அம்பை: பெண்மையின் அழகும் பெண்ணீயத்தின் சீற்றமும்
வேடிக்கையான முரண்தான், லக்ஷ்மி என்ற பெயர் கொண்ட ஒரு தீவிர பெண்ணீயவாதி மிக இனிமையான பழமையின் நினைவலைகளை எழுப்பும் வகையில் அம்பை என தனக்குப் புனைபெயர் சூட்டிக்கொண்டது. ஆனால் அந்தப் பெயர் பங்களூரில் தன் பாட்டியின் கவனிப்பில் வளர்ந்து வந்த ஒரு பள்ளிச் சிறுமி தானும் தமிழில் கதை எழுதுகிறேன் என்று மற்ற பெண் எழுத்தாளர்களைப் போல ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புக்குள் 'நல்ல' கதைகள் எழுதத் தொடங்கியபோது சூட்டிக் கொண்ட பெயர் அது.
எழுதும் திறமையும் ஆசையும்தான் அம்பையுடையது. அவர் கதைகள் நமக்குக் காட்டிய உலகமோ அம்பையின் பாட்டியும் அம்மாவும் கொண்டிருந்த பாரம்பரிய நம்பிக்கைகளும் அம்பைக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்ததும்தான். அந்த உலகம்தான் அம்பைக்கு அந்த வயதில் படிக்கக் கிடைத்த எழுத்துக்களும்.
ஆனால் பெண்கள் எழுத்தாளர்களாக மலரக்கூடும் என்பதே புதுமையான விஷயம்தான். அவர்களுக்குத் திருப்தி தரும் காரியம் தான். அந்திமாலை என்று ஒரு நாவல் எழுதி அது கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசுப் போட்டியில் பரிசும் பெற்றது, புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் பெண் எழுத்தாளருக்கு ஒரு சிகர சாதனைதான். கலைமகள் சிருஷ்டி எழுத்துக்கும் தமிழ்ப் புலமைக்கும் பெயர் பெற்ற பத்திரிகை. அத்தோடு பழமையின் கோட்டை என்றும் கருதப்பட்டது. அது மரபு காப்பதில், மற்ற பத்திரிகைகள் புதுமை என்று சொல்லிச் செய்வதை நிராகரிப்பதில் பெருமை கொள்ளும் பத்திரிகையும்.
பள்ளிச் சிறுமியான அம்பை தமிழில் பெண் எழுத்தாளராக தன் பெயரை ஸ்தாபித்துக் கொண்டாயிற்று. 'சபாஷ்' என்று புன்னகையுடன் தட்டிக்கொடுக்கப்பட்டு ஜொலிக்கும் பெண் எழுத்தாளர்களின் நக்ஷத்திரக் கூட்டத்தில் சேர்ந்தாயிற்று. இது எழுபதுகளில், ஒரு பெரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டம் திடீரென பத்திரிகை உலகில் படையென பிரவேசித்த காலம். எல்லா வெகு ஜனப் பத்திரிகைகளும் புதிதாக வந்த பெண் எழுத்தாளர்களுக்கு மேளதாளத்தோடு விளம்பரம் கொடுத்தன. பத்திரிகைகளின் அட்டையில் பெண் எழுத்தாளர்களின் படங்களே திரும்பத் திரும்ப அலங்கரித்தன. இத்தகைய கோலாகல வரவேற்பு கிடைக்கும் பாக்கியம் ஆண் எழுத்தாளர்களுக்கு இருக்கவில்லை.
அந்த சமயத்தில் தான் நிறைய ஆண் எழுத்தாளர்கள் (இதில் புதியவர்கள் மட்டும் அல்ல, பழைய பெயர் பெற்றவர்களும் அடக்கம்) பெண் பெயர்களைச் சூட்டிக்கொண்டு தங்கள் மசாலா எழுத்துக்களை பத்திரிகைச் சந்தையில் கடைபரப்பினார்கள். பெண்கள் பெயரில் இந்த மசாலாக்கள் வெளிவந்தால், புதுமையும் நவீன சிந்தனைகளும் கொண்ட தயக்கமற்ற பெண்களேதான் இவற்றை எழுதுகிறார்கள் என்ற நினைப்பில் வாசகர்களுக்குக் கிடைக்கும் கிளுகிளுப்பு அதிகம் என்ற புத்திசாலித்தனம் இத்தந்திரத்தின் பின் இருந்தது.
இது ஒன்றும் இயல்பாக நிகழ்ந்திருக்கக்கூடும் நிகழ்ச்சியாக இருக்கமுடியாது. நவீன தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த சௌபாக்கியம் இத்தனை பெண் எழுத்தாளர்களின் ஏகோபித்த வருகை என்று சொல்லப்பட்டது திட்டமிட்ட ஆளெடுப்பு முயற்சியாகத்தான் (Recruitment drive) இருக்க முடியும். பாலியல் கதைகள் பத்திரிகைகளின் விற்பனையைப் பெருக்கும் என்பது வியாபார உலகம் அறிந்த விதி. பெண் எழுத்தாளர்கள்கள் மீது புகழுரைகள் பொழிந்தனர். செல்லமாக நடத்தப்பட்டனர். நக்ஷத்திரங்களாக கொண்டாடப்பட்டனர். ஆனால் பாரம்பரையமாக வந்த வரம்பு மீறி எதுவும் எழுதிவிடக்கூடாது. கற்புக்கரசி கண்ணகியின் புனித மரபு காக்கப்பட வேண்டும்.
புதிய தலைமுறை பெண் எழுத்தாளர்களுக்கு இந்த வரம்புகள் ஒன்றும் பெரிய பிரச்சினயாக இருக்கவில்லை. அவர்களும் நக்ஷத்திரமாக வேண்டும், எழுத்தாளராகப் பேசப்படவேண்டும். பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற சையில் வந்தவர்கள்தானே அல்லாது, தமக்கென புதிதாக சொல்ல ஏதும் இருக்கிறது அதைச் சொல்ல வேண்டும் என்று வந்தவர்கள் இல்லை. பத்திரிகைகளில் பிரபலமானால் அதனால் கிடைக்கும் லாபங்கள் தரும் போதை பெரிது. பெண்களின் பெயர்களைப் புனைந்து கொண்டு எழுதும் ஆண் எழுத்தாளர்கள் படையினரின் புகழ்ச்சியில் தம் மீது தர்மம் காக்கும் எழுத்து சுமத்தப்படுவது பற்றி அவர்களுக்கு ஆக்ஷபனை இருக்கவில்லை. இப்பத்திரிகைகளின் கதைகளில் இறந்துவிட்ட ஒரு பெண்ணின் படம் விளக்கப்படமாக வரையப்பட இருந்தால், அப்படம் அப்பெண்ணின் சோகத்தைச் சொல்வதாக இராது. மல்லாந்து கிடக்கும் அப்பெண்ணின் அங்கலாவண்யங்களைக் கவர்ச்சியாக வரைந்து பெரிதுபடுத்துவதாக இருக்கும்.
இந்தப் பிராபல்ய ஆலாபங்கள் எதுவும் அம்பையைக் கவர்வதாக இருக்கவில்லை. அம்பைக்கு தனக்கென சொல்வதற்கு இருப்பதைச் சொல்ல எழுத நினைப்பவர். ஒரு சிறு பெண் தனக்கு சமூகத்தினால் கொடுக்கப்பட்ட இடம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியவர். அம்பை சிறகுகள் முறியும் என்று ஒரு நீண்ட கதை எழுதினார். ஒரு கணவன் மனைவிக்கு இடையே எழுந்த உறவுச் சிக்கல் பற்றி. தன் மனைவியையும் குழந்தையையும் கவனிக்க கணவனுக்கு நேரமும் இல்லை. சம்பாத்தியமும் இல்லை. கணவனின் அன்புக்கும் கவனிப்புக்கும் ஏங்கும் மனைவிக்கு அது கிடைக்காது போகவே இந்த தாம்பத்ய உறவுக்குத்தான் என்ன பொருள் என்ற கேள்வி அவள் மனத்தில் எழுகிறது. ஆனால் அதற்காக அவள் உறவை முறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறவில்லை. தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என்று அவள் சமாதானம் செய்து கொள்கிறாள்.
இந்தக் கதையை வைத்துக் கொண்டு அம்பை அணுகிய எந்தப் பத்திரிகையும் அதைப் பிரசுரிக்க மறுத்துவிட்டது. பின் பல வருடங்கள் பிரசுரமாகாது கிடந்த அந்தக் கதை கணையாழி என்னும் ஒரு இடைநிலை (middle brow) பத்திரிகையில் பிரசுரமானது. அந்தக் கதையில் வரும் சாயா மாத்திரம் புனிதமான தாம்பத்திய உறவு அர்த்தமற்றுப் போயிற்றே என்று தனக்குள்ளே கூட நினைத்த பாவத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ அல்லது வேறு எவ்விதத்திலாவது அவள் உயிர் துறந்திருந்தாலோ அக்கதையை நிராகரித்த எந்தப் பத்திரிகையும் தடை சொல்லாது பிரசுரித்திருக்கும் என்று கேலிப் புன்னகையோடு அம்பை சொல்கிறார்.
ஹிந்து சமூகம் சுயமாகச் சிந்திப்பதற்கு ஒரு மனைவிக்கு சுதந்திரம் தராதது போலவே, பத்திரிகை உலகிலும் பெண் எழுத்தாளர்களுக்கு (பார்க்கப் போனால் ஆண் எழுத்தாளர்களுக்கும்தான்) தான் நினைத்ததை எழுதும் இடம் மறுக்கப்படுகிறது என்பது அம்பைக்குப் புரிந்தது. இரண்டு இடங்களிலும் ஆண்கள் இட்ட சட்டத்தின் வரம்புக்குள்தான் பெண்களின் இடம் தீர்மானிக்கப்படுகிறது. பெண்கள் அதன்படி நடக்கவேண்டும். தான் நினைத்ததை எழுத, தான் தானாக இருக்க தனக்கு சுதந்திரம் தரப்படவில்லையென்றால், ஆண் பத்திரிகை உலகம் தரும் 'நக்ஷத்திர' அந்தஸ்துக்கு எந்த அர்த்தமும் கிடையாது என்று அம்பை எண்ணினார். அம்பை என்னும் எழுத்தாளர், இடது சாரி சிந்தனையாளர், போராளி, தீவிர பெண்ணீயவாதி எல்லாம் அம்பை என்னும் ஒரு தனிமனிதரின் வெளிப்பாடுகள்தான்.
அம்பை என்னும் பழமையான ஆனால் இனிய பெயர் திராவிடரின், அவர்களுக்கும் முந்திய பழங்குடி மக்களின் தாய்த் தெய்வம் தென்னிந்திய தெய்வங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுக் கிடைத்த பெயர். பழங்குடி மக்களின் பயங்கரத் தோற்றமும் சீற்றமும் கொண்ட தாய்த் தெய்வம், இப்போது கனிவும் தாயன்பும் கொண்ட தேவியாகி, ஒரு ஆண் தெய்வத்தின் துணையுமாகிவிட்டாள். ஸ்மிருதிகளும் புராணங்களும் அவளை ஏற்றுக்கொண்டு அம்பை என்று நாமகரணமும் செய்து விட்டன. அந்திமாலையின் அம்பை, தன் வளர்ச்சிப் பாதையில் தன் பழங்குடி காலத்திய தாய்த் தெய்வ அவதாரத்தை நினைவு கூர வேண்டியதாயிற்று.
அம்பை தன் சிறகுகள் முறியும் கதையில் அதைத்தான் செய்தார். அந்த முடிவு கதைக்கு முன்னர் எப்போதோ பிறந்திருக்க வேண்டும். வெகு காலமாக மனத்துள் கொதித்துக் கொண்டிருந்த எண்ணங்கள் பின்னர் ஒரு கட்டத்தில் பெறும் இலக்கிய வடிவம்தானே கதை.
முந்தைய தலைமுறைப் பெண்கள் அவர்கள் காலத்தில் தமக்கு சுய சிந்தனையும், தம் கருத்துக்களைச் சொல்லி வலியுறுத்தும் உரிமையும் தமக்கு மறுக்கப்பட்டதை தமக்கு இழைக்கப்படும் அநீதியாக அவர்கள் எண்ணவில்லை. அதுதான் இயல்பானது, காலம் காலமாக பின்பற்றப்படுவதும் சரியானதும் என்றே அவர்கள் உண்மையிலேயே நம்பினார்கள். அந்த நம்பிக்கைதான் முன் தலைமுறையைச் சேர்ந்தஅவர்கள் எழுத்திலேயும் பிரதிபலித்தது. ஆனால் அம்பையின் தலைமுறைப் பெண்கள் ஏன் அதற்குக் கட்டுப்பட வேண்டும்? அவர்களுக்கு அந்தப் பழைய நம்பிக்கைகள் எப்படி உண்மையாகும்? அவர்கள் அந்தப் பழம் நம்பிக்கைகளையே எழுதினார்கள் என்றால் அவர்கள் எழுத்து ஒரு முகமூடியா? அல்லது அவர்களது ஒப்புதல் ஒரு முகமூடியா? பின் அவர்கள் நிஜ முகம்தான் என்ன?
இக்கேள்விகள் எல்லாம் தமிழ் சமூகத்தின் பெண் எழுத்தாளர்களைப் பற்றியும், சமூகத்தில் பெண்களின் இடம் என்ன என்பது பற்றியும், பின் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றியும் ஆராயத் தூண்டின. அவர் இது பற்றிய கள ஆராய்வில் ஈடுபட்டிருக்கும்போது தொடர்ந்து எழுதவும் செய்தார். 1000 பிரதிகள் கூட சிரமப்பட்டு விற்கும் இலக்கியச் சிறு பத்திரிகைகளில்தான் அவர் எழுத்துக்கள் பிரசுரமாயின. அவைதான் அவர் எழுத்துக்களை வரவேற்றன. ஆனால் அவை சன்மானம் ஏதும் தருவதில்லை.
அம்பையின் இரண்டாம் கட்ட தீவிரத்தில் எழுதப்பட்ட சிறகுகள் முறியும் கதையில் மனம் முறிந்து போகும் சாயா தன் விதியை நொந்து கொள்கிறாள். ஆனால் தாம்பத்திய பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை. அவள் வளர்ந்த விதம் அப்படி. அவள் ஆளுமையின் குணம் அப்படி. அதை மீறி அவளால் எதுவும் செய்திருக்க முடியாது. இதற்குப் பின் அம்பை எழுதிய கதைகளில் அவருடைய பெண்ணீய சிந்தனைகள் பெண்களின் வாழ்க்கைக் களன் முழுதையும் தன் பார்வைக்கு எடுத்துக்கொள்கிறது. ஒரு போராளியின் மேடையாக அல்ல, ஒரு அறிவார்த்த பார்வையாக அல்ல, ஒரு இலக்கிய வாதி தன் சீற்றத்திற்குத் தரும் கலை வடிவமாக. ஒரு பெண்ணிய எழுத்தாளராக அல்ல, சமூகத்தில் தான் கண்ணியத்துடன் கௌரவத்துடன் வாழும் உரிமை மறுக்கப்படும் ஒரு தனிமனிதராக. அடைபட்டுக் கிடக்கும் காலத்தையும், இடத்தையும் சூழலையும் விலக்கிப் பார்த்தால், அவர் எழுத்தின் அடிநாதம் காலம் காலமாக உலகெங்கும் காணும் அடக்குமுறைக்கு எதிரான குரல்தான்.
இதன் வெளிப்பாட்டுக்கு ஒரு புதிய மொழி தேவையாயிருந்தது. புதிய வெளிப்பாட்டு வடிவம் தேவையாயிருந்தது. அது அம்பைக்கே உரியதாக இருக்கவேண்டும். இதுதான் அம்பையின் எழுத்துக்களை மற்ற பெண் எழுத்தாளர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. அவர்கள் எல்லாம் ஒரு வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் சலனிப்பவர்கள். அவர்களுக்குப் புதிய பாதைகள் தேவையில்லை. இவர்களிலும் ஒரு சில விதிவிலக்குகள் உண்டுதான். அவர்கள் குரல் கள் கிறீச்சிட்டுக் காதைக் கிழிப்பன அல்ல. அவர்கள் ஒரு திரிசங்கு நிலையில் இங்குமில்லை அங்குமில்லை என்று ஊசலாடுபவர்கள். பாதுகாப்பாக இயங்குகிறவர்கள். இரண்டு உலகங்களிலும் இருக்க விரும்புகிறவர்கள்.
இது வரை, கிட்டத்தட்ட இருபது வருட கால எழுத்து வாழ்வில் அம்பையின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. இவ்விரண்டு தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு தொகுப்புஆ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது, A Purple Sea என்ற தலைப்பில். இவை போக The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers என்ற தலைப்பில் அவரது ஆராய்ச்சி நூலும் வெளிவந்துள்ளது.
அம்பையின் எழுத்தில் இடம் பெறும் பெண்கள் உலகக் களம் தமிழ் பேசும் மக்களை மாத்திரம் வரம்பு கட்டியதல்ல. பர்மிங்ஹாமில் வாழும் சிலி நாட்டு அகதிப் பெண்களும் அவர் கதைகளில் இடம் பெறு கிறார்கள். பம்பாய் குடிசைப் பகுதிகளில் வாழும் தொழிற்சங்கத்தினரையும், ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கோடியில் வாழும் கிராமத்துப் பெண்களையும், தமிழ் நாட்டின் தெற்குக் கோடியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு அமைதியான கிராமத்துப் பெண்களையும் அம்பையின் கதைகளில் சந்திக்கலாம்.
இவர்களில் சில தம் மீது அடிமை போன்று சுமத்தப்பட்டிருக்கும் வேலைச் சுமையை பெருமிதத்தோடு எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு சாவிக்கொத்து கிடைத்து விட்டால் அதுதான் அவர்கள் வாழ்க்கையின் சிகர சாதனை. அந்தஸ்தின் அங்கீகாரம். சமையலறையில் அவர்களுக்கு அளிக்கப்படும் பூரண அதிகாரத்தின் சின்னம் (வீட்டின் மூலையில் ஒரு சமயலறை) சிலர் தம் மீது சொரியப்படும் அன்பையும் தம் பாதுகாப்புக்காக தாம் கட்டுப்பட்டிருக்கும் தளைகளையும் மிக சந்தோஷத்துடன் அனுபவிக்கின்றனர் (சந்திரா). சிலர் பயங்கரவாதிகள் என வேட்டையாடப்படுகின்றனர் (சிலி நாட்டு அகதிகள்). கற்பழிக்கப்பட்ட ஒரு பெண், பல் வேறு தரப்பினர் தம் சுயநலனுக்காகவும் சித்தாந்த பலத்திற்காகவும் அவளை அவர்கள் சொல்படி தூண்டும்போது, புத்திசாலித்தனமாக விவேகத்தோடு அவள் மறுத்துவிடுகிறாள் (கறுப்புக் குதிரைச் சதுக்கத்தின் ரோஸா). ஒரு தாய்க்குத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து தன் சுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த எண்ணம் சுலபத்தில் நிறைவேறாதபடி அவள் பெண்ணின் கறுப்பு நிறம் தடையாக இருக்கிறது. (அம்மா ஒரு கொலை செய்தாள்) ஒரு பன்றி தன் விதியென அமைதியுடன் தன் மரணத்திற்காகக் காத்திருக்கிறது. பலமற்றவனும் தற்கொலை பற்றி எண்ணிக்கொண்டிருப்பவனுமான ஒருவனையே ஒரு பெண் தேர்ந்து கொள்கிறாள்: காரணம் பரஸ்பர தேவையும் அதனால் பிறக்கும் நெருக்கமும்.
அம்பை ஒரு தாய்த்தெய்வம். பயங்கர ரூபி. அவள் அழிப்பவள் புதியதை சிருஷ்டிப்பவள். அடக்குமுறைக்கு எதிரான அம்பையின் குரல் கலையாக மாற்றம் பெறுகிறது, அது ஒரு சிருஷ்டிகர வெளிப்பாடு. ஒரு வெகுஜனப் பத்திரிகை அம்பையின் கதை ஒன்றை பாராட்டுக் குறிப்புகளுடன் பிரசுரித்தது. ஆனால் முன்னதாக அம்பையிடமிருந்து அனுமதி பெறவில்லை. இதற்கு அம்பையின் பதில்: " என் அனுமதியின்றி எப்படி நீங்கள் என் எழுத்தைப் பிரசுரிக்கலாம். கேட்டிருந்தாலும் நான் உங்களை அனுமதித்திருக்க மாட்டேன். நீங்கள் பிரகடப்படுத்தியுள்ள என் எழுத்தைப் பற்றிய உங்கள் பாராட்டுக்களோடும் சரி, நீங்கள் வெளிக்காட்டாத உங்கள் பத்திரிகையின் நோக்கங்களோடும் சரி எனக்கு ஒப்புதல் கிடையாது" (இதே வார்த்தைகளில் அல்ல. வார்த்தைகள் என்னது - வெ.சா.)
அம்பை தன் ஆரம்ப கால எழுத்துக்கள் அனைத்தையும் நிராகரிப்பது மட்டுமல்லாமல் அவற்றைப்பற்றி கேலியாகத் தான் எழுதுவார் (The Face Behind the Mask). இன்னமும் பழைய பாட்டையிலே எழுதிக்கொண்டிருக்கும், ஆனால் அது பற்றி பெருமைப் பட்டுக்கொள்ளும் தன் தலைமுறை பெண் எழுத்தாளர்களைப் பற்றி அவரிடமிருந்து கடும் கண்டனமும் கேலியும்தான் பிறக்கும்.
அதே சமயம் புன்முறுவலோடு தன் பெண்மையின் கனிவையெல்லாம் கொட்டும் முகமும் அம்பைக்கு உண்டு. மூப்பதுக்களிலிருந்து ஐம்பதுக்கள் வரை தாங்கள் பழமையின் மதிப்புகளிலேயே ஊறி அவற்றையே உண்மையென நம்பி அந்த நம்பிக்கைகளை எழுதிய, இன்னமும் அவற்றில் நம்பிக்கை வைத்துள்ள முதிய பெண் எழுத்தாளர்களிடம் அவருக்கு நிறைந்த மரியாதை உண்டு. அவர்களை மதிப்பவர் அம்பை. அவர்களது நம்பிக்கைகள் அவருக்கு உவப்பாக இல்லாத போதிலும்.
தனக்கு அவ்வப்போது உதவியாயிருந்து வழிகாட்டியவர்கள், அந்த உதவி எத்துனை சிறியதோ பெரியதோ, அவர்களுக்கெல்லாம் தன் சிறுகதைத் தொகுப்புகளிலும், தன் ஆராய்ச்சி நூலிலும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள அவர் மறப்பதில்லை. வேடிக்கை அவர்கள் எல்லோரும் ஆண்கள். தென்னிந்திய கலாச்சாரத்தின், பாரம்பரித்தின் பெண்மை அழகுக்கும் சிறப்பிற்கும் சின்னங்களான, கர்நாடக சங்கீதத்திலும், பரதநாட்டியத்திலும் அவர் பரிச்சயமும் ரசனையும் கொண்டவர்.
ஒரு பெண் தன் சுய கௌரவத்திற்கும் சுய உரிமைகளுக்கும் ஆன போராட்டத்தில் அப்பெண் அப்போராட்டத்தில் தன் பெண்மையையோ அதன் அழகுகளையோ பலியாக இழக்கவேண்டியதில்லை. இல்லைதானே! அம்பை என்னும் கலைஞர் அதை இழக்கவில்லை.
குறிப்புகள்
[தொகு]- The Written Wrath of the Dispossessed: The Economic Times, New Delhi. Sunday 4.10.1992
- Many Ideas, Many Literatures: New Crical Essays: Worldview Publications, Delhi