளிக் கலத்தின் மூன்று பகுதிகளும் சேர்ந்தாற்போல் விண்வெளியில் இயங்கும். கட்டளைப்பகுதியும் பணிப்பகுதியும் இந்தப் பயணம் நிறைவு பெறுவதற்குச் சற்று முன் வரையில் இணைந்த நிலையிலேயே இருக்கும். பயணம் நிறைவு பெற்றுக் கட்டளைப்பகுதி வளி மண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்னர்ப் பணிப்பகுதி கழற்றி விட்டுவிடப்பெறும். அதன் பிறகு அது தேவைப்படாது அம்புளி ஊர்தியின் அமைப்போ இதற்குச் சற்று வேறுபட்டது. அது கட்டளைப்பகுதியினின்றும் கழல்வதற் கேற்றவாறு திரும்பவும் இணைவதற்கேற்றவாறும் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் சந்திரனில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது, இந்த அம்புலி ஊர்தி இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு சந்திரனது தரையில் இறங்கும். கட்டளைப்பகுதியும் பணிப்பகுதியும் இணைந்த நிலையில் ஒரு விண்வெளி வீரருடன் சந்திரனின் சுற்றுவழியில் இயங்கிக் கொண்டிருக்கும். சந்திரனில் தம் பணி முடிந்ததும் இரு விண்வெளி வீரர்களும் அம்புலி ஊர்தியில் ஏறி சந்திரனின் சுற்றுவழிக்கு வருவர்; அம்புலி ஊர்தியும் தாய்க் கலத்துடன் இணைக்கப்பெறும்.

அப்போலோ 9 விண்வெளிப் பயனத்தில் இரண்டு விண்வெளி வீரர்களைக் கொண்ட அம்புலி ஊர்தி கழல்வதும், மிக்க உயரத்தில் அது தனியே இயங்குவதும் ஆகிய சோதனைகள் விண்வெளியில் நிகழ்த்தப் பெற்று விண்வெளி வீரர்கள் பயிற்சி பெற்றனர். இந்தச் சோதனைகள் பூமியின் சுற்று வழியில் (சந்திரனின் சுற்றுவழியில் அல்ல) நடைபெற்றது. எதிர்காலத்தில் சந்திரனின் சுற்று வழியிலிருந்து சந்திரனின் நிலப்பரப்பிற்குச் சென்று மீண்டும் தாய்க் கலத்திற்குத் திரும்பி வருவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் இன்றியமையாதது. மேலும், விண்வெளி வீரர் ஒருவர் விண் கலத்தினின்றும் வெளிப்போந்து உலவினர். காற்றழுத்தமுள்ள உடுப்பணிந்து கொண்டு விண்வெளியில் பணியாற்றுவதிலும், அம்புலியின் மேற்பரப்பில் நடமாடுவதற்கு விண்வெளி வீரர்கள் தம் முதுகில் சுமந்து செல்லும் பொறியை இயக்கிப் பழகுவதிலும் பயிற்சியும் அதுபவமும் பெறவே இச்சோதனை மேற்கொள்ளப்பெற்றது.

அப்போலோ-9 பயணம் பூமியின் சுற்றுவழியில் மேற்கொள்ளப் பெற்ற பத்துநாள் ப்யணம் ஆகும். இதில் பங்கு கொண்டவர்கள் மூன்று விண்வெளி வீரர்கள் ஆவர். ஜேம்ஸ் ஏ. மெக்டிவிட் (James A. McDivitt) என்பார் இக்குழுவின் தலைவர். டேவிம் ஆர். ஸ்காம் (David R. Scot) என்பார் கட்டளைப்பகுதியின் விமானி. அம்புலி ஊர்தியைச் செலுத்தியவர் ரஸல் எல். ஷ்வைகார்ட் (Russel L Schweickart) இந்தப் பயணம் பிளாரிடா மாநிலத்தைச் சார்ந்த கென்னடி முனையில் தொடங்கியது.[2]

திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் அப்போலோ 9 விண்கலம் மிகத் துல்லியமாகச் செலுத்தப் பெற்றது. அப்போலோ வரிசையில் இதுகாறும் செலுத்தப் பெற்ற எல்லாக் கலங்களுமே இவ்வாறு தான் மிகவும் கணக்காகச் செலுத்தப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணையின் பதினெட்டு கோடிக் குதிரைத்திறனுள்ள பொறி இந்திய நேரப்படி மாலை ஒன்பது மணிக்கு இயங்கத் தொடங்கி இடி முழக்கத்துடன் தீப்பிழம்பைக் கக்கிக் கொண்டு கிளம்பி முகிற் கூட்டங்கள் படர்ந்திருந்த வானில் நுழைந்தது. தரையிலிருப்போர் அது செல்லும் வழியைக் காண்பதற்காக அதன் மேற்புறம் வெண்ணிறம் பூசப்பெற்றுக் கறுப்புக் குறிகள் இடப் பெற்றிருந்தன. ஆகவே, பார்ப்போருக்கு அது வெயிலில் பளிச்சிட்டுத் தெளிவாகத் தெரிந்தது.

கணக்கிடுபொறி (Commuter) ஒன்றன் கட்டளைப்படி ஏவுகணை மெல்ல வளைந்து அட்லாண்டிக் மாகடலுக்கு மேலாகத் தென்கிழக்குத் திசை நோக்கிப் பாய்ந்து உலகத்தை வலம் வரத்தக்க விண்வெளிப் பாதையை அடைய விரைந்து மறைந்தது. அந்த நேரத்தில் ஒரு விமானத்திலிருந்த தொலைநோக்கிக் காமிரா (Telescope camera) அப்போலோ ஏவுகணையைப் படம் பிடித்து அதனை மீண்டும் தொலைக்காட்சியாளர்கட்குக் காட்டியது. இங்ஙகனம் ஏவுகணை புறப்பட்ட காட்சியைப் பூமியில் ஐந்து கண்டங்களிலுமுள்ள சுமார் நாற்பது கோடி மக்கள் தொலைக்காட்சியில் கண்டுகளித் திருப்பர்.

சந்திரனில் இறங்கி மீள்வதற்குரிய அம்புலி ஊர்தியை வைத்து நடத்திய முக்கிய பணி தொடங்குவதற்கு முன்னர் விண்வெளி விமானிகள் மூவரும் தங்கள் பயணத்தின் முதல் நாளிலேயே ஓர் ஆபத்தான விண்வெளி இணைப்பைச் செய்து காட்டினர். மூவரும் தாம் செல்லும் அப்போலோ-9 விண்வெளிக் கலத்தின் முக்கிய பகுதியோடு தனியே பிரிந்து விலகினர் ; அதன் பின் அதனைச் சுழற்றித் திருப்பி இன்னும் ஏவுகணையின்மேல் அடுக்குடன் பொருந்திய நிலையில் இருந்த சிலந்தி வடிவ அம்புலி ஊர்தியை நோக்கினர். அந்த நேரத்தில் ஏவுகணைப் பகுதியும் அம்புலி ஊர்தியும் மணிக்கு 28,000 கி. மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. விண்வெளி வீரர் ஷ்வைக்கார்ட் அப்போலோ.9 கலத்தை அம்புலி ஊர்தியைவிடச் சற்று வேகமாகச் செலுத்தி அதனை நெருங்கி அதனோடு நுட்பமாக இணைத்தார். தானும் இன்னொரு விண்வெளி வீரர் மெக்டிவிட்டும் ஒரு நுழை பாதை வழியாக அப்போலோ கலத்திலிருந்து அம்புலி ஊர்திக்குள் செல்வதற்காகவே அப்போலோ கலமும் அம்புலி ஊர்தியும் இங்கனம் மூக்கோடு மூக்காக இணையும்படி செய்தார். அவ்வாறு சென்றுதான் அவர்கள் அம்புலி ஊர்தியைப் பிரித்துச் சென்று சோதிக்க முடியும்.

பயணத்தின் மூன்றாம் நாள் முதலில் விண்வெளி வீரர் ஷவைக்கார்டும் அவரைத் தொடர்ந்து பின்னால் விண்வெளி வீரர் மெக்டிவிட்டும் அந்தக் குறுகிய நுழைபாதை வழியாக அம்புவி ஊர்திக்குள் சென்றனர். விண்வெளியில் ஒரு கலத்திலிருந்து இன்னெரு கலத்திற்கு அமெரிக்கர் இடம் மாறிக் கொண்டது இதுவே முதல் தடவையாகும். அம்புலி ஊர்தி என்ற தனி ஊர்தியில் ஏறிச் சென்று சந்திரனின் தரையில் இறங்கி ஏறும் அமெரிக்கத் திட்டத்திற்கு இஃது இன்றியமையாத நடவடிக்கையாகும். இரண்டு திங்கட்கு முன்னர்[3] இரஷ்ய விண்வெளி வீரரான எவ்ஜெனி குருனோ (Yevgeny Kirunow) தான் இருந்த சோயுஸ்-5 என்ற கலத்திலிருந்து வெளிப்போந்து சுமார் ஒரு மணி நேரம் விண்வெளியில் நடைபோட்ட பிறகு இன்னுெரு விண்வெளி வீரரான விலடிமீர் ஷதலோ {Vladimir Shatalov) என்பார் இருந்த சோயுஸ்-4 கலத்தினுள் நுழைந்து கைகுலுக்கி மகிழ்ந்தது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.[4]

அம்புலி ஊர்திக்குள் துழைவதற்கு முன்னர் தாய்க் கலமாகிய கட்டளைப் பகுதியுடன் மூக்கோடு மூக்காக இணைந்திருந்த அம்புலி ஊர்தி சரியாக இயங்குகின்றதா என்பதைச் சோதித்தார் மெக்டிவிட். அவர் அதற்காக அம்புலி ஊர்தியின் ஏவுகணைப் பொறியை பல தடவை இயக்கிப் பார்த்தார், காற்றில்லாத சூனியக் குளிர்மண்டலமாகிய விண்வெளியில் மூன்று நாள் வாளாவிருந்த அந்தப் பொறி சரிவர இயங்

படம், 13 விண்வெளி வீரர்கள் சேய்க்கலத்தினன்றும் விண்வெளியில் நடந்து சென்று தாய்க்கலத்தை அடைவதைக் காட்டுவது

கியது. சந்திரனின் தரையிலிறங்குவதற்கு இந்தப் பொறிதான் பயன்பட வேண்டும். இந்தப் பயணத்தின் இன்னொரு முக்கிய நிகழ்ச்சி விண்வெளியில் உலவுதல் ஆகும். இது பயணத்தின் நான்காம் நாள் (மார்ச்-6) நடைபெற்றது. விண் வெளிவீரர் ஷ்வைக்கார்ட் தாம் இருந்த அம்புலி ஊர்தியின் புறத்தே வந்து அக்கலத்தின் வெளிப்பக்கத்திலிருந்த ஒரு சிறிய மேடையில் நின்று கொண்டு கிட்டத்தட்ட நாற்பது நிமிட நேரம் விண்வெளிக் காட்சியைக் கண்டார். அவர் விழுந்து விடாமல் இருக்க "பொன் காலணிகள்“ எனக் குறிப்பிடப்பெறும் நழுவு நடையன்களில் (Slippers) நிற்கும் நிலையில் அவரது கால்கள் மேடையுடன் பிணைந்திருந்தள. அவர் அங்கு நின்று கொண்டு தம் இரு தண்பர்களுடன் தகைச்சுவையாக உரையாடினார் ; பூமியை ஒளிப்படங்கள் எடுத்தார்; அப்போலோ கலத்தின் கட்டளைப் பகுதியும் அம்புளி ஊர்தியும் இணைந்திருக்கும். நிலையையும் படம் எடுத்தார். இந் நிலையில் கட்டளைப் பகுதியிலிருந்த - மூன்றாவது விண்வெளி வீரர் டேவிட் ஸ்காட் தம் தலையைச் சற்று நேரம் வெளியே நீட்டிக் கலத்தின் ஒரு பக்கத்தின் மேல் இணைக்கப்பெற்றிருந்த தட்ப வெப்ப நிலைப் பதிவுக் கருவியைக் கழற்றி எடுத்துப் பாதுகாப்பான இடத்தில் வைத்தார். வெப்பமும் ஏவுகணைப் பொறியின் இயக்கமும் பலவகைப் பொருள்களை எப்படிப் பாதிக்கும் என்று காண்பதற்காக இந்தக் கருவி அப்போலோ-9 பூமியிலிருந்து புறப்படும் முன்பே அங்கு பதிக்கப்பெற்றிருந்தது.

விண்வெளியில் நடைபோட்ட விண்வெளி வீரர்களில் ஷ்வைக்கார்ட் பத்தாவது மனிதராகின்றார். யாதொரு துணையுமின்றித் தனியாக நடந்த முதலாவது அமெரிக்கர் இவரே. இவருக்கு முன்னர், விண்வெளியில் நடந்தவர்களுள் அமெரிக்கர் அறுவர்; இரஷ்யர் மூவர். ஆனால், விண்கலத்தி லிருந்து வரும் உயிரியத்தை நம்பியிராமல் தானாகவே உயிரியம் பெறும் அமைப்பிளைச் சுமந்து சென்ற முதல் அமெரிக்க விண்வெளி வீரர் இவரேயாவர்.

அடுத்து, தாய்க்கலத்தினின்றும் அம்புலி ஊர்தி சரிவரப் பிரிந்து, விலகிச் சென்று, பின்பு மீண்டும் வந்து சேர்ந்த சோதனை பயணத்தின் ஐந்தாம் நாள் (மார்ச்-7) நடை பெற்றது. ஆள் ஏறிச் சென்ற அமெரிக்க விண்வெளிக் கலத்தில் இங்ஙனம் நடந்தேறியது இதுவே முதல் தடவையாகும். தாய்க்கலத்தினின்றும் சேய்க்கலத்தைப் பிரிப்பதும் இணைப்பதும் ஆகிய ஆறு மணி நேரச் சோதனை பூமியைச் சுற்றிய விண்வெளிப் பாதையிலேயே நடைபெற்றதாகும். விண்வெளி வீரர்கள் அம்புலியில் இறங்கும்போது செய்ய வேண்டியவை அனைத்தையும் இங்குச் செய்து பார்த்தனர். சந்திரனில் இறங்க மேற்கொள்ளும் பயணத்தின்போது சந்திரனை நோக்கிச் செல்லும் விண்வெளிக் கலத்திலும் இது போன்ற அம்புலி ஊர்தியே இருக்கும் ; அக்கலம் சந்திரனைச் சுற்றி வலம் வரும்போது அம்புலி ஊர்தியை அதினின்றும் பிரித்துச் சந்திரனின் தரையில் இறங்குமாறு தனியே இயக்கிச் சென்று இறங்கும் : செயலை மேற்கொள்வர் விண்வெளி வீரர்கள். சந்திரனின் தரையில் தம் பணிகளை நிறைவேற்றிய பிறகு , அங்கிருந்து அம்புலி பார்தியிலேயே திரும்பும் பயணத்தை மேற்கொண்டு தாய்க்கலத்துடன் வந்து இணைதல் வேண்டும்.

முதலில் அம்புலி ஊர்தியைப் பிரிக்கமுயலுகையில் தாய்க் கலத்துடன் அதை இணைத்திருந்த பிணைப்பு சுழல்வதில் சிறிது சிரமம் இருத்தது ; இதனால் சற்றுக் கவலையும் உண்டாயிற்று. ஆனால், விண்வெளி விமானி ஸ்காட் இரண்டாவது முறை விசையைச் சற்றுப் பலமாகத் தட்டிய பொழுது பிணைப்பு விடுபட்டு அம்புலி ஊர்தி பிரிந்தது. ஆனால், அம்புலி ஊர்தியின் விமானிகள் உடனே நெடுந்தூரம் விலகிச் சென்று விடவில்லை. முதலில் 16 கி.மீ. தொலைவும், அடுத்து 45 கி.மீ. தொலைவும் சென்று பார்த்தனர். இந்நிலையில் எல்லாப் பொறிகளின் இயக்கங்களையும் சரி பார்த்தனர். அவை யாவும் சரியாக இயங்குகின்றன என்று உறுதி செய்த பிறகு தான் 180 கி.மீ. தொலைவு விலகிச் சென்றனர். பொறிகளில் ஏதாவது கோளாறுகள் நேரிட்டால் கலங்கள் தாமாகச் சுழன்று சேர்ந்து கொள்வதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இங்ஙனம் சிறிது சிறிதாக, அதுவும் பையப் பைய, விலகிச் சென்றனர்.

அம்புலி ஊர்தியைத் தாய்க்கலத்தினின்றும் தனியே பிரித்து வின்வெளி ஏகும் துணிவுமிக்க செயலை மெக்டிவிட், ஷ்லைக்கார்ட் என்ற விண்வெளி வீரர்கள் நிறைவேற்றினர், 180 கி. மீட்டருக்கு அப்பால் சென்ற அம்புலி ஊர்தி தாய்க் கலம் சென்று கொண்டிருத்த சுற்றுவழிக்குமேல் உயரமான மற்ருெரு சுற்று வழியில் சென்று கொண்டிருந்தது. அதை அந்த வாயிலேயே விட்டு விட்டால் இரண்டிற்குமுள்ள தொலைவு இன்னும் அதிகமாகிக்கொண்டே போகும். எனவே, திரும்பி வருவதற்காகத் தம்மை விமானி அம்புலி ஊர்தியின்

படம். 14 : அம்புலி ஊர்தி, கட்டளைப்பகுதி, பணிப்பகுதி ஆகியவை சேர்ந்த தாய்க்கலத்தினின்றும் பிரிந்த பிறகு மீண்டும் சந்திப்பதைக் காட்டுவது

பொறியை இயக்கினார். ஆற்றல் மிக்க இந்தப் பொறியை - இயக்கித்தான் சந்திரனின் தரையிலிருந்து மேலே வருதல் வேண்டும். இந்தப் பொறி இயக்கத்தின் பயனாக அம்புலி ஊர்தி தாய்க்கலத்தை நெருங்கிய தாழ்வான பாதைக்கு இறங்கியது. இரண்டு மணி நேரத்தில் அம்புலி ஊர்தி தாய்க்கலத்திற்கு முன்னே சென்றுவிட்டது ; அந்தக் கீழ்ப் பாதையிலிருந்து அம்புலி ஊர்தியை மெதுவாக இறக்கித் தாய்க்கலத்தை அணுகினர் விண்வெளி வீரர்கள். கலங்கள், இரண்டும் ஒன்றையொன்று காணாத நிலையில் இருந்த பொழுது அவற்றில் இருந்த இராடார் (Radar) கருவிகளும் கணக்கிடு கருவிகளும் (Commutor) கை கொடுத்து உதவின.

இரண்டு கலங்களும் இணைவதற்காகச் சந்தித்தமை மிகவும் அழகு வாய்ந்த காட்சியாகும்; இரண்டும் இணைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் இச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்பொழுது அம்புலி ஊர்தியின் விமானி மெக்டிவிட் தாய்க்கலத்திற்கு 30 மீட்டர் தொலைவுக்குள் வரும்படி இயக்கினார். அப்பொழுதுதான் அம்புலி ஊர்தி தன்னிடமிருந்து கழற்றி எறிந்த பகுதிகள் கீழே விழுந்து கொண்டிருந்தன. இப்பகுதிகள் சந்திரனின் தரையிலிறங்கும்போது பயன்படுபவை; அங்கிருந்து திரும்பி வருங்கால் தேவை இல்லாதவை.

இரண்டு கலங்களும் இணைந்தபிறகு அம்புலி ஊர்தியின் விண்வெளி வீரர்கள் இருவரும் தாய்க்கலத்திற்கு வந்து சேர்ந்தனர். இனி, அம்புலி ஊர்திக்கு யாதொரு வேலையும் இல்லை. அந்நிலையில் பூமியிலிருந்து தரை நிலையத்தார் வானொலி அலைக்கட்டளைகள் மூலம் 5,000 கி.மீ. உயரமான பாதைக்கு அதனை அனுப்பினர். அதனால் அப்போலோ-9 செல்லும் வழியில் அது குறுக்கிட முடியாததாயிற்று. அம்புலி ஊர்தியின் அமைப்பு விண்வெளியிலும் சந்திரனின் தரையிலுந்தான் இயங்கும்படி அமைந்திருக்கும். அதில் வெப்பந் தாங்கும் கவசம் இல்லை. ஆகவே, அது பூமிக்குத் திரும்பிவர முடியாது ; அப்படி வந்தாலும் காற்று மண்டலத்தின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து போகும்.

பயணத்தின் ஆறாம் நாளிலிருந்து ஒன்பதாம் நாள் முடிய எதிர்காலத்தில் சந்திர மண்டலத்திலிருந்து திரும்புங்கால் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து பார்த்தனர். பத்தாம் நாள் தம் கலத்திலிருந்த ஒரு முக்கிய பொறியை இயக்கியவுடன் அது பூமியின் சுற்று வழியிலிருந்து விடுபட்டு அதன் வளி மண்டலத்தில் நுழைந்தது. இப்போது தேவையில்லாத பணிப் பகுதியும் கழற்றிவிடப் பெற்றது. கட்டளைப் பகுதியின் மேலுறை வளி மண்டலத்தைக் கடந்து வருங்கால் 5,000-6,000°F {2,200-3,300°C) வெப்ப நிலையை அடைந்தது. விரைவில் அட்லாண்டிக் மாகடலில் குறிப்பிட்ட இலக்கில் வந்து இறங்கியது. உடனே, காத்திருந்த ஹெலிகாப்டர் விமானங்கள் விண்வெளி வீரர்களையும் அவர்கள் வந்த கலத்தையும் அருகிலிருந்த மீட்புக் கப்பலில் கொண்டுபோய்ச் சேர்த்தன. இப்பயணம் தொடங்கி முடிவதற்கு ஆன காலம் 9 நாள் 22 மணி 40 நிமிடங்கள் ஆகும்.


  1. இது 1969ஆம் ஆண்டு மார்ச்சு 8ஆம் நாள் அனுப்பப் பெற்றது. இது 10 நாள் பயணம்.
  2. 1969 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள்.
  3. 1969ஆம் ஆண்டு சனவரி 15ஆம் நாள்.
  4. 'சோயுஸ்' என்றால் இரஷ்ய மொழியில் இணைப்பு என்று பொருள்.